

ஜனநாயகம் என்பதற்கான வரையறை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனிடம் கேட்டபோது, "மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும், மக்களாட்சி (Government of the people, by the people, for the people)'' என்று அனைவருக்கும் புரியும்படி மிகவும் எளிமையாக பதிலளித்தார்.
ஜனநாயகம் என்பதற்கான வரையறை ஆட்சிக்கு மட்டுமின்றி ஊடகங்களுக்கும் பொருந்தும்.
தினமணியின் பின்னணியில் சுவையான வரலாறு உண்டு. இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய நாளிதழ்கள் ராம்நாத் கோயங்காவின் நாளிதழ்கள் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அவற்றைத் தொடங்கியவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் பெ.வரதராஜுலு நாயுடுவும், பத்திரிகையாளர் சதானந்த் என்பவரும்தான்.
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு இதழை தொடங்கி நடத்தியவருமான வரதராஜுலு நாயுடு அவர்கள் 1931-ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழைத் தொடங்கினார். ஒரு சில ஆண்டுகளில் அதை நடத்த முடியாமல் போன நிலையில், அப்பத்திரிகை சதானந்த் என்ற பத்திரிகையாளருக்கு விற்கப்பட்டது. "இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுடன் ஒரு தமிழ் நாளிதழும் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் 1934-ஆம் ஆண்டு பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள் தொடங்கப்பட்டது தான் தினமணி.
புதிய நாளிதழுக்கு சிறப்பான பெயரை எழுதி அனுப்பும் வாசகர்களுக்கு ரூ.10 பரிசாக வழங்கப்படும் என்று சதானந்த் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ்.சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சதானந்த் அவர்களால் தொடங்கப்பட்ட தினமணி நாளிதழின் நிர்வாகம் பின்னாளில் தொழிலதிபர் ராம்நாத் கோயங்காவின் கைகளுக்கு மாறினாலும் அதன் தரத்திலும், அநீதியை எதிர்க்கும் துணிச்சலிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை. அதற்குக் காரணம், ராம்நாத் கோயங்கா விடுதலைப் போராட்ட வீரராகவும், காந்தியடிகளின் அணுக்கத் தொண்டராகவும் இருந்ததுதான்.
மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு மக்களின் அகிம்சை ஆயுதமாக திகழ்ந்தது தினமணி. விடுதலைக்குப் பிறகும் இந்தியாவில் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, தட்டிக் கேட்கும் சாட்டையாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது தினமணி நாளிதழ்.
ஊடகங்கள் என்றால் உரிமையாளர்களின் வணிக லாபங்களுக்கு ஏற்ற வகையில் வளைந்து நெளிந்து செல்ல வேண்டும் என்பது தான் ஊடக அறமாகி விட்ட நிலையில், உரிமையாளர்களின் குறுக்கீடு இல்லாமல் ஆசிரியரின் அதிகாரத்தில் நடைபெறும் நாளிதழாக திகழ்வது தினமணி நாளிதழ் ஆகும்.
தினமணி நாளிதழின் இந்த பெருமைக்கு அதன் ஆசிரியர்களாக வீற்றிருந்த, வீற்றிருப்பவர்கள் முக்கியக் காரணம் ஆவர். தினமணியின் ஆசிரியர்களாக பணியாற்றிய டி. எஸ். சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன், கி. கஸ்தூரிரங்கன், இராம.
சம்பந்தம் ஆகியோரும், தினமணியின் தற்போதைய ஆசிரியரான கே.வைத்தியநாதனும் தினமணி இதழுக்கு அவரவர் பாணியில் பெருமை சேர்த்திருக்கின்றனர்.
தினமணியின் முதல் ஆசிரியரான சொக்கலிங்கம் அறச்சீற்றத்தின் நெருப்பாகத் திகழ்ந்தவர். தமிழர் என்பவர்கள் யார்? என்பதற்கு இப்போது வரை ஒவ்வொருவரும் ஒரு வரையறை அளித்துக் கொண்டிருக்கும் நிலையில், 85 ஆண்டுகளுக்கு முன்பே தினமணி நாளிதழின் முதல் இதழில் வெளியான தலையங்கம் இதற்குத் தீர்வை கூறியது.
"இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்' என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்' என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவரும்தான்'' என்று அனைவருக்கும் உரைக்கும் வகையில் தினமணி தலையங்கம் அடித்துக் கூறியது தினமணி. அந்த தலையங்கத்தை எழுதியவர் "பேணா மன்னன்' என்று அழைக்கப்படும் தென்காசி டி.எஸ். சொக்கலிங்கம்.
அவருக்கு உதவி ஆசிரியராகவும், அவருக்குப் பிறகு 44 ஆண்டுகள் தினமணி ஆசிரியராகவும் பணியாற்றிய ஏ.என்.சிவராமன் தான் தினமணியை உச்சத்திற்கு கொண்டு சென்றவர். காமராஜருக்கு நெருங்கிய நண்பராக இருந்த போதிலும், காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை இவர் காலத்து தினமணி கடுமையாக விமர்சித்தது தான் 1967-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து திமுக ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாக அமைந்தது. இந்த வரலாற்று உண்மையை அறிஞர் அண்ணா அவர்களே பதிவு செய்துள்ளார்.
அவருக்கு பின் வந்த ஆசிரியர்கள் காலத்திலும் "தினமணி', "நிமிர்ந்த நன்னடையுடன், நேர்கொண்ட பார்வையுடன், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது'. தமிழ்நாட்டில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் ஆட்சியாளர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது 1996 மற்றும் 2011-ஆம் ஆண்டு தேர்தல்களில் தான். அந்த இரு தேர்தல்களிலும் மக்களின் கோபம் உச்சத்தை அடைவதற்கும், ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருந்தது தினமணி நாளிதழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதேபோல், தவறான, அவதூறான விமர்சனங்களைத் தவிர்ப்பதிலும், பொதுவெளியில் அவ்வாறு விமர்சனங்கள் வைக்கப்பட்டால் அதை கடுமையாகக் கண்டிப்பதிலும் "தினமணி' முன்னோடியாகத் திகழ்கிறது. விஷம் தடவப்பட்ட விமர்சனக் கணைகளால் நானும் பாட்டாளி மக்கள் கட்சியும் வீழ்த்தப்பட்டபோது, அந்தக் காயங்களுக்கு மருந்து போட்டது தினமணி தான். அதை நான் நன்றியுடன் நினைவு கூர்வேன்.
1995-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியைக் கொள்கை அடிப்படையில் விமர்சிக்க முடியாதவர்கள், சாதிக் கட்சி என்றும், அதன் தொண்டர்கள் மரம் வெட்டிகள் என்றும் வக்கிரத்துடன் விமர்சனங்களை முன்வைத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் 06.06.1995 நாளிட்ட தினமணியில் எழுதப்பட்ட தலையங்கத்தில், ""டாக்டர் இராமதாசுவைப் பொறுத்தளவில், சாகர அரசியல் ஜால வித்தை அரசியல் தெரியாதவர். சற்று காரசாரமானவர். வேகமானவரும் கூட. நெஞ்சில் சமூகநீதிக் கொள்கை - வார்த்தைகளில் பட்டவர்த்தனம் - செயல்பாட்டில் முழு ஈடுபாடு ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற அபூர்வத் தலைவர். தமிழகத்தின் பெரிய சமூகங்களில் ஒன்றாகிய வன்னிய குல மக்களுக்கு சமூகநீதி கோரி, வன்னிய சங்கத்தைத் துவக்கியவர். இவருடைய சமூகப் பணியில் பழைய தலைமுறையைச் சேர்ந்த லட்சியவாதிகளின், ஆர்வத்துடிப்பையும் வேகத்தையும் காண முடிகிறது. திமுக ஆட்சியில் மிக பிற்பட்டோர் என்ற புதிய பட்டியல் உருவாக்கப்பட்டு, அதில் வன்னிய குலத்தவரும், இடம் பெற்றதற்கு இராமதாசின் போராட்டமே காரணம்'' என்று குறிப்பிடப்பட்டிருப்பது வரலாற்று சாசனம்.
"சமூக நீதிக் கோரிக்கைகளை முன் வைத்தது இவர் நடத்திய கிளர்ச்சிகள் பல. அவற்றில் சாலை மறியலும் இடம் பெற்றதுண்டு. அத்தகைய கிளர்ச்சியில் சாலையோர மரங்களை ஆர்வக் கோளாறினால் கட்சித் தொண்டர்கள் வெட்டி சாலையின் குறுக்கே தடைகளாகப் போட்டது உண்டு. அதைக் காரணமாகக் காட்டி மரங்களைச் சாய்த்த கட்சி என்ற அவப்பெயரை அவருடைய கட்சியின் எதிரிகள் அவர் கட்சிக்குச் சூட்டியது உண்டு.
இந்த அவதூறை முறியடிக்கவும், மரங்களைப் பேணி வளர்த்து - சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலியுறுத்தவும் இயக்கம் ஒன்றை அவர் துவக்க இருக்கிறார். 160 கிலோமீட்டர் தூரம் அவருடைய தலைமையில் மூன்று நாட்களுக்கு சைக்கிள் பேரணி வடஆர்க்காட்டில் நடைபெற உள்ளது.
டாக்டர் இராமதாசின் இந்த இயக்கம் பாராட்டுக்குரியது. இதைப்போலவே சமுதாயத்தில் சீரழிவு சக்திகளைத் தடுத்து, பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஆரோக்கியமான சூழலைத் தோற்றுவிக்க, பல்வேறு பிற்பட்ட வகுப்புகளையும் ஒருங்கிணைத்து, சமூக நீதி அடிப்படையில் ஒரு மகத்தான கலாச்சார சக்தியை அவரால் தோற்றுவிக்க முடியும்'' என்று பாராட்டிய ஒரே நாளிதழ் "தினமணி'தான்.
தினமணிக்கும் எனக்கும் வேறு சில வழிகளிலும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழுக்காக ஓர் நாளிதழ் தொடங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு ஆகும். அதை நிறைவேற்றும் வகையில் தான் 2006-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் நாள் "தமிழ் ஓசை' என்ற நாளிதழைத் தொடங்கினேன்.
ஊடகங்களில் தமிழ் செழிக்க வேண்டும் என்பதுதான் அந்த நாளிதழ் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்றாலும்கூட, அந்த இதழ் தரத்தில் தினமணிக்கு இணையாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். "தமிழ் ஓசை' நாளிதழில் கூடுமானவரை தூய தமிழ் சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தனித்தமிழ் சொற்களை "தமிழ் ஓசை' நாளிதழில் பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கும். ஒரு கட்டத்தில் தமிழ் ஓசை நாளிதழ் நிறுத்தப்பட்ட நிலையில், தமிழ் வளர்க்கும் பணியை இனி எந்த இதழ் செய்யும் என்ற வினா எனது மனதில் எழுந்தது.
தனித்தமிழ் சொற்களை பயன்படுத்துவதன் மூலம் அந்தப் பணியை "தினமணி' நாளிதழ் செய்து வருகிறது.ஈடு இணையற்ற அந்தப் பணிக்காக, அதாவது தமிழ் வளர்க்கும் பணிக்காக, தினமணி இதழ் இன்னும் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்திருக்க வேண்டும். வாழ்க தமிழ் வளர்க்கும் தினமணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.