அணுமின் நிலையங்கள் தேவைதானா? - தலையங்கம்

1000 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு பெரும் அணுமின் ஆலையை நம் நாட்டில் அமைக்க ரஷியா முன்வந்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

அணுமின் நிலையங்கள் தேவைதானா?

1000 மெகாவாட் ஆற்றலுடைய ஒரு பெரும் அணுமின் ஆலையை நம் நாட்டில் அமைக்க ரஷியா முன்வந்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. இதை ஏற்கும் முன்னர் நமக்கு அணுமின் ஆலைகள் தேவைதானா என்ற அடிப்படைக் கேள்விக்கு விடை காண்பது அவசியமாகிறது.

எவ்வித ஆற்றலுக்கும் ஆக்கம், அழிவு ஆகிய இரு விளைவுகளும் உண்டு. அணுசக்தியைப் பொருத்தவரை, அணு ஆயுதங்கள்தாம் உலகையே அழித்துவிடக்கூடியவை என்றும், அணுவை ஆக்க வேலைகளில் ஈடுபடுத்தினால் அது மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலும் என்றும், அறிவியலாளர் கூறி வந்தார்கள். இந்த அடிப்படையில்தான் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் அணுமின் ஆலைகள் அமைக்கப்பட்டன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்நிலையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் "மூன்று மைல்' தீவிலும், ரஷியாவில் செர்நோபில் நகரிலும் உள்ள அணுமின் ஆலைகளில் ஏற்பட்ட பெரும் விபத்துகளும் அதனால் ஏற்பட்ட விபரீதமான விளைவுகளும் அணுமின் ஆற்றலின் நன்மை தீமைகளைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டன. அணுவைப் பிளந்து பெறும் ஆற்றலை எவ்வகையிலும் பயன்படுத்துவது எவ்வளவு அபாயகரமானது, அதன் நீண்டநாள் விளைவுகள் எவ்வளவு பயங்கரமானவை என்று அறிவியலாளர் உணரத் தொடங்கிவிட்டனர். ஆகையால் புதிய அணுமின் ஆலைகளை நிறுவப்போவதில்லை என்று பல மேலை நாடுகள் முடிவு செய்துவிட்டன. அமெரிக்காவில் 1979-க்குப் பிறகு புதிய அணுமின் ஆலைகள் அமைக்கப்படவில்லை என்று இங்கு குறிப்பிட வேண்டும்.

அணுமின் ஆற்றலினால் ஏற்படும் நன்மைகளைவிடத் தீமைகளே மிகவும் அதிகம்.

இப்பொழுது பயன்படும் நிலக்கரி, நில எண்ணெய் ஆகிய எரிபொருள்கள் தீர்ந்துவிடும் நிலையில் அணுமின் ஆற்றலால்தான் உலகம் இனி இயங்க முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் நம் நாட்டைப் பொருத்தவரை இன்னும் ஓராயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான நிலக்கரி நிலத்தடியில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நமக்கு நிலக்கரிச் செல்வம் உள்ளது.

இந்திய நிலக்கரியின் தரம் குறைவு; சாம்பலும் ஈரப்பதமும் அதிகம் எனக் கூறப்படுகிறது. ஆனால் பழுப்பு நிலக்கரியையே பயன்படுத்தி நெய்வேலியில் அனல் மின் ஆலையை அமைத்துள்ள நம் பொறியியல் வல்லுநருக்கு நம் நிலக்கரியின் தன்மைக்கேற்ப கொதிகலன்களை சமைக்கும் திறன் உண்டு என்று நாம் நம்பலாம். மேற்கு ஜெர்மனியும் போலந்து நாடும் இத்துறையில் மிகவும் முன்னேறியுள்ளன. அவர்களிடமிருந்து நாம் தேவையான தொழில்நுட்ப உதவியைப் பெறமுடியும்.

மேற்கூறிய பொருளியல் பிரச்சினைகளைவிட மிக முக்கியமானவை அணுமின் உற்பத்தியால் ஏற்படும் பேராபத்துகள் ஆகும்.

கதிரியக்க வீச்சினால் (Radiation) புற்று நோய்களும், இனப்பெருக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தும் மரபியல் மாற்றங்களும் (genetic disorders) நிகழக்கூடியன என்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்ததே. அணுமின் ஆலைகளிலிருந்து வெளிப்படும் கதிரியக்க வீச்சுகளைத் தடுத்து நிறுத்த பல்வேறு பாதுகாப்பு முறைகள் கையாளப்படுவது உண்மைதான். உண்மையில்லாதது எதுவெனில் இத்தடுப்புகளையும் மீறி விபத்துகள் நேரவே நேரா என்று கூறப்படுவதுதான். மூன்று மைல் தீவும் செர்நோபில் நகரும் நமக்களிக்கும் படிப்பினை வேறு மாதிரியாக உள்ளது. மேலும் நம் நாட்டில் பொதுத் துறைகளில் பரவலாக நிலவும் திறமையின்மையும் கட்டுப்பாடின்மையும் அணுமின் ஆற்றல் போன்ற பயங்கரமான பொருளை அவரகளிடம் ஒப்படைக்க நம்பிக்கையூட்டுவதாக இல்லை.

விபத்துகள் நேரா என்று மக்களை ஏமாற்றுவதைவிட விபத்து நடந்தால் என்னவாகும் என்று மக்களுக்குத் தெரிவிப்பதுதான் அறிவுடமை ஆகும். போபால், செர்நோபில் விபத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஓர் உண்மை தெரியவரும். போபாலில் விஷவாயு சில நிமிஷங்களில் காற்றுடன் கலந்து ஆற்றலிழந்துவிட்டது. அப்பொழுது அங்கு அருகில் இருந்தவர்களே பாதிக்கப்பட்டனர். செர்நோபில் விபத்தில் உடனே மாண்டவர் எண்ணிக்கை குறைவு; ஆனால் அங்கு கதிரியக்க வீச்சின் வீரியம் இன்னும் பல ஆயிரமாண்டுகள் நிலைத்திருக்கும். செர்நோபில் ஆலையைப் புதைத்து எழுப்பியிருக்கும் சிமெண்ட் காங்கிரீட் மலை சில நூற்றாண்டுகளில் இற்றுப்போய் உதிர்ந்துவிடும்; அதற்குப் பிறகும் அங்கு கதிர் இயக்க வீச்சால் ஆள் நடமாட்டம் இருக்க முடியாது என்று அறிவியல் வல்லுநர் தெரிவிக்கின்றனர்.

விபத்துகள் நேரிடா என்று வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் மேலும் இரு பேராபத்துகளிலிருந்து எந்த அணுமின் ஆலையும் தப்பவே முடியாது என்று அறிவியலாளர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

அணுமின் ஆலைகளில் பயன்பட்ட கதிரியக்க விளைபொருள்களை (Radioactive wastes) எங்கு, எப்படி சேமித்து வைப்பது என்று யாருக்குமே தெரியாது. எவ்வளவு ஆழத்தில் நிலத்தில் புதைத்து வைத்தாலும், கடலில் ஆழ்த்தினாலும் கதிர்வீச்சு வெளிப்பட்டு பல ஆயிரமாண்டுகளுக்கு குடிநீரையும், செடி, கொடி, பயிர்களையும், விலங்குகளையும் தாக்கி சுற்றுப்புறத்தில் மனிதர்கள் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

மேலும் ஓர் அணுமின் ஆலையின் ஆயுள் 30 ஆண்டுகள் மட்டுமே என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அந்த ஆலையில் எப்படி செயல்நிறுத்தம் (decommissioning) செய்வது என்றும் எவருக்குமே தெரியாது. மற்ற ஆலைகளைப் போல பழைய இயந்திரங்களை உருக்கவோ, விற்கவோ முடியாது. கதிரியக்க வீச்சினால் இப்பொருள்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு சுற்றுப்புற சூழலை அடியோடு நாசமாக்கிக் கொண்டிருக்கும்.

நமக்குப் பின்வரும் சந்ததிகளுக்கு மீளமுடியாத இவ்வளவு பெரிய இன்னல்களை விட்டுவிட்டுப் போக நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ரஷியாவின் உதவியுடன் இந்தியாவில் அணுமின் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டபோது, அணுமின் நிலையம் நமக்கு தேவையில்லை என்பதை விளக்கி எழுதப்பட்ட தலையங்கம். (10.12.1987)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com