வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதா?

அமெரிக்கர்கள் கருப்பு ஞாயிறு என்று வர்ணித்த நாள், 2008-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதியைத்தான். ஓராண்டு முடிந்துவிட்டது. ஆனாலும் மறக்க முடியாது. அன்றுதான், 158 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த லேமன் சகோதரர்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:58 pm

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்கர்கள் கருப்பு ஞாயிறு என்று வர்ணித்த நாள், 2008-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதியைத்தான். ஓராண்டு முடிந்துவிட்டது. ஆனாலும் மறக்க முடியாது. அன்றுதான், 158 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த லேமன் சகோதரர்களின் நிதி நிறுவனம் திவாலானது. சர்வதேச அளவில் புகழ்பெற்றுத் திகழ்ந்த இன்வெஸ்ட்மென்ட் வங்கியின் வீழ்ச்சி உலகையே அதிர்வடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் டஜன், டஜனாக வங்கிகள் சரிந்தன.

  இந்த சர்வதேச நிதி நெருக்கடி என்னும் சுனாமியால், இந்திய வங்கிகள் பாதிக்கப்படவில்லை என்பதை உலகம் சற்று வியப்புடன் கவனித்தது.

   இந்திய பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார்துறை வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுகின்றன என்பதுதான் இதற்குக் காரணம்.

  இது ஒன்றும் புதிய விஷயமும் அல்ல. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஆசிய நாடுகளில் கடும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த நாடுகளின் நாணயத்தின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

   வெளிநாட்டு மூலதனம், ஒரே சமயத்தில் விரைந்து வெளியேறியதும் அதற்கு ஒரு காரணம். மூலதனக் கணக்கை முற்றிலும் மாற்றும் திட்டம் அந்த நாடுகளில் அப்போதே செயல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த நாட்டு வங்கிகள் அப்போது அவ்வளவு வலிமையுடன் இருக்கவில்லை. இவையெல்லாம்தான் அந்த நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்படக் காரணமாக இருந்தன.

  அந்த நேரத்திலும், கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்தியாவில் தலைகாட்டவில்லை என்பதுதான் கவனிக்கத்தக்கது. மூலதனக்கணக்கை முற்றிலும் மாற்றும்திட்டம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பது ஒரு காரணம்.

  இரண்டாவது காரணம் இந்திய வங்கிகளின் வலிமை. இவ்விரண்டு விஷயங்களே, இந்தியா, அப்போதும், இப்போதும், தப்பியதற்குத் தலையாய காரணங்கள் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

  இந்திய வங்கிகளின் வலிமை, அவற்றின் சீரிய செயல்திறனிலும், விதிமுறைகளைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிப்பதிலும்தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து, காலமாற்றங்களுக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வழங்குகிறது. நிதி மற்றும் கடன் கொள்கையின் மூலம் ரிசர்வ் வங்கி இதனைச் செய்கிறது. ஆபத்து நிறைந்த கடன்களை வங்கிகள் வழங்குவதைக் கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகள் தங்கள் லாபத்தொகையில் ஒரு பகுதியை அதுபோன்ற கடன்களுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற முறையை அறிமுகம் செய்தது. இது ஒரு முக்கியமான ஏற்பாடு.

  பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு எப்போது, எது தேவை என்பதை அறிந்து, அதற்கேற்ற நெறிமுறைகளைச் செயல்படுத்தி வருகிறது.   இந்த அணுகுமுறை ரிசர்வ் வங்கிக்குச் சாத்தியம் ஆவதற்குக் காரணம், அதற்கு நிதித்துறையில் இருக்கும் பரிபூரண சுதந்திரம்தான் என்று சொன்னால் மிகையல்ல.

  சில அண்மைக்கால நிகழ்வுகள் இந்தச் சுதந்திரத்துக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற ஓர் அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

  சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட கடந்த ஓராண்டு காலத்தில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல பொருளாதார புத்துயிர் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. தேவைப்பட்டால், பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்துவதற்காக, நிதியும் வழங்கப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவிக்கவும் செய்தது. பலர் இந்த அறிவிப்பை வரவேற்றனர். காரணம், அரசு தன் சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து வங்கிகளுக்கு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  பிறகு வெளியான செய்திகள் அதிர்ச்சி ஊட்டின. வங்கிகளுக்கு மூலதன நிதி வழங்கும்பொருட்டு, மத்திய அரசு உலக வங்கியிடமிருந்து ரூ. 17,000 கோடி அளவுக்குக் கடன் பெறத் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் கசிந்தன.

  கடந்த ஜூலை மாதம், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அரசு இந்த விஷயத்தில் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

  ஆனால், அப்படி ஒரு யோசனை அரசுக்கு இருப்பதாகவே தெரிகிறது. அரசுக்கு இந்த யோசனை வரக் காரணம் என்ன? அவசரம் என்ன?

  பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி இப்போது பொதுத்துறை வங்கிகளின் நிதி ஆதாரம் சிறப்பாகவே உள்ளது.

   உலக வங்கியிடம் கடன் வாங்கி, நமது வங்கிகளின் மூலதனத்தை உயர்த்துவதற்கு அவசியம் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து. இன்னும் சொல்லப்போனால், சர்வதேச நியதிகளின்படி, இருக்க வேண்டிய மூலதன அளவைவிட கூடுதலாகவே இந்திய பொதுத்துறை வங்கிகளின் மூலதனம் இருக்கிறது.

  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் வங்கிகளோடு ஒப்பிடுகையில், இந்திய வங்கிகளின் மூலதன விகிதம் கூடுதல் அளவில் உள்ளது என்பதுதான் உண்மை. பாரத ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட உயர்நிதி நிபுணர்குழுவும் இதை உறுதி செய்துள்ளது.

  ஆனால், சில அரசு அதிகாரிகள் வேறுவிதமாக நினைக்கிறார்கள்போலும். ""இப்போதைக்கு வங்கிகளின் நிதி ஆதாரம் போதுமானதாக இருக்கலாம்.

  பொருளாதார மந்த நிலையைச் சரிசெய்வதற்காக, வங்கிகள் மிகப்பெரிய அளவில் கடன்கள் வழங்கவேண்டுமே... அப்போது நிதி ஆதாரம் சுருங்குமே... அதைச் சரிக்கட்டுவதற்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுமே... அதற்கு எங்கே போவது? உலக வங்கியிடம் முன்கூட்டியே கடன் வாங்கினால் என்ன தவறு?'' என்று அரசு அதிகாரிகள் நினைக்கக்கூடும்.

  அவ்விதம் தேவைப்படும் தொகையை மத்திய அரசு மிக எளிதாகத் திரட்ட முடியும். அத்தகைய முயற்சி வெற்றி பெறாதபட்சத்தில், சீன அரசு செய்ததுபோல், நமது அன்னியச் செலாவணி கையிருப்பு 265 பில்லியன் டாலரிலிருந்து, ஒரு சிறு பகுதியை எடுத்து வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கலாம்.

  மாறாக, வங்கிகளின் மூலதனத்தைப் பெருக்குவதற்காக, உலக வங்கியிடம் கைநீட்டினால், அந்தக் கடன் பல்வேறு நிபந்தனைகளுடன்தான் கிடைக்கும். அந்த நிபந்தனைகள், மூலதனக் கணக்கை முற்றிலும் மாற்றும் திட்டம், இதர பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவையாக இருக்கக்கூடும்.  நாம் எந்தச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் நிதானம் தேவை என்று கருதுகிறோமோ அவற்றில் வேகம் தேவை என்று உலக வங்கி நிர்பந்திக்கக் கூடும்.

  மொத்தத்தில் பாரத ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையில் தற்போதுள்ள சுதந்திரம், மெல்ல மெல்லப் பறிபோகும் அபாயம் உள்ளது.  அமெரிக்காவும், இங்கிலாந்தும், ஜப்பானும் இந்திய வங்கிகளைப்போல் செயல்பட வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் நாம் பாதை மாறலாமா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.