இதழல்ல, இது இயக்கம்!

ஒரு நாளிதழ் தொடர்ந்து 85 ஆண்டுகளாக வெளிவருகிறது என்பது மட்டுமே அதன் வரலாற்றுக்குச் சிறப்பு சேர்த்துவிடாது.
இதழல்ல, இது இயக்கம்!

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மனோஜ்குமார் சொந்தாலியாவின் தலைமையில் இயங்கத் தொடங்கிய பிறகு மிகப்பெரிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டது. 2,500க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக, 31 பதிப்புகளுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழும், பத்து பதிப்புகளுடன் "தினமணி' தமிழ் நாளிதழும், தில்லியில் "மார்னிங் ஸ்டாண்டர்ட்' ஆங்கில நாளிதழும் என்று வலிமையான ஊடக நிறுவனமாக உயர்ந்தது அவரது தலைமையில்தான்.

"எல்லோரும் பதிப்புகளை வெளிக்கொணரும் நகரங்களிலிருந்து நாமும் தொடங்குவானேன்? பின்தங்கிய மாவட்டத் தலைநகரங்களில் நாம் பதிப்புத் தொடங்குவோம். அதன் மூலம் அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள் முன்னுரிமை பெறும். அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு அது வழிகோலும்'' என்கிற அவரது கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டவைதான் தினமணியின் தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம் பதிப்புகள்.

ஒரு நாளிதழ் தொடர்ந்து 85 ஆண்டுகளாக வெளிவருகிறது என்பது மட்டுமே அதன் வரலாற்றுக்குச் சிறப்பு சேர்த்துவிடாது. தனக்கென எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வியாபாரக் கண்ணோட்டத்துடன் மட்டுமே நடத்தப்படும்போது, வரலாறு இருக்கும். வரலாற்றுச் சிறப்பு இருக்காது.

உலக வரலாற்றில் எத்தனை எத்தனையோ நாளிதழ்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்னின்ன காரணங்களுக்காக நாங்கள் இந்த நாளிதழை வெளிக்கொணர்கிறோம் என்று குறிக்கோள்களைக் காரண காரியங்களுடன் பட்டியலிட்டுத் தொடங்கப்பட்ட நாளிதழ் "தினமணி' மட்டுமாகத்தான் இருக்கும். 85 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத்தானே வகுத்துக்கொண்ட அந்தக் கொள்கையிலிருந்து, இன்றுவரை தடம் புரளாமல் "தினமணி' நடைபோடுகிறது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் மறைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் திலகரின் காலம் முடிந்து, மகாத்மா காந்தி யுகம் தொடங்கிவிட்டிருந்தது. அன்றைய ஆங்கில நாளிதழ்கள் அனைத்துமே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் செய்திகளைத் தாங்கிவரும் பத்திரிகைகளாக இருந்தனவே தவிர, சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் ஏடுகளாக இருக்கவில்லை.

விடுதலை வேள்விக்குத் துணை நிற்பதற்காக நாளிதழ்கள் தொடங்க வேண்டும் என்கிற அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலுக்கு ஏற்ப, தொடங்கப்பட்டவைதான் "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழும், "தினமணி' தமிழ் தினசரியும். இரண்டு வருட இடைவெளியில் தொடங்கப்பட்டாலும்கூட, கங்கையும், யமுனையும் இணைவது போன்று இரண்டு நாளிதழ்களும் இணைந்ததும், விடுதலைப் போராட்டத்தில் நேரடிப் பங்கு வகித்த ராம்நாத் கோயங்கா, டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன், கே. சந்தானம் ஆகியோரால் அவை வழிநடத்தப்பட்டதும் சுதந்திரப் போராட்டத்தின் வேகத்தையும், தீவிரத்தையும் அதிகப்படுத்தின.

விடுதலைக்காகக் காராக்கிரகம் கண்ட தியாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்ததன் விளைவுதான் "தினமணி' என்கிற நாளிதழ். "தினமணி' பிறந்த வரலாறும், அதை டி.எஸ். சொக்கலிங்கமும், ஏ.என். சிவராமனும் உரமிட்டு வளர்த்த வரலாறும் இந்த மலரில் பலராலும் விரிவாகவும், தெளிவாகவும் தரப்பட்டிருக்கின்றன.

தமிழையும் தேசியத்தையும் தனது மரபணுவில் கலந்துவிட்ட அடிப்படைத் தத்துவமாகக் கொண்டு இன்றுவரை "தினமணி' இயங்குகிறது என்று சொன்னால், டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியராக இருந்த முதல் ஒன்பது ஆண்டுகளில் அவர் அமைத்துத் தந்த அடித்தளம்தான் காரணம்.

"தினமணி' நாளிதழுக்கு ஆணிவேராக இருந்தவர் டி.எஸ். சொக்கலிங்கம் என்றால், இந்த நாளிதழ் மிகப் பெரிய ஆலவிருட்சமாக ஓங்கி வளர்ந்ததற்கு அடுத்த 43 ஆண்டுகள் அதன் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என். சிவராமன் காரணம். விடுதலைப் போராட்ட காலத்தின் கடைசி கட்டத்திலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அடுத்த 40 ஆண்டுகளும் "தினமணி'யின் ஆசிரியராக இருந்து வழிநடத்திய பெருமை அவருக்கு உண்டு. மூன்று தலைமுறைத் தமிழர்களை தேசிய உணர்வோடும், சர்வதேசப் புரிதலோடும் உருவாக்கிய பேராசிரியர் ஏ.என். சிவராமன்.

பெரியவர் ஏ.என். சிவராமனின் காலத்தில் இந்தியா எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம். இந்திரா காந்தி அரசு அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி பத்திரிகை சுதந்திரத்துக்குக் கைவிலங்கிட்டபோது, அதைத் துணிந்து எதிர்கொண்ட ஒரே தமிழ் நாளிதழ் "தினமணி' மட்டுமே. அதற்கு காரணமாக இருந்தவர் ஆசிரியர் ஏ.என். சிவராமன்.

ஆலமரத்தின் நிழலில் எதுவும் முளைக்காது என்பார்கள். ஏ.என். சிவராமனுக்குப் பிறகு "தினமணி'யை வழிநடத்திச் செல்ல ஒருவரால் முடியும் என்பதை யாரும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. "தினமணி' வரலாற்றில் அந்த அதிசயமும் நிகழ்ந்தது. ஆலமரத்திலிருந்து அரசமரம் முளைத்து வருவது போல, ஐராவதம் மகாதேவனின் அடுத்த கட்டம் நிகழ்ந்தது. "தினமணி'க்குப் புதிய பாதையை வகுத்த பெருமை நான்கு ஆண்டுகள் ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவனுக்கு உண்டு. அவர் "தினமணி'யின் தோற்றத்தை மாற்றினார், மொழி நடையையும் மாற்றினார்.

தேசியத்தைத் தனது அடிப்படையாகக் கொண்ட "தினமணி'யை திராவிட சிந்தனையாளர்களையும் ஏற்றுக்கொள்ளவைத்தவர் 9 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த இராம. திரு. சம்பந்தம். நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மிகப்பெரிய சோதனைகளை எதிர்கொண்ட காலகட்டம் இராம. திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நாள்கள். தன்னுடைய தனிப்பட்ட கொள்கைகளையும், விருப்பு வெறுப்புகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு "தினமணி' தனது தரத்தில் குறைந்துவிடாமலும், அதிகரித்துவிட்டிருந்த வியாபாரப் போட்டியில் காணாமல் போய்விடாமலும் காப்பாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

எனக்கு முன்னால் ஆசிரியர்களாக இருந்து "தினமணி'யை போற்றி வளர்த்த அந்த ஆளுமைகளின் பங்களிப்புகளை, இன்றைய ஆசிரியராக இருந்து இந்த நேரத்தில் நான் நினைவு கூராமல் போனால், நன்றி கொன்றவனாவேன். இவர்கள் மட்டுமல்ல, ஓராண்டு காலம் மட்டுமே ஆசிரியராக இருந்த கஸ்தூரிரங்கனும், இரண்டு ஆண்டுகள் நிர்வாக ஆசிரியராக இருந்த மாலனும் அவர்களுக்குக் கிடைத்த குறைந்த கால அவகாசத்திலும் "தினமணி'யின் வேருக்கு நீரூற்றியவர்கள். "தினமணி'யின் வளர்ச்சிக்கு உரமிட்டவர்கள். இராம. திரு. சம்பந்தத்திற்குப் பிறகு இடைக்கால ஆசிரியராக இருந்த எம். சந்திரசேகரின் பதவிக் காலத்தையும் குறிப்பிட வேண்டும்.

"தினமணி'யின் மிகப் பெரிய பலம் அதன் உரிமையாளர்கள். ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் உரிமையாளர்களே ஆசிரியர்கள் என்பதிலிருந்து, ராம்நாத் கோயங்காவின் "இந்தியன் எக்ஸ்பிரஸும்', "தினமணி'யும் வேறுபட்டன. "தினமணி' நாளிதழின் ஆசிரியர்கள் முழுநேர ஆசிரியர்களாகத் தங்களது இதழியல் பணியில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தவும், எந்தவிதமான நிர்வாகத் தலையீடும் இல்லாமல் செயல்படவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில்தான் "தினமணி'யின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஏனைய நாளிதழ்களிலிருந்து அவை தனித்துவத்துடன் திகழ்வதற்கு அதுதான் காரணம்.

ஆசிரியர் குழுவின் அன்றாட அலுவல்களில் நிர்வாகம் தலையிடுவதில்லை என்பது ராம்நாத் கோயங்கா வகுத்த அடிப்படை இலக்கணம். அடிப்படைக் கொள்கையிலும் நாளிதழின் நோக்கத்திலும் கருத்துவேறுபாடு ஏற்படாதவரை, ஆசிரியர்களின் செயல்பாடுகளில் இன்றுவரை நிர்வாகம் தலையிடுவதில்லை.
ராம்நாத் கோயங்காவும், அவரது மகன் பகவன்தாஸ் கோயங்காவும், அவரது மறைவுக்குப் பிறகு பகவன்தாஸின் மனைவி சரோஜ் கோயங்காவும், ராம்நாத் கோயங்காவின் பெயரனும், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் இப்போதைய தலைவர், மேலாண் இயக்குநரான மனோஜ் குமார் சொந்தாலியாவும், அந்தக் கொள்கையைக் கடைபிடிப்பதால்தான் "தினமணி' தனித்துவத்துடன் இயங்க முடிகிறது. ஏனைய பத்திரிகைகள் போலல்லாமல், விளம்பரக் கட்டாயங்களுக்கும், அரசியல் நிர்பந்தங்களுக்கும் முழுமையாக பலிகடாவாகாமல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிகிறது.

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மனோஜ்குமார் சொந்தாலியாவின் தலைமையில் இயங்கத் தொடங்கிய பிறகு மிகப்பெரிய மாற்றங்களையும், வளர்ச்சியையும் கண்டது. 2,500-க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனமாக, 31 பதிப்புகளுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழும், பத்து பதிப்புகளுடன் "தினமணி' தமிழ் நாளிதழும், தில்லியில் "மார்னிங் ஸ்டாண்டர்டு' ஆங்கில நாளிதழும் என்று வலிமையான ஊடக நிறுவனமாக உயர்ந்தது அவரது தலைமையில்தான்.

"தினமணி' நாளிதழில் நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, புதிதாகப் பதிப்புகள் தொடங்குவது என்கிற திட்டம் வகுத்ததற்கும் அவர்தான் காரணம். தலைநகர் தில்லியில் பதிப்புத் தொடங்க வேண்டும் என்கிற கருத்தை முன்மொழிந்ததே அவர்தான். தமிழகத்தில் புதிய பதிப்புகள் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தபோது, புதியதொரு கருத்தை முன்மொழிந்தார் மேலாண் இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா.

"எல்லோரும் பதிப்புகளை வெளிக்கொணரும் நகரங்களிலிருந்து நாமும் தொடங்குவானேன்? பின்தங்கிய மாவட்டத் தலைநகரங்களில் நாம் பதிப்புத் தொடங்குவோம். அதன் மூலம் அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள் முன்னுரிமை பெறும். அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கு அது வழிகோலும்'' என்கிற அவரது கருத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டவைதான் தினமணியின் தருமபுரி, விழுப்புரம், நாகப்பட்டினம் பதிப்புகள்.

"தினமணி'யின் வாசகனாகத் தொடங்கி, அதன் ஆசிரியராக ஒரு மாமாங்க காலம் கடந்தும் தொடரும் இந்தத் தருணத்தில், "தினமணி' நாளிதழுடனான எனது உறவின் தொடக்கத்தை நினைத்துப் பார்க்கிறேன். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பாபநாசம் தொழிலாளர் நலவுரிமைக் கழகத் துவக்கப் பள்ளியில் (பாபநாசம் லேபர் வெல்ஃபேர் பள்ளி) மாணவனாக இருக்கும்போது எனக்கு அறிமுகமான "தினமணி' நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை, அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு நாள் நான் ஏற்பேன் என்று அந்தப் பிஞ்சு மனது கிஞ்சித்தும் நினைத்திருக்காது. ஆனால், அது நிகழ்ந்தது. அதைத் தற்செயல் நிகழ்வென்று கூறுவதா, இல்லை, விதிவசப்பட்டது என்று கருதுவதா தெரியவில்லை.

எனது ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் ராஜகோபால் ஐயா. "தினமணி'யின் தீவிர வாசகரான அவரைக் கையில் "தினமணி' இல்லாமல் பார்க்க முடியாது. ஏனைய ஆசிரியர்கள் எல்லாம் மாணவர்கள் தவறு செய்தால் பிரம்பால் அடிப்பார்கள். ஆனால், ஆசிரியர் ராஜகோபால் ஐயா தன் கையில் வைத்திருக்கும் "தினமணி'யால் அடிப்பார். துவக்கப் பள்ளிக் காலத்தில் "தினமணி'யால் அடிக்கப்பட்டதில் தொடங்குகிறது எனக்கும் "தினமணி'க்குமான தொடர்பு.

மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்த போதுதான் "தினமணி' ஒரு நாளிதழாக எனக்கு அறிமுகமாகிறது. "தினமணி'யை வாசிக்கச் சொல்லி அறிவுறுத்தியவர் மகாகவி பாரதி மீது தாளாப்பற்று கொண்ட பரிதிமாற் கலைஞரின் பெயரனும், வகுப்பு ஆசிரியருமான வி.ஜி. சீனிவாசன். அவர் பாரதியையும் அறிமுகப்படுத்தினார், "தினமணி'யையும் அறிமுகப்படுத்தினார்.

பள்ளிப் பருவத்திலேயே அவர் "தினமணி' நாளிதழை எனது மனதில் பதியம் போட்டதால்தான் "தினமணி'யின் அடிப்படைக் கூறுகளைப் புரிந்துகொண்ட ஓர் ஆசிரியராக என்னால் பணியாற்ற முடிகிறது என்று நினைக்கிறேன். அவரது வழிகாட்டுதலில்தான் நாங்கள் "சேதுபதி' என்கிற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். "சேதுபதி'யில் தொடங்கிய அந்தப் பத்திரிகைப் பயணம்தான் இப்போது "தினமணி' நாளிதழ் வரை தொடர்கிறது.

"தினமணி'க்கென்று ஒன்றிரண்டு அல்ல எத்தனையோ தனித்துவங்கள்- எந்த ஒரு காரணத்திற்காகவும் தனது தரத்தில் சமரசம் செய்துகொள்வதில்லை; செய்திகளில் எதைத் தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்கிற திட்டவட்டமான புரிதல்; வாசகர்களின் சில்லறைச் சந்தோஷங்களைத் தூண்டிவிட்டு விற்பனையை அதிகரிப்பதில் நாட்டம் காட்டாமல் இருப்பது; தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டி, புரிதலை மேம்படுத்தித் தரம் உயர்த்துவது... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

"தினமணி'யின் ஆசிரியராக 2007 மே 17ஆம் நாள் நான் பொறுப்பேற்றபோது ஆசிரியர் குழுவினருக்கு நான் விடுத்த வேண்டுகோள் (கட்டளை என்றும் கூறலாம்) - "தமிழ் மொழி சார்ந்த செய்திகளுக்கும், தமிழ் இலக்கிய நிகழ்வுகளுக்கும் "தினமணி'யில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது.

தமிழ் வளர்ச்சியில் பத்திரிகைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் நான் தீர்மானமான கருத்தைக் கொண்டிருக்கிறேன். தமிழை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ் நாளிதழ்கள் நடத்தப்படுகின்றன. தமிழ் செழுமையாகவும், வளமாகவும்,இருந்தால்தான் நம்மால் தமிழில் பத்திரிகை நடத்த முடியும்.
நமது எழுத்துக்கும் கருத்துக்கும் அர்த்தம் இருக்க வேண்டும் என்றால், தமிழ் வாழ வேண்டும். மொழி சிதைந்துவிடாமலும், வளமை குன்றிவிடாமலும் தொடர வேண்டும். அதனால், மொழியைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய கடமையும் கட்டாயமும் பத்திரிகைகளுக்கு உண்டு.

தமிழ் சார்ந்த செய்திகளை நாம் வெளியிடாமல் பிறமொழிப் பத்திரிகைகளும் ஆங்கில பத்திரிகைகளுமா வெளியிடும்? தமிழ் மொழி சார்ந்த, இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுக்கு "தினமணி'யில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது "தினமணி'யில் இப்போது கடைப்பிடிக்கப்படும் எழுதப்படாத விதி.

அதனால்தான், "தினமணி' தன்னை எல்லா இலக்கிய நிகழ்வுகளிலும் இணைத்துக் கொள்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் இயன்றவரையில் இலக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்கிறேன். "தினமணி' துணை நிற்கிறது என்பதால் இலக்கிய அமைப்புகளின் செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கிறது. மக்களின் தமிழார்வம் குன்றிவிடாமல் அந்த இலக்கிய அமைப்புகள் பாதுகாக்கின்றன.

தலைநகர் தில்லியில் இலக்கிய அமைப்புகளின் மாநாடு கூட்டப்பட்டதும், சென்னையில் இரண்டு நாள் தமிழ் இலக்கியத் திருவிழா நடத்தியதும் "தினமணி' நாளிதழின் தமிழ்ப் பணிகள். பணி என்பதைவிட அதைக் கடமை என்றுதான் கொள்ள வேண்டும்.

நடுநிலை என்பது குறித்த தவறான புரிதல் காணப்படுகிறது. அவரவர் கருத்துக்கு மாற்றுக் கருத்தைப் பதிவு செய்தால் நடுநிலைமை தவறிவிட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். எந்த ஒரு பிரச்னையிலும், ஆணித்தரமாக வலுசேர்க்கும் வாதங்களுடன் துணிந்து தனது பார்வையை, தனது கருத்தைப் பதிவு செய்வதுதான் நடுநிலைமை. அதில் சார்பு நிலை காண்பது அவரவர் பார்வையின் தவறு.

தினமணி தொடங்கிய காலத்திலிருந்து இன்றைய தலையங்கம் வரை தொடர்ந்து இந்தக் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தலையங்கத்தில் தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவிடும் அதே நேரத்தில், தலையங்கப் பக்க கட்டுரைகளில் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் சிறப்பான பண்பை "தினமணி' என்றைக்குமே கைவிட்டதில்லை. அதேபோல, தனது செய்திகளிலும், விருப்பு வெறுப்புக்கு இடமளித்ததில்லை. பெரிய கட்சிகள் சிறிய கட்சிகள் என்றில்லாமல், அன்றைய முக்கிய நிகழ்வாக இருந்தால் அதற்கு முதல் பக்க மரியாதை தரப்படும் பண்பு, தினமணிக்கு மட்டுமே சொந்தம்.

தினமணியின் தலைப்புச் செய்தியிலும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. மிக முக்கியமான சர்வதேச நிகழ்வுகளாக இருந்தால் அதற்குதான் முன்னுரிமை. அடுத்ததாக தேசியச் செய்திகள், மூன்றாவதாக மாநில நிகழ்வுகள். அதேபோல மத்தியில் - மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் முதல் பக்க தலைப்பு செய்தியாகவும், எதிர்க்கட்சிகளின் செய்திகள் நடுப்பக்க செய்தியாகவும் வெளிடுவது என்கிற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளும், அவரது செய்திக்குத்தான் முன்னுரிமை, முதல்பக்க மரியாதை "தினமணி'யில் தரப்பட்டது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, அந்த இடம் இப்போதைக்கு அவருக்கானது. தமிழகத்துக்கும் இது பொருந்தும்.

தினமணியின் மிகப் பெரிய பலம், இந்த நாளிதழுக்கும் வாசகர்களுக்கும் இடையே நிலவும் ஈர்ப்பு. ஒரு நாளிதழின் உயிர்ப்பு (ஆயுசு) 24 மணிநேரம்தான். ஆனால், நாளிதழை எடுத்து வைத்து அடுத்த நாளோ, வெளியூருக்குப் போயிருந்தால் திரும்பி வந்தோ, படிக்கும் தனிச்சிறப்பு தினமணிக்கு மட்டுமே உண்டு. தினமணியின் தலையங்கங்களையும் நடுப்பக்கக் கட்டுரைகளையும் வெட்டியெடுத்து பத்திரப்படுத்துவோர் ஏராளம் ஏராளம்.

தினமணியை வாசிக்கிறார்கள் என்பதைவிட, அதனை வாசகர்கள் சுவாசிக்கிறார்கள், உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. தினமணியில் காணப்படும் சிறு சிறு தவறுகளைக்கூட, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவதில்லை. "நமது தினமணியில் தவறு எப்படி நேர்ந்தது?' என்று தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் வாசகர்கள் கேள்வி எழுப்பும்போது, தோள் மீது சுமந்து கொண்டிருக்கும் பாரம் எத்தகையது என்கிற பொறுப்புணர்வு மலைப்பை ஏற்படுத்தும்.

"நான் நான்காவது தலைமுறை வாசகன், மூன்றாம் தலைமுறை வாசகன்'' என்று என்னை சந்திக்கும் வாசகர்கள் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது அவர்களது கண்களில் மிளிரும் பெருமிதத்தைப் பார்த்து நான் நெகிழ்ந்திருக்கிறேன்.

"என் குழந்தை "தினமணி' வாசித்துத் தமிழ் கற்றுக் கொள்கிறாள்'' என்று சில தாய்மார்கள் கூறுவது கேட்டு அகமகிழ்ந்திருக்கிறேன். அதனால்தான், தினமணியில் தவறோ, ஒற்றுப் பிழையோ நேரும்போது குற்ற உணர்ச்சி மேலிடுகிறது. தவிர்க்க முடியவில்லையே என்கிற இயலாமை அழுத்துகிறது.

இன்றைய தினமணியின் வாசகர் வட்டம் பரந்து விரிந்திருக்கிறது. தேசியம், ஆன்மிகம், தமிழ், அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, உலகச் செய்திகள் என்று அவர்களது பலதரப்பட்ட செய்தித் தேடல்களுக்கும் அறிவு தாகத்துக்கும் "தினமணி' விடை பகர்கிறது. போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் இளைஞர் கூட்டத்துக்கு உறுதுணையாக இருக்கிறது.

85 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு வலிமை சேர்ப்பதற்காகத் தொடங்கப்பட்ட நாளிதழ், இப்போது அடுத்த தலைமுறை தமிழ்ச் சமுதாயத்தை சரியான பாதையில் இட்டுச் செல்லும் பெரும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.

தினமணியின் பயணம் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல. மகாகவி பாரதியார் கனவு கண்ட தமிழ் தேசியப் பாதையில் பீடு நடைபோடும் மராத்தான் பயணம்.

தமிழை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழ் நாளிதழ்கள் நடத்தப்படுகின்றன. தமிழ் செழுமையாகவும், வளமாகவும், இருந்தால்தான் நம்மால் தமிழில் பத்திரிகை நடத்த முடியும். 

நமது எழுத்துக்கும் கருத்துக்கும் அர்த்தம் இருக்க வேண்டும் என்றால், தமிழ் வாழ வேண்டும். மொழி சிதைந்துவிடாமலும், வளமை குன்றிவிடாமலும் தொடர வேண்டும். 

அதனால், மொழியைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய, வளர்க்க வேண்டிய கடமையும் கட்டாயமும் பத்திரிகைகளுக்கு உண்டு.

"தினமணி' என்பது இதழல்ல, இது இயக்கம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com