காதலர் தினத்தை முன்னிட்டு தினுசு... தினுசாய் மனசு! #இதுஎனதுபதின்மக்காதல் தினமணி ஹேஷ் டேக்!

பதின்ம வயதுக் காதல்கள் பொய்த்துப் போன பின்னும் தொடரும் வாழ்வில் நிகழ்கால வாழ்க்கைத் துணைகளுடன் பழங்காதலைச் சுமந்து கொண்டு வாழும் ‘பூ’ படத்தின் கதாநாயகிகளும், ‘அழகி’ திரைப்படக் கதநாயகர்களும் நிறைந்த
காதலர் தினத்தை முன்னிட்டு தினுசு... தினுசாய் மனசு! #இதுஎனதுபதின்மக்காதல் தினமணி ஹேஷ் டேக்!
Published on
Updated on
3 min read

பஸ்ஸில் அதிக கூட்டமெல்லாம் இல்லை.

ஓரிரு சீட்கள் வெறுமையாய் கூட இருந்தன. கடைசி நீள சீட்டுக்கு முன் சீட்டில் ஜன்னலோரம் உட்கார்ந்திருப்பவனை விஜிக்கு நன்றாய்த் தெரியும். அவனுக்கும் விஜியைத் தெரியும் தான். விஜி திரும்பிப் பார்க்கவில்லை,

அவன் இவளைப் பார்த்தும் பாராதவனாய்...

மனசெல்லாம் பஞ்சாய்ப் பறப்பதைப் போல ஒரு இலகுத் தன்மை ஊடாட, நிரந்தரமில்லா பேரமைதியில் சீட்டில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு பின்புறம் தலை சாய்த்துக் கொண்டாள் விஜி.

நேரம் மாலை 4 மணி, திருச்சியில் இருந்து புறப்பட்ட கம்பம் பஸ்ஸில் கேரளா நெடுங்கண்டம் எஸ்டேட்டை நோக்கிய பயணத்தில் விஜியும் அவளது ஐந்து வயதுக் குழந்தையும்... கம்பம் போகவே ஆறேழு மணி நேரம் ஆகும் அங்கிருந்து குமுளி போய் அங்கிருந்து நெடுங்கண்டம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி செம்மண் சாலையில் மூன்று கிலோ மீட்டர் உள்ளே போனால் தான் எஸ்டேட் வரும். கணவன் ஜீப் அனுப்புவான். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறது. குளிர் காலமாதலால் மழைப் பிரதேசங்கள் நெருங்க நெருங்க இருள் சூழ்ந்து கொண்டு வந்தது .

வைகை ஆறு சாந்தமாய் ஓடிக் கொண்டிருந்த ஒரு மதிய நேரம். பள்ளி விடுமுறை நாள். ஆற்றங்கரையைத் தொட்டுக் கொண்டு தாத்தாவின் கொய்யாத் தோப்பு ... கரையொட்டிய மரத்தின் கிளையில் அமர்ந்து கால்களைத் தொங்க விட்டால் பாதக் கொலுசுகளை மோதிக் கொண்டு வெள்ளி நீர் பாய்ந்தோடுவது கொள்ளை அழகாய் இருக்கும் .

கணக்கு விஜிக்கு பெரும் பிணக்கு... நேற்றுக் கணக்கு வாத்தியார் வீட்டுப்பாட கணக்கை தப்பாய் போட்டுக் கொண்டு வந்ததால் ரூல்ஸ் தடியால் கை நீட்டச் சொல்லி பலக்க வேறு அடித்து விட்டார். இப்போது நினைத்தாலும் ‘மழுக்கென்று’ கண்ணீர் வந்தது வாத்தியார் அடித்ததற்காக இல்லை அதைப் பார்த்து அந்த கடன்காரன் தியாகு சிரித்ததற்காகத்தான்!

"அத்தையிடம் பலமுறை சிடு சிடுத்திருக்கிறாள்; இந்த குரங்கை நீ ஏன் பெற்றெடுத்தாய் என்று?!"

அத்தை சிரிப்புடன் இவளை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வருவாள்.

"என்னடி மருமகளே... எம்பையன் உனக்கு குரங்கா!? அந்தக் குரங்கு தான் நாளைக்கு உனக்குப் புருஷனா வரப் போறான் பார்!"

"வெவ்வெவ்வே'... இவன யாரு கட்டிக்குவா?! ஆசையப் பாரு! கணக்கு வாத்தியார் ரூல்ஸ் தடி எடுத்துட்டு வரலைனா... இவன் பையில இருந்து ஸ்கேல் எடுத்துத் தரான் என்னை அடிக்க... இவனப் போய் நான் கட்டிக்குவேனாக்கும்". முகம் சிவக்க விஜி கத்திக் கொண்டிருக்க...

"ஆமான்டி ஒன்னத்தான் கட்டிக்கனும்னு இங்க ஒத்தக் கால்ல நின்னு நின்னு கால் சுளுக்கிடுச்சு பாரு. அசல் குரங்கு நீ தான் இன்னொரு வாட்டி சொல்லு "வெவ்வெவ்வே" அப்டியே போட்டோ எடுத்து திருஷ்டிக்கு மாட்டுங்கம்மா, திருஷ்ட்டிப் பூசணிக்காய்!"

அப்போது தான் குரல் உடைபட ஆரம்பித்த நேரம் தியாகுவுக்கு, புதிதாய் அப்பாவின் லுங்கி கட்டப் பழகி இருந்தான்,

“போடா... தகர டப்பா தொண்டை...”

"போடீ எலிவால் சுந்தரி... ரெட்டை ஜடை ரேடியோ... கொட்டடிக்கப் போறியா?!"

(அவளது காதோரம் இரு புறமும் அத்தை வைத்து விட்ட டேலியா பூக்களை ஜடையோடு பிடித்து ஆட்டி அவன் சத்தம் போட்டு சிரிக்க)

உதடுகள் கோணிக் கொண்டு அழுகை வந்தது விஜிக்க ... அழ ஆரம்பித்து விட்டாள்.

"அம்மா ரேடியோன்னு சொன்னா கத்திக் கூப்பாடு போட்டு அழறா பாரு... இவ தான் ஒரிஜினல் ரேடியோ வால்யூம் கூட்டனும்னா ஜடையத் திருகனும்" அவன் இன்னும் அவளைச் சீண்ட. அத்தை கோபச் சிரிப்புடன் அவன் தலையில் கொட்டினாள்.

"போடா போக்கிரி... சும்மா எம்மருமகள கேலி செஞ்சிகிட்டு... ஓடிப் போயிடு உங்கப்பாகிட்ட, நீ வாடி என் செல்ல மருமகளே!" விஜியை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

"சரி... சரி வால்யூமக் குறைக்கச் சொல்லு, என் ஹோம் வொர்க் நோட் தரேன், பார்த்தாச்சும் ஒழுங்கா தப்பில்லாம கணக்கு போடச் சொல்லு உம்மருமகள. நாளைக்கும் வந்து அடி வாங்கி வச்சிட்டு அழுதுட்டு இருக்கப் போறா!"

கண்களில் கேலி கூத்தாட அவளைப் பார்த்து இன்னும் பழிப்பு காட்டி விட்டு அவன் நகர்ந்தான். விஜிக்கு அம்மா கேன்சரில் போய் விட்டாள், அப்பா மறுகல்யாணம் பண்ணிக் கொண்டு ஒதுங்கி விட்டார். நாத்தனாரின் மகளை தியாகுவின் அம்மா தான் சீராட்டி வளர்த்தாள் என்று ஊருக்குள் இன்றும் பேசுவார்கள்.

கதை இப்படியே போனால் விஜி தியாகுவைத் தான் மணந்திருக்க வேண்டும். ஆனால் அந்த தியாகு தான் இப்போது இதே பஸ்ஸில் பார்த்தும் பாராது கடைசி சீட்டுக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருக்கிறானே!?

நடந்தது என்ன?! இந்தக் கதையின் முடிவு என்னவென்பதை வாசகர் கற்பனைக்கே விட்டு விடலாம்.
.
.
.

ஏனெனில் இது ஒரு வாழ்வியல் நிதர்சனக் கதை. பலருக்கும் வாழ்வில் இப்படி நேர்ந்திருக்கலாம். இவள் தான் எதிர்கால மனைவி, இவன் தான் எதிர்காலக் கணவன் என்று குடும்பங்களுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு, அந்த நம்பிக்கைகள் பிள்ளைகளின் மனதிலும் புகுத்தப்பட்டு விதி வசத்தால் அது பின்னர் நடக்காமல் போயிருக்கலாம். ஆனால் அந்தச் சிறு வயதில் மனதில் பதிந்து போன ‘பதின்ம வயது காதல்’ உணர்வுகள் மட்டும் பசுமரத்தாணி போல காலத்துக்கும் அழியாமல் பதிந்து போயிருக்கும். அதை எளிதில் எவருடனும் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் மனதோரம் ஒரு சிறு வலி இருந்து கொண்டே இருக்கும். அந்த வலி வாழ்நாள் முழுமைக்குமாக சுகமான சுமையாகத் தொடரலாம். வாசகர்கள் யாருக்கேனும் அப்படியான சுமைகள் இருந்தால் அதை வரப்போகும் காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் வாயிலாக #இதுஎனதுபதின்மக்காதல் எனும் தினமணி ஹேஷ் டேக் மூலமாக இறக்கி வைக்கலாம்.

இவ்வுலகில் அழியாப் பெருங்காதல்களெனச் சில உண்டு;

அம்பிகாபதி அமராவதி!

ரோமியோ ஜூலியட்!

லைலா மஜ்னு!

இவை மட்டுமே புனிதமான காதல்களல்ல. தங்களது பதின்ம வயதுக் காதல்கள் பொய்த்துப் போன பின்னும் தொடரும் வாழ்வில் நிகழ்கால வாழ்க்கைத் துணைகளுடன் பழங்காதலைச் சுமந்து கொண்டு வாழும் ‘பூ’ படத்தின் கதாநாயகிகளும், ‘அழகி’ திரைப்படக் கதநாயகர்களும் நிறைந்த உலகு இது. அவர்களது காதல்களும் புனிதமானவை தான். சிலருக்கு அதை வெளியில் இறக்கி வைத்தால் பல ஆண்டுகால மனப்பாரம் குறையலாம். அப்படி தங்களது பதின்ம வயது நிறைவேறா காதலை சுகமான சுமையென எண்ணி சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் வாசகர்கள் சமூக வலைத்தளத்தில், தினமணி உருவாக்கியுள்ள #இது எனது பதின்மக் காதல்# எனும் ஹேஷ் டேக் வாயிலாக தினமணியுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com