தேவை: தேர்தல் சீர்திருத்தங்கள்

வழக்கமாக பொதுத் தேர்தல் என்றால் அதில் ஒரு விறுவிறுப்பு இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்பாடுகளையும் பார்த்தால் இதை "தேர்தல் தமாஷ்' என

வழக்கமாக பொதுத் தேர்தல் என்றால் அதில் ஒரு விறுவிறுப்பு இருக்கும். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகளையும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்பாடுகளையும் பார்த்தால் இதை "தேர்தல் தமாஷ்' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

  1951-52-ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது சுதந்திரமான இந்தியாவில் ஜனநாயக முறையில், தேசபக்தி கலந்த ஒரு செயல்பாடாகத் தேர்தலைக் கருதினர். தேசியத் தலைவர்களும், மக்களும் பயபக்தியுடனும் உண்மை உணர்வுடனும் தேர்தலை ஒரு திருவிழா போலக் கருதி செயல்பட்டனர். 21 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் (பின்னர் வாக்களிக்கும் உரிமைக்கான வயது 18 ஆகக் குறைக்கப்பட்டது).

  முதல் பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், முதன் முறையாக இந்தியத் தேர்தல் ஆணையம் என்ற நடுநிலையான அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு அதன் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. இதற்கு முன்னர் அரசுதான் தேர்தல்களை நடத்தி வந்தது.

  பாமரர்கள் அதிகம் உள்ள நாட்டில், ஜனநாயகத்தின் அடிப்படை என்ன என்றே பலருக்குத் தெரியாத நிலையில் அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது என்பது ஓர் அரசியல் சூதாட்டம் என்றே பலரும் வருணித்தனர். ஆனால், முதல் பொதுத் தேர்தலில் பெரும்பாலான மக்கள் படிக்காதவர்களாக இருந்தாலும், தேசபக்தியுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் வாக்களித்தனர். கடும் விமர்சனங்களுக்கு நடுவே அந்தத் தேர்தலில் 61.2 சதவிகித வாக்குகள் பதிவாகின. சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த போதிலும் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களும் இல்லாமல் தேர்தல் அமைதியாகவே நடந்தது.

  1957-ல் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. இதை வெளிநாட்டினரும் வெகுவாகப் பாராட்டினர். இந்தியாவில் ஜனநாயகம் நன்றாக வேரூன்றிவிட்டதாகவே பலரும் கருதினர். அதன் பின் 1962, 1967 என ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படியும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

  60-களில் முதன்முறையாக மாநில சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல் என்ற நடமுறை அறிமுகமானது. 1968 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து அரசியல் கட்சிகளில் அடிக்கடி பிளவு, கட்சித் தாவல் ஏற்பட்டது. இதுபோன்ற செய்கைகளால் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த முடியாமல் போனது.

  1969-ல் இந்திராகாந்தி, வங்கிகள் தேசியமயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோது ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகி கட்சியில் பிளவு ஏற்பட்டது.

  இதைத் தொடர்ந்து 1970-ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பின்னர் தேர்தல் நடைபெற்றது.

  1975-ல் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மூலம் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. நெருக்கடிநிலை அமலை விரும்பாத சில அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அதை எதிர்க்கும் நோக்கில் ஜனதா கட்சியை உருவாக்கின.

  1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் புதிய மாற்றத்தை விரும்பியதால் காங்கிரஸ் தோல்வி அடைந்து ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. பல்வேறு காரணங்களால் ஜனதா கட்சியால் ஆட்சியில் நீண்டநாள் நீடிக்க முடியாவிட்டாலும், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவானது எனலாம். இதுவே பின்னர் பல்வேறு அரசியல்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க வித்திட்டது எனலாம்.

  டி.என்.சேஷன், தலைமைத் தேர்தல் ஆணையராக 1991-ம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து தேர்தல் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. 1991-ம் ஆண்டுவரை தேர்தல் ஆணையத்தின் தலையீடுகள் இல்லாமலே தேர்தல்கள் அமைதியாக நடைபெற்று வந்தன.

   இப்போது நடப்பது போல அரசியல் கட்சிகள் பெருமளவில் தேர்தல் வன்முறையில் இறங்கவில்லை. ஊழல்கள் தலைவிரித்தாடவில்லை. கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடவில்லை.

  வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படங்களுடன்கூடிய வாக்காளர் பட்டியல், தேர்தல் நடத்தை விதிமுறைகள், தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படைகள், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க மேற்பார்வையாளர்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடைபெறுவதை விடியோவில் பதிவு செய்வது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் ரகசிய கேமராக்கள் வைத்து கண்காணிப்பது ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் 90-களில்தான் அறிமுகப்படுத்தியது.

  2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதன்முறையாக ஏறக்குறைய 7 லட்சம் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

   இதன் சிறப்பான செயல்பாட்டை அடுத்து மாநிலத் தேர்தல் ஆணையங்களும் உள்ளாட்சித் தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தொடங்கின இதனால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்க ஆயிரக்கணக்கான டன்களில் காகிதங்கள் வாங்கும் செலவு மிச்சமானது. வாக்களிக்கும் பணி துரிதமாகி நேரம் மிச்சமானது. வாக்குகள் எண்ணும் பணியும் எளிதானது.

  தொலைக்காட்சி, மொபைல் போன்கள் மூலம் தேர்தல் பிரசாரம், டிஜிட்டல் விளம்பரம் என அரசியல்கட்சிகளும், வேட்பாளர்களும் மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் பல உத்திகளை தேர்தல் பிரசாரத்தில் கையாண்டு வருகின்றன நாட்டின் மூலை முடுக்குகளில் நடைபெறும் தேர்தலைக்கூட அடுத்த சிலநொடிகளில் ஊடகங்கள் ஒளிபரப்பி மக்கள் கவனத்தை ஈர்க்கின்றன.

  குறுகிய நலன்கள் அடிப்படையில் சாதி, சமூக ரீதியில் அரசியல் கட்சிகள் பெருகிவிட்டன.

  அரசியல் கட்சித் தலைவர்களிடம் தேசியக் கண்ணோட்டம் மறைந்து சாதி அடிப்படையிலேயே அவர்கள் செல்வாக்கு என்ற நிலை உருவாகிவிட்டது. அரசியல் கட்சிகளும், போட்டியிடும் வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிச் செயல்படத் தொடங்கிவிட்டனர்.

  2009 தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்து வருவது கவலை அளிக்கிறது. வாக்காளர்கள் அரசியல்கட்சிகள் மீதும், அவர்கள் சார்ந்த வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

  தேர்தல் முடிந்து புதியதாகப் பதவியேற்கும் அரசு, உடனடியாகத் தேர்தல் சீர்திருத்தம் குறித்து தேசிய அளவில் விவாதங்கள் நடத்தி, அதைச் செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com