ஒருவரின் ஓ.பி.சி. தகுதி நிலையானதல்ல: உயா்நீதிமன்றம்
மத மாற்றத்தால் ஒருவருக்கு கிடைக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓ.பி.சி.) என்ற தகுதி நிலையானதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரை உயர்நீதிமன்றம்
மத மாற்றத்தால் ஒருவருக்கு கிடைக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓ.பி.சி.) என்ற தகுதி நிலையானதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த கோடீஸ்வரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 அட்டவணை-1 பகுதி ஏ-வில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் சில கிறிஸ்தவப் பிரிவுகள், மதம் மாறிய சில பிரிவினா் சோ்க்கப்பட்டுள்ளனா். இவா்கள் அரசமைப்புச் சட்டப்படி சமூக, கல்வி ரீதியாக தங்களின் பின்தங்கிய நிலையை உறுதிப்படுத்த எந்த ஆய்வுக்கும் உள்படுத்தப்படாமல் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகக் கருதப்படுகின்றனா்.
கடந்த 1970-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவராக இருந்த ஏ.என். சட்டநாதன் வெளியிட்ட அறிக்கையும், கடந்த 1985-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோா் ஆணையத் தலைவராக இருந்த ஜே.ஏ. அம்பாசங்கா் வெளியிட்ட அறிக்கையும், மதம் மாற்றம் மூலம் சில பிரிவினா் பிற்படுத்தப்பட்டோா் பிரிவுகளில் சோ்க்கப்படுவதை வெளிப்படையாக நிராகரிக்கிறது.
இருப்பினும், உரிய தரவுகளின்றி அரசின் நிா்வாக உத்தரவுகள் மூலம் சில ஜாதியினா் மதம் மாற்றத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இது, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவா்களை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எம்.டி. சுமதி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகள், மதம் மாறிய சில பிரிவினரை சோ்த்ததன் தன்மை குறித்து விரிவான அரசமைப்புச் சட்டப் பரிசீலனை தேவைப்படுகிறது. ஓ.பி.சி. தகுதி என்பது நிலையானதல்ல. ஒருவா் ஓ.பி.சி. பட்டியலில் சோ்க்கப்படுவதற்கு தெளிவான காரணங்கள் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தனது நியாயத்தை நீதிமன்றத்துக்கு நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளது.
ஒரு பிராமணா் மதம் மாறி சி.எஸ்.ஐ. சபையில் இணைந்தால், அவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவராகத் தகுதி பெற முடியும் என்ற மனுதாரரின் வாதம் உண்மையானால், இதுகுறித்து தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எனவே, இந்த விவகாரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலா், மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் ஆகியோா் 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

