தினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி!

தங்கத் தமிழ்நாட்டின் அன்னபூரணிகளே! தினமணி இணையதளத்தின் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி’ ல் கலந்து கொள்ள நீங்கள் தயாரா?
தினமணி இணையதளம் நடத்தும் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி!

ர்வதேச அளவில் பெண்களுக்கு சாப்பிடுவதைக் காட்டிலும் சுவாரஸ்யமும், திருப்தியும் தரக்கூடிய மற்றொரு விஷயம் உண்டென்றால் அது சமையல் தான். சிலர் ஆற அமர சமைப்பார்கள், சிலர் அரக்கப் பரக்க சமைப்பார்கள், சிலர் சமைக்குப் போதே சமையல் மேடையை அவ்வப்போது சுத்தம் செய்து கொண்டே நறுவிசாகச் சமைப்பார்கள். சிலர் சமைக்கும் போது பார்த்தால் கிச்சன் ஒரு போர்க்களம் மாதிரி இருக்கும். சிலருக்கு சமையல் ஒரு கடமை, சிலருக்கு அது கைப்பக்குவம், சிலருக்கு அது ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர்... வெகு சிலருக்கு மட்டுமே சமையல் ஒரு கலை.

சமையலை ஒரு கலையாக நினைத்து ரசித்து ரசித்துச் சமைத்தால் மட்டும் போதுமா? அது பிறர் ருசித்து, ருசித்து சாப்பிடும் வண்ணம் சுவையாகவும் இருக்க வேண்டும். அதோடு அதில் சுத்தமும், ஆரோக்யமும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் சேரும் போது தான் சமையல் என்பது அருங்கலையாகிறது. அறுசுவையும் சங்கமமாகிறது!

நம் எல்லோருக்குமே காசில்லா முதல் அறுசுவை விருந்து அம்மா கைச்சமையல் தான். அம்மாவைத் தாண்டி எத்தனையோ கைப்பக்குவங்களை ருசிக்க வாய்த்திருப்பினும் எப்போதும் நாம் முதலிடம் தருவது அம்மா கைச்சமையலுக்கு தான். ஏனென்றால் அதில் அறுசுவைகளைக் காட்டிலும் அன்பு சற்றுத் தூக்கலாக இருப்பதால் பிற சுவைகளில் ஒன்றிரண்டு குறைகளிருப்பினும் அதைப் பொருட்படுத்தாது அம்மாவின் சமையலையே வாழ்நாள் முழுவதுமாகக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே தான் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அனைவருக்கும் முதல் சமையல் குரு என்றால் அது அவரவர் அம்மாக்களே!

அம்மாக்களும், பாட்டிகளும் கற்றுக் கொடுத்து, தட்டிக் கொடுத்து, ஷொட்டுக் கொடுத்து மஞ்சளும், உப்புமாய் உரமிட்டு வளர்த்த தமிழ்நாட்டு கைப்பக்குவத்தை ஒரு குடும்பத்திற்கு மட்டுமாகச் சமைத்துப் போட்டு நான்கு சுவர்களுக்குள் முடக்குவதா?

நோ... நோ குறைந்த பட்சம் வாய்ப்புக் கிடைக்கும் போதாவது அதை ஊரறியச் செய்தே ஆக வேண்டுமில்லையா? இதோ உங்களது சமையல் ஆர்வத்துடன் தினமணி இணையதளம் கைகோர்க்கத் தயாராக இருக்கிறது.

அதற்கு முன்னோட்டமாக தினமணி இணையதளம் பிரம்மாண்ட சமையல் போட்டி ஒன்றை நடத்தவிருக்கிறது. சமையலில் தீவிர ஆர்வமுள்ள 18 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு முன்னதாக சமையல் போட்டிகள் எதிலேனும் பங்கேற்ற அனுபவமிருந்தால் நல்லது. ஏனென்றால் போட்டியில் உங்களது கைப்பக்குவத்தையும் நீங்கள் சமைக்கும் அழகையும் பரீட்சித்துப் பார்த்து முடிவில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கவிருப்பது தமிழ்நாட்டில் பெயர் சொன்னால் தெரியும் அளவிலான பிரபலமான மூன்று சமையல் வல்லுனர்கள்.

ஆகவே சென்னையின் அன்னபூரணிகளே! தினமணி இணையதளத்தின் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி’ ல் கலந்து கொள்ள இப்போதிருந்தே உங்களது சமையல் ஆர்வத்தை பட்டை தீட்டத் தொடங்கி விடுங்கள்.

களத்தில் இறங்க வேண்டிய நாள் : செப்டம்பர் 1, சனிக்கிழமை.

நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை

இடம்: எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.

மெனு: சைவம் மட்டும். (ஸ்டார்ட்டர் (துவக்க உணவு), மெயின் கோர்ஸ் (பிரதான உணவு), டெஸ்ஸர்ட் (இனிப்பு வகைகள்)

இதில் நீங்கள் சமைக்கப் போவது ஏதாவது ஒரு ஐட்டம் மட்டுமே, அது எந்த ஐட்டம் என்பது சஸ்பென்ஸ். அதை போட்டி நாளன்று குலுக்கல் முறையில் போட்டியாளர்களே தேர்ந்தெடுத்துச் சமைக்க வேண்டும். போட்டியாளர்கள் மூன்று விதமான ரெஸிப்பிகளுக்கும் தயாராகவே வாருங்கள்.

போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள்  வலது பக்கமுள்ள விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்து உங்களது பங்கேற்பை உறுதி செய்து கொள்ளவும்.

சமையற்கலையில் ஆர்வமுள்ள அத்தனை பெண்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

ஆர்வமுள்ள பெண்கள் அனைவரையும் தினமணி இணையதளம் இருகரம் கூப்பி வரவேற்கிறது!

பங்கேற்பீர்... பரிசுகளை வென்றிடுவீர்!

தினமணி இணையதளம் இதுவரை நடத்திய பிற போட்டிகள் குறித்து அறிந்து கொள்ள கீழுள்ள பட்டியலைப் பார்க்கவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com