புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 117: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்!

என்ன பிழை நடந்தது? எல்லாரது வாழ்வின் பெறுமதியை மதிப்பிழக்கச் செய்வதற்கு' - என்று முறிந்தபனையில் ஒரு வாசகம் உள்ளது. வேதனையின் விளிம்பில் எழுந்த வாசகம் இது. இன முரண்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் தோன்றும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:03 pm

என்ன பிழை நடந்தது? எல்லாரது வாழ்வின் பெறுமதியை மதிப்பிழக்கச் செய்வதற்கு' - என்று முறிந்தபனையில் ஒரு வாசகம் உள்ளது. வேதனையின் விளிம்பில் எழுந்த வாசகம் இது. இன முரண்பாடுகள் மற்றும் அடக்குமுறைகள் தோன்றும்போது உலகெங்கும் இவ்வாறு, குரல் எழுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

  இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகள் இரண்டே மாதங்களில், அதாவது, அக்டோபர் இரண்டாவது வாரத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது.

  காரணம் என்ன?

  "பெüத்த சிங்களரும் சிறுபான்மையினரும்' என்னும் ஆய்வு நூலில் சந்தியா பிள்ளை கீதபொன்கலன் இச் சூழ்நிலை குறித்து எழுதியுள்ளார். அவை வருமாறு:

  ""புனர்வாழ்வுக்கென திட்டமிட்டு செயலாற்ற முற்படும்போது இவ்விதப் போக்குகளின் தன்மைகளை உணர்ந்த நிலையிலேயே நாம் இயங்கத் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமாக இயங்குவதற்கு முன்பாக துன்பத்தின் எல்லைக்கு எம்மைக் கொண்டு சேர்த்த காரணங்களை ஆராய்ந்து அவற்றுக்கு உறுதுணையாக நின்ற அமைப்பு முறைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.

  இதனை மறந்த நிலையில் எவ்வித நல்ல நோக்கத்துடனும் ஆரம்பிக்கும் புனர்வாழ்வு செயல்திட்டமும் நன்மைகளை விளைவிக்க மாட்டாது. உறுதியற்ற நிலை மட்டுமே நிலவும். பெறும் நன்மைகளும் தற்காலிகத் தன்மையுடையனவாக மட்டுமே இருக்கும். பூகம்பத்தின் அடிமட்டத்தை ஒத்ததாக இருக்கும். விரைவில் பொங்கியெழுந்து, திட்டமிட்டிருந்தவை எல்லாம் அதன் கொதிப்பிழம்பில் அழிந்து போய்விடும். இயற்கையில் நாம் காணும் அழிவல்ல; மனிதரால் கடைப்பிடித்த கொள்கைகளின் விளைவாகவே அவை ஏற்படுகின்றன'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் யதார்த்தம்.

  விடுதலைப் புலிகள் ஆதரவுப் பத்திரிகைகளான ஈழமுரசு, முரசொலி ஆகியவற்றின் அலுவலகங்களைத் தாக்கி, அதன் செய்தியாளர்களை, அச்சக ஊழியர்களைக் கைது செய்தது, அவ்வியக்கத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை. எனவே, விடுதலைப் புலிகளின் எதிர் நடவடிக்கையை எதிர்நோக்கி, அமைதிப் படை காத்திருந்தது போன்று இருந்தது.

  மழைக்காலம் தொடங்கும் நேரம், நவராத்திரி கொண்டாடும் நேரம். இந்திய அமைதிப்படைத் திடீர் தாக்குதலைத் தொடுத்ததற்கு ஜெயவர்த்தனா கொடுத்த நெருக்கடியே முதல் காரணமாகிறது. இத் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதா, இல்லை... ஆயுதங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டு நிபந்தனையற்ற சரணாகதியடைவதா என இவ்விரு கேள்விகளே போராளிகளிடையே இருந்தது.

  இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் கூறுகையில், ""இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் குழம்பினார்கள். மாபெரும் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிடுவதா? நம்மால் தாக்குப்பிடிக்க முடியுமா என்றும், இப்போது ஆயுதங்களை கொடுத்துவிட்டு, சமரசம் செய்துகொள்வது என்றும், பின்னர் தகுந்த நேரத்தில் போராட்டத்தைத் தொடங்குவது என்றும் சிலர் ஆலோசனை கூறியதுண்டு. ஆனால் போராடுவது என்று "தம்பி' முடிவெடுத்தார். இதற்கான காரணத்தையும் பிரபாகரன் பின்நாளில் பேசும்போது தெரிவித்ததான தகவல் ஒன்றையும் கூறியுள்ளார்.

  அதில், "இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க எவ்வளவோ முயன்றேன். ஆனால் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய அரசு உதறித் தள்ளியது. இடைக்கால அரசமைப்பதில் விட்டுக்கொடுத்தேன். ஆனால் ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து கொண்டு எங்களை ஏமாற்றவே இந்திய அரசு முயன்றது. இதன் விளைவாக திலீபன், புலேந்திரன், குமரப்பா உள்ளிட்டோரைப் பறிகொடுத்தோம். அவர்கள் நினைத்திருந்தால் இவர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

  காலத்திற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் நான் செயல்படுகிறேன். எந்தப் பிரச்னையிலும் அர்த்தமற்ற பிடிவாதத்தை ஒருபோதும் கடைபிடித்ததில்லை' என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தப் பின்னணியில், விடுதலைப் போராளிகள் ஆயுதம் தரித்த நிலையில், அமைதிப் படை முகாம்கள் எதிரே திரண்டனர். என்ன நடக்குமோ என்று மக்கள் அஞ்சினர்; பதை பதைத்தனர்.

  யாழ் கோட்டையின் பக்கத்தில் முதல் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து யாழ் நகரின் பல பகுதிகளில் "ஷெல்' தாக்குதல்கள் ஆரம்பமாயின. அப்போதும் கூட ஒரு பகுதி மக்கள் இந்த "ஷெல்லை' இந்தியப் படை வீசி இருக்காது என்றும், இலங்கைப் படையே போட்டிருக்கும் என்றும், ஏனென்றால் புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரின் மரணத்துக்குப் பதிலடியாக 8 சிங்கள வீரர்களும் கொல்லப்பட்டு, காவல் நிலையம் அருகே வீசப்பட்டிருந்ததால், இந்த "ஷெல்' தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்றும் மக்கள் எண்ணினர்.

  1987-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பொதுமக்கள் நிறைந்த பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்குவதை அப்போது, இந்தியத் தூதரகம் கடுமையாகக் கண்டித்தது. இப்போது, அதே வேலையை இந்திய அமைதிப் படை செய்தபோது, தூதரகம் ஒரு பார்வையாளரைப் போன்றே நடந்து கொண்டது.

  அமைதிப் படையையும் அது ஆற்றப்போகிற பணியையும் குறித்து, இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் என்றே உலக நாடுகள் நினைத்தன. ஆனால் நடந்ததோ வேறு. மக்கள் நிறைந்த பகுதியில் "ஷெல்' தாக்குதல் குறித்து கண்டனம் எழுந்தபோது, "நகரத்தை -  அது எந்த நகரமானாலும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்றால் "ஷெல்' தாக்குதல் என்பது நடைபெற்றே ஆக வேண்டும் என்று ராணுவத் தரப்பில் கூறப்பட்டது.

  யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி விமானத் தாக்குதலை இலங்கை நடத்தியபோது, அதைக் கண்டித்த ராஜீவ் காந்தியை, "பஞ்சாபில் என்ன நடந்தது; நடக்கிறது என்று இந்தியா திரும்பிப் பார்க்கட்டும்' என்று இலங்கைப் பத்திரிகைகள் சுட்டிக்காட்டி, கண்டனம் தெரிவித்தன. அப்போது ராஜீவ் காந்தி, "இலங்கை அரசைப் போன்று இந்திய அரசு தன் சொந்த மக்களின் மீது குண்டுமழை பொழிந்ததில்லை' என்று கூறியிருந்தார். ஆனால் இன்று என்ன நிலை என்று சர்வதேச சமூகம் கேள்வி எழுப்பிற்று.

  இவ்வகையான தாக்குதல் செய்தியை ரூபவாகினியை விடவும், இந்தியத் தொலைக்காட்சி மற்றும் சென்னை வானொலி முந்திக் கொண்டு அறிவித்தன. யாழ் கோட்டையிலும், தெல்லிப்பளையிலும் அமைதிப் படையினர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்ததாகவும், தெல்லிப்பளை தாக்குதலில் தாக்குண்டது மெட்றாஸ் ரெஜிமெண்ட் என்றும், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியிடப்பட்டது.

  ஆனால், ஈழமுரசு, முரசொலி அலுவலகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது குறித்தோ, அதன் செய்தியாளர்கள், அச்சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டது குறித்தோ, நிதர்சனம் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையம் தாக்கப்பட்டது குறித்தோ, பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்தோ எந்த செய்தியும், இந் நிறுவனச் செய்திகளில் இடம்பெறவில்லை.

நாளை: புலிகளின் எதிர்த் தாக்குதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.