தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புசெயற்கைகோள் ஏவப்பட உள்ளதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடைஆவின் பால் உபபொருள்கள் விலை: இன்றுமுதல் உயா்வுமுதல்வருக்கு கொலை மிரட்டல்: திமுக கவுன்சிலா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து...

மதம் மாறியவர்கள் இடஒதுக்கீடு கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :

வரவேற்கத்தக்கதல்ல!

ஹிந்துவாக இருந்த ஒருவர் பெற்ற இடஒதுக்கீடு, மதம் மாறினால் கிடைக்காது என்றால் அது ஏற்புடையதல்ல. எந்த மதத்துக்கு மாறினாலும், அவர் இந்தியர்தான். இடஒதுக்கீடு பெற இந்தியர் என்கிற தகுதிதானே தேவை. அவர் அரேபியரோ, பாகிஸ்தானியரோ அல்லது வேறு நாட்டவரோ அல்லவே. அவர் வணங்கும் தெய்வம்தான் மாறியிருக்கிறதே தவிர, அவரும் இந்தியக் குடிமகன்தான். எனவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாற்றுச் சட்டம் இயற்றுவது ஆட்சியாளர்களின் கடமை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதாகத் தோன்றலாம்; மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் அது வரவேற்கத்தக்கது அல்ல.

பி. சுந்தரம், வெண்ணந்தூர்.

தகுதி உடையவர்தான்

மதம் மாறுபவர்கள் பெரும்பாலானோர் இடஒதுக்கீடு சலுகைகளுக்காகவே மாறுவதாகப் பரவலான பேச்சு இருக்கிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்த வகுப்பினராக இருந்தபோதிலும், மதத்தைக் காரணம் காட்டி மக்களுக்கு சலுகை அளிக்க மறுப்பதும் சிந்திக்க வேண்டியதாகவே உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி இட ஒதுக்கீட்டுக்குதத் தகுதியுடைய ஒருவர் மதத்தால் வேறுபட்டிருந்தாலும் இட ஒதுக்கீட்டைப் பெற தகுதியுடையவராகவே உள்ளார். அவர்களின் நிலையைப் போக்க புதிய சட்டங்களைக் கொண்டுவருவதைக் காட்டிலும், எல்லா மதத்தினருக்கும் போதிய சலுகைகளை அளிக்கலாம்.

எம். ஜோசப் லாரன்ஸ், சிக்கத்தம்பூர்பாளையம்.

சரியான தீர்ப்பு

ஹிந்து மதத்தில்தான் உயர்ந்த - தாழ்ந்த - இடைப்பட்ட நிலை என ஜாதிப் பிரிவுகள் அதிக அளவில் உள்ளன. இதை விரும்பாதவர்கள் மதம் மாறி இருக்கலாம். ஏனெனில், மாற்று மதங்களில் பிரிவுகள் இருந்தாலும் உயர்வு, தாழ்வு இல்லை. ஹிந்து மதத்தில் இருக்கும்போது கிடைத்த இட ஒதுக்கீடு, அதனடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற்றதால், மத மாற்றத்துக்குப் பின்பும் அந்தச் சலுகைகளைக் கோருவது பொருத்தமில்லை. எனவே, அவர்கள் இட ஒதுக்கீடு கோரமுடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சட்டப்படியும் பொருளாதார அடிப்படையிலும் சரியே!

அ. கருப்பையா, பொன்னமராவதி.

சலுகை அல்ல!

இந்தியாவின் இடஒதுக்கீடு முறைகள் என்பது மதத்தின் அடிப்படையிலான சலுகை அல்ல. சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், வரலாற்று ரீதியாக அநீதிகளைக் குறைக்கவும் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் சட்டபூர்வ நடவடிக்கை ஆகும். பிற மதங்கள் கோட்பாட்டு ரீதியில் ஜாதியற்ற சமத்துவ அமைப்பை வலியுறுத்துபவை. எனவே, ஒரு நபர் ஜாதியற்ற சமத்துவத்தை நோக்கி மாறும்போது, அவர் தனது பழைய ஜாதிய கட்டமைப்பிலிருந்து விலகி விடுகிறார் என்று நீதிமன்றங்கள் உணர்த்துகின்றன.

ரமிலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

உரிமை உண்டு

விரும்பிய மதத்துக்கு மாறும் உரிமை அரசமைப்புச் சட்டப்படி குடிமக்களுக்கு உள்ளது. ஆனால் கல்வி, அரசு வேலைவாய்ப்பு என்று வரும்போது அரசு வகுத்துள்ள சட்டப்படி, மதம் மாறுபவர்களுக்கு அவர்முன் இருந்த சமூகப் பிரிவின் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுச் சலுகை ரத்தாகும் நிலை உள்ளது என்பது ஏற்புடையதல்ல. மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது; இடஒதுக்கீடு என்பது பொருளாதார நிலை சார்ந்தது. மதம் மாறியவர்கள் ஒரே இரவில் வசதியானவர்களாகி விடுவார்களா என்ன? ஒருசார்பு நிலையிலிருந்து வெளியே வந்து மனிதம் சார்ந்து சிந்திக்க வேண்டும்.

கரு. பாலகிருஷ்ணன், தேவகோட்டை.

நிராகரிக்கக் கூடாது

ஜாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கிற இந்த தேசத்தில் மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்பது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. கல்விக்காக அல்லது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மதம் மாறியவர்களுக்கு அரசு அளிக்கும் இடஒதுக்கீட்டை தர முடியாது என்பது பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று. பெரும்பாலும் மதம் மாறுபவர்கள் அடித்தட்டு மக்கள், விளிம்பு நிலை மக்கள், இவர்களில் ஒருவர் படித்து இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பணி கோரும்போது நிராகரிப்பது நியாயம் அல்ல.

புஷ்பா குமார், திருப்போரூர்.

சமூக நீதியும், சம வாய்ப்பும்...

இடஒதுக்கீட்டின் அடிப்படை, வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சமவாய்ப்பு வழங்குவதாகும். அதேவேளையில், இன்றைய சூழலில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஜாதி அல்லது மதத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், குடும்ப வருமானம், கல்வி வாய்ப்பு, வாழ்வாதார நிலை போன்ற அளவுகோல்களையும் பரிசீலிக்கலாம். பின்தங்கியவர்களுக்கு உரிய பலன் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். சமூக நீதியும் சமவாய்ப்பும் இணையும் வகையில், தரவுகளின் அடிப்படையில் கொள்கையை உருவாக்குவதே சிறந்த தீர்வாகும்.

ரமேஷ் ராஜேந்திரன், சேலம்.

மேல்முறையீடு வேண்டும்

அரசமைப்பின் 25-ஆவது பிரிவானது ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் விரும்பும் மதத்தை ஏற்க உரிமை வழங்குகிறது. இடஒதுக்கீட்டின் அடிப்படை அவரவர் பொருளாதார நிலை சார்ந்து வழங்கப்படுவது. பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடும் இந்த அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. ஒருவர் மதம் மாறுவதால் மட்டுமே அவரின் பொருளாதார நிலை உயர்ந்துவிடும் என சொல்வதற்கில்லை. எனவே, தமிழக அரசு மேல்முறையீடு செய்து, அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கில் வெற்றி பெற்றது போன்று, இதிலும் இடஒதுக்கீட்டின் அடிப்படை நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜகே. ஸ்டாலின், மணலூர்ப்பேட்டை.

முன்னேற்றம் பாதிக்கும்

மதச்சார்பற்ற நாடு என்று கூறிக் கொண்டு இது மாதிரியான செயல்கள் ஏற்புடையது அல்ல. தனக்குப் பிடித்த மதத்துக்கு மாறுவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை. அரசுப் பணி என்பது தனி மனிதனின் பொருளாதார வளர்ச்சி சார்ந்தது. அதில் மதக் குறிக்கீடு பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இது போன்ற தீர்ப்புகளால் தனி மனித விருப்பு, வெறுப்பு, சுதந்திரம் பாதிக்கப்படும். மதம் மாறுவதல் இடஒதுக்கீட்டுச் சலுகை பெற முடியாது என்பது தனி மனித முன்னேற்றத்தைப் பாதிக்கும்.

ச. சிவசண்முகம், குளத்துப் பாளையம்.

இறுதித் தீர்வல்ல...

மதம் மாறியவர்கள் இடஒதுக்கீட்டைப் பெறுவது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை மட்டும் இந்தப் பிரச்னைக்கான இறுதித் தீர்வாகக் கருதிவிட முடியாது. இத்தகைய சிக்கலான பிரச்னைக்குத் தீர்வு காண அரசுகள் தயக்கம் காட்டாமல், சட்டம் மற்றும் சமூக நீதி சார்ந்த அம்சங்களை ஆராயத் தனி ஆணையம் அமைக்க வேண்டும். மத மாற்றம் தொடர்பான சட்ட வரம்புகளைத் தெளிவுபடுத்தி, சமூகப் பாகுபாடுகளையும் தனிநபரின் சட்டபூர்வத் தகுதியையும் கருத்தில் கொண்டு தீர்வு காண்பதே நீண்டகாலப் பிரச்னைக்கு எட்டப்படும் நிரந்தரத் தீர்வாக அமையும்.

சோம. இளங்கோவன், தென்காசி.

நோக்கம் மாறும்போது...

ஏற்றத் தாழ்வுகளை நீக்க கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டின் நோக்கம் மாறும்போது இத்தகைய தீர்ப்புகள்தான் ஓரளவு அரசமைப்பைத் தாங்கி நிற்கின்றன. மத மாற்றம் அவரவர் தனிப்பட்ட உரிமை. ஆனால், இடஒதுக்கீடு போன்ற உரிமை கோரல் என்பது சட்டப்படியேதான் நடைபெறும். இதை நன்கு அறிந்தவர்கள்கூட, வீணாக இப்படி ஒரு வழக்குத் தொடர்ந்து நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிக்கிறார்கள்; இதனால், நியாயமான சலுகைகளுக்குக்கூட தடங்கல் ஏற்படும்.

தே.ச. மங்கை, திருநெல்வேலி.

தெளிவான நடைமுறைகள்

சீக்கிய, புத்த மதங்களுக்கு ஒருவர் மாறும்போது, தாய் மதத்தில் என்ன சமூகப்படியான நிலையில் இருந்தாரோ, அதே நிலையை, சலுகைகளை மதம் மாறிய பின்பும் உறுதிப்படுத்தும் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. பெரும்பான்மை மதம் சார்ந்த விஷயங்களில் தங்கள் மனம்போன போக்கில் கருத்துகளைக் கூறும் சில சுயநல அரசியல்வாதிகள் தங்களது குறுகிய லாப நோக்க வாக்கு வங்கி அரசியலுக்காக அதை வளைக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இட ஒதுக்கீட்டு சலுகைகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதற்கான தெளிவான, விரிவான வழிகாட்டு நடைமுறைகள் ஏற்கெனவே உள்ளன.

வெ.க. சந்திரசேகரன், வெள்ளக்கிணறு.

தெளிவான தீர்ப்பு

மத மாற்றம் என்பது தனிப்பட்ட ஒருவரின் விருப்பத்தைச் சார்ந்தது. ஆனால், சலுகைகள் என்பது மதம் சார்ந்ததாக உள்ளன. ஒரு மதத்திலிருந்து, மற்ற மதங்களுக்கு மாறுவோர் அங்கு சம அந்தஸ்தும் மரியாதையும் கிடைப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் தாய் மதத்தில் பெறும் சலுகைகள் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகத் தரப்படுவை என்பதை மறந்து, அவற்றை மதம் மாறிய பின்னர் கேட்பது முற்றிலும் முரண்பாடான செயலாகும். எனவே, இத்தகையோர் இட ஒதுக்கீடு கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தெளிவான, நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்ப்பாகும்.

இரா. இரவிக்குமார், சென்னை.

மறுபரிசீலனை தேவை

ஒருவர் மதம் மாறியவுடனே செல்வந்தரானவர் என்றோ, இடஒதுக்கீட்டுக்குத் தகுதியற்றவர் என்றோ கருதிவிட முடியாது. எந்த மதத்தில் இருந்தாலும், தேவை என்பது ஒன்றுதான். ஏதோ சில காரணங்களுக்காக மதம் மாறியிருக்கலாம். ஆனால், அவர் பணிக்குச் செல்ல இடஒதுக்கீடு தேவையில்லை என்கிற புரிதல் தவறானது. இந்தியாவில் ஜாதிய அமைப்பு முறை உள்ளவரை-இடஒதுக்கீடு தேவை. எனவே, தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பூ.சி. இளங்கோவன், சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.