"இயக்குநர் இமயம்' என்ற பெயரைத் தாங்கி நின்ற பாரதிராஜா, தமிழ்த் திரையுலகின் மகத்தான கலைஞர். தனித்துவமிக்க ஒரு திரை ஆளுமை. அனைத்துக்கும் மேலாக, அன்றும் இன்றும் திரைத் துறைக்குள் காலடி எடுத்து வைக்க நினைப்பவர்களுக்கான முன்னோடி- இப்படிப் பலவிதமாகப் பல பிரபலங்கள் பேசி நாம் கேட்டிருக்கிறோம். அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் ஆரம்பமாக ஒலிக்கும் "என் இனிய தமிழ் மக்களே...' என்ற அவரது குரல் காந்தமாக இன்றளவும் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
தேனியிலிருந்து சென்னைக்கு...: தேனி அருகிலுள்ள அல்லிநகரத்தில் பிறந்து வளர்ந்த பாரதிராஜா, சிறு வயது முதலே படைப்பாற்றலில் கவனத்தைக் குவித்தவர். அருகிலுள்ள கிராமங்களில் மேடை நாடகங்கள் நடத்திய அனுபவம் உடையவர். இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து பயணித்தவர். அப்படிப்பட்டவர் இளமைப் பருவத்தில் தான் பார்த்துவந்த சுகாதார ஆய்வாளர் பணியைத் துறந்த பிறகே, சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார்.
சென்னையிலும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்ப்பது முதல் நாடகங்களில் நடிப்பது வரை பல பணிகளை மேற்கொண்டார். கன்னட இயக்குநர் புட்டண்ண கனகல் தொடங்கி பி.புல்லையா, கிருஷ்ணன் நாயர், அவிநாசி மணி, ஏ.ஜகந்நாதன் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
கிராமங்களைக் காட்டிய கேமரா: தமிழ்த் திரையுலகில் அசல் கிராமங்களை சில திரைப்படங்கள் காட்டியிருக்கின்றன. பல்வேறுபட்ட மக்களின் பழக்க வழக்கங்களையும் கலாசாரத்தையும், பேச்சு வழக்கையும் பிரதிபலித்திருக்கின்றன. ஆனால், முழுமையாக ஒரு கிராமத்துக்குள் இறங்கி நடந்து பல்வேறு மக்களின் வாழ்வைக் கடந்து வந்த அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தன பாரதிராஜாவின் படைப்புகள். முதல் படமான "16 வயதினிலே' மூலமாக, அதுவே தனது பலம் என்று உணர்த்தினார். கிழக்கே போகும் ரயில், மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கிழக்குச் சீமையிலே என்று அதற்குப் பல உதாரணங்களையும் தொடர்ந்து தந்தார்.
முதலிரண்டு படங்களுக்குப் பிறகு, இவருக்குக் கிராமத்துப் படங்கள்தான் எடுக்கத் தெரியும் என்று பேச்சு எழுந்தது. அந்த வாதத்தை உடைத்து, தான் பார்த்த உலக சினிமாக்களின் பாதிப்பில் ஒரு த்ரில்லர் படத்தை தந்து ரசிகர்களை வியக்க வைத்தார் பாரதிராஜா. கமல்ஹாசன், ஸ்ரீதேவியை அழகான திரை ஜோடியாக உருமாற்றிய "சிகப்பு ரோஜாக்கள்' படம்தான் அது. அதேபோல "டிக் டிக் டிக்' படத்தில் செய்த மாயாஜாலம், மசாலா பட காட்சியாக்கத்தில் அவரை ஒரு "ட்ரென்ட்செட்டர்' ஆக்கியது.
சத்யராஜ் நடிப்பில் வேதம் புதிது படத்தை இயக்கி ஜாதிய சிந்தனைக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்தினார்.
அதேபோல பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற தமிழ் பட இயக்குநர்களின் வரிசையில் தனது படங்களைத் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழிகளில் இயக்கும் சவாலையும் பாரதிராஜா திறம்படச் சமாளித்தார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை போன்றவற்றின் "ரீமேக்' ஆக அவை இருந்தன. நேரடியாக யுவதாரம் பிலிசிந்தி, ஜமதக்னி என்று இரண்டு தெலுங்கு படங்களையும் இயக்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த், விஜயகாந்தை தன் திரைப்பட நாயகர்களாக்கி, அவர்களது பாணியிலேயே கொடி பறக்குது, தமிழ்ச்செல்வன் படங்கள் தந்திருக்கிறார். அவற்றால் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறார். "அந்தி மந்தாரை' படைத்து வியப்பை ஏற்படுத்தினார். தன் மனதுக்குப் பிடித்த படமாக "காதல் ஓவியம்' தந்த பிறகு, அதன் தோல்வியால் தமிழ் மக்களைச் சபித்திருக்கிறார். இதுபோல எத்தனை சொன்னாலும், பாரதிராஜாவின் படைப்பு என்ற அடையாளம் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு ஈடு இணை கிடையாது.
கேமரா முன்னால்..: பாரதிராஜா தன் மகன் மனோஜை நாயகனாக்கி "தாஜ்மஹால்' தந்தார். அது கலவையான காட்சியனுபவத்தைத் தரக் கூடியது. அந்தப் படத்துக்குப் பிறகு, தனது பலங்களை எல்லாம் விட்டுவிட்டு ஒரு புதிய இயக்குநர் போல பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கினார். கண்களால் கைது செய், பொம்மலாட்டம் என்று வேறு திசையில் பயணித்தார்.அதே நேரத்தில், மணிரத்னத்தின் "ஆயுத எழுத்து' மூலமாக கேமரா முன்பும் தலைகாட்டினார். அதற்கு முன்பும்கூட சில படங்களில் தோன்றியிருக்கிறார் என்றபோதும், அவற்றில் ஒரு பாத்திரமாக உலா வந்ததில்லை. இந்தப் படத்தில் அதைச் செய்தார்.
தனது நடிப்பின் வழியே நிறையவே விமர்சனங்களை எதிர்கொண்டார். "கல்லுக்குள் ஈரம்' காலத்திலும் அதுவே நிகழ்ந்தது என்றபோதும், இம்முறை தகுந்த வாய்ப்புகள் வரும்போது அந்த எண்ணங்களை உடைத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கொண்டார். "பாண்டியநாடு', "குரங்கு பொம்மை' என்று தொடங்கி "திருவின் குரல்' படத்திற்குப் பிறகும் அதைச் சாதித்திருக்கிறார். அந்த வகையில் "திருச்சிற்றம்பலம்' படம் உருவாக்கிய தாக்கத்தில் "வாத்தி'யில் ஒரேயொரு காட்சியில் தோன்றியதுகூட அவரது தனித்துவம் என்றே சொல்ல வேண்டும்.
ஓர் இயக்குநரின் உதவி இயக்குநர்களில் ஓரிருவர் இயக்குநர் அந்தஸ்து பெற்றாலே பெரிய விஷயம் என்றிருந்த காலகட்டத்தில் கே.பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ், மனோஜ்குமார், சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன் என்று பெரும்படையே அவரிடம் இருந்து வெளிவந்து தமிழ்த் திரையுலக வெற்றிகளைத் தங்களுடையதாக்கியது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற வார்த்தைகளின் கீழே ஒருவரது பெயர் வருவதே கெüரவம் என்றிருந்த காலகட்டத்திலும், அவர் பல கதாசிரியர்களிடம் கதை வாங்கியே அவற்றைத் தனது திரைப்படங்களாக மாற்றிக் கொண்டிருந்தார்.
திரையுலக இலக்கணங்களில் இருந்து விலகி நின்று சுதாகர், ராதிகா தொடங்கி பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, நாயகத் தேடலில் ஈடுபட்டபோதே பாரதிராஜாவின் கண்களில் பாண்டியன் தென்பட்டார் என்பதும், அவரை "மண்வாசனை'யில் நாயகன் ஆக்கினார் என்பதும் வரலாறு.
இது போன்று பல விஷயங்கள் அவரை ஒரு "தனித்துவக் கலைஞராக' முன்னிறுத்தும். பாரதிராஜாவின் படைப்புத் திறனை உற்றுநோக்கினால் எந்தவொரு சாதாரண மனிதரும் தங்களுக்கான பாடங்களைப் பெற முடியும். சமூகத்தில் வெற்றியாளராகத் திகழும் வகையில், எந்தத் துறையிலும் கோலோச்ச முடியும்.
-ஜி.அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








