வாசகர்களின் நம்பிக்கை

செய்திகளை ஆழ்ந்த விமர்சனப் பார்வையோடும், தெளிவான எளிமையான தமிழில் பாமரருக்கும் புரியும் விதமாய் விளக்குவதோடு, விரசமில்லாமல் தரமான விமர்சனங்களைத் தந்ததினால் "தினமணி' பத்திரிகையைப்
சிவசங்கரி
சிவசங்கரி

செய்திகளை ஆழ்ந்த விமர்சனப் பார்வையோடும், தெளிவான எளிமையான தமிழில் பாமரருக்கும் புரியும் விதமாய் விளக்குவதோடு, விரசமில்லாமல் தரமான விமர்சனங்களைத் தந்ததினால் "தினமணி' பத்திரிகையைப் படிக்க இளம் பிராயத்திலேயே எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு அனுமதி கிடைத்தது.

திரு. கோயங்கா அவர்கள் அப்பாவின் நண்பர் என்பதனால், "தினமணி' பத்திரிகையின் ஆசிரியராக 44 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட செயல்பட்டு வந்த திரு. ஏ.என்.சிவராமனை சில முறைகள் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியுள்ளது. பல மொழிகளைக் கற்றறிந்தவர்; தேசியவாதி; கடினமான செய்திகளைக்கூட நுணுக்கமாய் ஆராய்ந்து எளிமைப்படுத்தி, வாசகர்கள் துல்லியமாய் புரிந்துகொள்ளும் வகையில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பவர் என்பன போன்ற தகவல்களை அறிந்து, அந்த ஆளுமையை நினைத்து வியந்திருக்கிறேன்.

திரு. மாலன் "தினமணி'யின் ஆசிரியராகப் பணிபுரிந்தபோது, ஒரு தவமாக எண்ணி நான் மேற்கொண்ட "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கிழக்குப் பகுதிக்காக நான் சந்தித்திருந்த எழுத்தாளர்களின் பேட்டிகளை தொடர்ந்து அவர் வெளியிட்டார்.

தற்சமயம் "தினமணி'யின் ஆசிரியராக இருந்து முழு ஈடுபாட்டுடன், அதன் மேன்மைக்காக உழைக்கும் திரு. வைத்தியநாதனின் "கலாரசிகன்' கட்டுரை தொடர், வாசகர்களைப் பெரிதும் கவர்ந்த பகுதி.

"தினமணி'யைப் பற்றி எழுதுகையில் அதன் கிளையான தினமணி கதிரோடு எனக்கு இருந்த பல வருஷ தொடர்பு குறித்து சொல்லாமல் இருக்க முடியாது. ஆசிரியர் சாவி தந்த உற்சாகத்தில் கதிரில் நான் எழுதியுள்ள நாவல்கள் அநேகம்.

இண்டர்நெட், செல்போன், டி.வி. போன்ற கவனச்சிதறல்கள் இல்லாமல், பத்திரிகைகள் மக்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்த அந்தக் காலகட்டத்தில், எழுத்தாளர்கள், மக்களின் சிந்தனைகளை ஆக்கிரமித்துக் கோலோச்சியது நிஜம். என் போன்ற எழுத்தாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததும், ஆழமான களப்பணி செய்து இலக்கியத் தரமான புதினங்களை எழுத மேடை கிட்டியதும் தினமணி கதிரில் தான்.

இலக்கியத்துக்கு கலப்படமில்லாத தரமான செய்திகளுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒரு நம்பிக்கை பாலமாகத் திகழ்ந்த, இன்றும் திகழும் தினமணிக்கும், தினமணி கதிருக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com