வரும் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க 1.14 கோடி தில்லிவாசிகள் தகுதி பெற்றுள்ளனர் என்று பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கடைசியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தில்லியில் செய்தியாளர்களிடம் விஜய் தேவ் புதன்கிழமை கூறியது:
முதல் முறை வாக்காளர்கள்: தில்லியில் செப்டம்பர் 10-ஆம் தேதியுடன் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே 14 லட்சத்து 88 ஆயிரத்து 752 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 63 லட்சத்து 68 ஆயிரத்து 694 பேர் ஆண்கள்; 51 லட்சத்து 19 ஆயிரத்து 517 பேர் பெண்கள். மீதமுள்ளவர்கள் அரவானிகள். குறிப்பிடத்தக்க வகையில், வரும் தேர்தலில் 18 முதல் 19 வயது நிரம்பிய சுமார் 3.50 லட்சம் பேர் முதல் முறையாக வாக்குரிமை பெற்றுள்ளனர்.
2008-இல் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 1.07 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.11 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகள்: தலைநகரைப் பொருத்தவரை 2,603 இடங்களில் 11 ஆயிரத்து 763 வாக்குச் சாவடிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அதில் 634 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. அப் பகுதிகளில் தேர்தல் காலத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 10 நாள்களுக்கு முன்பு வரை வாக்காளர்கள் தங்கள் விவரங்களைப் பட்டியலில் சேர்க்கலாம்.
தில்லியில் வீடுகளின்றி வாழும் 7,249 நகரவாசிகளின் பெயர் அரசு அனுமதியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
கல்வி நிலையங்களில் பிரசாரம்: தில்லியில் 863 கல்வி நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் வாக்களிக்கத் தகுதி வாய்ந்த வாக்காளர்களிடையே வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்வி நிலையத்துக்கு தலா ஒரு தேர்தல் ஆணைய தூதுவர் நியமிக்கப்படுவார். அவர் மூலம் வாக்குரிமை தொடர்பான பிரசாரம் மேற்கொள்ளப்படும். கடந்த ஏப்ரல் முதல் தில்லியில் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது.
முந்தைய தேர்தல்களின்போது, பெண் வாக்காளர்கள் அதிகம் நிறைந்த தொகுதிகளில் அவர்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தால், அப்பகுதிகளில் தனிக் கவனம் செலுத்தி வாக்குரிமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
வேட்பாளருக்கு கட்டுப்பாடு: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் செலவின உச்சவரம்பு ரூ. 14 லட்சம் ஆகும். போட்டியிட விண்ணப்பிக்கும் வேட்பாளர் தனது பெயரில் வங்கியில் புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். தேர்தலுக்காக அக் கணக்கில் இருந்து செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் ரசீதையும், செலவுக்கான காரணத்தையும் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ பதிவுகளைப் பராமரிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கலின்போது அந்த விவரங்களைத் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
சிறப்புப் பார்வையாளர்கள் கண்காணிப்பு: வேட்பாளர் முறையாகச் செலவு செய்கிறார் என்பதைத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளர்கள் மறைமுகமாகக் கண்காணிப்பர். தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர் தாக்கல் செய்யும் தேர்தல் கணக்குகளை, தங்கள்வசம் உள்ள மதிப்பீடுகளை சிறப்புப் பார்வையாளர்கள் ஒப்பிட்டுக் கண்காணிப்பர். அதில் முறைகேடு இருப்பது தெரிய வந்தால் வேட்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் விஜய் தேவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








