கவர்ச்சிகர அறிவிப்புகளை ஒதுக்கிவிட்டு வாக்களிக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Updated on
3 min read

வரவேற்கலாம்

தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு தங்களுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுப்பர். இதைப் புரிந்து கொண்ட குடியரசுத் தலைவர் அவற்றை கவர்ச்சிகரமான அறிவிப்புகளாக எண்ணி நாம் ஒதுக்கி விட வேண்டும் வலியுறுத்தியிருப்பது சிறப்பு. நேர்மையான கட்சி நம்மை ஆட்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் குடியரசுத் தலைவர் சொல்லி இருக்கிறார். மக்களின் நலன் விரும்பும் குடியரசுத் தலைவர் கூறும் வார்த்தைகள்தான் இவை.

பிரகதாம்பாள், கடலூர்.

மூளைச் சலவை

தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றவும் தக்கவைத்துக் கொள்ளவும் பல மலிவான உத்திகளைக் கையாளுகின்றன. வாக்காளருக்குப் பணம் கொடுப்பது, இலவசமாக பொருள்களை வழங்குவது, தாங்கள் ஆட்சியில் அமர்ந்தபின் திட்டங்கள் பலவற்றை உருவாக்கி நிறைவேற்றுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளால் வாக்காளர்களை அரசியல் கட்சிகள் மூளைச்சலவை செய்கின்றன. தன் உழைப்பை நம்புகிற எந்த வாக்காளரும் அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிக்குப் பலியாக மாட்டார்.

ஐ. ரஃபீக், திருச்சி.

விட்டில் பூச்சிகள்

சுதந்திரம் அடைந்த பிறகு மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை அறிவித்த கட்சிகள் இன்று இல்லை. மீன் பிடிக்கும் கலையைக் கற்றுத்தராமல் மீனை இலவசமாக அளித்து, வாக்கு வங்கி அரசியலை அரசியல் கட்சிகள் செய்வதை குடியரசுத் தலைவர் மறைமுகமாக எச்சரிக்கை செய்துள்ளார். மக்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் இந்த நிலை மாறும். மக்களின் வரிப்பணத்தில் இலவசங்களை அளிக்கும் நிலை மாற வேண்டும். தங்களின் எதிர்காலத்தையே அடகு வைப்பதை மறந்துவிடும் விட்டில் பூச்சிகள்தான் மக்கள். குடியரசுத் தலைவரின் அறிவுரை சரியான நேரத்தில் கிடைத்துள்ளது.

ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

குழந்தைகளாக...

வாக்களிப்பது மக்களின் உரிமை; இதைப் புரிந்துகொண்ட குடியரசுத் தலைவர், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை ஒதுக்கிவிட்டு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வது நம் மக்களைகுழந்தையாக எண்ணி விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மக்களுக்கு இன்றைய தேர்தல் நிலவரம், நாட்டு நடப்பு, யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கு நல்லது நடக்கும் என எல்லாமே தெரியும். இருந்தாலும், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பாதீர்கள்; ஒதுக்கி விடுங்கள் என்று சொல்ல வேண்டியது குடியரசுத் தலைவரின் கடமைதான்.

நந்தினி கிருஷ்ணன், மும்பை.

இன்னுயிர்களின் தியாகம்

குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியது மிகவும் சரியானதே. தேர்தல் சமயத்தில் பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வழங்கி வருகின்றன. வாக்கு எந்திரத்தின்முன் நின்று வாக்களிக்கும்போது எத்தனை இன்னுயிர்கள் தியாகம் செய்யப்பட்டு இந்த சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம் என்று எண்ண வேண்டும். அடிமை மனப்பான்மைக்கு இடம் கொடுக்காமல் சுயமாகச் சிந்திப்பது தலையாய கடமை. அப்போதுதான் ஊழல்களற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் நல்ல ஆட்சி அமையும்.

முனைவர் பா. பிரேமா, தஞ்சாவூர்.

சிறப்பு அதிகாரம்

குடியரசுத் தலைவர் கூறியது, அவசியமான அறிவுரை. அவரது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தித் தேர்தல் சமயத்தில் கட்சிகள் வாக்காளர்களைக் கவர நிறைவேற்ற முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளை அறிவிக்கக் கூடாது என ஏன் தடை செய்யக் கூடாது? அதை செய்யக் கூடிய பதவியில் இருந்து கொண்டு 140 கோடி மக்களுக்கு அறிவுரை கூறுவதைவிட நூற்றுக்கணக்கானோரை சிந்திக்க வைப்பதும் சட்டபூர்வமாக்குவதும் சிறந்தது. அதை விடுத்து மக்களுக்கு அறிவுரை கூறுவது, நெகிழி பயன்பாட்டைக் குறைக்க உற்பத்தியை நிறுத்தாமல் உபயோகிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுபோல உள்ளது.

ஆ ஜூட் ஜெப்ரி ராஜ்,சோமனூர்.

இளைஞர்களுக்கு வழிகாட்டி

பொறுப்பே ஜனநாயகத்தின் அடித்தளம். கவர்ச்சிகர அறிவிப்புகளை ஒதுக்கி, நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் கூறியது இளைஞர்களிடையே அரசியல் பொறுப்புணர்வை வளர்க்கும் வழிகாட்டுதலாக அமையும். தேர்தல் நேரங்களில் இலவசங்கள் மற்றும் உடனடிப் பலன்களை வாக்குறுதியாகக் காட்டி வாக்காளர்களைக் கவரும் நடைமுறை அதிகரித்து வருகிறது. இது நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சமூக நீதி போன்ற அடிப்படை அம்சங்களை முன்னிறுத்தி வாக்களிக்க வேண்டும்.

ரமேஷ் ஆர்., சேலம்.

ஏழைகளை ஈர்க்கும்

ஏற்றத்தாழ்வுகள் உள்ள இந்திய சமூகத்தில் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிகர திட்டங்கள் ஏழை மக்களை ஈர்க்கத்தான் செய்யும். இந்தியாவில் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றியை உறுதி செய்வதற்காக கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மற்றும் இலவச அறிவிப்புகள் செய்து பரப்புரை மேற்கொள்வார்கள். இவற்றை வாக்காளர்கள் புறந்தள்ளி எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் அல்லது அந்த வேட்பாளரின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து தெரிந்து வாக்களிக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்துவது சரியானதே.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

தேவை தீவிர நடவடிக்கை

இலவசமாக நிதியும், பொருள்களும், உதவிகளும் கிடைப்பதை மனிதன் விரும்புவது இயற்கையே. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைக்குச் சாத்தியப்படாத வகையில் கவர்ச்சிகரமாகவே அமைத்துக் கொள்கின்றன. மக்கள் தங்கள் வரிப் பணம் மற்றொரு வகையில் தங்களிடம் திரும்பி வருவதாகவே எண்ணி விடுகின்றனர். கவர்ச்சிகர அறிவிப்புகளை ஒதுக்க மனித மனது ஒப்புக் கொள்வதில்லை. அத்தகைய அறிவிப்புகள் இல்லாத தேர்தல் வாக்குறுதிகள் அமைய தன்னாட்சி அதிகாரம் படைத்துள்ள தேர்தல் ஆணையம் மட்டுமே தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.

நோட்டா மட்டுமே...

தங்கம் விலையை மீண்டும் பவுனுக்கு ரூ. 25,000/- க்கு கொண்டு வருவோம் என்றோ, விலைவாசிகளைப் பாதிக்கும் கீழே கொண்டு வருவோம் என்றோ யாரும் கூறுவதில்லை. குடியரசுத் தலைவர் அறிவுரை நன்றுதான் என்றாலும், கவர்ச்சிகர அறிவிப்புகளை ஒதுக்கிவிட்டு வாக்களிக்க வேண்டும் என்றால், ஒருசில சுயேச்சைகளுக்கு மட்டும்தான் வாக்களிக்க முடியும். கவர்ச்சிகர அறிவிப்புகள் தராத கட்சிகள் என்று இனம் காண முடியாதபடி, போகாத ஊருக்கு வழி சொல்லுவோர் பெருகி விட்டனர். "நோட்டா' மட்டும்தான் கவர்ச்சிகர அறிவிப்புகள் செய்யவில்லை.

ஆர்.விநாயகராமன், திசையன்விளை.

எல்லோரும் கடன்

தமிழ்நாட்டில் ஆரம்பித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு, தொகையும் கூடுதலாகத் தருகிறார்கள். இதனால், பல மாநிலங்களிலும் பற்றாக்குறை பட்ஜெட்தான். இதனால், ஒவ்வொரு குடிமகன் தலையிலும் கடன் உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படாததற்கு முன்பே இலவச அறிவிப்புகள் வருகின்றன. குடியரசுத் தலைவர் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

வரையறை வேண்டும்

குடியரசுத் தலைவரின் அறிவுரையைப்போல பலர் ஏற்கெனவே அறிவுறுத்தி வந்துள்ளனர்.செயல் திட்டங்கள், கொள்கைகள் பற்றிய அக்கறை, ஆர்வம் இல்லாத வாக்காளர்களே அதிகம் உள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குகளை அள்ளிக் குவிக்க இலவசங்களை கவர்ச்சிகரமாக அறிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ள ஆளும் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் கவர்ச்சித் திட்டங்கள் அறிவித்து வந்தவர்கள்தான். அனைத்துக் கட்சியினரும் அழைக்கப்பட்டு தேர்தல் வாக்குறுதிகளுக்கு உண்மையுடன் வரையறை காண வேண்டும்.

ஆ.லியோன், மறைமலைநகர்.

கேலிக்கூத்து

ஏழைகளே பெரும்பான்மையானவர்களாக உள்ள நமது சமுதாயத்தில் அவர்கள்தானே பெரும்பான்மையான வாக்காளர்கள். குறைந்தது இரண்டு வேளை உணவு, அடிப்படை ஆடைகள், குடியிருக்க வாடகைக்கு ஒரு இடம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதே வாக்காளர்களான நம் மக்களின் இயலாமையாக உள்ளது. இதைப் புரிந்து நமது நீதிமன்றங்களோ, தேர்தல் ஆணையமோ கவர்ச்சிகர வாக்குறுதிகளைத் தடை செய்ய திராணியற்றவைகளாக இருக்கும் நிலையில், தேர்தல்களே கேலிக்கூத்தாக உள்ளன என்கிற தலைகுனியும் சூழல்தான் உள்ளது.

சுப்ர.அனந்தராமன்,சென்னை.

அறிவுரையை கட்சிகளுக்கு...

நமக்கு அறிவுறுத்திய குடியரசுத் தலைவரை அந்தப் பதவியில் அமர்த்திய கட்சி, கடைசியாக வென்று கூட்டணி அரசு அமைத்து ஆட்சி செய்யும் பிகார் மாநில தேர்தலின்போது ரேஷன் கார்டுக்கு பத்தாயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி தேர்தலைச் சந்தித்தபோது இவ்வித அறிவுரையைக் கூறி இருக்கலாம். நம் நாட்டில் இன்னமும் இதுபோன்ற கவர்ச்சியை வறுமையின் தொடர்ச்சி என்று பார்த்தால், நம் நாடு இதே நிலையில் வளர்ச்சி பெறாமல் இருக்கிறது என்றும் அரசியல் கட்சிகள் நல்லாட்சி புரிய வில்லை என்றும் நினைக்க வேண்டுமே தவிர அப்பாவி வாக்காளர்களைக் குறைகூற மனம் வராது என்பதே உண்மை.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com