வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார் என்பார்கள். அந்தப் பழமொழிக்கேற்ப தமிழர்கள் நாம், நமது வாழ்வில் மிக, மிக முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கும் இரு விஷயங்களில் ஒன்று திருமணம், மற்றொன்று சொந்தவீடு. இந்த இரு கனவுகளும்தான் இங்கு ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்ல உதவுகின்றன. இந்த இரண்டை அடைப்படையாகக் கொண்டுதான் நமது கல்வி, உத்தியோகத் தேர்வுகள், வருமான உயர்வுகள், பிள்ளைப்பேறுகள் உள்ளிட்ட நல்லது, கெட்டதுகள் அமைகின்றன.
யூ டியூபில் ‘இந்தியன் வெட்டிங்’ என்று தேடிப்பாருங்கள். ஆடம்பரமிக்க பல்லாயிரக்கணக்கான வெட்டிங் வீடியோக்கள் மலை, மலையென வந்து குவிகின்றன, கணினித்திரையில். பார்க்கப் பார்க்க, பிறரை தம்மாலும் இப்படியெல்லாம் ஒரு திருமணத்தை பகட்டாகவும், நேர்த்தியாகவும் நடத்தி முடிக்க இயலுமா? என்று சன்னமாகப் பொறாமைகொள்ளத் தூண்டும்விதத்திலான திருமணங்கள் பல உண்டு அங்கே! ஆடம்பரமும், படாடோபமும் கொட்டிக்கிடக்கும் திருமணங்களோடு, மல்ட்டி மில்லியனர்கள்கூட மிக எளிமையாக அநாவசியச் செலவுகள் ஏதுமின்றி பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் அதிசயமும் இந்தியாவில் உண்டு எனினும், கணக்கீட்டளவில் அது மிகச்சொற்பம்! பொதுவாக, இந்தியத் திருமணங்கள் என்றாலே அது பகட்டானது, அர்த்தமுள்ள பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை உள்ளடக்கியது, பட்டும், நகைகளும், சீர்வரிசைப் பொருட்களுமாக திருமணத்தில் கலந்துகொள்வோர்கூட மினி நகைக்கடைகளாக ஊர்வலம் வரத்தக்க வகையில் அமைந்தது என்பதே உலக நோக்கு!
அவ்வளவு ஏன்?
இன்றைக்கும் தமிழர் திருவிழாக்களில் தெய்வங்களுக்கு ஆடம்பரமாகத் திருக்கல்யாணம் செய்து அழகு பார்ப்பது ஒரு விமரிசையான பண்டிகையே. ஆண்டுதோறும் சித்திரையில் வரும் மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அதற்கொரு உதாரணம்.
இப்படி, திருமணம் என்றாலே அதை ‘ஊர்மெச்சச் செய்துகொள்வது’ என்பதையே நமது பிரதான ஆதர்ஷமாக வைத்துக்கொண்டிருப்பவர்கள் நாம்.
ஊர் மெச்சி, உறவினர் வாழ்த்து மழை பொழிய, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் பெற்றோர் கை குவித்து மணப்பெண்ணின் கை பிடித்து நீர் சரித்து கன்னிகாதானம் செய்து தர மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனவுகளே பெரும்பாலான இந்துத் திருமணங்களின் டீஃபால்ட் வெர்ஷன்.
இன்று காலம் மாறிவிட்டது. ஆடம்பரத் திருமணங்கள் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் இறங்கி வர முற்பட்டு, அர்த்தமுள்ள ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ பிளான்களைப் பற்றியெல்லாம் மாற்றி யோசிக்கத் தொடங்கி இருக்கிறது இன்றைய இளைய சமுதாயம்.
டெஸ்டினேசன் வெட்டிங் என்றால் என்ன?
சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த பிரபல தனியார் துணிக்கடை மணப்பெண் பட்டுப்புடவை விளம்பரத்தில் வரும் இளம்பெண்ணொருத்தி, தன்னுடைய திருமணம் வழக்கமான திருமணங்களைப்போல் இல்லாமல், நிச்சயதார்த்தம் ஒரு அழகான படகிலும், திருமண முகூர்த்தம் கடல் அலைகளின் மேளதாளத்துடனும், மெகந்தி ஏகாந்த நிலவொளியிலும், ராஜகுமாரன் மாதிரியான ஒரு மாப்பிள்ளையுடன் நடக்க வேண்டும் என்று கனவு காண்பாள். பார்க்கப் பார்க்கத் திகட்டாத கற்பனை அது. இப்படி தங்களது கல்யாணக் கனவுகளை மனம் விரும்பிய வண்ணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட குறிக்கோளுடன் திட்டமிட்டு முடிவு செய்வதைத்தான் இன்று டெஸ்டினேஷன் வெட்டிங் பிளான் என்கிறார்கள். தமிழில் அர்த்தம் கொள்வதானால், இதை லட்சியத் திருமணம் எனலாம்.
இந்த டெஸ்டினேஷன் வெட்டிங்கில் தீம் ஒன்றுக்கொன்று மாறுபடலாம்.
பீச் வெட்டிங், அண்டர்வாட்டர் வெட்டிங் (கடலுக்கு அடியில் திருமணம்), ஃபாரஸ்ட் வெட்டிங் (காட்டில் திருமணம்), ஸ்கை வெட்டிங் (வானத்தில் பறந்துகொண்டே திருமணம்), ஐலேண்ட் வெட்டிங் (தீவில் திருமணம்) என்று வேறுபடலாம். ஆனால், நோக்கம் ஒன்றுதான். மணமக்கள் இருவரின் மனத் திருப்தி. அதற்கு மட்டுமே இவ்வகைத் திருமணங்களில் முன்னுரிமை தரப்படும்.
மேலே காணப்பட்ட கனவில் இடம்பெற்றது பீச் வெட்டிங்.
இதைப்போல பல நூறுவிதமான டெஸ்டினேஷன் வெட்டிங் பிளான்கள் இன்று இளைஞர்களிடையே வழக்கத்தில் இருக்கின்றன.
ஆகவே, திருமணங்கள் என்பவை ஆடம்பரத்தை பறைசாற்றுவதற்காக மட்டுமே அமைவதல்ல என்ற புரிதல், இன்றைய இளம் தலைமுறையினரின் பரவலான எண்ணங்களில் ஒன்றாக அமைந்தது பாராட்டுதலுக்குரியது.
ஏனெனில், திகட்டத் திகட்ட வாழப்போகும் வாழ்வின் எந்த ஒரு நொடியிலும்... ஆண்டுகள் பல கடந்தபின் சற்றே அவகாசம் கிடைக்குமாயின், இணையுடன் சேர்ந்தமர்ந்து மீண்டும் ஒருமுறை ஒளிப்படமாக அவரவர் திருமண நாளைக் கண்ணாரக் கண்டு மனதார ஆனந்திக்க முடியுமாயின், அதுதானே மிகச்சிறந்த டெஸ்டினேஷன் வெட்டிங்காக இருக்க முடியும்!
சரி, இப்போது போட்டி குறித்த அறிவிப்புக்கு வருவோம்.
இந்தியாவில் திருமணங்கள் எப்படி வேண்டுமானாலும் நடத்தப்படலாம். அது திருமண வீட்டாரின் ஆசைகள், கனவுகள் மற்றும் பொருளாதார வசதிகளைப் பொருத்தது.
ஒரு திருமணம் ஐடியல் திருமணமோ அல்லது நகைகளை அள்ளிப்போட்டுக் கொண்டு இலைகளில் பட்சணங்களை உண்ணாமல் வீணடித்து அப்படியே மூடும் கனவான்கள், கனவதிகளும் கலந்துகொள்ளும் வழக்கமான திருமணமோ... எவ்வகைத் திருமணமாயினும் அதில் கலந்துகொண்டவர்கள் எனும் முறையில் அத்திருமணத்தைப் பற்றிய நிறை குறைகளைப் பட்டியலிட, அதில் கலந்து கொண்டு வாழ்த்திய அத்தனை உற்றார், உறவினருக்கும் உரிமை உண்டு.
இந்த முறை, தினமணி.காம் போட்டிக்கான மையமுடிச்சு அதுதான். வாசகர்கள் என்ன செய்ய வேண்டுமெனில்?
- முதலில் உங்களது ஆதரவு டெஸ்டினேஷன் திருமணங்களுக்கா? அல்லது வழக்கமான திருமணங்களுக்கா? என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் அளிக்கவும்.
- இரண்டாவதாக நீங்கள் அதை ஆதரிப்பதற்கான காரணத்தை ஒரே பத்தியில் ‘நச்’ சென சுருக்கமாக விளக்கவும்.
- மூன்றாவதாக இன்றைய திருமணங்களில் தவிர்க்கப்பட வேண்டிய குறைகள் என்ன? பின்பற்றப்பட வேண்டிய நிறைகள் என்ன? என்பதைப் பற்றி தலா ஐந்து குறிப்புகள் அளிக்கவும்.
- நான்காவதாக திருமணம் என்றாலே மேடையில் செய்யப்படும் பூ அலங்காரங்கள் முதல், மணமகன், மணமகளுக்கான பார்லர் செலவு, பந்தியில் பரிமாறப்பட்டு உண்ணாமலே எஞ்சும் உணவுப்பொருட்கள் வரை அநாவசியமான வீணடிப்புகள் எக்கச்சக்கமாக இருக்கும். அந்த வீணடிப்புகளை எவ்வகையில் எல்லாம் பயனுள்ளவையாக மாற்ற முயலலாம் என நச்சென ஒரே ஒரு வாக்கியத்தில் பதில்.
- ஐந்தாவதாக உங்களது பிரத்யேகக் கண்டுபிடிப்பாக புத்தம் புதிய டெஸ்டினேஷன் வெட்டிங் பிளான் ஒன்றை காலத்துக்கும் மனத்தில் நிற்கும் வகையிலும், பிறர் பின்பற்றும் வகையிலும் சுவாரஸ்யமாக விவரித்து எங்களுக்கு அனுப்புங்கள். (இதுவரை யாரும் பின்பற்றியிராத வகையில், அது முற்றிலும் புத்தம் புது கான்செப்டாக இருக்க வேண்டும்)
- போட்டிக்கான உங்களது பங்களிப்பு முழுவதும் அருமைத் தமிழில் மட்டுமே அமைய வேண்டும். ஆங்கில மின்னஞ்சல்கள் நிராகரிக்கப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள் அவ்வளவுதான்...
போட்டியில் உங்களது வெற்றியைத் தீர்மானிக்கப்போவது கடைசிக் கேள்விக்கு நீங்கள் அளிக்கவிருக்கும் புத்தம் புதிய கியூட் ஐடியாக்கள்தான்.
ஆதலால், அன்பான வாசகர்களே, ஆகட்டும்... சீக்கிரம் பரபரவென யோசித்து கடகடவென எழுதி அனுப்புங்கள்.
வழக்கம்போல, போட்டியில் வெல்லும் முதல் மூன்று நபர்களுக்கு தினமணி.காமின் சிறப்புப் பரிசுகள் உண்டு.
Image courtesy: http://www.ezwed.in
தினமணி குரூப் ஃபோட்டோ போட்டி முடிவுகள் மற்றும் பரிசு பெற்றோர் பட்டியல்!
அக்னி சாட்சியாக அல்ல நீர் சாட்சியாக நடந்தேறிய லட்சியத் திருமணம்!
தினமணி வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு! நவம்பர் 14-ஐ முன்னிட்டு ‘குரூப் ஃபோட்டோ’ போட்டி!
இன்லண்ட் லெட்டரை மறக்க முடியுமா? வாசகர்களே தினமணிக்கு கடிதமெழுத ஒரு நல்வாய்ப்பு!