பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருவது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருவது பற்றி...

Gyanesh Kumar

ஞானேஷ் குமார் - கோப்புப்படம்

Published On :

பத்திரிகையாளர்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் இது சாத்தியப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் தீவிர எதிர்ப்பின் காரணமாக இந்தத் திட்டம் நிறைவேறாமல் இருக்கிறது. காங்கிரஸின் கோரிக்கை பகையுணர்வையே அதிகரிக்கும். எஸ்ஐஆர் திருத்தத்தில் எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை எதிர்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜிநாமா செய்தோ அல்லது பத்திரிகையாளர்களை சந்தித்தோ விளக்கம் கொடுக்க வேண்டும்.

ச.அ.அலெக்சாண்டர், வரதராசன்பேட்டை.

நெருப்பில்லாமல் புகையாது

காங்கிரஸின் நிலைப்பாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கடந்த சில மாதங்களுக்கு முன் நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிவுகாக கரப்பான் பூச்சி கட்சியினர் போராடியது நினைவிருக்கலாம். நெருப்பில்லாமல் புகையாது என்கிற சொல்லாடலுக்கு ஏற்ப, தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகளுக்கு இடையே நடந்த கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. வாக்காளர் பட்டியலின் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் வந்துள்ளதால், ஜனநாயகத்தை நிலைநிறுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிநாமா செய்வது நல்லது.

என்.வி. சீனிவாசன், புதுப்பெருங்களத்தூர்.

நீதிமன்றத்தின் கடமை

முகாந்திரம் இல்லாமல் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சீர்திருத்தம் என்ற பெயரில் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக கோடிக்கணக்கானவர்களை நீக்கியதே வழக்குக்கான முக்கியக் காரணம். துணை ஆணையர்களின் கருத்துகளைப் பரிசீலிக்காமல், தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்பட்டது தெளிவாகிறது. இதையே பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. எனவே, உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வேண்டும்.

எஸ்.வேணுகோபால், சென்னை.

சிதைக்கப்படும் ஜனநாயகம்

தாங்கள் சொல்வதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொள்ளும் நபர்களை ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அமைப்புகளில் தலைவர்களாக நியமிப்பது மத்திய அரசின் வாடிக்கையாகி விட்டது. அதில் ஒன்றுதான் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம். இவரது தன்னிச்சையான முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்று புரியாமல் சாமானிய மக்கள் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும்போது, காங்கிரஸ் கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகலை வலியுறுத்துகிறது. நேர்மைக்கு மாறான வகையில் சிந்திக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களால்தான் இந்திய ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது.

வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

விலகலாம்; விலக்கலாகாது

காங்கிரஸ் கோருவது நியாயமான கோரிக்கைதான். ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக மாட்டார்; அவரை எளிதில் பதவி நீக்கவும் முடியாது. அவர் தனது மனசாட்சிக்கு மதிப்பளித்து தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் அல்லது மக்கள் தெருவில் இறங்கி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தினால், அரசியல் மற்றும் பொதுமக்கள் அழுத்தத்தின் மூலம் பதவி விலகும் சூழல் உருவாகலாம். இல்லையெனில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தலாம்; நமது அரசமைப்புச் சட்டத்தின் அம்சம் அப்படித்தான் சொல்கிறது.

கலைப்பித்தன், கடலூர்.

உரிமை கிடையாது

என்னதான் தேர்தல் ஆணையம் சுயாட்சி அமைப்பாக இருந்தாலும், தொடர்ந்து மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு சாதகமாகத்தான் செயல்பட்டுள்ளது என்பது கண்கூடு. ஆணையரை மாற்ற வேண்டும் எனக் கூற காங்கிரஸுக்கு தார்மிக உரிமை கிடையாது. ஏனெனில், காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது தேர்தல் ஆணையத்தை தங்களுடைய விருப்பு-வெறுப்புக்கு இணங்கத்தான் நடத்தியது என்பது நாடறிந்த உண்மை. எதிர்க்கட்சியாக இருப்பதால் காங்கிரஸின் வீண் வாதமே தலைமைத் தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் என்பது. காங்கிரஸின் கோரிக்கையை அரசு ஏற்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

என் .சிவசண்முகம், கோவை.

வளர்ச்சிக்குத் தடை

நாடாளுமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திற்கான சட்ட விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவருவதற்கான முன்னெடுபுக்களை ஜனநாயக முறைப்படி செய்யலாம். அத்துடன் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்தான சட்டபூர்வ தன்மை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இது போன்ற போராட்டங்களை முன்னெடுப்பதும், தூண்டி விடுவதும் நாட்டில் ஏற்கெனவே நாம் எதிர்கொண்டுவரும் போட்டி நாடுகள், நமது நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முயற்சிக்குத் துணை போவதாக அமையும்.

திருப்பூர் சி. இரத்தினசாமி,

பொல்லிக்காளிபாளையம்.

விவாதத்துக்குரியது

தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவி விலகல் ராஜிநாமா கோரிக்கை என்பது தற்போது ஒரு அரசியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால், அதைச் சரிசெய்ய வேண்டியது அவசியமானது என்ற எதிர்க்கட்சிகளின் வாதம் ஒருபுறம் சரியாக இருந்தாலும், தகுந்த விசாரணை இன்றி ஒட்டுமொத்த தேர்தல் அமைப்பின் தலைமை அதிகாரியை உடனடியாக நீக்கக் கோருவது தார்மிக ரீதியாக விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கும் சென்றுள்ளதால், சட்டபூர்வமான விசாரணையே இதற்கு இறுதித் தீர்வாக அமையும்.

முனைவர், ந.ஸ்ரீதர், தலைமை நூலகர், மதுரை.

முறையானதுதான்

தலைமைத் தேர்தல் ஆணையர் நாட்டின்மிகப் பெரிய ஜனநாயக பொறுப்பில் அங்கம் வகிப்பவர். தம் கடமையும் பொறுப்பும் எத்தகையது என்பதை அறிந்து செயல்பட வேண்டியவர். கூட்டுப் பொறுப்பில் உள்ள இணைத் தேர்தல் அதிகாரிகளை கலந்து ஆலோசிக்காமல் எஸ்ஐஆர் பணிகளை தன்னிச்சையாக மேற்கொண்ட செயல் ஏற்புடையதல்ல. பிரதான எதிர்க்கட்சிகள் ஜனநாயக மாண்பைக் கடைப்பிடிக்காத அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்துவது முறைதான். அதனையே நீதிமன்றமும் முறையாக விசாரணை செய்து அதிகார துஷ்பிரயோகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புவோம்.

எல். மாறன், மேல்பட்டி.

ஏற்புடையதே

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதே. தேர்தல் ஆணையம் இந்தியாவின் மிக முக்கிய,வலுவான அமைப்பாகும். அதில் எடுக்கப்படும் முடிவுகள் சாதாரண, எளிய மக்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தில் விருப்பு-வெறுப்பற்ற ஒருமித்த கருத்தின்அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை நீக்க வேண்டும். எந்த ஒரு முடிவும் பெரும்பான்மை இல்லையெனில், தவிர்க்கப்பட வேண்டியவை தான். அதுதான் ஜனநாயகத்தின் அடிநாதம்.

முருகன் சிற்றரசன், திருமுட்டம்.

நம்பிக்கையே பிரதானம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் மீது பல்வேறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. இந்நிலையில், அரசியல் விவாதங்களைத் தாண்டி, தேர்தல் ஆணையம் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விளக்கம் அளிக்க வேண்டும். பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அறிவிப்பு, காரணம் மற்றும் மேல்முறையீட்டு வாய்ப்பு வழங்கப்பட்டதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். தேர்தல் ஜனநாயகத்தின் மிகப் பெரிய சொத்து வாக்காளரின் நம்பிக்கை. அதைப் பாதுகாக்க, தேர்தல் ஆணையம் நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட வேண்டும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

நடவடிக்கை அவசியம்

மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் பல முக்கிய முடிவுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இச்செயல் ஜனநாயகத்தின் முதுகெலும்பை முறித்ததற்குச் சமம். மத்திய அரசின் கைப்பாவையாக தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்படுவதையே இது காட்டுகிறது. அவரது தன்னிச்சை முடிவுகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை படுகுழியில் தள்ளும் என்று உணர முடிகிறது. பதவி விலகக் கோருவது மட்டுமல்லாமல், அவரிடம் உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.

தடுத்தது யார்?

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் என்பது நிர்வாக வசதி கருதி ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே தவிர, அவருக்கு வானளாவிய அதிகாரங்கள் என்று ஏதும் இல்லை. அந்த வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மூன்று நபர்களைக் கொண்ட அமைப்பால் வழிநடத்தப்பட்டு செயல்படுகிறது. கடந்த பத்து மாதங்களில் 14 ஆட்சேபணைக் குறிப்புகள் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களால் எழுப்பப்பட்டது எனும்போதே அவர்கள் அது குறித்து சட்டம் வழங்கியுள்ள அடிப்படை விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய எது அல்லது யார் தடுத்தது?

வெ.க.சந்திரசேகரன், வெள்ளக்கிணறு.

விலகுவதே சரி

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டுமென்பது சரியான கோரிக்கைதான். தலைமைப் பொறுப்பில் உள்ள மூவருக்கும் சமமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. யாருக்கும் அதிகாரத்தில் கூடுதல்- குறைவு என்பது கிடையாது. கருத்துகளைப் பரிசீலித்து சரியான முடிவெடுக்க வேண்டும். சொந்த விருப்பு-வெறுப்புகளின்படி யாருக்கும் சாதகமாவோ, எதிராகவோ முடிவெடுக்கக் கூடாது. தாமரை மீது நீர்த் துளிபோல மூவரும் அவரவரின் அரசியல் கோட்பாட்டை விரும்பினாலும் எடுக்கும் முடிவுகளில் நேர்மை தேவை. யாரையோ திருப்திப்படுத்த முடிவெடுக்காமல் பதவி விலகுவதே சரி.

நா. இராசமோகன், ஜாம்பவானோடை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.