60 ஆண்டுகளாக நானும் தினமணியும்!

தினமணியின் வாசகனாக 60 ஆண்டுகாலப் பழக்கம். தினமணியில் அவ்வப்போது எழுதுகிற கட்டுரையாளனாகச் சுமார் 30 ஆண்டுப் பழக்கம். செய்திகளைப் படிப்பதோடு கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன்
முனைவர் ம. இராசேந்திரன்
முனைவர் ம. இராசேந்திரன்

தினமணியின் வாசகனாக 60 ஆண்டுகாலப் பழக்கம். தினமணியில் அவ்வப்போது எழுதுகிற கட்டுரையாளனாகச் சுமார் 30 ஆண்டுப் பழக்கம். செய்திகளைப் படிப்பதோடு கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கினேன். அது பின்னர் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.

நான் எழுதத் தொடங்கியபோது எப்படி எழுத வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் தெரிந்தவர் அதன் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன். தினமணியில் கணக்கன் என்ற பெயரில் வருவதை படிப்பதில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறேன். அவர்தான் ஏ.என். சிவராமன் என்பது அப்போது எனக்குத் தெரியாது. எழுதினால் ஏதாவது புதிதாக ஒன்றைச் சொல்ல வேண்டும் என்பதை அவரிடம் தெரிந்து கொண்டேன்.

இப்போதும் கட்டுரை எழுதும்போது அவர் நினைவுக்கு வருகிறார். அவ்வப்போது கட்டுரை எழுதிக் கொண்டிருந்த என்னை வாராவாரம் தொடர்க் கட்டுரை எழுத வைத்தவர் இப்போதைய தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்.

எப்போது செய்தித்தாள் படிக்கத் தொடங்கினேன்? நினைவின் சரடு தொடக்கப்பள்ளி மாணவக் காலத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

1960-களில் எங்கள் ஊருக்கு நாளிதழ்கள் வந்ததில்லை. ஆனாலும் நான் படித்திருக்கிறேன். முதல்நாள் வந்த செய்தித்தாளை அடுத்த நாள் படித்திருக்கிறேன்.

அன்னவாசல் கிராமம். இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. கிராமத்திலிருந்து மன்னார்குடி செல்கிறவர்கள் பத்திரிகை வாங்கி வருவார்கள். அடுத்த நாள் காலை தேநீர்க் கடைக்கு எடுத்து வருவார்கள். ஊருக்கு ஒரே பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்திற்கு அருகே தேநீர்க் கடை.

தேநீர்க் கடைக்குச் செய்தித்தாள் வந்ததும் என்னைக் கூப்பிடப் பள்ளிக் கூடத்துக்கு ஆள் வரும். ஆசிரியர் என்னை அனுப்பிவைப்பார். போனதும் தேநீர் கொடுப்பார்கள். குடித்து முடித்ததும் படிக்கச் சொல்வார்கள். சுற்றி நின்றுகொண்டு சத்தம் போட்டுப் படிக்கச் சொல்வார்கள். பாதி படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஒருவர் வருவார். மீண்டும் முதலிலிருந்து படிக்க வேண்டும். இப்படி வருகிறவரைப் பொறுத்து முதலில் இருந்து தொடங்குவது தொடரும். எப்படியோ பள்ளிக்கூடத்தில் மத்தியானச் சாப்பாட்டுக்கு மணி அடிப்பதற்குள் அனுப்பி விடுவார்கள்.

எங்கள் ஊருக்குப் பத்திரிகை வராத காலத்திலேயே நான் பத்திரிகை படிக்கத் தொடங்கியிருக்கிறேன். ஆனால் அதை நானாகத் தொடங்கவில்லை. படிக்கத் தெரியாத அந்த மக்கள் என்னைப் படிக்க வைத்திருக்கிறார்கள். இப்படித் தொடங்கிய பழக்கம் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. உயர்நிலை பள்ளிக்குப் பக்கத்து ஊருக்குப் படிக்கப் போனபோது, மத்திய உணவு இடைவேளையில் நானாகவே தேநீர்க் கடைக்குப் போய்ப் படித்திருக்கிறேன். யாராவது படித்துக் கொண்டிருந்தால் பக்கத்தில் நின்று கூடவே படித்துக் கொண்டிருப்பேன்.

பிறகு எங்கள் ஊருக்கும் செய்தித்தாள் வரத்தொடங்கியது. அப்போதும் தேநீர்க் கடைகளுக்குத்தான் வரும். தனிப்பட்ட யாரும் வாங்கியதாகத் தெரியவில்லை. உயர்நிலை பள்ளிக்கூடம் போகும் வழியில் நீர்மட்டம் கேட்பார்கள். மேட்டூர் நீர் மட்டம் எத்தனை அடியில் இருக்கிறது என்று விவசாய வேலைகளுக்காகக் கேட்டுக் கொள்ள வழி மறிப்பார்கள். படித்துச் சொல்லிவிட்டுப் போவேன்.

வழக்கமாக, 11 மணிக்குமேல் தேநீர்க் கடைகளில் கூட்டம் இருக்காது. பெரும்பாலும் எல்லோரும் வயலில் இருப்பார்கள். சனி ஞாயிறு பள்ளி விடுமுறை நாட்களில் அந்த நேரத்திற்குப் போய் நிதானமாகத் தினமணி படித்துவிட்டு வருவேன்.

அப்போது வடுவூரிலிருந்து ஒரு ஐயர் மிதி வண்டியில் எங்கள் ஊருக்குச் செய்தித்தாள்களைக் கொண்டு வருவார். வருகிற வேகத்தில் குடுமி அவிழ்ந்து சிண்டு காற்றில் பறக்கும். முடியைக் கட்ட மாட்டார். அப்படியே பறக்க விட்டுக் கொண்டு மிதிவண்டியில் பறப்பார். அவர் வரும் திசை நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை நேரம், எங்களோடு கூட்டமே தவம் இருக்கும்.
 தினமணியில் அப்போது ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒரு கதை வரும். அதைப் படிக்கத்தான் அந்தக் காத்திருப்பு.

பிறகு திருவையாறு அரசர் கல்லூரி, சென்னைப் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், தலைமைச் செயலகம், தமிழ் வளர்ச்சித்துறை, குறள் பீடம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம் என்று என் கல்வியும் பணியும் தொடர்ந்தபோது தினமணியின் தொடர்பு நெருக்கமானது.

தொடர்பு நெருக்கமானது எப்போது என்று யோசிக்கிறேன்..

தினமணியைப் படித்துக் கொண்டிருந்த எனக்கு அதன் வரலாற்றைப் பார்க்கும் வாய்ப்பு நேர்ந்த போது தொடர்பு நெருக்கமாகத் தொடங்கியிருக்க வேண்டும்.

பாரதியின் நினைவு நாளில் தினமணி வெளிவரத் தொடங்கியிருக்கிறது என்பது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. (பாரதி நினைவு நாள் செப்டம்பர் 11 ஆம் நாளா? 12 ஆம் நாளா? என்பது அப்போது தெரியவில்லை.)

வாசகனாக மட்டும் இருந்த என்னை கட்டுரை எழுதுகிற அளவுக்கு தினமணி ஊக்கப்படுத்தியது. திரு சொக்கலிங்கம் அவர்களுடன் சீனிவாசன் (மணிக்கொடி) புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, சி.சு. செல்லப்பா ஆகியோரும் சேர்த்து வளர்த்தது தினமணி என்பதால் ஈர்ப்பு நெருக்கமானது.
 

தன்பின் கணையாழியைக் கைமாற்றிக் கொடுத்த கஸ்தூரிரங்கன் ஆசிரியராக இருந்தது தினமணியில் என்பதால் தினமணியின் மீது இருந்த ஈர்ப்பும் நெருக்கமும் பாசமாக வளர்ந்தது.

நான் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்தபோது, சிறந்த தமிழ் நாளிதழுக்கும் வார இதழுக்கும் மாத இதழுக்கும் பரிசு வழங்கும் திட்டம் செயற்பாட்டுக்கு வந்தது. வந்த முதல் ஆண்டே தினமணி அந்தப் பரிசைப் பெற்றது. அந்தப் பரிசையும் சான்றிதழையும் தினமணி அலுவலகத்திற்கே சென்று உரிமையாளரைச் சந்தித்து நேரில் கொடுத்துச் சிறப்பிக்க அரசு சொன்னது. ஆகவே நான் நேரில் சென்று கொடுத்தேன். அப்போதுதான் முதன் முதலாகத் தினமணி அலுவலகம் சென்றேன். அப்போது அலுவலகம் அண்ணாசாலையில் இருந்தது.

இடையில் தலைமறைவாகியிருந்த தமிழ்மணியைத் தமிழுலகத்திற்குக் கொண்டுவந்த கி. வைத்தியநாதன் ஆசிரியராக வந்தபின் தினமணி நாளிதழ் தமிழ் வளர்ச்சிக்கான நாளிதழாக வந்து கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் உணர்ந்தேன்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் குழுவில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் இடம்பெற வேண்டும் என்று அப்போதைய முதல்வர் மறைந்த கலைஞர் அவர்கள் விரும்பியது, தினமணியின் தமிழ் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

செம்மொழி மாநாட்டு பணிகளில் ஈடுபட்டோருக்குத் தினமணி ஊக்கம் தந்தது. அப்போது எனது பணி நெருக்கடி காலத்தில் தினமணி எனக்கு உதவிக்கரம் நீட்டியதை உணர்ந்தேன்.

பின்பு தினமணியே இலக்கியத் திருவிழா என்று தமிழுக்கு ஒரு மாநாடு நடத்தியது. அந்தப் பணிகளில் எனக்கும் ஆசிரியர் வாய்ப்பளித்தார். அப்போது முதல் நானும் ஆசிரியர் கி. வைத்தியநாதன் அவர்களோடு தினமணி பத்திரிகையின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக உணர்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com