அறிவியக்கத்தின் முதன்மைத் தளம்!
தினமணி என்றால் எனக்கு அடிப்படையில் மூன்று மனிதர்கள்தான். ஏ.என்.சிவராமனின் கட்டுரைகளை நான் வாசிக்கவேண்டும் என என் வரலாற்று ஆசிரியர் முத்தையா நாடார் என்னிடம் சொன்னபோது ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலேயே தினமணி வரும். அதன் கட்டுரைகளை பெரும்பாலும் புரியாமல் படித்தேன். அவை புரியத் தொடங்கியபோது சிந்திக்கக் கற்றுக்கொண்டுவிட்டிருந்தேன்.
வளரும் வயதில் இவ்வுலகம் என்பது கண்ணால்காணும் காட்சிகளால் மட்டும் ஆனது அல்ல, அதைக்கடந்து செயல்படும் சிந்தனைகளாலும் ஆனது என அறிவதென்பது மிகப்பெரிய கண்திறப்பு. கருத்துக்களால் ஆன நிகருலகு ஒன்றுக்குள் நுழைகிறோம். திகைப்பும் பரவசமும் கொந்தளிப்புமாக கண்டுகொண்டபடியே இருக்கிறோம். நான் மதுலிமாயி, பிலுமோடி,மது தந்தவதே என அன்றைய ஜனநாயகத்தின் முகங்களை தினமணி வழியாகவே அடையாளம் கண்டுகொண்டேன். ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் கிருபளானியையும் வழிபடலானேன்.
மீண்டும் ஒரு திறப்பென "தினமணி' இன்னொரு ஆளுமை வழியாக நிகழ்ந்தது. ஐராவதம் மகாதேவனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த தினமணி நவீனத் தமிழ்ச் சிந்தனைமரபிலேயே ஒரு திருப்பத்தை உருவாக்கியது. அவர் காலத்தில் வெளிவந்த "தமிழ்மணி' இணைப்புதான் நவீன இலக்கியத்தைப் பரவலாக வாசகர்களிடம் கொண்டு சென்றது. சிற்றிதழ்களுக்குள் புதைந்திருந்த தமிழின் படைப்பாளிகள் பொதுமுகம் கொண்டனர்.
மூன்றாவது முகம் என தினமணியின் ஆசிரியர் ராம.சம்பந்தம் அவர்களைச் சொல்வேன். அவருடன் எனக்கு நேரடி அறிமுகம் உருவாகியது. எழுதத்தொடங்கியிருந்த எனக்கு அது பெரிய வாய்ப்பு. தினமணியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினேன். அதனூடாக என் கருத்துக்களை நானே தீட்டிக்கொண்டேன். என் கருத்துக்கள் எதிர்ப்பலைகளை உருவாக்கியபோது அவற்றை எதிர்கொள்வது எப்படி என்றும் கற்றுக்கொண்டேன். ஆசிரியராக சம்பந்தம் அவர்கள் எந்தவகையிலும் என் கருத்துக்களில் தலையிடவில்லை.
இன்றும் தினமணி தமிழ் அறிவியக்கத்தின் முதன்மைத் தளமாக நீடிக்கிறது. இன்னும் நெடுங்காலம் நீடிக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

