புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

News image

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

Updated On :31 மார்ச் 2026, 10:24 pm

தினமணி செய்திச் சேவை

கொள்கையில் பற்று...

தேர்தல் கமிஷன் தந்த "டார்ச்' சின்னத்தில் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்குத் தார்மிக உரிமையுள்ளது. எனினும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியயிட வேண்டுமென நிபந்தனை வைத்ததை, தனது தன்மானத்துக்கு ஏற்பட்ட சவாலாக கமலஹாசன் எண்ணியிருக்க வேண்டும். அவ்வுணர்வை கூட்டணியின்தலைமைக்கு உணர்த்துவதற்காகவே தேர்தலில் போட்டியிடாமல் விலகியுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனாலும், கூட்டணியின் வெற்றிக்கு தனது ஒத்துழைப்பைத் தருவதாகக் கூறியுள்ளது, அவரது கூட்டணியின் கொள்கையில் அவருக்கு உள்ள பற்றுதலை வெளிப்படுத்துகிறது.

எம்.ஜோசப் லாரன்ஸ், சிக்கத்தம்பூர்பாளையம்.

அரசியல் வியூகம்

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் விலகல் அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் ஒரு தற்காலிக வியூகமாகவே கருதப்படுகிறது. கள எதார்த்தத்தையும் பொதுநலனையும் முன்னிறுத்தி, தகுந்த சூழல் அமையாதபோது போட்டியிலிருந்து ஒதுங்கி இருப்பது முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறை. எனினும், ஜனநாயக ரீதியாக மாற்று அரசியலை விரும்பும் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளில் இத்தகைய முடிவுகள் ஒருவித தேக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, வரும் காலங்களில் மக்கள் தேவைகளை முதன்மைப்படுத்தி, தெளிவான திட்டமிடலுடன் சரியான தருணத்தில் களமிறங்குவதே கட்சிக்கு வலுவான அடித்தளமாக அமையும்.

மு.லோகேஸ்வரி, விழுப்புரம்.

நோக்கம் சிதைந்தது

சென்ற 2021 தேர்தலில் மாற்றம் வேண்டும் என்று மநீம கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும் கட்சியில் இணைந்த தொண்டர்களுக்கும் நல்ல பாடத்தை கமலஹாசன் புகட்டி இருக்கிறார். நிபந்தனையற்ற ஆதரவு என்று கூறும் அவர், கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைந்து விடலாமே! நடிப்புத் தொழிலில் அவருக்கு வருமானம் வரும். பெரும் கட்சியை எதிர்த்து தன் திரைப்படத்துக்கு சிக்கலை தேடிக் கொள்ள மாட்டார் என்பது உறுதி. இறுதியில் என்ன நோக்கத்துடன் மநீம ஆரம்பிக்கபட்டதோ, அதை மறந்து தெளிவற்ற நோக்குடன் செயல்படும் இக்கட்சியால் மக்களுக்கு என்ன பயன்?

மூ. கிருத்திகா, திருப்பூர்.

நாகரிகமான செயல்

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மையம் அறிவித்திருக்கும் கமலஹாசன், தான் களத்தை நன்கு ஆராய்ந்த ஒரு சிந்தனையாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஏற்கெனவே திமுகவோடு கூட்டணியில் பல ஆண்டு காலம் இருக்கின்ற கட்சிகள் அதிக இடங்கள் வேண்டும் என்று பேரம் பேசிய நிலையில், எனக்கும் இவ்வளவு இடம் வேண்டும் என்று கேட்டு திமுக மேலிடத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தாமல் நாகரிகமான முறையில் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ஒரு இடம் பெற்றாவது தன்னுடைய அரசியல் கணக்கைத் தொடங்கி இருக்கலாம்.

புஷ்பா குமார், திருப்போரூர்.

வியப்பும், திகைப்பும்

மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து புதிய அரசியல் நாகரிகத்தின் விதையை, தான் போட்டிருப்பதாக கமல்ஹாசன் கூறுவது வியப்பைத் தருகிறது. தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் கமலின் பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டி இருப்பதோ திகைப்பைத் தருகிறது. இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன்பாக இந்த முடிவை அறிவித்திருந்தால் அது அரசியலில் அவர்கூறுவதுபோல புதிய நாகரிகம். ஆனால், இரண்டு இடங்களில் அதுவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்கிற நிலை வரும்போது எடுக்கப்பட்ட இந்த முடிவு ஏமாற்றத்தின் உச்சம்.

சீ. காந்திமதிநாதன், கோவில்பட்டி.

தொலைநோக்குடன்...

ஒரு சில தொகுதிகளை பெற்றுக்கொண்டு பரப்புரையில் முடங்குவதைவிட தனது கொள்கை எதிரிகள் தமிழகத்தில் நுழைந்துவிடக்கூடாது என்கிற தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில்கொண்டு அனைத்து தொகுதிகளுக்கும் சென்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வலு சேர்க்க மக்கள் நீதி மய்யம் முடிவு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும், பல கட்சிகள் திமுக தலைமை மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென ஆதரவு தெரிவித்து வரும் சூழலில் தங்களால் இடையூறு ஏற்படாதபடி மேற்கொள்ளப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிதானமான முடிவால் திமுக மகிழ்ச்சி அடையும்.

கே.ஆர்.ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

சரியான முடிவு

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது கமல்ஹாசனின் மிகச் சரியான முடிவு. ஏனெனில், அவரது உயரம் அவருக்குச் சரியாக புரிந்திருக்கிறது. ஒருவேளை இவருக்கு நான்கு தொகுதிகள் கிடைத்திருந்தால், அதற்கு சரியான வேட்பாளர்கள் கிடைப்பதும் அவருடைய கட்சியில் அரிதான விஷயம்தான். அப்படியே வேட்பாளர்கள் கிடைத்தாலும் "டார்ச்' சின்னம் கிடைப்பது அதனிலும் அரிது. ஒருவேளை உதய சூரியன் சின்னம் கிடைத்து அதில் போட்டியிட்டு தோற்றால் அவர் தொலைக்காட்சி நோக்கி வீசிய "டார்ச்' நினைவுக்கு வந்துபோகும்.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

மண் கோட்டை

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது விரும்பி அல்ல, விரக்தியில் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என எண்ணியிருந்த தொண்டர்களின் மனக்கோட்டை மண் கோட்டையாகிவிட்டது என்பதே உண்மை. எத்தனை இடங்கள் என்பதே புரியாத புதிராய் இருக்க, திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவரை நிலை தடுமாற வைத்துவிட்டது. தொண்டர்களின் ஒரே ஆசை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது மட்டுமே. அதையும்கூட கமலஹாசன் நிராகரித்து விட்டது வேதனை.

ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

கட்சிக்குப் பின்னடைவு

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது அக்கட்சியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு நல்ல அறிகுறி அல்ல. தேர்தலில் போட்டியிடுவது ஒரு கட்சியின் பொறுப்பும் கடமையும் ஆகும். மக்கள் மாற்றத்தையும் புதிய வளர்ச்சித் திட்டங்களையும் எதிர்பார்க்கும் நிலையில், தேர்தலில் இருந்து விலகுவது அரசியல் போட்டியைக் குறைத்து விடும். ஆரோக்கியமான அரசியல் போட்டி இல்லையெனில், தமிழகத்தில் அந்தக் கட்சியின் வளர்ச்சி மந்தமாகும் அபாயம் உள்ளது. இவ்வாறு தேர்தலில் பங்கேற்காமல் இருப்பது அக்கட்சியை முன்னேற்றப் பாதையிலிருந்து பின்னுக்கு தள்ளக்கூடும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

அரசியல் கணக்குகள்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது பல்வேறு அரசியல் கணக்குகளை உள்ளடக்கியுள்ளது. முந்தைய ஒப்பந்தப்படி, மாநிலங்களவை உறுப்பினராக தமக்கு வாய்ப்பளித்ததால் கமல்ஹாசன் முழு திருப்தி அடைந்துள்ளார். அதற்கு நன்றிக்கடனாகவே இப்போது தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். இது அக்கட்சியினருக்குப் பேரதிர்ச்சியாகும். வெறும் திரைப்படப் பிரபலம் மட்டும் தேர்தலில் வெற்றியைக் கொண்டு வராது என்பதை கமல்ஹாசன் நன்றாக உணர்ந்திருக்கிறார்; இதை மற்றவர்கள் உணர மறுக்கிறார்கள்.

ரெ. பிரபாகரன், செபஸ்தியார்புரம்.

கணக்கு தவறு!

மநீம தலைவர் கமலின் தியாகம் என முதல்வர் கூறுவது அரசியல் என்றால், அரசியல் நாகரீகம் என கமல் பகிர்வதும் ஆதங்கம் மற்றும் அதிருப்தியின் வெளிப்பாடுதான். தேமுதிக எப்போதுமே கூட்டணி மாறக் கூடும் என்கிற அளவில் நம்பகத்தன்மையுடைய கட்சி. மேலும், அதன் வாக்கு வங்கி வெறும் 3% மட்டுமே. அதற்கு 10 தொகுதிகள் திமுக கொடுத்திருக்கிறது. நாளை வாய்ப்பு கிடைத்தால் அதிமுகவுக்கு ஆதரவளித்து தனது கூட்டணியை மாற்றிக்கொள்ளும் கட்சிதான் தேமுதிக. ஆனால், கமல் எப்போதுமே திமுகவுடன் நெருக்கமாகவே இருக்கும் நம்பிக்கைக்கு உரியவர். திமுகவின் கணக்கில் இது சறுக்கல்தான்.

கலைப்பித்தன், கடலூர்.

தெளிவான முடிவு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மநீம போட்டியிட விரும்பாதது முற்றிலும் சரியான முடிவு. கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் நிர்ப்பந்தங்கள்; சின்னம் மற்றும் தொகுதிகளில் வைத்த கோரிக்கைகள் எடுபடாததால், மநீம-க்குத் தனித்தன்மை பறிபோவதுடன் வாக்கு வங்கியும் காணாமல் போகும். தான் சார்ந்துள்ள கட்சியின் கட்டளைக்கு உடன்படாமல், தான் வென்ற சின்னத்தின் கட்சியைச் சேர்ந்த கொறடா உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல சவால்கள் உள்ளன. அது கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் என்பதால் முடிவு சரியானதே.

சீனி.மணி, பூந்தோட்டம்.

கூட்டணி தர்மம்

தனி மனிதரோ, அரசியல் கட்சித் தலைவரோ, சூழ்நிலை உணர்ந்து , தான் சார்ந்த கொள்கைக்கு ஏற்ப தன்னால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இதைத்தான் கமல் செய்திருக்கிறார். மற்ற கூட்டணி கட்சிகளும் இதையே செய்ய வேண்டும். கட்சிகள் இருக்கலாம்; இல்லாமல் போகலாம்; ஆனால், தான் சார்ந்த கொள்கை நிலைத்து நிற்க வேண்டும் என்று சூழ்நிலையை உணர்ந்து கமல் செயல்பட்டிருக்கிறார். இந்தப் பெருந்தன்மை பிற கட்சிகளுக்கு இல்லாமல் சில கூட்டணியை விட்டும் வெளியேறி இருக்கின்றன. இந்த கூட்டணி தர்மம் எல்லாக் கட்சிக்கும் பொருந்தும்.

நா.இராசமோகன், ஜாம்புவானோடை.

திருப்தியும் அதிருப்தியும்...

கமல்ஹாசனுக்கு எதிர்பார்த்த மாநிலங்களவை எம்பி பதவி கிடைத்தது முதல் திருப்தி. தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்குச் செல்லவிருப்பது இரண்டாவது திருப்தி. கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்ததால் திமுகவின் கூட்டணிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்கு உதவியதில் கமலுக்கு பூரண திருப்தி! பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் போனது மக்கள் நீதிமய்யத்தில் பதவிகளை எதிர்பார்த்திருந்த கட்சியின் ஒரு சில பிரபலங்களுக்கு மட்டும்தான் அதிருப்தி! தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அதன் தாக்கம் கமல்ஹாசனை எந்த விதத்திலும் பாதிக்காது.

ஆர்.ஜி .பாலன், திசையன்விளை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.