நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பகையாகும் புகைப்பவர் பழக்கம்

"பொது இடங்களில் புகை, அனைவரின் வாழ்வுக்கும் பகை' என்ற வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தும் அந்தப் பழக்கத்தை தொடரும் நாகரிக மக்களின் நடவடிக்கை சட்டத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:23 pm

வி.குமாரமுருகன்

"பொது இடங்களில் புகை, அனைவரின் வாழ்வுக்கும் பகை' என்ற வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தும் அந்தப் பழக்கத்தை தொடரும் நாகரிக மக்களின் நடவடிக்கை சட்டத்தையே கேள்விக்குறியாக்கி வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் காட்சிகளிலும், திரைப்படங்களிலும் புகைப்பது போன்ற காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அப்படிக் காட்சிகள் வரும் சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் புகைப்பது உடல் நலத்திற்குக் கேடு என்ற வாசகத்தை ஒளிரச் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஆனால், இந்த அறிவுரைகளை சில தொலைக்காட்சி சேனல்கள் பின்பற்றுகின்றன.

மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி, திரைப்பட நடிகர்களின் செயல்கள் எளிதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் பதிந்து விடுகிறது. அதனால் படங்களில் புகைப்பது போன்ற காட்சிகளை நடிகர்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை ஏற்று சில நடிகர்கள் இதைப் பின்பற்றி வந்தாலும், பலர் இன்னும் தொடர்வது இளைஞர்களின் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

மே 2004-ம் ஆண்டு பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 மேலும் புகையிலை நிறுவனங்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரம் வெளியிடவும் தடை விதித்துள்ளது.

அத்துடன் விளையாட்டுப் போட்டிகளின் விளம்பரதாரர்களாக அதாவது "ஸ்பான்சர்'களாக புகையிலை நிறுவனங்கள் இருக்கக் கூடாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

புகைக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்தியாவில் ஆண்டுக்கு எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகை பிடிப்பதன் காரணமாக ஏதேனும் ஒருவகையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் 25 வயது முதல் 69 வயது வரையிலானவர்களுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

பள்ளி வாழ்க்கையை முடித்து விட்டு கல்லூரி வாழ்க்கையில் நுழைபவர்கள் புகை பிடிப்பதை பேஷனாகக் கருதிப் புகைக்க ஆரம்பிக்கின்றனர்.

நாளடைவில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுவதாக வட மாநில கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   கல்லூரி மாணவர்களில் சுமார் 31 சதவீதம் பேர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் என "வேர்ல்ட் லங்க் பவுண்டேஷன்' அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் அதிர்ச்சியான தகவல் கல்லூரி மாணவிகளில் 7 சதவீதம் பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என்ற செய்திதான்.

அடிக்கடி புகைப்பவர்களின் அருகில் உள்ளவர்களுக்கு 25 சதவீத நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

தாங்கள் புகைக்காவிட்டாலும் தங்களைச் சூழ்ந்துள்ளவர்களின் புகையால் தனது வாழ்க்கையின் கால்பகுதியைத் தியாகம் செய்ய வேண்டும் என்பது புகை பிடிக்காத நல்லவர்களின் தலையெழுத்து.

இது இப்படியிருக்க புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படிப் பல நோய்கள் வருவதற்குக் காரணமான புகையை ஒழிக்க அரசு சட்டங்களை இயற்றத்தான் முடியும். ஆனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டியது காவல்துறையின் கடமை.

ஒருவரின் புகைப் பழக்கம் அவரை மட்டும் பாதித்தால் பரவாயில்லை. பஸ் ஸ்டாண்டில் புகைக்கும் ஒருவரால் அவரது அருகில் நிற்கும் பலரும் பாதிக்கும் நிலையுள்ளபொழுது அதனைக் கவனிக்க வேண்டியது காவல்துறையின் கடமையல்லவா?

ஹெல்மட் அணிய வேண்டும் என்பது சட்டம். ஆனால் அதை அணியாவிட்டால் அது அவருக்கு மட்டும்தான் பாதிப்பு. ஹெல்மட் அணிவது என்பது அவரின் உயிரை மட்டும் சார்ந்த விஷயம். அதை அணிவது அல்லது அணியாமல் இருப்பது என்பது வேறு.   ஆனால், ஒருவர் பொது இடத்தில் பிடிக்கும் புகையால் மற்றவர்களும் பாதிப்படைவது என்பது எந்த வகையில் நியாயம் என்பதை உணராமல் செயல்படும் இவர்களை என்ன செய்வது?

மொத்தத்தில் அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால் அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொறுப்பு மக்களின் கையில்தான் உள்ளது. மக்கள் அதை மறக்கும்பொழுது அதை ஞாபகப்படுத்த வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.