வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பாரதிராஜா... ஒரு செல்லுலாய்ட் சகாப்தம்

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவின் வரலாற்றை ஒரு நொடி திரும்பிப் பார்க்க வைக்கிறது.

News image
Updated On :14 ஜூன் 2026, 4:15 am IST

சதீஷ் வைத்யா

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவின் வரலாற்றை ஒரு நொடி திரும்பிப் பார்க்க வைக்கிறது. எல்லோரும் நினைப்பதுபோல, சினிமா என்பது கடந்த நூற்றாண்டின் தமிழ் மண்ணில் தடம் பதித்ததல்ல. 19-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது அதன் முதல் முனகல்.

1897-இல் இப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா பப்ளிக் ஹாலில், எட்வர்ட்ஸ் என்கிற வெள்ளைக்கார துரை, அன்றாட வாழ்க்கையின் சில காட்சிகளை எந்தவிதப் பின்னணியோ, ஓசையோ இல்லாத படங்களாக ஒரு சில நிமிடங்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்குப் போட்டுக் காட்டுவதில் தொடங்குகிறது 'சினிமா' வின் பிள்ளையார் சுழி.

அதைத் தொடர்ந்து 1900-இல் எலெக்ட்ரிக் தியேட்டர் என்கிற திரையரங்கமும், 1914-இல் கெயிட்டி திரையரங்கமும் எழுப்பப்படுகின்றன. அன்றைய எலக்ட்ரிக் தியேட்டர் இருந்த இடத்தில்தான் இன்றைய அண்ணாசாலை தபால் நிலையம் இருக்கிறது. சமீபகாலம் வரை திரையரங்காக இருந்த கெயிட்டி, இப்போது வணிக வளாகமாகி விட்டது.

இதற்கிடையில் 1905 முதல், சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர், சிறு சிறு சினிமா படச் சுருள்களை வாங்கி 'டூரிங் டாக்கீஸ்' என்று ஆங்காங்கே சென்று மக்களை மகிழ்வித்து வந்தார்.

1918-இல் ஆர்.நடராஜ முதலியாரின் 'கீசக வதம்', 1930-இல் 'சதி அனுசூயா' என்று இரண்டு மெளனப் படங்கள் வெளிவந்து, சினிமா அடியெடுத்து வைத்தது. 1931 அக்டோபர் 31-இல் ஹெச்.எம்.ரெட்டியின் இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ் பேசும் படமான காளிதாசும், இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆராவும் வெளிவந்தபோது, சினிமா என்கிற மாயாஜாலத்தின் மயக்கத்தில் தமிழகம் தன்னை இழக்கத் தொடங்கி விட்டது.

Story image

இதெல்லாம் தொடக்க கால வரலாறு. ஆனால், தமிழ் சினிமாவின் வெற்றி வலம், கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என்கிற இரண்டு மிகப்பெரிய நடிப்பாளுமைகளின் காலமும், தமிழ் சினிமாவின் பொற்காலமும் தொடங்கிய காலகட்டமும் அதுதான். எத்தனை எத்தனையோ நடிக, நடிகையர், எத்தனை எத்தனையோ இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், கதாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என்று வெற்றி நடை போட்ட தமிழ்த் திரையுலகத்தின் வரலாறு, பாரதிராஜா என்கிற கலைஞனின் மறைவைத் தொடர்ந்து நமது நினைவில் நிழலாடுவதில் வியப்பொன்றுமில்லை.

கடந்த நூற்றாண்டு தமிழ் சினிமாவின் போக்கை மாற்றி அமைத்த பெருமைக்குரிய இயக்குநர்கள் ஐந்து பேர்-ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம். அந்த ஐம்பெரும் திரையாளுமைகளில் ஒருவரான பாரதிராஜாவைத்தான் இப்போது இழந்திருக்கிறோம்.

ஸ்ரீதரில் தொடங்கி மணிரத்னம் வரையில் அந்த ஐந்து இயக்குநர்களும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய நடிக, நடிகையரும், இயக்குநர்களும் புது வெளிச்சம் பாய்ச்சினார்கள். புதுப் பாதை வகுத்தார்கள். அதில் நடிக, நடிகையரை அறிமுகப்படுத்தியதிலும், இயக்குநர்களை உருவாக்கி தந்ததிலும் பாரதிராஜாவின் பங்களிப்பு அசாத்தியமானது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 'மீண்டும் ஒரு மரியாதை' திரைப்படத்தின் இயக்குநராகவும், கடந்த ஆண்டு வரையில் 'துடரும்' மலையாளத் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பழனிச்சாமி என்கிற கதாபாத்திரமாகவும் தனது சினிமாத் தொடர்பு துண்டிக்கப்படாமல் பயணித்த அந்தக் கலைஞன் இன்று நினைவுகளின் இடுக்குகளில் சினிமாவுக்கான இலக்கணப் பாடத்தின் பகுதியாக நிலைபெற்று விட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய மேலே குறிப்பிட்ட ஐந்து ஆளுமைகளில் இருந்தும் வித்தியாசப்படுகிறார் பாரதிராஜா என்றால் வியப்பாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

இயக்குநர் ஸ்ரீதர் ரத்த பாசம், எதிர்பாராதது, அமரதீபம் என்று ஒரு கதை வசனகர்த்தாவாகத் திரையுலகில் நுழைந்து 'கல்யாணப் பரிசு' திரைப்படம் மூலம் தன்னை இயக்குநராக அடையாளம் காட்டியவர். இயக்குநர் பாலசந்தர் நாடக மேடைகளில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். எம்.ஜி.ஆரால் 'தெய்வத்தாய்' திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநரானவர்.

Story image

இயக்குநர் மகேந்திரனும் 'தங்கப் பதக்கம்' மட்டுமல்லாமல் டி.என்.பாலு, கர்ணன் திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றி 'முள்ளும் மலரும்' திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார்.

மணிரத்னம், யாரிடமும் உதவியாளராக இல்லாமல் நேரிடையாகவே 'பல்லவி அனுபல்லவி' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் இயக்குநரானார்.

தமிழிலும் சரி, அவர் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குநர்கள் பிரபலமானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சினிமா என்கிற ஊடகத்தை ரசித்து செல்லுலாய்டில் வடித்தார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள் நால்வரில் இருந்தும் வேறுபடுகிறார் பாரதிராஜா. நாடக மேடை அடித்தளத்துடன், நீண்ட காலம் பல பிரபல இயக்குநர்களின் உதவியாளராக இருந்த அனுபவத்துடன் தன்னை இயக்குநராக அடையாளம் காட்டுவதற்கு, அந்தத் தேனி அல்லி நகரத்து இளைஞன் பால்பாண்டி என்று அழைக்கப்பட்ட சின்னசாமி எதிர்கொண்ட சவால்களும், முனைப்புகளும் சொல்லி மாளாது. தமிழ் சினிமா அந்த இளைஞனை இருகரம் கூப்பி வரவேற்கவில்லை, மாறாக அண்டை மாநிலங்களுக்கு அடித்து விரட்டியது.

புட்டண்ணா கனகலின் உதவியாளராகக் கன்னடத் திரைப்படங்களிலும், எம்.கிருஷ்ணன் நாயரின் உதவியாளராகப் பல மலையாளத் திரைப்படங்களிலும் பணியாற்றும்போது அவருக்குள் இருந்த ஏக்கமும், தவிப்பும் எப்படி இருந்திருக்கும் என்பதை, அவரது முதல் தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்தபோது தெரிந்தது. 'என் இனிய தமிழ் மக்களே...' என்பது அந்த ஏக்கத்தில் உருவான வெளிப்பாடோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

Story image

பாரதிராஜாவிடம் ஒரு கதை இருந்தது. அது அவரது நண்பரான கலைமணி அவரிடம் சொன்ன பத்து நிமிடக் கதை. தனது கதையையும் கதாமாந்தர்களையும் பத்தே நிமிடத்தில் கேட்பவர்களின் மனதில் சம்மணமிட்டு உட்கார வைத்துவிடும் சாமர்த்தியம் கலைமணிக்கு உண்டு. எந்தவொரு கதையாக இருந்தபோதும்,அதைக் காட்சிகளாக விரித்து, ஃப்ரேம் ஃப்ரேமாக ஓடவிட்டுப் பார்த்துவிடும் திறமை பாரதிராஜாவுக்கு உண்டு. அந்த கதைக்கு அவர் இட்ட தலைப்பு 'மயிலு'.

ஏறத்தாழ நான்கைந்து ஆண்டுகள் கலைமணி சொன்ன 'மயிலு' கதையைத் தனது மனதுக்குள் காட்சி பிரித்து, ஃப்ரேம் ஃப்ரேமாக விரித்து, மெருகேற்றி மெருகேற்றி பாதுகாத்து வந்தார் பாரதிராஜா. என்றைக்காவது ஒரு நாள் தனக்கும் ஒரு வாய்ப்பு வரும், அப்போது 'மயிலு' கதையைத் திரையில் காவியமாக உலவவிட முடியும் என்கிற அசாதாரண நம்பிக்கையும், அசாத்தியமான துணிவும் அவரிடம் இருந்தது.

சிவகுமார், லெட்சுமியில் தொடங்கித் தனது 'மயிலு' கதைக்கு உருவம் கொடுக்க அவர் மனத்திரையில் உலவவிட்ட நட்சத்திரங்கள் ஏராளம். கடைசியில் எஸ்.ஏ. ராஜ்கண்ணு என்கிற தயாரிப்பாளர் கிடைத்து, தனது நண்பன் இளையராஜா இசையில் '16 வயதினிலே' என்கிற பெயருடன் 1977 செப்டம்பர் 15 -ஆம் தேதி வெளியிட்டபோது, தமிழ்ச் சினிமா ஒரு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

Story image

'16 வயதினிலே' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் (ப்ரிவ்யூ ஷோ) பல முறை திரையிடப்பட்டன. விநியோகஸ்தர்களில் பலர் அந்தத் திரைப்படம் வெற்றி பெறாது என்றுதான் கணித்தனர். திரையரங்குகள் பல வெளியிடத் தயங்கின.

ஆனால், திரையரங்கில் 'செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே, ஜில்லென்ற காற்றே... என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே... நீ கொஞ்சம் சொல்லாயோ' என்கிற கங்கை அமரனின் பாடல் வரிகள் ஒலிக்கத் தொடங்கியபோது, ரசிகர் கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

அது வரையில் திரையில் காணாத கதாபாத்திரங்கள் உலவினார்கள்; கிராமத்து பாஷையில் அவர்கள் வசனம் பேசினார்கள்; ஒட்டுமொத்தத் தமிழகமும் நிமிர்ந்து உட்கார்ந்து வியந்து பார்த்தது.

வித்தியாசமான இசை; மாறுபட்ட காட்சி அமைப்பு; விறுவிறுப்பான திரைக்கதை; பளிச் பளிச்சென்று மாறும் படத் தொகுப்பு; ரம்மியமான ஒளிப்பதிவு எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்திய முற்றிலும் மாறுபட்ட நடிப்பு- இப்படி தமிழ் சினிமாவின் புதுப்பாணியாக, மைல் கல்லாக 16 வயதினிலே என்கிற திரைப்படம், செல்லுலாய்டில் பாரதிராஜா என்கிற கலைஞனால் செதுக்கப்பட்டிருந்தது.

திரைப்படம் வெளியான அடுத்த நாள் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. அப்போது, அடுத்த திரைப்படத்துக்கான கதையைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. சற்றும் தயங்காமல் அவரிடம் இருந்து வந்த பதில் இது- ' முகவரி இன்றி கிடக்கும் கடிதங்களைப் போல, ஆயிரமாயிரமாய் அங்குமிங்குமாய் கொட்டிக் கிடக்கின்றன எங்கள் கிராமத்துக் கதைகள்!'

கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், புது நெல்லு புதுநாத்து, நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன் என்று அவரது ஒவ்வொரு கிராமிய மணம் கமழும் திரைப்படத்திலும், அல்லி நகரத்து சின்னசாமியின் கொடி பறப்பதை பார்க்கலாம். முத்திரை இருப்பதை ரசிக்கலாம்.

Story image

இயக்குநர் பாரதிராஜாவின் வெற்றி ரகசியம்தான் என்ன? தன்னை எந்தவிதக் கூட்டுக்குள்ளும் நிரந்தரமாக அடைத்துக் கொள்ளாமல், அவ்வப்போது கிராமத்துக்கு வெளியே பயணிப்பதும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் துணிந்து களமிறங்குவதும்தான் அவரது வெற்றியின் ரகசியம்.

சிகப்பு ரோஜாக்கள்; டிக், டிக்,டிக்; ஒரு கைதியின் டைரி; வாலிபவமே வா, வா...; கொடி பறக்குது; கேப்டன் மகள் என்று தன்னை எந்தவித வட்டத்துக்குள்ளும் முடக்கிக் கொள்ளாமல் பயணித்த பாரதிராஜாவின் திரை மொழி, தமிழ் சினிமாவில் தடம் பதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான அரிச்சுவடிப் பாடம்.

புதிய பரீட்சார்த்தங்களை மேற்கொள்ள பாரதிராஜா தயங்கியதில்லை. அதில் அவ்வப்போது அவர் இடறி விழுந்ததும் உண்டு. அது நிழல்களானாலும், காதல் ஓவியமானாலும் அவை வெற்றிப்படங்களாக அமையாவிட்டாலும், தமிழ் சினிமாவை அடையாளம் காட்டும் சினிமாவாகத் திகழ்கின்றன.

பாரதிராஜா காதலைத்தான் கதைப் பொருளாக்குகிறார் என்று குற்றம் சாட்டிவிட முடியாது. அவரது வேதம் புதிது, புதுமைப் பெண், கருத்தம்மா, அந்திமந்தாரை உள்ளிட்ட படங்களில் அவர் முன் வைக்கும் சமுதாய சிந்தனைகளை நாம் கடந்து போகவா முடியும்?

முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே திரைப்படங்கள் குறித்து தனித்தனியாக ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அலசி ஆராய்ந்து ஒரு பயிற்சிப் பட்டறையே நடத்தலாம். இயக்குநரின் முத்திரை ஒவ்வொரு காட்சியிலும் பளிச்சிடுவதைப் பார்த்த பிரமிப்பிலிருந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் கூட நான் விடுபட முடியவில்லை. நான் மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் விமர்சகர் ஒவ்வொருவரும்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் 1977 முதல் 2025 வரையில் தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக இயங்கிய இயக்குநர் பாரதிராஜாவின் படைப்புகளை 2000-க்கு முன், 2000-க்குப் பின் என்று பிரித்துப் பார்க்க வேண்டும். கடந்த நூற்றாண்டின்கடைசிக் கால் நூற்றாண்டில் பாரதிராஜாவின் கைவண்ணத்தில் வெளிவந்த திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றன என்பது உண்மை. ஆனால், பாரதிராஜா என்கிற இயக்குநரின் கலையுணர்வை முழுமையாகப் பிரதிபலித்தவையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Story image

இந்த நூற்றாண்டில் அவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களின் எண்ணிக்கை குறைவு. அவற்றில் பெரும்பாலானவை, ஏன் எல்லாமேகூட, வணிக ரீதியாக வெற்றி பெறாதவை. ஆனால், இந்தியாவின் தலைசிறந்த மாற்று சினிமா இயக்குநர்களுக்கு இணையான கலைநயத்துடன் அவரால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் அவை.

கடந்த நூற்றாண்டு பாரதிராஜாவை மனதில் இருந்து அகற்றி நிறுத்திவிட்டு, அந்தத் திரைப்படங்களைப் பார்த்தால் அவற்றுள் ஒளிந்து கொண்டிருக்கும் சத்யஜித் ரே, மிருணாள் சென், அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், கிரீஷ் காசரவள்ளி, ஸ்யாம் பெனகல் ஆகியோருக்கு நிகரான திரைக்கலைஞனை நாம் பார்க்க முடியும்.

தாஜ்மஹால், கடல்பூக்கள், ஈரநிலம் மூன்றும் பாரதிராஜா ரசித்து உருவாக்கிய திரைப்படங்கள் என்றால் 'பொம்மலாட்டம்', பாரதிராஜாவுக்குள் ஒளிந்து கொண்டிருந்த மகா கலைஞனை அடையாளம் காட்டியது.

தமிழ் சினிமாவுக்கு வெளியே, சர்வதேசத் திரை ஆளுமையாகத் தன்னை நிரூபிக்க, அதற்கான எல்லா தகுதிகளும் இருந்தும் பாரதிராஜாவுக்கு வயதும், வாய்ப்பும் அமையவில்லை-சிவாஜி கணேசனைப்போல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.