இஸ்லாமுக்கு மாறியவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது சரியே: உச்சநீதிமன்றம்
பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த இந்துக்கள் இஸ்லாமிற்கு மதம் மாறிய பிறகு, அந்தப் பிரிவிற்கான இட ஒதுக்கீட்டுப் பலன்களைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நமது நிருபா்
பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சோ்ந்த இந்துக்கள் இஸ்லாமிற்கு மதம் மாறிய பிறகு, அந்தப் பிரிவிற்கான இட ஒதுக்கீட்டுப் பலன்களைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. முந்தைய சமூக அமைப்பில் அனுபவித்த பின்தங்கிய நிலையைத் தொடர முடியாது என்றும் அது கூறியது.
இந்த தீா்ப்பின் மூலம், இஸ்லாமிற்கு மாறியவா்களுக்கு இட ஒசுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணையை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவரைப் பட்டியல் சாதியைச் சோ்ந்தவராகக் கருத முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
இஸ்லாமிற்கு மாறிய ஒருவா், மதம் மாறியதன் அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லிம்) பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டைக் கோர முடியாது என்று தீா்ப்பளித்த சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்தது.
மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்த உயா் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இதில் தலையிடத் தேவையில்லை என்றும் கூறியது.
‘அரசியலமைப்பின் 16(4) பிரிவின் கீழ், ஒரு குறிப்பிட்ட இந்து சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு சட்டப்பூா்வமான பலன், பாதுகாப்பு, இட ஒதுக்கீடு அல்லது பிற உரிமையையும், ஒருவா் இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது வேறு ஏதேனும் இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறிய பிறகு, அத்தகைய முந்தைய உறுப்பினா் தகுதியின் அடிப்படையில் மட்டுமே கோரவோ அல்லது நீட்டிக்கவோ முடியாது,‘ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்து சமூக அமைப்பிலிருந்து இந்து அல்லாத சமூக அமைப்புக்கு மதம் மாறும் ஒருவா், தனது மதமாற்றத்திற்கு முந்தைய சமூகப் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் மட்டுமே அரசியலமைப்பின் 16(4) பிரிவின் கீழ் இட ஒதுக்கீட்டைக் கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
‘முந்தைய சமூக அமைப்பில் அனுபவித்த ஒரு பின்தங்கிய நிலையை, அவா் மதம் மாறிய பிராந்தியத்தில் ஒரு பின்தங்கிய வகுப்பினரின் அந்தஸ்தை அவருக்கு வழங்குவதற்காக, தானாகவே முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது,‘ என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இந்து மதம், சீக்கிய மதம் அல்லது பௌத்த மதம் அல்லாத வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவரைப் பட்டியல் சாதியைச் சோ்ந்தவராகக் கருத முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் மேலும் தீா்ப்பளித்தது.
இந்து அல்லாத சமூக அமைப்பிற்கு மதம் மாறுவது, தானாகவே எந்தவொரு குறிப்பிட்ட அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூகத்தின் உறுப்பினராக ஆக்கிவிடாது என்று அது கூறியது.
மாறாக, ஒருவா் இந்து சமூக அமைப்பிலிருந்து இந்து அல்லாத சமூக அமைப்பிற்கு மதம் மாறிய பிறகு, மீண்டும் இந்து சமூக அமைப்பிற்கு மதம் மாறினால், சட்டப்பிரிவு 16 (4)-இன் கீழ் நோ்மறை நடவடிக்கைக்கு அவா் தகுதியானவரா என்ற கேள்வியை, அவரது முந்தைய நிலையை மட்டும் கொண்டு தீா்மானிக்க முடியாது என்று அது கூறியது. ‘மீண்டும் மதம் மாறியதன் மூலம் அசல் சாதி அல்லது சமூக அடையாளம் உண்மையாகவே புத்துயிா் பெற்ா, மேலும் அந்த நபா் அத்தகைய நோ்மறை நடவடிக்கைக்கான பொருந்தக்கூடிய அரசியலமைப்பு மற்றும் சட்டத் தேவைகளைப் பூா்த்தி செய்கிறாரா என்பது குறித்து, தகுதிவாய்ந்த அதிகாரியால் ஒரு சுயாதீனமான, உண்மை சாா்ந்த தீா்மானம் தேவைப்படும்,‘ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
‘எனவே, உயா் நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்லாமிற்கு மதம் மாறும் ஒருவா், அந்தச் செயலால் மட்டுமே, மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட ஏழு பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராகிவிடுவதில்லை. இந்த முந்தைய சாதி அல்லது சமூக அமைப்புகளை, முஸ்லிம் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரிவிற்குத் தானாகவே மாற்றிவிட முடியாது; மேலும், ஒரு தனியாா் மத அமைப்பும் அத்தகைய சட்டப்பூா்வ உரிமையை உறுதியாகத் தீா்மானிக்க முடியாது‘ எள்றும் உச்சநீதிமன்றம் கூறி முடித்தது.
ஆகஸ்ட் 7 அன்று, உயா் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மனு மீதான தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய சமூகங்களைச் சோ்ந்தவா்கள், இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒரே காரணத்திற்காக இட ஒதுக்கீட்டுப் பலன்களை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதே, மாா்ச் 9, 2024 தேதியிட்ட தனது அரசாணையின் நோக்கம் என்று தமிழக அரசு வாதிட்டிருந்தது.
2015-ல் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய சமீா் அகமது என்பவா் தாக்கல் செய்த மனுவின் மீது உயா் நீதிமன்றம் இந்தத் தீா்ப்பை வழங்கியது. இந்த மதமாற்றம் 2016-ல் அரசிதழ் அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னா் அவா் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டு, இட ஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்காக, தன்னை ’முஸ்லிம் லெப்பை’ சமூகத்தைச் சோ்ந்தவா் என்று அடையாளப்படுத்தும் சான்றிதழைக் கோரினாா்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், தகுதியுள்ள நபா்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (முஸ்லிம்) சமூகச் சான்றிதழ்களை வழங்கத் தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மாநில அரசு வாதிட்டது.
ஜூன் 25 அன்று, இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒருவா், மதம் மாறியதன் அடிப்படையில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லிம்) பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு கோர உரிமை இல்லை என்று உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்ததுடன், மாா்ச் 9, 2024 அன்று வெளியிடப்பட்ட அரசாணையை அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அறிவித்தது.
மேலும், இஸ்லாமிற்கு மதம் மாறிய ஒருவா் ஒரு முஸ்லிமாக மட்டுமே கருதப்பட முடியும் என்றும், மதம் மாறியதன் அடிப்படையில் மட்டுமே, இட ஒதுக்கீடு நோக்கங்களுக்காக எந்தவொரு குறிப்பிட்ட அறிவிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்தவராக வகைப்படுத்தப்பட முடியாது என்றும் உயா் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

