வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேக்கநிலை மறைந்துவிட்டதா?

""இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஒருவழியாக மறைந்துவிட்டது; உலக அளவிலான நிதி நெருக்கடி பழங்கதையாகிவிட்டது'' என்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. இப்படியொரு எண்ணம் தோன்றியதற்கான காரணங்கள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:04 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

""இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஒருவழியாக மறைந்துவிட்டது; உலக அளவிலான நிதி நெருக்கடி பழங்கதையாகிவிட்டது'' என்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. இப்படியொரு எண்ணம் தோன்றியதற்கான காரணங்கள் உண்மையா? அல்லது வெறும் தோற்றமா?

  கடந்த ஓரிரு ஆண்டுகளாக உலகெங்கும் நிலவிய நிதி நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, வேலைகள் இழப்பு, வாழ்க்கைத்தரச் சரிவு ஆகியவற்றின் தாக்கம் சற்று குறைந்திருக்கலாம். இதன் பயனாக ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கலாம்; ஆனால் பொருளாதாரம் புத்துயிர் பெற்றுவிட்டது என்று கொண்டாட முடியாது.

  அதேநேரம், பெரும்பாலான நாடுகளில் மோசமான நிலை மறைந்துவிட்டது என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. எனவே, ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகிய அனைவரும் தற்போது நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதன் அறிகுறியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

  அமெரிக்காவில், நெருக்கடியின் உச்சகட்டத்தில், வங்கிகள் திவால் ஆவதைத் தடுத்து நிறுத்துவதற்காக, அரசு பெரும் தொகைகளை நிதி உதவியாகக் கொடுத்தது. ஒரு பத்து வங்கிகள் அரசு வழங்கிய நிதி உதவியில் ஒரு பகுதியை சில தினங்களுக்குமுன் அரசுக்குத் திரும்பச் செலுத்தியது. அதுசமயம், அதிபர் ஒபாமா, நிதி நெருக்கடி இன்னும் மறைந்துவிடவில்லை என்று சுட்டிக்காட்டியபோதிலும், வங்கிகள் வாங்கிய பணத்தில் ஒரு தவணையைத் திரும்பச் செலுத்தியதை வரவேற்றார்.

  ஆனால், அதேநேரம் குறித்த காலத்துக்கு முன்னதாகவே, வங்கிகள் பணத்தைத் திரும்பச் செலுத்தியதன் பயனாக, அமெரிக்கப் பங்குச் சந்தையில் உற்சாகம் கரைபுரண்டோடியது! பங்குகளின் விலைகள் உயர்ந்தன. பங்குச்சந்தையின் குறியீடு எண்கள் அதிகரித்தன. முன்னதாக, இந்த வங்கிகள் திவாலாகும் நிலையில் இருந்தன. அரசு உதவிக்கு வரவேண்டியிருந்தது என்ற அடிப்படை உண்மையைக்கூட பங்குச்சந்தை சௌகரியமாக மறந்துவிட்டது. அது மட்டுமல்ல, வங்கிகள் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டதன் காரணங்கள் இன்னமும் அப்படியேதான் உள்ளன. என்ன, அந்தக் கடும் பொருளாதார சூறாவளியின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.

  அமெரிக்க நிலை இதுவென்றால், சீனாவின் நிலை என்ன? சீனாவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை ஏப்ரல் மாதத்தில் கடுமையாகச் சரிந்து, பணவாட்டத்துக்கு கட்டியம் கூறியது. ஆனால், மே மாதம் விலைகள் ஏப்ரல் மாத அளவு சரியாமல், சற்று மிதமாகச் சரிந்துள்ளன. சரிவு என்னவோ தொடருகிறது. இதனால், முன்னதாக 686 பில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார புத்துயிர் திட்டம் செயல்படுத்தப்பட்டதல்லவா? அது இப்போது பயனளிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பணவாட்டம் கட்டுக்குள் இருப்பதாகவும் அங்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சீனா தன் ஏற்றுமதியை அதீதமாக நம்பியுள்ளநிலையில், ஏற்றுமதி வீழ்ச்சியால், மே மாதம் அதன் வர்த்தகம் மேலும் சரிவடைந்துள்ளது. ஆனால், அதை அந்த நாட்டுப் பங்குச் சந்தை கண்டுகொள்ளவே இல்லை என்பது வினோதமே! மாறாக, சீனப் பங்குச் சந்தையும் எழுச்சி பெற்றுள்ளது.

  பிரேசில் நாட்டில், அதன் மொத்த உற்பத்தி மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது அந்த நாடு பொருளாதார வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி உள்ளது என்பதற்கான சரியான அறிகுறி எனலாம்.

  பல நாடுகளிலும் புத்துயிர் ஊட்டும் திட்டங்களின் வாயிலாக பிரம்மாண்டமான தொகைகள் பொதுச் செலவு செய்யப்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது. அதேபோல், ஒவ்வொரு நாட்டிலும் ரிசர்வ் வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல நாடுகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் ஒரு சதவிகிதத்துக்கும் கீழே இறங்கியுள்ளது.

  இதற்கெல்லாம் பலன் இருந்தே ஆக வேண்டும் என்பதால், இங்கொன்றும், அங்கொன்றுமாக பலன்கள் தெரியத் தொடங்கியுள்ளன. ஆனால், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கு மேலும் பல காலம் ஆகலாம்.

  இந்தியாவைப் பொருத்தவரை, பொருளாதாரச் சூழல் தவிர, புதிய நம்பிக்கைக்கு அரசியல் காரணமும் சேர்ந்துகொண்டது. மத்தியில் நிலையான ஆட்சி ஏற்பட்டிருப்பது, பங்குச் சந்தைக்கு உற்சாகம் ஊட்டியுள்ளது. இது புரிந்துகொள்ளக் கூடியதே.

  பெரிய கம்பெனிகளின் லாபக் கணக்கும் திருப்திகரமாக உள்ளது. கம்பெனிகள் 2008 - 09-ம் ஆண்டுக்கான "அட்வான்ஸ்' வரியாக ரூ. 1,32,285 கோடி செலுத்தியுள்ளன. இது கடந்த ஆண்டு, 2007 - 08-ல், செலுத்திய "அட்வான்ஸ்' வரி ரூ. 1,34,125 கோடியைவிட சற்றே குறைவு. ஆனால், ஜூன் 15-ம் தேதி செலுத்திய அட்வான்ஸ் வரி தவணை ரூ. 22,800 கோடி. இது கடந்த வருடம் ஜூன் 15-ம் தேதி செலுத்தப்பட்ட அட்வான்ஸ் வரித் தவணையைவிட அதிகம்.

  கடந்த ஆண்டு நிலவிய தேக்க நிலையையும் கடந்து, இந்த அளவு கணிசமான வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது என்றால், கம்பெனிகளின் செயல்பாடுகள் ஆறுதல் தருவதாக உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.

  கம்பெனிகளின் கால் ஆண்டு முடிவுகளும் லாபகரமாக உள்ளன. இவை எல்லாம் சாதகமான அம்சங்கள்.

  இது ஒருபுறமிருக்க, அய்ற்ஹப் சர்வதேச வேலைவாய்ப்பு நிறுவனம், ஏங்ஜ்ண்ற்ற் அசோசியேட்ஸ், ""பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்'' ஆகிய வேலைவாய்ப்பு தொடர்புடைய நிறுவனங்கள் அண்மையில் தங்களது ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இழப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், 60 சதவீத கம்பெனிகள் புதிய ஊழியர்களை நியமிக்கத் தொடங்கிவிட்டன என்றும் இந்த ஆய்வறிக்கைகள் ஒரே குரலில் தெரிவிக்கின்றன. இது ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனால், ஜவுளி, ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி தொழில், ஆபரணக் கற்கள், பட்டை தீட்டும் தொழில், தோல் பொருள் தொழில் ஆகியவற்றில் ஏற்கெனவே 5 லட்சத்துக்கும் அதிகமான வேலை இழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதைச் சரிசெய்யவே சிறிது காலம் வேண்டும்.

  முக்கியமாக, கடந்த நிதி ஆண்டில், உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6.7 சதவீதமாக உள்ளது. சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் கணிப்புகளைவிட கூடுதலான வளர்ச்சி விகிதம் இது. அதேநேரம், கடந்த ஆறு ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச வளர்ச்சி விகிதம். நடப்பு நிதி ஆண்டில் இந்த வளர்ச்சிகூட சாத்தியமா என்பதை இப்போது உறுதியாகச் சொல்ல முடியாது.

  தென்மேற்குப் பருவமழை உரிய நேரத்தில் தொடங்கியுள்ளது ஒரு நல்ல அறிகுறி. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தையின் தற்போதைய எழுச்சி வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அது "சென்டிமென்ட்' என்னும் உணர்வுபூர்வமானது. உண்மை நிலையை சார்ந்தது அல்ல.

   காரணம், கடந்த சில வாரங்களில் அடிப்படை பொருளாதார அம்சங்கள் அப்படி ஒன்றும் மாறிவிடவில்லை. எனவே, பொருளாதார மந்த நிலை மாறிவிட்டது என்பதை பங்குச் சந்தை குறியீடு உணர்த்தவில்லை.

  இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் என்றுமே, பங்குச்சந்தை எழுச்சி, பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிப்பதாக இருந்தது இல்லை.

  ஆக, உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி, தொழில்துறை செயல்பாடு, ஏற்றுமதி, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம், உணவுப் பண்டங்களின் விலைவாசி கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்களின் மேம்பாடே, வளமை திரும்பியதற்கான சரியான அறிகுறியாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.