ஜெயகாந்தன்
கடலூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1969-இல், தினமணி கதிரில் இவர் எழுதிய தொடர் "சில நேரங்களில் சில மனிதர்கள்' பின்னர் நூலாகவும் வந்தது. நாவல், சாகித்ய அகாதெமி பரிசினையும் பெற்றுத் தந்தது.
*
லா.ச.ரா.
லால்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட ராமாமிர்தம் "தினமணி கதிரில்' 1985-இல் எழுதிய தொடர் 'சிந்தா நதி' நூலாக வெளிவந்து, சாகித்ய அகாதெமி பரிசினையும் பெற்றது.
*
பிரபஞ்சன்
புதுச்சேரியைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், "தினமணி கதிரில்' 1990-இல் எழுதிய தொடர் "மானுடம் வெல்லும்'. அதன் பிறகு கதிரில் இவர் எழுதிய "வானம் வசப்படும்' தொடர், நூலாக வெளிவந்து சாகித்ய அகாதெமி பரிசினையும் பெற்றது.
*
கலைஞர் மு. கருணாநிதி
தினமணி கதிர் 12.1.1973 - இதழில் "நெஞ்சுக்கு நீதி' என்கிற தன் வரலாற்றை எழுத ஆரம்பித்தார். இத் தொடர் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
*
கவிஞர் கண்ணதாசன்
தனது முந்தைய கொள்கைகளிலிருந்து மாறுபட்டு, "அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற தொடரினை "தினமணி கதிரில்' 1973 ஆம் ஆண்டில் எழுதி பரபரப்புக்குள்ளானார்.
*
தி. ஜானகிராமன்
தினமணி கதிரில் தி. ஜானகிராமன் எழுதிய தொடர் "செம்பருத்தி'. கதிர் அலுவலகத்துக்கு வந்து வாரா வாரம் எழுதிக் கொடுப்பதை வழக்காக கொண்டிருந்தார்.
*
சுஜாதா
"வானமெனும் வீதியிலே' என்னும் தொடரை எழுதி - விமானம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அதில் கொண்டு வந்தார். எழுத்தில் - நடையில் புதுமைகள் செய்தார்.
*
நவீனன்
இயற்பெயர் முத்துசாமி. தினமணி ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். "அண்ணாவின் கதை' எழுதி பெரும் புகழ் ஈட்டினார். எக்ஸ்பிரஸ் குழுமம் 1980-இல் வெளியிட்ட "சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் முதல் ஆசிரியரானார். முதல் இதழை 31.1.1980-இல் வெளியிட்டவர்: முதல்வர் எம்.ஜி.ஆர்.
*
சுப்புடு
இசைவிழா சீசனில் ஆண்டுதோறும் தில்லியில் இருந்து சென்னை வந்துவிடுவார். தனது சங்கீத விமர்சனங்களை தினமணியிலும், தினமணி கதிரிலுமாக எழுதினார். அவர் எழுதிய "பர்மா பயங்கரம்' கட்டுரையை சிறுவெளீயிடாக கதிர் வழங்கியது. இவரின் சொந்த ஊர்: பாடி - சென்னை.
*
சிவசங்கரி
தினமணி கதிரில் "புதுமையான அனுபவங்கள்' என்று அமெரிக்க அனுபவங்களைத் தொடராக எழுதினார். தொடர்ந்து கதிரில் இவர் எழுதிய பிரபல தொடர்கள்: "திரிவேணி சங்கமம்', "நண்டு', "இந்திராவின் கதை' (வாழ்க்கை வரலாறு) "ஏன்?' மற்றும் "சாமா' குறுந்தொடர். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வகுப்புத் தோழி இவர்.
*
புதுமைப்பித்தன்
1935-43 வரை தினமணியின் உதவியாசிரியராக பணிபுரிந்தபோது ஆண்டுமலர் தயாரிப்புப் பணி இவரை சேர்ந்தது. அப்போது இவர், "நாசகாரக் கும்பல்' உள்ளிட்ட பல்வேறு கதைகளை மலர்களுக்காக எழுதியிருக்கிறார்.
*
விந்தன்
தினமணி கதிரில் பணிபுரிந்தார். இவர் எழுதிய முக்கிய தொடர்கள் "எம்.கே. தியாகராஜ பாகவர் கதை', "எம்.ஆர். ராதாவின் கதை', "எம்.கே. ராதாவின் கதை', "பாட்டினில் பாரதம்', "ஓ மனிதா!' முக்கியமானவை.
*
‘சோ’ ராமஸ்வாமி
நடிகர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பல்துறை வித்தகராக திகழ்ந்த சோ, தினமணி கதிரில் எழுதிய தொடரின் பெயர் "மிஸ்டர் பிரும்மதேவா!'
*
ஸ்ரீ வேணுகோபாலன்
"திருவரங்கன் உலா', "நீ - நான் - நிலா', "நந்தா என் நீலா' தொடர்கள் பிரபலமானவை. புஷ்பா தங்கதுரை என்கிற பெயரில் "என் பெயர் கமலா', "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' போன்ற தொடர்களையும் எழுதி புகழ் பெற்றார்.
*
வெ. இராமசுப்ரமணியம்
தற்போது உச்சநீதி மன்ற நீதிபதிகளில் ஒருவராக உயர்வு பெற்றுள்ள வெ. இராமசுப்ரமணியம் தினமணி தமிழ்மணியில் எழுதிய ‘சொல்வேட்டை’ பகுதியில் ஏராளமான புதிய சொற்களை அறிமுகம் செய்துள்ளார்.
*
ராஜம் கிருஷ்ணன்
பெண்ணியம் சார்ந்த எழுத்தாளர். இவர் எழுதிய "பாதையில் பதிந்த அடிகள்' தொடர் மிகவும் பிரபலமானது. அத் தொடர் கம்யூனிச இயக்கத்தில் பற்றுக்கொண்ட "மாணலூர் மணி அம்மாளின்' வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.