தசாம்ச நாணய அமல்

தசாம்ச நாணய முறை அமலுக்கு வருவதையொட்டி, பிரதமர் நேருஜி பின்வரும் செய்தியை நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கிறார்.
தசாம்ச நாணய அமல்

தசாம்ச நாணய அமல்

(1-4-1957-இல் வெளியான செய்தி)


புதுதில்லி, மார்ச் 31: தசாம்ச நாணய முறை அமலுக்கு வருவதையொட்டி, பிரதமர் நேருஜி பின்வரும் செய்தியை நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கிறார்.

"1957 ஏப்ரல் 1ந் தேதி இந்தியாவில் அடக்கமாக பலனைச் செய்கிற ஒரு புரட்சி ஆரம்பமாகிறது. அதுதான் இந்தியாவில் தசாம்ச, மெட்ரிக் நாணயமுறை அமலுக்கு வருவதாகும்.

பிறகு இது எடைகளுக்கும், படிகளுக்கும் விஸ்தரிக்கப்படும். தற்போதைக்கு இத்திட்டத்தை நாம் நாணயங்கள் விஷயத்தில் மாத்திரம் கொண்டு வரப்போகிறோம்.

ஏற்கெனவே நன்கு அமைந்துள்ள ஒரு முறையில் நான் ஏன் இந்தச் சீர்திருத்தத்தைச் செய்ய வேண்டுமென்று பலர் கேட்கலாம். மக்களில் எல்லாப் பகுதியினரின் அன்றாட வாழ்க்கையையும், பழக்கவழக்கங்களையும் பாதிக்கிற ஒரு விஷயத்தில் இந்த மாறுதலை ஏன் செய்யவேண்டுமென்று கேட்கலாம்.

அந்தக் கேள்வி பொருத்தமான கேள்விதான். அதற்கு முழுக்க விடை தரவேண்டியது அவசியம்தான். தேசத்துக்கும், மக்களுக்கும் அனுகூலம் தருவதாயில்லாத ஒரு விஷயமாயிருந்தால், இத்தகைய மாறுதல் எதையும் செய்யக்கூடாதுதான்.''

மாறுதலுக்கேற்ப மாறுதல்

"ஆனால் இந்த மாறுதல் அவசியம் என்பதோடு மாத்திரமல்லாமல், அத்தியாவசியமென்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அதில் ஏதாவது காலதாமதம் செய்தால் நமது எதிர்கால போக்குக்கு அது தடையாக இருக்கும். எப்போதாவது ஒரு சமயத்தில் இந்த மாறுதலைச் செய்வது தவிர்க்க முடியாத காரியம் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. எவ்வளவுக் கெவ்வளவு நாம் பிந்திச் செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அது கஷ்டமாகிவிடும்.''

இந்தியாவுக்கு புதிதல்ல

"தசாம்ச மெட்ரிக் முறையை நாம் கையாளும்போது இந்தியாவுக்குப் புதியதான ஒன்றைக் கையாளவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

உண்மையை சொல்வதானால், ஆதியில் இந்திய அறிவுத் திறனால் விளைந்த ஒன்றைத்தான் நாம் மீண்டும் மேற்கொள்ளப் போகிறோம். இந்தியா உலகத்துக்கு வெகு காலத்துக்கு முன், சுழி (பூஜ்யம்), இலக்கங்கள் முதலியவைகளைக் கண்டுபிடித்து அளித்தது. பிறகு, மெட்ரிக் முறை என்று கூறப்பட்ட ஒரு ஏற்பாடும் இந்திய அறிவுத் திறன் காரணமாகவே உருவாயிற்று. எனவே நாம் நமக்குரிய ஒன்றைத்தான் மீண்டும் ஏற்கப் போகிறோம்.''
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com