தில்லியில் அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ""மக்கள் நுகர்வை அதிகரிக்க வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். மேலும், ""இதன் மூலம் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க முடியும்'' என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.
சர்வதேசப் பொருளாதார மந்தநிலையால், வளர்ந்த நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதன் தாக்கம் மிகக் குறைவு என்பதையும் இந்த உரையில் ஓர் இடத்தில் பிரதிபா சுட்டிக்காட்டுகிறார். இந்நிலையில், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு எது காரணமாக இருந்ததோ, அதற்கு அவரே இங்கு அழைப்பு விடுப்பது வியப்பைத் தருகிறது.
சர்வதேசப் பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று நுகர்வுக் கலாசாரம். அதாவது, அதீதமான நுகர்வு.
நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கா பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது அந்நாட்டின் அன்றைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இதே கருத்தைத்தான் முன்வைத்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளுக்கும் ஆப்கன், இராக் போர்களுக்கான செலவுக்கும் பல மில்லியன் டாலர்களை புஷ் நிர்வாகம் வாரி இறைத்தபோது ஏறத்தாழ இதை ஒரு பிரசாரமாகவே அவர் முன்னெடுத்தார்.
ஆனால், தன்னுடைய ஆட்சிக் காலத்தின் முடிவில், நாட்டின் மோசமான பொருளாதார சூழலுக்கும் உலகம் முழுவதும் அது எதிரொலிப்பதற்கும் அதீத நுகர்வுக் கலாசாரமே காரணம் என்பதை புஷ் உணர்ந்தார். ""விலைவாசி உயர்வுக்கு இரு பக்கங்கள் உள்ளன.
ஒன்று அமெரிக்க மக்களின் மீதான அதன் தாக்கம்; மற்றது உலகின் பற்றாக்குறை'' என்றார். ""நெருக்கடிச் சூழலில் செலவழிக்கச் சொன்ன நான், சூழல் மாறியதும் சேமிக்கச் சொல்லத் தவறிவிட்டேன்'' என்றார்.
பழக்கம் ஏற்படுத்தும் பெரிய துன்பம் இதுதான்: அடிமையாதல். அமெரிக்காவைப் பொருத்த அளவில், பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ, சராசரியாக ஒவ்வொருவரும் வாரத்தில் 5 மணி நேரத்தை "ஷாப்பிங்'குக்காகச் செலவிடுகின்றனர்; வருவாய்க்கு அப்பாற்பட்டு, அடிப்படைத் தேவையற்ற பொருள்களை வாங்க ஆண்டுக்கு ஒவ்வொருவரும் 25,000 டாலர்கள் வரை அழிக்கின்றனர்.
பொருள்களை வாங்குவது என்பதைத் தாண்டி "ஷாப்பிங்' என்பது அங்கு ஒரு பழக்கமாகிவிட்டது. அவர்கள் பின்பற்றும் "கடன் பொருளாதார முறை' இதை ஊக்குவிக்கிறது. ஆனால், அதுவே இன்று அவர்களுடைய பொருளாதாரத்தை சகதியில் தள்ளிவிட்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். அமெரிக்காவில் மட்டுமல்ல; வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் - வளர்ந்துகொண்டிருக்கும் பல நாடுகளிலும் நுகர்வுக் கலாசாரம் திட்டமிட்டே வளர்த்தெடுக்கப்படுகிறது. சிறப்பு தினங்கள், அழகிப் போட்டிகள், அலங்கார ஆடை அணிவகுப்புகள், பொருட்காட்சிகள்; பண்டிகைக்கால தள்ளுபடிகள் என்று மக்களை ஈர்க்கும் ஒவ்வொன்றும் வியாபாரிகளை நோக்கி இழுக்கும் மாயக் கயிறுகளாகவே பின்னப்படுகின்றன.
நம்முடைய கிராமப்புறங்களில், ""கையில காசில்லாதவனுக்கு கடைத்தெருவுல என்ன வேலை'' என்ற சொலவடையை மிக சகஜமாகக் கேட்கலாம். ஆனால், இப்போது இங்கேயும்கூட சூழல்கள் மாறுவதைப் பார்க்கிறோம். தொலைக்காட்சி நேர்காணல்களில், ""உங்களுடைய பொழுதுபோக்கு என்ன'' என்ற மரபான கேள்விக்கு, பலரும் ""ஷாப்பிங் செய்வது'' என்று சொல்லிவைத்ததைப்போல பதிலளிப்பதை சகஜமாகப் பார்க்கிறோம். இசை கேட்பது; புத்தகங்கள் வாசிப்பது போன்று "ஷாப்பிங்' செய்வது இங்கும் ஒரு பழக்கமாக உருமாறுவதைப் பார்க்கிறோம்.
பொதுவாக, நுகர்வுக் கலாசாரத்தை வளர்த்தெடுக்க சந்தையும் பொருளாதாரமுமே பிரதான நோக்கங்களாக இருக்கின்றன. ஆனால், நுகர்வுக் கலாசாரத்தின் விளைவு பொருளாதாரத்தில் மட்டும் தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. தனி மனித வாழ்க்கையிலும் சமூகத்திலும் அது பெரிய பாதிப்புகளை உருவாக்குகிறது.
வாங்குவது, மேலும் வாங்குவது, அந்தஸ்தைக் காட்ட வாங்குவது, வாங்கும் பொருள்களை வைப்பதற்கு ஏற்ற இடத்தைத் தேடுவது, வாங்கும் திறனுக்கு வருவாய் போதாதபோது கடன் வாங்குவது, கடனுக்காக வட்டி கட்டுவது, கடனை அடைக்க கூடுதல் வேலை பார்ப்பது, உடலும் மனமும் நெருக்கடிக்குள்ளாகும்போது மனித உறவுகள் சிதைவது என்று அதீத நுகர்வுக் கலாசாரம் முதலில் தனி மனித வீழ்ச்சிக்கு வித்திடுகிறது; கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்படும்போது அடுத்து, பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடுகிறது. அதிகம் நுகர்கின்ற நாடு முன்னேறிய நாடு; அதிகம் நுகர்கின்ற மனிதன் முன்னேறுபவன் என்கிற சித்தாந்தம் அனேகமாக தோற்றுவிட்டது. சர்வதேசப் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் இன்று நாம் அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில், இன்றைய பிரதிபாவின் வார்த்தைகள் நேற்றைய புஷ்ஷின் வார்த்தைகளை நினைவூட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு வழிகாட்டி மையத்தை அணுகலாம்! - ஆட்சியா் இரா. சுகுமாா்
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

