தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த் திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக் கிராமங்களைத் தேடி ஓட வைத்த "என் இனிய தமிழ் மக்களே..." என்ற ஒற்றைக் குரலால் ஒட்டுமொத்த தமிழர்களின் இதயங்களை வென்று, தமிழ் திரையுலகின் போக்கையே மடைமாற்றிய 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா (வயது 84) காலமானார்.
தமிழ் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சிகரமாக உயர்ந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஒரு பார்வை...
1941 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், அல்லிநகரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த சின்னசாமி, ஆரம்பத்தில் சுகாதாரத்துறையில் பணியாற்றி பின்னர் தமிழ் திரை மீது கொண்ட தீராத காதலால் தமிழ் திரையுலகில் நுழைந்த பாரதிராஜா 1977 இல் "16 வயதினிலே" என்ற புகழ் பெற்ற திரைப்படத்தை தந்ததன் மூலம் இயக்குநர் வரிசையில் முன்னேறி "சிகரமாக" உயர்ந்தவர். இதுவே தமிழ் திரையுலகில் 16 வயதினிலே முன், பின் எனப் பிரிக்கும் அளவுக்குப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியதுடன் தமிழ் திரையுலக வரலாற்றை புரட்டி போட்டது எனலாம்.
பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு வரை, தமிழ் திரைப்படங்கள் படப்பிடிப்பு நிலையங்களுக்குள் (ஸ்டுடியோ) உருவாகி வந்த நிலைகளை மாற்றி, கேமராக்களைத் தூக்கிக்கொண்டு கிராமங்களுக்கும், பெரு நகரங்களுக்கும் அழைத்துச் சென்று இயற்கையான கிராமத்துத் தெருக்களுக்கும், வயல்வெளிகளுக்கும் சென்று, தமிழ் சினிமாவின் காட்சி அமைப்புகளில் "மண் வாசனை" வீசச் செய்தவர்.
தென் தமிழக எளிய மக்களின் வாழ்க்கை, பேச்சுவழக்கு, மற்றும் கலாசாரத்தை எதார்த்தமாக திரையில் கொண்டுவந்ததுடன் செயற்கையான ஒளியமைப்பு, நாடகத்தனமான வசனங்கள் என்ற சூழலை உடைத்தெறிந்து, நிஜமான மனிதர்கள், அவர்களது எளிய வாழ்க்கை, எதார்த்தமான வட்டார பேச்சு வழக்கு மற்றும் நம் பண்பாட்டைத் திரையில் அச்சு அசலாகக் கொண்டு வந்தார். அப்போது கிராமத்து மனிதர்கள் தங்களது உணர்வுகளையும், காதலையும், கோபத்தையும் திரையில் கண்டபோது தங்களையே திரையில் காண்பது போலவே உணர்ந்தனர்.
1978 இல் "கிழக்கே போகும் ரயில்" படம் கிராமத்துக் காதலையும், ரயில் நிலையப் பின்னணியையும் கவிதையாகச் சொன்னது. இதைத்தொடர்ந்து
1978 இல் வெளியான "சிகப்பு ரோஜாக்கள்" திரைப்படம் பாரதிராஜா கிராமத்துப் படங்களை மட்டுமே எடுப்பார் என்ற விமர்சனத்தை உடைத்தது. அதாவது ஒரு த்ரில்லர் திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்திய படம் அது. 1979 இல் பாக்யராஜ் மற்றும் ரதி அக்னிகோத்ரி நடிப்பில் வெளியான "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தில் ஊர் நாட்டாமைகள் செயல்களை அம்பலத்தினார். இதில் "இதயம் போகுதே" பாடல் மிகவும் பிரபலமானது. இதே போன்று அதே ஆண்டு சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நடிப்பில் வெளியான "நிறம் மாறாத பூக்கள்" மிகவும் போசப்பட்டது. இதில் "ஆயிரம் மலர்களே, இரு பறவைகள்" பாடல்கள் மிகவும் பிரபலமானது.
1980-களில் நிழல்கள், ரெட் ரோஸ், 1980 இல் கார்த்திக், ராதா நடிப்பில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை, 1981 இல் வெளியான வாலிபமே வா வா, டிக் டிக் டிக், 1982- இல் காதல் ஓவியம், 1983-களில் பாண்டியன், ரேவதி நடிப்பில் வெளிவந்த "மண் வாசனை", லவ்வர்ஸ் 1984 இல் புதுமைப் பெண், 1985 இல் ஒரு கைதியின் டைரி. 1985 இல் சிவாஜி கணேசன் மற்றும் ராதாவின் நடிப்பில் வெளியான "முதல் மரியாதை" வயதைக் கடந்த காதலையும் மனித உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்திய காதல் காவியம். 1986 இல் கடலோரக் கவிதைகள், 1987 இல் சமத்கனி, ஆராதனை, வேதம் புதிது படமும், 1988 இல் கொடி பறக்குது படம் பிரபலமானவைகள். இதில் சத்யராஜ், அமலா நடிப்பில் வெளியான "வேதம் புதிது" படத்தில் பாலுத்தேவர் என்ற சத்யராஜ் கதாபாத்திரத்தை நோக்கி சிறுவன் 'பாலு என்பது உங்க பெயர்; தேவர் என்பது நீங்க படிச்சு வாங்கிய பட்டமா' என கேட்கும் கேள்வி ஜாதிய உணர்வாளர்களை கன்னத்தில் அறைந்த நச் வசனமாக பேசப்பட்டது. இந்த படத்தில் தேவேந்திரன் இசையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய "கண்ணுக்குள் நூறு நிலவா" என்ற பாடல் மிகவும் பிரபலம் ஆனது. எப்போதும் இளையராஜாவுடன் இணைந்து பணி செய்த பாரதிராஜா, இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவேந்திரனிடம் இசையமைக்கச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
1990-களில் வெளியான என் உயிர்த் தோழன், 1991 இல் புது நெல்லு புது நாத்து, 1992 இல் நாடோடித் தென்றல், கேப்டன் மகள், 1993 இல் கிழக்குச் சீமையிலே, 1994 இல் பெண் சிசுக்கொலைக்கு எதிரான கருத்தம்மா, பசும்பொன், 1994 -இல் தமிழ்ச் செல்வன், 1996 இல் அந்திமந்தாரை, 1999 -இல் தாஜ்மகால், 2001-இல் கடல் பூக்கள், 2003 இல் ஈர நிலம், 2004 இல் கண்களால் கைது செய், 2008 இல் பொம்மலாட்டம், 2013 இல் அன்னக்கொடி போன்ற ஒவ்வொரு படங்களும் யதார்த்த புரிதலோடு கிராமத்து சூழலை வெளிச்சம்போட்டு காட்டின. அதேபோல் தமிழ் சினிமாவுக்குப் பல முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். அலைகள் ஓய்வதில்லை மூலம் கார்த்தி, ராதா, உதவி இயக்குநராக இருந்து இவரால் சுதாகர், பாக்யராஜ் ஆகியோர் நடிகர்கள் ஆகினர். நிழல்கள் படத்தின் மூலம் நிழல்கள் ரவி, கிழக்கே போகும் ரயில் மூலம் ராதிகா சரத்குமார், மண்வாசனை படத்தின் மூலம் ரேவதி மற்றும் நடிகைகள் ரஞ்சிதா மற்றும் பிரியாமணி ஆகியோர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள். 16 வயதிலே படத்தில் ரஜினிகாந்த்தின் பரட்டை கதாபாத்திரம், கமல்ஹாசனின் சப்பாணி கதாபாத்திரம், ஸ்ரீதேவியின் மயில் என மூவரின் திரைப்பயணத்திலும் '16 வயதினிலே' மிக முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
1980-களில் வெளிவந்த 'கல்லுக்குள் ஈரம்' படத்தின் மூலம் பாரதிராஜா நடிகராக அறிமுகமானார். இந்த படம் ஒரு திரைப்பட குழுவினரின் இயக்குநரையும் ஹீரோவையும் காதலிக்கும் இரண்டு அப்பாவி கிராமத்து சிறுமிகளின் கதை இது.
ஆயுத எழுத்து, பாண்டியநாடு, திருச்சிற்றம்பலம், மகாராஜா, ஈஸ்வரன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு இளம் தலைமுறையினரையும் கவர்ந்தது. ஓடிடி தளத்தில் வெளியான 'மாடர்ன் லவ் சென்னை' தொடரில் 'பறவைகள் கூட்டில் வாழும் மான்கள்' என்ற பகுதியை இயக்கி, தனது 80 வயதிலும் தான் ஒரு சமகால இயக்குநர் என்பதை நிரூபித்தார்.
இந்தியத் திரை உலகிற்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது, இந்திய அரசின் உயரிய குடிமகன் விருது, 2001 இல் அறிஞர் அண்ணா விருது, 2005-இல் கௌரவ டாக்டர் பட்டம், 1982-இல் சீதாகோகா சிலுகா, 1986-இல் முதல் மரியாதை, 1988 இல் வேதம் புதிது, 1995 இல் கருத்தம்மா, 1996 இல் அந்திமந்தாரை, 2001 இல் கடல் பூக்கள் என 6 சிறந்த திரைப்படங்களுக்கான 6 தேசிய விருதுகளையும், தமிழ்நாடு அரசின் 6 மாநிலத் திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
சமூக வாழ்வில் முன்னேறிச் செல்ல தடைகளாக இருக்கும் சாதிகள் மற்றும் மதங்களின் எல்லைகளை உடைத்து "மனிதாபிமானத்தை உயர்த்தி பிடித்து, சமத்துவ நிலைக்கு மனித சமூகம் உயர வேண்டும்" என்ற கருத்துகளை தனது திரைப்படங்களில் வலிமையாக முன் வைத்து, தனிச்சிறப்புப் பெற்றவர் அருகருகே உள்ள கிராமங்களை சேர்ந்த இசைஞானி இளையராஜாவும், இயக்குநர் சிகரம் பாரதிராஜாவும், நினைவில் வாழும் எஸ்பி பாலசுப்பிரமணியம் மூவரும் தமிழ் திரையுலகின் திசைவழியில் மிகப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய இணையற்ற நண்பர்கள் என்பது ஒரு வரலாற்றுப் பெட்டகம்.
திரையுலகில் தனித்துவம் வாய்ந்த இயக்குநர்களாக விளங்கும் பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன், சீமான், லீனா மணிமேகலை போன்ற இயக்குநர்களை கொடுத்த பேராசன் பாரதிராஜா.
இவரது இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில், வேதம்புதிது, முதல் மரியாதை, கருத்தம்மா போன்ற படைப்புகள் மக்களின் மனங்களில் நிகரற்ற இடம் பிடித்து நிற்பவைகளாகும்.
திரைப்படங்களில் மட்டும் அல்லாமல், காவிரி நதிநீர் பகிர்வு, இலங்கை தமிழர் உரிமை பாதுகாப்பு, மாநில உரிமைகள் என வரும் போது களப் போராட்டக்களங்கில் பங்கேற்ற செயல்பாட்டதுடன் தொடர்ந்து ஆதரித்தும் வந்தவர்.
தனது மகன் மனோஜின் இழப்பிற்கு பிறகு மனதளவில் சரிந்த பாரதிராஜா சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சைபெற்று வந்த "கிராமத்து மண்வாசனை கொண்ட கதைகளின் மாமன்னன்" 84 வயதில் புதன்கிழமை (ஜூன் 10) அதிகாலை நம்மை விட்டு மறைந்தார்.
அவரது மறைவு திரையுலத்தினர் மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாரதிராஜா என்ற மனிதனுக்கு மரணமிருக்கலாம் "பாரதிராஜா" என்ற கலைஞனுக்கு என்றும் "இல்லை மரணம்" என்பதே நிதர்சனம்.
Summary
About Bharathiraja, who won the hearts of Tamils everywhere with the single phrase, "My dear Tamil people..."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
கிராமிய வாழ்வு, மனித உணர்வுகளை வெளிப்படுத்திய படைப்புகள்! பாரதிராஜாவுக்கு ஆளுநர் இரங்கல்

பாரதிராஜா மறைவு: சரத்குமார் இரங்கல்
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



