தமிழகத்தின் நிகழாண்டு "பிளஸ் 2' தேர்வு முடிவுகளைப் பார்ப்பது பளிச்சிடும் வண்ணத்தில் ஓவிய மேதை வான்காவின் ஓவியங்களைப் பார்ப்பதுபோல இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஒளி வெள்ளம், பிரகாசம்.
நிகழாண்டில் 6,40,844 பேர் "பிளஸ் 2' தேர்வெழுதினர். இவர்களில் 5,32,222 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 83 சதம். கடந்த ஆண்டைவிட 1.4 சதம் குறைவு என்றாலும் மோசமான தேர்ச்சி விகிதமில்லை இது. நான்கு பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் (1,183/1200). 4,060 பேர் வெவ்வேறு பாடங்களில் நூறு சதவீத மதிப்பெண்கள் (200/200) பெற்றிருக்கின்றனர். நூற்றுக் கணக்கான பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பான ஒவ்வொரு செய்தியும் பிரகாசமாய் ஜொலிக்கிறது.
இந்த ஜொலிப்பு முழு உண்மையாக இருந்தால், இந்தத் தேர்வு முடிவு உண்மையான கல்வியின் முழு வெளிப்பாடாக இருந்தால், நாம் எல்லோருமே கொண்டாடலாம். ஆனால், நம்மால் கொண்டாட முடியாது. ஏன்?
ஏனெனில், இந்தத் தேர்வுகள், மதிப்பெண்களுக்குப் பின்னணியிலுள்ள உண்மைகள் நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரசாங்கத்துக்குத் தெரியும். கல்வித் துறைக்குத் தெரியும். ஆசிரியர்களுக்குத் தெரியும். பெற்றோர்களுக்குத் தெரியும். மாணவர்களுக்கும் தெரியும். ஆனாலும், எல்லோரும் எல்லோரையும் ஏமாற்றப் பழகியிருக்கிறோம்.
தாய்மொழியைக்கூடப் பிழையின்றி எழுதத் தெரியாதவர்கள், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும்கூட வேறுபாடு தெரியாதவர்கள், சாதாரண வங்கிப் படிவத்தைக்கூடச் சுயமாகப் பூர்த்திசெய்ய முடியாதவர்கள் என்று லட்சக் கணக்கானோரை ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வி முடித்துவிட்டதாகச் சான்றளித்து வெளியேற்றுகின்றன நம் பள்ளிக்கூடங்கள். இதைவிடக் கொடுமை, ஒரு சமூகம் எவ்விதச் சலனமுமின்றி இதை அப்படியே எதிர்கொள்வது.
ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் நம்முடைய கல்விமுறையையும் தேர்வுமுறையையும் மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஒலிக்கும் குரல்கள் அரசாலோ கல்வித் துறையாலோ பொருட்படுத்தப்படுவதே இல்லை. சமூகத்திலும் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால், இனிவரும் காலங்களில் அப்படி இருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஏனெனில், இதுவரை எச்சரித்த காலங்களெல்லாம் போய் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.
உலகப் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த ஆண்டில் நம் நாட்டில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியானதை நாம் அறிவோம்.
சமூக, பொருளாதார தளங்களில் இந்த விஷயத்தை நாம் வேறு மாதிரி விவாதிக்கலாம்.
ஆனால், ஆள்குறைப்பு நடந்த துறைகளிலெல்லாம் சொல்லப்படும் ஓர் உண்மை என்னவென்றால், "எங்கள் துறை தன்னைத்தானே கழுவிக்கொண்டது' என்பதுதான். அதாவது, ஆள்குறைப்பு நடத்தப்பட்ட பெரும்பாலான இடங்களில் போதிய திறனற்ற ஊழியர்களே முதல் களபலியாகி இருக்கின்றனர்.
ஆனால், இதிலுள்ள நகைமுரண் என்னவென்றால், எல்லா துறைகளிலுமே நல்ல ஆள்களுக்கான தேவை இருக்கிறது என்பதாகும். நாட்டிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் போதிய திறன் மிக்க ஆள்கள் இன்றியே செயல்பட்டுவருகின்றன என்கிறது ஓர் ஆய்வு.
நம் இளைய தலைமுறையிடம் வேலைவாய்ப்புக்கும் அதற்குத் தேவையான திறனுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதன் விளைவு, அடுத்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ 55 கோடி பேர் பணிகளுக்கானப் போட்டியைச் சந்திக்க நேரிடும்போது ஒரு சமூகப் பிரச்னையாக இது மாறும்.
குறிப்பாக, நம் நாட்டில் வெறும் 7 சதவீதத்தினரே அமைப்பு சார்ந்த பணிகளில் இருக்கின்றனர். அமைப்புசாராத் தொழில்களே மிகப் பெரிய வேலையளிப்புக் களமாக இங்கு இருக்கின்றன. ஆனால், அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபடுவோருக்கு முறையான பயிற்சியோ, ஒருங்கிணைப்போ இங்கில்லை. அமைப்புசாராத் தொழில்களில் தொழில்முறைமயமாக்கல் என்ற பேச்சுக்கெல்லாம் இங்கு இடமேயில்லை. இவற்றைப் பற்றியெல்லாம் அரசுக்கோ, கல்வித் துறைக்கோ எந்தப் பிரக்ஞையுமில்லை.
நம்முடைய அரசுப் பள்ளிகள் ஏழைகளுக்கானவை என்ற மனோபாவத்தில் அரசு இருக்கிறது. மக்களிடத்திலும், "தனியார்ப் பள்ளிகளில் படிக்கவைக்க முடியாதவர்களுக்காக நடத்தப்படும் பள்ளிகள்' என்ற மதிப்பீடே அரசுப் பள்ளிகள் மீது இருக்கிறது.
மக்கள் வாயை அடைக்கவும் ஏழைகளின் கல்வி ஆசை, கனவாக மாறிவிடாமலிருக்கவும் ஏதோ, ரேஷன் அரிசி வழங்குவதுபோல அரசுப் பள்ளிகளும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகின்றன. தனியார்ப் பள்ளிகளோ தேர்வு மதிப்பெண்களையும் விளையாட்டு வெற்றிகளையும் தவிர்த்து வேறு எந்தச் சிந்தனையுமின்றிச் செயல்படுகின்றன.
நாட்டின் மிகப் பெரிய பிரச்னையான மக்கள்தொகைப் பெருக்கத்தில் நமக்குள்ள ஒரே அனுகூலம், அதை திறன் மிக்க மனிதவளமாக மாற்றுவதிலேயே இருக்கிறது. தரமான கல்வியால் மட்டுமே அது சாத்தியம்.
பாடத்தைப் புரிந்துகொள்வதை ஊக்கப்படுத்தும் பாடத் திட்டமும் தேர்வும் நம் கல்விமுறையின் அடிப்படையாகும்போது மட்டுமே அது சாத்தியம். இந்த வெற்றி உண்மையாகவே ஜொலித்தால் அப்போது அதை எல்லோருமே கொண்டாடலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு வழிகாட்டி மையத்தை அணுகலாம்! - ஆட்சியா் இரா. சுகுமாா்
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

