வளர்ச்சிக்கு வழிகாட்டும் கடன் கொள்கை
நடப்பு நிதி ஆண்டில் முதல் நிதி மற்றும் கடன் கொள்கையை பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ்


நடப்பு நிதி ஆண்டில் முதல் நிதி மற்றும் கடன் கொள்கையை பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் ஏப்ரல் 21-ல் அறிவித்தார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி, அதாவது "ரெப்போ' விகிதம் கால் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 5 சதவீதமாக இருந்த "ரெப்போ' வட்டி வீதம் 4.75 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, ""ரிவர்ஸ் ரெப்போ'' விகிதம் 3.5 சதவீதமாக இருந்தது, 3.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ""ரிவர்ஸ் ரெப்போ'' என்பது வங்கிகள் தங்களிடம் உள்ள உபரித் தொகையை ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்துவிட்டு அதற்கு வட்டி ஈட்டும் திட்டம் ஆகும்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் பொருள் பொதிந்ததாகும்.
"ரெப்போ' வட்டிவிகிதத்தைக் குறைத்ததால் வங்கிகள் தங்களுக்குத் தேவையான குறுகியகாலக் கடன்களைக் குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இதன் பயனாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடன்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க முடியும். இப்படிக் குறைக்க வேண்டும் என்பதே பாரத ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கம் ஆகும்.
இவ்விதமாக கடந்த 6 மாதங்களில் 6 முறை ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்துள்ளது.
இரண்டாவது விஷயத்துக்கு வருவோம். வங்கிகளிடம் உபரியாகப் பணம் சேர்ந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். வங்கிகள் அந்தப் பணத்தைக் கடன் கொடுக்கும் வரை அதிலிருந்து வட்டி ஈட்ட முடியாது அல்லவா? அதனால் வங்கிக்கு இழப்பு ஏற்படும். இந்த இழப்பைத் தவிர்ப்பதற்காக, வங்கிகளிடமிருந்து அந்த உபரிப் பணத்தை ரிசர்வ் வங்கி பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சதவீத வட்டி கொடுக்கும். இதைத்தான் "ரிவர்ஸ் ரெப்போ' என்கிறார்கள்.
நல்ல நோக்கத்தில் ரிசர்வ் வங்கி செயல்படுத்தும் இந்தத் திட்டத்தை வங்கிகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது வங்கிகள் தங்களிடம் உள்ள பணத்தை தொழில் துறைக்கு, விவசாயத்துக்கு, சிறு தொழில்களுக்கு, வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்க விரும்புபவர்களுக்குக் கடன் வழங்க வேண்டும். அவ்விதம் செய்தால் அவை வராக் கடனாக ஆகிவிடுமோ என அஞ்சி, கையில் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் "ரிவர்ஸ் ரெப்போ' திட்டத்தில் போட்டு விட்டு வட்டி ஈட்டுகிறார்கள் என்பதே இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு.
கடந்த சில வாரங்களில் மட்டும் வங்கிகள் ரூ. 1,22,000 கோடி தொகையை பாரத ரிசர்வ் வங்கியிடம் ரிவர்ஸ் ரெப்போ கணக்கில் போட்டுவிட்டு மூன்றரை சதவீதம் வட்டி பெற்றுள்ளன.
இந்த வட்டிவீதத்தைத்தான் ரிசர்வ் வங்கி மூன்றரை சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகக் குறைத்துள்ளது. சரி, இதன் நோக்கம் என்ன? வங்கிகள் உபரிப் பணத்தை ரிசர்வ் வங்கியிடம் போடாமல், தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கடன்களைத் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்பதுதான். 3.25 சதவீதம் என்பது மிகக் குறைவு என்பதால் வங்கிகளும் இதில் போடுவதற்குத் தயங்குவார்கள். அவர்கள் மனம் வழக்கமான தொழில் கடன்கள் பக்கம் திரும்பும்; திரும்ப வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் கருத்து.
கடன்கள் கொடுக்கும்போது ஓரளவு "ரிஸ்க்' இருக்கும் என்பது வெளிப்படை. அந்த ஆபத்தின் அளவை, அனுபவரீதியில் உணர்ந்து, எந்த அளவுக்கு "ரிஸ்க்' எடுக்கலாம்? இதில் "லக்க்ஷமணன் கோடு' எது என்பதை வங்கியாளர்கள் தங்கள் அனுபவத்தாலும், அறிவுக் கூர்மையாலும் உணர்ந்து செயல்பட வேண்டும். மாறாக, கடன் கொடுப்பது ஆபத்தானது என்றும் கொடுக்கும் கடன்கள் அனைத்துமே வாராக் கடன்களாகி விடும் என்றும் அஞ்சுவது அழகல்ல.
அல்லது நன்கு வளர்ந்துள்ள தொழில் நிறுவனங்கள், வலுவான வாடிக்கையாளர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டும் தாராளமாகக் கடன்கள் கொடுத்துவிட்டு புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் ஆர்வலர்களுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பதும் சரியல்ல. இந்தப் போக்கினால் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.
இதைத் தடுத்து நிறுத்தி, முறையான கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும் என்பதுதான் ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதக் குறைப்பின் நோக்கம். ஏப்ரல் 21-ம் தேதி வெளியான நிதி மற்றும் கடன் கொள்கைக்கு முன்னரே, அதாவது சென்ற செப்டம்பர் மாதம் முதற்கொண்டே ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று சி.ஆர்.ஆர். (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) ஆகும். அதாவது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக வைத்திருக்க வேண்டிய வைப்புத்தொகை. ஒவ்வொரு வங்கியும் தன்னிடம் உள்ள பொதுமக்களின் வைப்புத் தொகையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை ரொக்கமாக ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டும்.
இந்த விகிதத்தையும் ரிசர்வ் வங்கி பல முறை குறைத்தது. இதன் பயனாகவும், பிற செயல்பாடுகளின் மூலமும் வங்கிகளிடம் ரூ. 4 கோடியே 20 லட்சம் வரை நிதி ஆதாரம் பெருகியது.
இதுவும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தங்கு தடையின்றிக் கடன் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே. நிதி நெருக்கடியும், பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் வங்கிக் கடன்கள் மூலமே பொருளாதாரம் புத்துயிர் பெற முடியும்.
ஆக, கடன் கொடுப்பதற்கு நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்காக சி.ஆர்.ஆர். குறைக்கப்பட்டது. கடன் கொடுத்தால் மட்டும் போதுமா? வட்டியும் தாங்கும்படியாக இருக்க வேண்டுமே? அதற்காகத்தான் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டது.
இந்த இரண்டும் செய்தும் உரிய பலன் கிடைக்கவில்லையே என்று அறிந்துகொண்ட ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் வட்டி விகிதத்தைக் குறைத்து, வங்கிகளின் உபரி பணத்தை ரிசர்வ் வங்கிக்குத் திரும்பி வராமல் தடுத்து, தொழில்களின் பக்கம் மடை திருப்பியுள்ளது!
சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதி ஆண்டில் வங்கிகளின் கடன் தொகை வெறும் 20 சதவீதம் அளவுக்குத்தான் வளர்ந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இது 27 சதவீதம் அளவுக்குக் குறையாமல் வளர்ந்துள்ளது.
ஆக, கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. வங்கிக் கடன்களின் அளவு சுருங்கியுள்ளது என்பது தெளிவு.
வங்கிகள் என்ன கூறுகின்றன? பொருளாதார மந்தநிலை காரணமாக தொழிலதிபர்கள் கடன் வாங்கவே தயங்குகிறார்கள். அவர்கள் பொறுத்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதே வங்கிகளின் பதில்.
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. வங்கிக் கடன் பெற விண்ணப்பங்களை அளித்துவிட்டு காத்திருப்போர் பட்டியல்தான் நீண்டு கொண்டே போகிறது. நல்ல காலம் பிறக்கட்டும். பிறகு கடன் வாங்கி தொழில் நடத்தலாம் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு.
முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரும், அண்மைக்காலம்வரை பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசகருமாக இருந்த சி. ரங்கராஜன் சில தினங்களுக்கு முன் கூறியது இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.
""பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்வதற்கு சிறந்த வழி, நல்ல, நல்ல தொழில் முனைவோருக்கு வங்கிக் கடன்களை உரிய நேரத்தில், உரிய தொகையில், கொடுத்து உதவுவதுதான். அவ்விதம் செய்வதன் மூலமே பொருளாதாரம் புத்துயிர் பெறும்'' என்று சமீபத்தில் ஹைதராபாத் பல்கலைக்கழக நிகழ்ச்சியில், "உலக நிதி நெருக்கடியும், இந்தியப் பொருளாதாரமும்' என்பது குறித்துப் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயனுள்ள யோசனையைச் செயல்படுத்துவதில், வங்கிகள் குறிப்பாக அரசுடமை வங்கிகள், முனைப்பு காட்டுவது அவசியம் மட்டுமல்ல; அவசரமும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...