நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவர்களைக் கொண்டு மரம் வளர்ப்போம்

புவி வெப்பமடைவதைத் தவிர்க்க ஒவ்வொரு நாடும் பல திட்டங்களைச் செயல்படுத்தி தங்கள் பகுதியில் வெப்பத்தின் அளவைக் குறைக்க கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன.   இந்தியாவில், இத்தகைய புவிவெப்பத்தைக் குறைக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:02 pm

வி.குமாரமுருகன்

புவி வெப்பமடைவதைத் தவிர்க்க ஒவ்வொரு நாடும் பல திட்டங்களைச் செயல்படுத்தி தங்கள் பகுதியில் வெப்பத்தின் அளவைக் குறைக்க கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகின்றன.

  இந்தியாவில், இத்தகைய புவிவெப்பத்தைக் குறைக்க உதவும் திட்டங்களை எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான இன்றைய மாணவர்களிடம் வழங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

  வளி மண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு (கரியமில வாயு) உள்ளிட்ட சில வாயுக்களின் அளவு அதிகரிப்பதன் காரணமாக புவியின் சராசரி வெப்ப அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  உலக நாடுகள் முழுவதுமுள்ள தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்டவைகள் வெளியேற்றும் கரியமிலவாயுவின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக வளி மண்டலத்தில் இதன் அடர்த்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  இந்தியாவில் தனிநபர் மூலம் வெளியாகும் கரியமிலவாயுவின் அளவு வெறும் 1.31 மெட்ரிக் டன்தான். அமெரிக்காவை ஒப்பிடும்பொழுது இது மிகமிகக் குறைவுதான்.

  இந்த புவி வெப்ப அளவைக் குறைக்க வேண்டுமானால், பல லட்சம் கோடி ரூபாயை உலக நாடுகள் செலவிட வேண்டும். வளர்ந்த நாடுகளில் இது சாத்தியம் என்றாலும் வளர்ந்து வரும் நாடுகளில் இவ்வளவு பணம் செலவிட வேண்டும் என்றால், அது தொழிற்சாலைகளின் நிலைமையைப் பாதிக்கும் என்பது கண்கூடு.

  இந்நிலை இப்படியிருக்க மரங்கள், இந்த புவி வெப்ப அளவைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  இப்படி எளிதான வழிமுறைகளை நாம் கையாண்டால் கரியமில வாயுவின் அடர்த்தியை வெகுவிரைவில் சமநிலைப்படுத்த முடியும் என்பதும் உண்மை.

  இந்தியாவில் இதற்காக பல திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மரம் வளர்க்கும் திட்டத்தை மாணவர்களைக் கொண்டு நிறைவேற்றினால் நம் நோக்கம் நிறைவேறும்.

  இந்தியாவிலுள்ள பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித் திட்டங்களில் சுமார் 26 லட்சம் மாணவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்த நாட்டு நலப்பணித்திட்டத்தில் 3.7 லட்சம் மாணவர்கள் இணைந்து சமுதாயப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

  இப்படி இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித்திட்டக் குழுவில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்கு 7 நாள்கள் முதல் 10 நாள்கள் வரை தங்கி அப்பகுதியில் கோயில் சீரமைப்பு, சாலை சீரமைப்பு, பல்வேறு விதமான விழிப்புணர்வு (எய்ட்ஸ் தடுப்பு போன்ற) முகாம்கள் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

  மற்றவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளைவிட மாணவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி என்கிற வகையில் இவர்கள் புரியும் சமுதாயச் சேவைகளுக்கு அப்பகுதி மக்களும் உறுதுணை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் புவி வெப்பத்தைச் சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெறும் பேரணியையோ, கருத்தரங்குகளையோ நடத்துவதைத் தவிர்த்து இந்த மாணவர்களைப் பயன்படுத்தி மரங்கள் நட்டு வளர்த்தால் அது நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

  இந்தியாவில் என்.எஸ்.எஸ். திட்டத்தின் உறுப்பினர்களாக உள்ள 27 லட்சம் மாணவர்களும் தலா ஒரு மரத்தை பொது இடங்களில் நட்டு வளர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் வகை செய்தால் ஒரே சமயத்தில் பல லட்சம் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டுவிடும். எதிர்கால இந்தியாவின் போக்கை நிர்ணயிக்க வேண்டியது நமது கடமைதான் என எண்ணும் ஒவ்வொரு மாணவனும் இதனைச் சரியாகச் செய்வார்கள்.

  இதுபோல் பள்ளிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை, பசுமை பாதுகாப்புப் படை மாணவர்களையும் இத்திட்டத்தில் பங்குபெறச் செய்தால் எதிர்கால இந்தியா பசுமை பொங்கும் இந்தியாவாக மலர்வதுடன், புவி வெப்பமாதலைத் தவிர்க்க வழியும் ஏற்படும்.

  இந்தியாவின் வளர்ச்சி, கிராமங்களிலிருந்துதான் துவங்குகிறது என்பது பெரியவர்களின் மொழி. எனவே ஒவ்வோர் ஊராட்சி மன்றத்திலும் மரம் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அரசின் திட்டங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் வெறும் பிரசாரத்திற்கும், பேரணிகளுக்கும் நிதி ஒதுக்குவதை விடுத்து முக்கியப் பிரச்னையான இந்தப் புவி வெப்பமாதலைத் தவிர்க்க மரம் வளர்க்கும் திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் கண்டிப்பாக இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

  மரம் வளர்ப்பதற்காக சமூக வனக்காடுகள், வனத்துறை உள்ளிட்டவைகள் புதிய திட்டங்களை வகுத்து அவற்றை உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவர்களின் பங்களிப்புடன் நிறைவேற்ற வேண்டும்.   பணத்திற்காக மரம் நடுபவர்களைவிட தங்களின் எதிர்கால வளத்திற்காக மரம் நடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் செயல்படுவார்கள் என்பதால் மாணவர்கள் மூலம் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் இயற்கை எளிதில் நமது வசமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.