வெ. இறையன்பு
வெ. இறையன்பு

இதயமான இதழ்!

செய்தித்தாள்களை "இதழ்கள்' என்று அழைப்பதற்குக் காரணம் அவை உண்மையை உரைக்கும் நாட்டின் உதடுகளாய் இருப்பதால். சுட்டுவிரலை இதழ்கள் மேல் வைத்தால் எச்சரிக்கை என்று பொருள்
Published on

செய்தித்தாள்களை "இதழ்கள்' என்று அழைப்பதற்குக் காரணம் அவை உண்மையை உரைக்கும் நாட்டின் உதடுகளாய் இருப்பதால். சுட்டுவிரலை இதழ்கள் மேல் வைத்தால் எச்சரிக்கை என்று பொருள். மக்களை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதாலும் அவை இதழ்கள். ஊதல் மூலம் உஷார் ஒலி எழுப்ப உதடுகளே குவிந்து காற்றை இசையாக உச்சரிக்கின்றன. மக்களை ருசுவாக்கும் அரும்பணியையும் இதழ்களே செய்கின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போதே எங்கள் இல்லத்தில் வாங்கிய செய்தித்தாள்களுள் தினமணியும் ஒன்று. அதிகாலையில் நாற்காலியில் அமர்ந்து அப்பா முதல் பக்கத்தைப் படிக்கும்போதே தரையில் அமர்ந்து கடைசிப் பக்கத்தை வாசிக்கிற வழக்கம்.

செறிவான கருத்துகள், தரமான செய்திகள், ஆவணப்படுத்த வேண்டிய கட்டுரைகள், புதுச்சொல் ஆக்கம், தேசிய உணர்வை ஊட்டும் தலையங்கம் என்று எங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தியதில் தினமணிக்கும் ஆழ்ந்த பங்குண்டு.

மற்ற மாணவர்கள் தேர்வில் ஆசிரியர் கொடுத்த கட்டுரையை மனப்பாடம் செய்து அப்படியே எழுதும்போது நான் பல நேரங்களில் சொந்தமாக எழுத அந்த வாசிப்பு உதவியது. சொற்திறனை அதன் மூலம் அதிகரித்துக் கொண்டது உண்மை. இன்றும் கலைச்சொல்லாக்கத்தில், பல விஞ்ஞானப் பதங்களை எளிமையாக தமிழ்ப்படுத்துவதில் தினமணியின் பங்கு மகத்தானதாக இருக்கிறது.

குடிமைப் பணிகளுக்குத் தயாரிக்கும்போது கத்தரித்து பத்திரப்படுத்திய தினமணியின் கட்டுரைகள் நடப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின. நடுநிலைமையோடு அரசியல் கொள்கைகளையும், முக்கியமான திட்டங்களையும் புரிந்துகொள்ள அவை எங்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றன.

மக்களுக்குப் பயன்படும் பல செய்திகளை உரிய முறையில் முக்கியமான இடத்தில் வெளியிடும் பண்பு எப்போதும் தினமணிக்கு உண்டு.

சமூக அக்கறையும், தார்மீகப் பொறுப்புணர்வும் உள்ள நாளிதழாக இன்றும் அதன் நெடுங்காலப் பாரம்பரியத்தை சிறிதும் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்பட்டு வருவதுதான் அதன் தனித் தன்மை. அதன் நடுப்பக்கக் கட்டுரைகள் ஆய்வுக்கோவையைப்போல அமைந்திருப்பவை.

தினமணியின் வாசகனாகத் தொடங்கி, பின்னர் என்னைப் பற்றிய சில செய்திகள் வருகிற அலுவலராக ஆகி, இப்போது அதில் பங்களிக்கிற மனிதனாக அதனுடனான தொடர்பு எனக்கு திடப்பட்டுக்கொண்டே வருகிறது. இப்போது அந்த மூன்றுமாக நான் இருக்கிறேன். மாணவர்களுக்காக தினமணி நடத்தும் பல கல்வி நிகழ்ச்சிகளில் நானும் பேசியிருக்கிறேன். அவையெல்லாம் எண்ணி எண்ணி இன்புறத்தக்க நிகழ்வுகள்.

தினமணி மக்களின் குரலாகவும், தேசத்தின் குரலாகவும் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே 85-ஆவது ஆண்டாக தமிழ் பரப்பும் தினமணியின் வாசகனான என்னுடைய அவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com