தினமணி ஒரு திருமாமணி!

நாளும் புகழ் வளர்த்து வரும் நம் தினமணி வரலாற்று பெருமிதத்தோடு வளர் தமிழ் நோக்கமும் இழைய தாங்கள் ஆற்றிவரும் சீரிய முயற்சிகளை நல்லறிஞர் எப்போதும் பாராட்டுகின்றனர்.
அவ்வை நடராஜன்
அவ்வை நடராஜன்

நாளும் புகழ் வளர்த்து வரும் நம் தினமணி வரலாற்று பெருமிதத்தோடு வளர் தமிழ் நோக்கமும் இழைய தாங்கள் ஆற்றிவரும் சீரிய முயற்சிகளை நல்லறிஞர் எப்போதும் பாராட்டுகின்றனர். விடுதலை வேள்விக்குக் கனல் மூட்டியும் தேசியத் திலகங்களுக்கு வாகை சூட்டியும் தினமணியின் தலையங்கங்களும், செய்திகளும் வெளிவந்தன. இன்றும் அவ்வாறே ஆரவாரமின்றிப் பணியாற்றுகிறார்கள். "பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே' என்று பாவேந்தர் அழைத்தது தினமணிக்குப் பொருந்தும். தேசிய நாளிதழ் வரலாற்றில் தினமணி பெரும்பங்கு பெற்றிருக்கிறது.

அண்ணல் சொக்கலிங்கம், அறிஞர் சிவராமன், ஆய்வுச்சுடர் ஐராவதம் மகாதேவன், செயல்வீரர் வைத்தியநாதன் என்ற பெயர்கள் எந்நாளும் நெஞ்சில் நிலைத்து நிற்பவையாகும். பெருந்தகை கோயங்காவின் நினைவு இந்தியத் திருநாட்டின் புகழ் ஊடகத்திலும் சிறக்க வேண்டும் என்பதேயாகும். துணிவும் தெளிவும் கொண்ட அவர் கனவுகள் நிறைவேறும் வகையில் தினமணி 85-ஆம் ஆண்டினைத் தொடுவதைக்கண்டு பாராட்டி வாழ்த்துகிறேன்.

தினமணி ஒரு திருமாமணி. அன்றாடம் வரும் தகவல்களை அளந்து கொடுப்பதும், களத்துக்குரிய இடங்களைப் பொருத்துவதும், வாரக் கதிர்களை வகைப்படுத்துவதும், அரசியலைப் போலவே அருளியல், சமய நல்லிணக்கம், அறிவியல் நுணுக்கம், பொருளாதாரப் பின்னல், பொதுமக்களுக்கு அரசியல் வாழ்வோடு அமைய வேண்டிய நல்லெண்ணம் அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு தலையங்கத்தில் தானும் தமிழ்மக்களும் ஏற்கவேண்டிய கருத்துகளுக்குத் தலையங்கம் எழுதுதல் முதலிய பணிகளை நாளிதழ்கள் செம்மையாகச் செய்து வருகின்றன.

"நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்டபார்வையும்" தன்னுடைய இலட்சியமாகக் கொண்டு ஒரு சார்பின்மை என்ற மெல்லிய கம்பியின் மேல் செல்லுகிற மின் வண்டியாக நேரம் தவறாமல் வருவது ஒரு மாபெரும் பணியாகும்.

தமிழில் தொகுப்பாளர் என்று நேர் பொருள்படும் சொல்லுக்கு ஆசிரியர் என்ற சொல் அமைந்தது ஊடகவியலின் பண்பாட்டுக்கு ஏற்றம் தருவதாகும். ஆசிரியர் தொடக்கப் பள்ளியில் கற்றுத் தருகிறார். உயர்நிலைப் பள்ளியில் சொல்லிக் காட்டுகிறார். உயர் கல்வியில் உடனிருந்து உயர்த்துகிறார். ஆய்வுக் கல்வியில் மாணாக்கர் முடிவுக்கு இசைவளிக்கிறார். இந்த நான்கு நிலைகளும் நாளிதழ்களிலும் அமைந்தவையாகும். நாளிதழ் அரசியலுக்கு அடிப்படை அங்கமாக அமையும், ஆண்டுக்கு ஒரு முறை, இரு முறையேனும் தமிழ் இலக்கிய விழாக்கள், ஊடக வாரங்கள், கலந்துரையாடல், இதழாளர்களுக்குப் பயிற்சிமுதலிய விழாக்களை நடத்துவது மக்களின் நெருக்கத்துக்குப் பெரிதும் உதவுவன.

இந்த இலட்சியப் பாதையில் சீராக நடந்து 85 ஆண்டுகள் நிறைவு பெறுவது அறிவு நாகரிக வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும். இந்த நோக்கில்தான் அரசியல் தலைவர்கள் அவ்வளவு பேரும் அண்ணல் காந்தியடிகள், பண்டிதர் நேரு, பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், டாக்டர் கலைஞர் ஆகியோர் தம் இறுதி மூச்சுவரை இதழாசிரியர் பொறுப்பை இறுதிவரைவிட்டுக் கொடுக்கவேயில்லை. உங்களுடைய தொழில் எதுவென்று கேட்டபோது இதழாசிரியர் என்றே எழுதினார்கள்.

நூற்றாண்டு கண்டு மேலும் அனைத்து மாநிலங்களும் படர்ந்த இதழாக தினமணி நின்று வென்று சிறப்படைய வேண்டுமென்பது தமிழ்மக்களின் விழைவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com