எனது தொப்புள் கொடி உறவு

தினமணிக்கு இப்போது வயது 85. அதாவது அதன் சதாபிஷேகத்தை ஐந்து வருடங்கள் கழித்து கொண்டாடுகிறது தினமணி.
சுதாங்கன்
சுதாங்கன்

தினமணிக்கு இப்போது வயது 85. அதாவது அதன் சதாபிஷேகத்தை ஐந்து வருடங்கள் கழித்து கொண்டாடுகிறது தினமணி. ஆனால் அதன் சஷ்டியப்தபூர்த்தியை அதாவது அதன் 60-ஆவது வயதை நான் தினமணியின் பொறுப்பாசிரியராக இருந்த போது கொண்டாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

12.9. 93 - அன்று மதுரையில் அதன் சஷ்டியப்த பூர்த்தி விழா மதுரையில் துவங்கி அடுத்த பன்னிரெண்டு மாதங்கள் பல்வேறு மாவட்டத் தலைநகரில் நடைபெற்று சென்னையில் நிறைவு பெற்றது. மதுரையில் துவங்கிய விழாவில் குன்றக்குடி அடிகளார், எழுத்தாளர் ஜெயகாந்தன், சிவசங்கரி, நடிகர் சிவகுமார், கவிஞர் வைரமுத்து, அப்போதைய இந்திய வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணன், போன்றோர் கலந்து கொண்டார்கள். அது வாழ்வில் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்வேன். தினமணிக்கும் எனக்குமுள்ள உறவு என்பது ஒரு தொப்புள் கொடி பந்தம் போன்றது.

1950-60 வருடத்தில் தினமணியின் எஜமானராக இருந்த ராம்நாத் கோயங்கா, அப்போது தினமணி பதிப்பகம் ஒன்றை நடத்தி வந்தார். அதன் பதிப்பகத்தின் ஆசிரியர் பொறுப்பை என் தாயாரின் தாத்தாவான பி.ஸ்ரீயிடம் தான் கொடுத்தார். அவருடைய பல நூல்களும் தினமணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதன் பிறகு பி.ஸ்ரீயின் ஒரே மகன், அதாவது என் தாயாரின் தந்தையும், எனக்கு தாத்தாவுமான வி.எஸ். நாராயணன் தினமணியில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அப்போது எங்கள் வீடு ஜாம்பஜார் காவல் நிலையத்திற்கு எதிரே இருந்த ஜானிஜான் கான் தெருவில் இருந்தது. அங்கிருந்து எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டிற்கு நடந்தே போய்விடலாம் என்பதால் அங்கே குடியிருந்தது எங்கள் குடும்பம். அப்போது ஐந்து நாளிதழ்கள் தான் வந்து கொண்டிருந்தன. தமிழில் தினமணி, தினத்தந்தி, ஆங்கிலத்தில் இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் மெயில். தாத்தா தினமணியின் உதவி ஆசிரியராக இருந்ததால், தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸும் வீட்டுக்கு இலவசமாக வரும். எனக்கு தெரிந்து நான் படித்த முதல் தமிழ்ப் பத்திரிகை தினமணிதான். என் அப்பா ஒரு போக்குவரத்து ஊழியர். இடது சாரி சிந்தனையுள்ள தொழிற்சங்க வாதி.

என் தந்தை தினமும் தினமணியை தலைப்பிலிருந்து, கடைசி பக்கத்தில் வெளியாகும் அச்சிட்டு வெளியிடுபவர் வரை படித்து விட்டுத்தான் வேலைக்கு போவார்.

நான் சிறுவனாக இருந்த போது அதன் ஆசிரியராக இருந்தவர் ஏ.என். சிவராமன். அவருடைய கட்டுரைகளுக்காகவே தினமணிக்கு ஏராளமான வாசகர்கள் உண்டு. "கணக்கன்' என்ற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகளில் தான் எத்தனை அரிய விஷயங்கள். உலக பொருளாதாரங்களையும், சரித்திரங்களையும் அவர் கட்டுரையின் மூலம் பாமர மக்கள் கூட எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

"தினமணி' என்பது அன்று கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலத்தையும் இணைத்த தூதுவன் என்றே சொல்லலாம். தினமணியின் பாரம்பரியப் பெருமை என்பது ஒரு நாளிதழின் சரித்திரம் மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் சரித்திரம். அதை சில வார்த்தைகளுக்குள்ளோ, ஒரு சிறப்பு மலர் மூலமோ சொல்வது என்பது அத்தனை எளிதானதல்ல. அது கடல் நீரை ஒரு சிமிழிக்குள் அடைக்கும் அசாத்தியம்!

நீண்ட காலம் தழைத்தோங்கியிருக்கும் தினமணியின் வரலாற்றை கொஞ்சமாவது இந்தத் தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டுமென்பதற்காகவே பொதுவாக அதன் ஆசிரியரும், அவரது சகாக்களும், நிர்வாகமும் எடுக்கும் முயற்சிதான் இந்த மலர் என்பதை எனக்குப் புரிந்துகொள்ள முடிகிறது.

தினமணியின் அறுபதாவது ஆண்டின்போது, அதற்காக ஒரு வைரவிழா மலர் வெளியிடப்பட்டது. தினமணி என்ற நாளிதழ் வியாபாரத்திற்காக துவங்கப்பட்டதல்ல. அப்போது நாடு சுதந்திரமடைந்திருக்கவில்லை. மக்களிடையே ஒரு சுதந்திர விழிப்புணர்ச்சியை தூண்டிவிடவே துவங்கப்பட்ட நாளிதழ் "தினமணி'.

முதலில் நாட்டு விடுதலை, பின்னர் சமூக விடுதலை எனத் தொடர்ந்து ஒரு நீண்ட போராட்ட வரலாறு கொண்டது "தினமணி'. செய்திகள் மட்டுமல்லாமல், சமூக விமர்சனம், அறிவியல் முன்னேற்றம், விளையாட்டு, வர்த்தகம் எனப் பல தளங்களில் தமிழ் மக்களின் அறிவுப் பசிக்குத் தினந்தோறும் விருந்தளித்து வந்து கொண்டிருப்பதுதான் தினமணியின் பலம்.

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என்பதை இன்று எல்லோரும் எல்லா ஊடகங்களும் பேசி வருகின்றன. ஆனால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பெண்களுக்குச் சொத்துரிமை, பெண் கல்வி போன்ற விஷயங்களுக்காக "தினமணி' குரல் கொடுத்திருக்கிறது. சாதனைகளைச் சரித்திரமாக கொண்டது மட்டுமல்ல. சரித்திர நாயகர்களின் சாதனைக் களமாகவும் "தினமணி' இன்றும் விளங்குகிறது. தினமணியின் வேர்களாகிய விளங்கிய மூதாதையர்கள் தெய்வத்திற்கு இணையானவர்கள். பத்திரிகை உலகத்திற்கு ராம்நாத் கோயங்கா ஆற்றிய சேவையை உலகமே அறியும்.

தினமணியின் முதல் ஆசிரியர் டி.எஸ். சொக்கலிங்கம், துவக்கத்திலிருந்து 1943 வரை அதன் ஆசிரியராக இருந்தார். "தமிழ்ப் பத்திரிகை உலகில் உணர்ச்சி ஊட்டக்கூடிய நடையில் எழுதும் சிலரில் சொக்கலிங்கம் தான் முதன்மையானவர்' என்று காமராஜரால் பாராட்டப்பெற்றவர்.

அடுத்து வந்தவர் தான் ஏ.என். சிவராமன். தினமணியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் அந்த பொறுப்பை சிறப்பாக ஏற்று நடத்தியவர் ஏ. என். சிவராமன்.

தமிழ்ப் பத்திரிகைகளின் வரலாற்றைத் தொகுத்தவர் சோமலெ. அவர் தினமணியின் முதல் ஆசிரியர் சொக்கலிங்கத்தைப் பற்றிச் சொல்லும் போது "பத்திரிகை உலகில் இவர் கண்ட களங்கள் பல. கொண்ட வெற்றிகள் ஏராளம். இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ்ப் பத்திரிகை உலகின் வரலாறாகும் ' என்றார்.

அதே சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் அவர்களை "ராஜீய ஞானமும், பொருளாதார ஞானமும் அவருக்குத் தளபாடமாக விஷயங்கள். தேச பக்தியிலும் அவர் சிறந்தவர். பின்னாலிருந்து உருப்படியான வேலைகளை செய்ய வேண்டும் என்ற உயர்ந்து கொள்கைகளை கொண்டவர்களில் ஒருவர்' என்று புகழ்கிறார்.

தினமணியில்தான் எத்தனை அறிவுஜீவிகள். தினமணியோடு இணைந்திருந்தவர்கள் தான் எத்தனை பேர். சங்கு சுப்ரமணியம், ஏ.ஜி. வெங்கடாச்சாரி, ந. ராமரத்தினம். வி. சந்தானம். புதுமைப்பித்தன், இளங்கோவன், துமிலன், நா. பார்த்தசாரதி. சாவி, ஐராவதம் மகாதேவன், கஸ்தூரிரங்கன் போன்றவர்கள் தங்களது தனிப்பட்ட திறமைக்காகவும் தமிழ் சமூகத்துக்கு அவர்கள் அளித்துள்ள பங்களிப்புக்காகவும் தமிழ் நாட்டின் வரலாற்றில் தங்களுக்கென ஒரு இடம் பிடித்தவர்கள்.

ஒரு காலத்தில் தரமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களைப் பட்டியலிடுங்கள் என்றால், அதற்கு தினமணியின் வரலாற்றைத்தான் தேடுவார்கள். இப்படிப்பட்ட பாரம்பரியமான தினமணியின் அலுவலக வளாகத்தில் விளையாடிப் பொழுதைக் கழித்த அந்த பால பருவம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

தாத்தா வி.எஸ். நாராயணன், என்னையும், என் அண்ணனையும் பல சமயங்களில் "தினமணி' அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கே சில சமயங்களில் மற்ற பணியாளர்களின் வீட்டுக் குழ்ந்தைகளும் அங்கே வருவார்கள். அந்த பழைய "தினமணி' கட்டடத்தின் கீழே கார்கள் நிறுத்தும் பரந்த இடத்தில் நாங்கள் விளையாடியதுதான் எனக்கு தினமணியைப் பற்றிய முதல் நினைவு.

அப்போது தினமணியின் வெள்ளிக்கிழமை நாளிதழில் இணைப்பாக நாளிதழ் வடிவத்திலேயே வந்து கொண்டிருந்த தினமணி சுடர்தான் பின்னாளில் புத்தக வடிவமாக வந்தது. அப்போது அந்த சுடரின் சில பக்கங்களில்தான் தரமான சினிமா செய்திகள் வரும். அதன் பொறுப்பை அப்போது ஏற்றிருந்தவர் பெயர் ஜாம்பவான்.

தாத்தா அழைத்துப்போன அந்த விளையாட்டு இடத்தில் நானே வேலைக்குப் போவேன் என்பதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஜுனியர் விகடனில் 1983 வருடம் நிருபராகச் சேர்ந்து, அதன் பொறுப்பாசிரியராக இருந்து 1992 ஆம் வருடம் விலகினேன்.

அது ஒரு மே மாதம். செப்டம்பர் மாதம் எனக்கு ஆசிரியராக தினமணியில் வந்து சேரும்படி அழைப்பு வந்தபோது நான் நடுங்கிப்போனேன். காரணம் அப்போது எனக்கு வயது 33. நானாவது தினமணிக்கு பொறுப்பாசிரியராவது என்ற பயம் என்னை ஆட்டிப் படைத்தது. என்னால் அந்த இள வயதில் தினமணியின் பொறுப்பை ஏற்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதனால் என்னை பத்திரிகை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மாலனை எப்படியாவது இங்கே அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன்.

அப்போது மாலன் "இந்தியா டூடே' பத்திரிகையில் தமிழ் பதிப்பின் ஆசிரியராக இருந்தார்.

அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வர நானும் ஒரு காரணமாக இருந்தேன். ஆனால் மாலனுக்கு அப்போது ஒரு இக்கட்டான நிலை. அவர் பத்திரிகை இயலின் உயர் படிப்பு படிக்க அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்திருந்தது. அதனால் அவரால் தொடர்ந்து பத்து மாதங்கள் இந்தியாவில் இருக்க முடியாத நிலை.

"நீங்கள் வாருங்கள். உங்கள் பெயரே பொறுப்பாசிரியர் என்று இருக்கட்டும். நீங்கள் பின்னால் இருக்கும் துணிச்சலில், நான் அந்தப் பத்து மாதம் பார்த்துக்கொள்கிறேன்' என்றேன்.

அவர் பின்னனியில் இருக்கும் துணிச்சலில்தான் வைர விழா நடத்த நிர்வாகத்திற்கு யோசனை சொன்னேன். அதை ஏற்றுக்கொண்டார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் விழா நடக்கும் போதுதான் தினமணிக்குத் தமிழகத்தில் வாசகர்கள் நடுவே என்ன மரியாதை என்பதைப் புரிந்து கொண்டேன்.

அந்த வைர விழாவில் காலையில் விழா. மாலையில் பட்டிமன்றம். இப்போது ஹிமாசல் பிரதேசத்தின் தலைமை நீதிபதியும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இப்போது சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் நமது தமிழக நீதிபதி ராம சுப்ரமணியம் அப்படி ஒரு விழாவின் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டிருக்கிறார். தஞ்சை விழாவுக்கு சிவாஜி கணேசன் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

"எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதில் தினமணி முக்கிய பங்கு வகித்துள்ளது. மக்களோடு சேர்ந்து தினமணி வளர்ந்துள்ளது' என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

"மொழி அறிவியல் துறையில் தினமணி செய்துள்ள சாதனை மகத்தானதாகும். சுதந்திர போராட்டத்தில் தேசீய உணர்வை ஏற்படுத்த தினமணி பாடுபட்டது.

இந்தியன் என்ற உணர்வு இப்போது இந்தியாவில் மங்கி வருகிறது. நாடு சுதந்திரம் பெறுவதற்கு அரும்பாடுபட்ட தினமணி நாம் இந்தியர்கள் என்ற உணர்வு ஏற்படுவதற்கு புது எழுச்சி வேகத்தோடு செயல்பட வேண்டும் ' இப்படிச் சொன்னார் குன்றக்குடி அடிகளார்.

தினமணிக்கு சில குழந்தைகள் உண்டு. முதலில் தினமணிக் கதிர், பிறகு தினமணிச்சுடர், நான் பொறுப்பாசிரியராக இருந்தபோது கொண்டுவந்தது "வணிக மணி'.

முதலில் தினமணிக்கதிர் ஒரு தனிப்பதிப்பாக பத்திரிகையாகத்தான் வந்தது. அதற்கு முதலில் ரா.ஏ. பத்மநாபன், சாவி, நா. பார்த்தசாரதி போன்றவர்கள் ஆசிரியர்களாக இருந்து வெளிவந்தது. அது ஒரு தனியான விலை கொடுத்து வாங்கும் பத்திரிகையாக வந்தது. அதில் தான் எத்தனை படைப்புக்கள். எத்தனை எழுத்தாளர்கள்.

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற மகத்தான நாவல் வெளியானது தினமணிக்கதிர் என்ற சுதந்திரமான, இலவச இணைப்பு இல்லாத பத்திரிகையில்தான். இந்த சில நேரங்களில் சில மனிதர்கள்தான் பின்னாளின் பீம்சிங் இயக்கத்தில் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

புஷ்பா தங்கதுரையின் "என் பெயர் கமலா' என்று விலைமாதர்களைப் பற்றிய தொடர். இது தினமணி கதிரைப்பற்றி பரபரப்பாக பேச வைத்தது.

தினமணி கதிர்தான் முதலில் பாலகுமாரன், மாலன், சுப்ரமணிராஜ போன்ற பிரபல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. சாவி ஆசிரியராக இருந்தபோது கண்ணதாசனின் மிகப்பெரிய அற்புதப் படைப்பு என்று நான் கருதும் "அர்த்தமுள்ள இந்துமதம்' வெளிவந்தது தினமணி கதிர் பத்திரிகையில்தான்.

அதில் கண்ணதாசன் முகவுரையில் எழுதினார். "இந்து மதத்திற்குப் புதிய பிராசாரகர்கள் தேவையில்லை. ஏற்கெனவே உள்ள பிரசாரகர்கள், உபன்யாசர்கர்கள் யாரும் சக்தி குறைந்தவர்களல்லர்.

சொல்லப்போனால், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களையே, நான் இப்போது எழுதப் போகிறேன்.

ஆகவே, புதிய பிரசாரகன் கிளம்பியிருக்கிறான்' என்ற முறையில் இந்த தொடர் கட்டுரையை யாரும் அணுகத் தேவையில்லை.

நான் நாத்திகனாக இருந்தது, இரண்டு மூன்று ஆண்டுகளே, அதுவும், நாத்திகத்திற்கு ஒரு போலித்தனமான மரியாதை கிடைத்தத் தொடங்கிய இடைக்காலத்திலேயே! நான் எப்படி ஆத்திகனானேன் ? கடவுளையும், புராணங்களையும், கேலி செய்வதற்காக கந்த புராணம், பெரியபுராணம் கம்பனின் ராம காதை, திருவாசகம், திவ்யப் பிரபந்தம், வில்லிபாரதம் அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன்.

அறிஞர் அண்ணா அவர்கள், கம்பனை விமர்சித்து, "கம்பரசம்' எழுதியதற்குப் பின் அதன் எதிரொலியாகவே எனக்கு இந்த ஆசை தோன்றியது. படித்தேன்! பல பாடங்களை மனனம் செய்தேன் . விளைவு?

கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன். புராணங்களிலுள்ள தத்துவங்களைப் படிக்க படிக்க நான் கடவுளுக்கு அடிமையானேன். நாத்திகவாதம் என்பது அரசியல் நோக்கம் கொண்டது. உள் மனத்தின் உண்மையான உணர்ச்சி அல்ல என்பதை நான் உணர்ந்தேன்.

நான் கம்பனைப் படித்தேன், கடவுளைப் படித்தேன். என் சிறகுகள் விரிந்தன. சொற்கள் எழுந்தன. பொருள்கள் மலர்ந்தன காண்கின்ற காட்சிகளெல்லாம் கவிதையிலேயே தோன்றின.

இந்த தினமணியின் பிள்ளையான தினமணி கதிரினாலேதானே ஒரு அர்த்தமுள்ள இந்து மதமும், தமிழகத்திற்கு ஓர் அற்புதமான கவிஞரும், அவரது விரிந்து படைப்பாற்றலும் கிடைத்தது.

கஸ்தூரிரங்கன் டெல்லியில் நிருபராக இருந்தபோது 25.12 1979-ஆம் வருடம் தினமணி கதிர் இதழில் எழுதிய ஒரு கட்டுரை தான் எனக்குள் அரசியல் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

"ஒரு நிருபரின் டைரி' என்கிற தலைப்பில் லால்பகதூர் சாஸ்திரி இறந்தபின் இந்தியாவின் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில்தான் எத்தனை தகவல்கள்!

பள்ளியில் படிக்கும் போது எங்கள் வீட்டில் ஒரு வழக்கம் இருந்தது. காலையில் எழந்தவுடன் தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அன்று காலை வந்திருக்கும் நாளிதழ்களை உரக்க அவருக்கு முன்னால் அமர்ந்து படிக்க வேண்டும். தமிழ் உச்சரிப்புக்காகவும், அதே சமயம் ஆங்கிலத்தில் புலமை பெறவும் தாத்தா கையாண்ட தந்திரம் இது.

அப்போது 1967-ஆம் வருடம். எம்.ஜி. ஆரை, எம்.ஆர். ராதா சுட்ட வழக்கு நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் விவரங்களெல்லாம் தினமணியில்தான் விவரமாக வரும். நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்களும் வாதாடியதை அப்படியே வெளியிட்டது தினமணி. அந்த வழக்கை ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பது போல நான் சின்ன வயதில் தினமும் படித்திருக்கிறேன்.

அப்போது திமுக ஆட்சிக்கு வந்திருந்த நேரம். எம்.ஜி.ஆரிடம் ராதாவின் வழக்கறிஞர் என்.டி. வானமாமலை பல தர்மசங்கடமான கேள்விகளையெல்லாம் கேட்டார். அதெல்லாம் வேறு பத்திரிகைகளில் வராது. "தினமணி' மட்டுமே பாரபட்சமில்லாமல் இருதரப்பு வாதங்களையும் அந்த வழக்கு முடியும் வரை தினமும் வெளியிட்டுக்கொண்டிருந்தது. அது என் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது.

நான் 1992 அக்டோபர் 1 தினமணியில் சேர்ந்தவுடன், அந்த வழக்கு எனக்கு நினைவுக்கு வந்தது. நூலகத்திற்கு ஓடினேன். அங்கே 1967ம் வருட தினமணி கோப்புகள் இருந்தன. அதையெல்லாம் எடுத்து, அதையெல்லாம் தொகுத்த போதுதான், ஏன் இதை வைத்தே ஒரு தொடர் எழுதக் கூடாது என்கிற எண்ணம் எனக்கு வந்தது. அப்போது உருவானதுதான் தினமணிக் கதிரில் நான் ஒரு வருடம் எழுதிய "சுட்டாச்சு சுட்டாச்சு' தொடர். இன்று வரை நான் எழுதிய புத்தகங்களிலேயே அதிக பதிப்புக்களோடு வெளிவந்திருக்கும் புத்தகம் அதுதான். மேலும் எம்.ஜி.ஆர். - ராதா வழக்கு பற்றி இன்றிருக்கும் ஒரே ஆவணப் பதிவு அதுதான்.

இன்று வரை காலை எழுந்தவுடன் முதலில் படிப்பது தினமணிதான். அதுவும் அந்த தலையங்கப் பக்கத்தை முழுமையாக படித்துவிட்டுத்தான் மற்ற பக்கங்களுக்கு போவேன். தினமணி என்பது எனது சுவாசமாக கலந்துவிட்டது. தினமணி தான் என்னை ஒரு சராசரி பத்திரிகையாளனாகவாவது ஆக்கியது என்று பெருமிதத்தோடு சொல்வேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com