தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

வீட்டு மனைகள் ஆக்கிரமிப்பு விவகாரம்: 6 வாரங்களுக்குள் அகற்ற அரசுக்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகள் ஆக்கிரமிப்புகளை 6 வாரங்களுக்குள் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகள் ஆக்கிரமிப்புகளை 6 வாரங்களுக்குள் அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அன்புராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2002-ஆம் ஆண்டு, ஜனவரி 22- ஆம் தேதி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த 280 பேருக்கு தூத்துக்குடி மாவட்டம், இலுப்பையூரணி கிராமத்தில் இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஓராண்டுக்குள் இந்த இடங்களில் வீடுகள் கட்ட வேண்டுமென பயனாளிகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

மேலும், ஒதுக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டப்படாமல் இருந்தால், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு வருவாய்த் துறை அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, கடந்த 2024-ஆம் ஆண்டு வீடுகள் கட்டப்படாத நிலத்துக்கான ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, கடந்த 2025- ஆம் ஆண்டில் இதே நிபந்தனையுடன் 118 பேருக்கு இலவச வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆனால், இந்த நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு அவா்கள் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசால் ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டுத் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகள் ஆக்கிரமிப்புகளை 6 வாரங்களுக்குள் தமிழக அரசு அகற்ற வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.