தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அண்ணா நூற்றாண்டு: பூசலார் வழியில் ஒரு வாழ்த்து!

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு, 2009 செப்டம்பர் 15-ல் நிறைவு பெற்றது. அண்ணாவுடன் அருகில் இருந்து பணியாற்றியவர்கள் மட்டுமல்லாமல், தமிழர்கள் அனைவரும், பல்வேறு கட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:13 pm

இரா. செழியன்

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு, 2009 செப்டம்பர் 15-ல் நிறைவு பெற்றது. அண்ணாவுடன் அருகில் இருந்து பணியாற்றியவர்கள் மட்டுமல்லாமல், தமிழர்கள் அனைவரும், பல்வேறு கட்சியினரும், செய்தி நிறுவனங்களும், மத்திய - மாநில அரசுகளும் சிறப்பான முறையில் விழாவைக் கொண்டாடியது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

  அண்ணா பற்றிய சிறப்பு மலர்களுக்கு கட்டுரைகள் கேட்டும், விழாக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் நண்பர்களிடமிருந்து வந்த அழைப்புகளுக்கு என்னால் இயன்ற அளவு ஒப்புதல் தந்திருந்தேன். ஆயினும் உள்ளத்திலிருந்த ஊக்கத்தின் அளவுக்கு என் உடல் நலத்தின் ஆக்கம் குறைந்துவிட்டது. அதனால், ஒப்புதல் தந்த பல நிகழ்ச்சிகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

  குறிப்பாக, அண்ணா நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக 2008 செப்டம்பரில் மதிமுக மதுரை மண்டல மாநாட்டில் சிறப்புரையாற்றுவதற்கு நண்பர் வைகோ என்னை அழைத்திருந்தார். ஆனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக தீவிரமடைந்திருந்த என் கண்புரை நோய்க்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை நடைபெற்று எங்கும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. என்றாலும் "அண்ணாவின் வரலாற்றுக் காலம்' என்ற கட்டுரையை மதிமுக வெளியிட்ட அண்ணா நூற்றாண்டு விழா மலருக்கு அனுப்பினேன்.

  உடல்நிலை தேறியவுடன் "தினமணி' நாளேடு வெளியிட இருந்த அண்ணா நூற்றாண்டு விழா மலருக்காக, "சிங்கப்பூரில் அண்ணா' என்ற கட்டுரையை அனுப்பினேன். தினமணி ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்த வெளியீட்டு விழாவிலும் தலைமை தாங்கி மிகவும் சிறப்பான முறையில் அமைந்த அந்த மலரை வெளியிட்டேன்.

  பின்னர் 2009 மார்ச் 29-ம் நாள் காஞ்சிபுரத்தில் பரிமளத்தின் மகன் மலர்வண்ணன் நடத்திய அண்ணா நூற்றாண்டு விழா கூட்டத்தில் கலந்துகொண்டேன். அண்ணா படித்த காஞ்சிபுரம் தொடக்கப்பள்ளிக் கட்டடத்தில்தான் அந்தக் கூட்டம் நடைபெற்றது. அண்ணாவுடன் பழகிய பலரை அப்பொழுது என்னால் சந்திக்க முடிந்தது.

  அதன் பிறகு, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாக்களில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு இடங்களிலிருந்து நண்பர்கள் ஆர்வத்துடன் என்னை அழைத்தபடி இருந்தார்கள். ஆனால், அதையும் என் உடல் நிலை தடுத்து நிறுத்திவிட்டது.

  ஜூலை 2009 கடைசி வாரத்தில் திடீரென என் உடல்நிலை நலிவடைந்தது. கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். எனக்கு ஏற்பட்ட உடல் நலிவு "சப்டூரல் ஹேமடோமா' என்பதாகும். மண்டையோட்டிற்கும், மூளைக்கும் இடையே உள்ள மிருதுவான பகுதியில் முன்பு எப்பொழுதாவது தலையில் ஏற்பட்ட சிறு அடி அல்லது பெரிய தாக்குதல் காரணமாக, அங்குள்ள சிறு ரத்தக் குழாய்களில் சிதைவு ஏற்பட்டு வெளியான ரத்தக்கசிவு உறைந்து, நாளடைவில் வீக்கமடைந்து, மூளையை அழுத்தத் தொடங்கிவிட்டதாம்.

  நரம்பியல் நிபுணர் டாக்டர் ரெஜினால்டால் உடனடியாகத் தலையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, மூளைக்கான ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டதும் இரண்டு வாரகாலத்தில் மருத்துவமனையிலிருந்து வெளிவந்தேன். காலம் தாழ்த்தியிருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடிய நிலைமை என மருத்துவர்கள் பின்னர் கூறினார்கள்.

  எப்படியோ மருத்துவர்களின் அரிய திறமையாலும், முயற்சியாலும் நான் காப்பாற்றப்பட்டேன். நான் பெற்றது மறுவாழ்வு என்றுதான் கூற வேண்டும்.

  எனக்கு ஏற்பட்ட நோயின் தன்மை பற்றி இங்கு சிறிது விளக்கமாகக் கூறுவதற்குக் காரணம், தலைப்பகுதியில் பலமான தாக்குதல் ஏற்பட்டாலும், அதனால் உண்டான காயமும் ரத்தமும் வெளிப்படையாகத் தெரிந்தால்தான் மருத்துவரை அணுகும் பழக்கம் பலருக்கு இருக்கிறது.

  தலையில் பட்ட தாக்குதல், உள்காயமாக மூளைப்பகுதிக்கு அருகில் ரத்தக்கசிவை உண்டாக்கி இருந்தால் அது சிறிது சிறிதாக உறைந்து சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து திடீரென மூளைப் பகுதியைச் சீர்குலைத்துவிடக்கூடும். கால், கைகளில் காயம் ஏற்பட்டால் எந்த அளவு உடனே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதோ, அதைப்போல தலைப்பகுதியில் தாக்குதல் ஏற்பட்டால் அதன் விளைவாக வெளிப்படையான காயம் இல்லை என்றாலும் உடனடியாக உரிய மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெறுவது நல்லது.

  மூளைப்பகுதியில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் தக்க சிகிச்சை அளிக்கப்படாததால் 40 முதல் 60 சதவிகிதம் வரை உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுவதாக மருத்துவக் கணிப்புகள் கூறுகின்றன.

  ஆபத்தான கட்டத்திலிருந்து நல்லவேளையாக, மருத்துவ நிபுணர்களின் திறமையால் நான் காப்பாற்றப்பட்டுவிட்டாலும், உடல்நலத்தைச் சீராக்க இரண்டு மாத காலத்துக்கு முழுமையான ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கூறினார்கள். அதனால், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்குபெற இருந்த பல நிகழ்ச்சிகளில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

  குறிப்பாக, நண்பர் வைகோ திருச்சியில் நடத்திய மதிமுகவின் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியாது போயிற்று. அதற்கு முன், அவர் அண்ணா நூற்றாண்டு தொடக்க விழாவை மதுரை மாநகரில் நடத்தியபொழுதும் நான் கலந்துகொள்ள இயலவில்லை. நூற்றாண்டு விழாக்களில் நேரடியாக என்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும், எல்லாக் கட்சியினரும், பொது அமைப்புகளும், மாநில - மத்திய ஆட்சியாளர்களும் பெரும் அளவில் அண்ணா விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது நம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

  என்னைப் பொறுத்தவரை, அண்ணாவுடன் இருந்தேன். அண்ணா காலத்தில் வாழ்ந்தேன் என்பதுடன் அண்ணாவின் நூற்றாண்டு விழாக்காலத்தில் நீடித்து வாழ்வதே ஓர் அரிய பேறு என்று நான் கருதுகிறேன்.

  விழாக் கொண்டாட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் உள்ளத்தால், உணர்வால், என் மனத்தில் அண்ணா பற்றிய நினைவுகள் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றன.

  பெரியபுராணத்தில் உள்ள ஓர் உருக்கமான கதை என் நினைவுக்கு வருகிறது. மன்னர் காடவர் கோன் காஞ்சியில் சிவபெருமானுக்குப் பெரிய அளவில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தார்.

  உடனடியாக, கலையிலும், கற்பனைத் திறனிலும் ஒப்புயர்வற்ற முறையில் வானுயர் கோபுரம், வாயில்கள், மாடங்கள், ஆயிரங்கால் மண்டபம் கொண்ட கோயில் கட்டி முடிக்கப்பட்டு, கடைசியாக குடமுழுக்கு நன்னாளும் குறிக்கப்பட்டது.

  ஆனால், அந்த நன்னாள் வருவதற்கு முந்தைய இரவில் காடவர் கோன் கனவில் இறைவன் தோன்றி, ""நீ கட்டிய கோயிலுக்கு நாளை எழுந்தருள என்னால் இயலாது. ஏனெனில், அதே நேரத்தில், திருநின்றவூரில் பக்தன் பூசலார் கட்டியுள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டும். எனவே, நீ குறித்த குடமுழுக்கு நாளை மாற்றி வைத்துக்கொள்!'' எனக் கூறிவிட்டு மறைந்தார்.

  நள்ளிரவில் விழித்தெழுந்த மன்னருக்கு, ஆச்சரியமும் திகைப்பும் உண்டாயின. தமக்கும் மேலாக, இறைவனே மெச்சும்படியாக, தமது நாட்டில் ஒரு பெரிய கோயில் அமைக்கப்படுவது எப்படி என்ற வியப்பு மன்னருக்கு உண்டானது.

  உடனடியாக திருநின்றவூர் நோக்கி அமைச்சர்களும், அரச மக்களும் புடைசூழ மன்னர் விரைந்தார். திருநின்றவூரை அடைந்ததும், அங்குள்ள பெரியவர்களை அழைத்து, ""இங்கு சிவபெருமானுக்குப் புதிதாகக் கட்டப்பட்ட கோயில் எங்கு உள்ளது?'' என்று மன்னர் கேட்டார். ஊர்ப்பெரியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ""இங்கு அண்மையில் எத்தகைய திருக்கோயிலும் கட்டப்படவில்லையே!'' என்று கூறினார்கள்.

  ""உங்கள் ஊரில் பூசலார் என்னும் சிவபக்தர் இருக்கிறாரா?'' என்று வினவிய மன்னருக்கு, ""ஆம், அரசே! பூசலார் என்பவர் இந்த ஊரில் இருக்கிறார். ஆனால் அவர் எந்தக் கோயிலையும் கட்டியதாகத் தெரியவில்லை!'' என்று மக்கள் தெரிவித்தனர். பூசலார் இருக்கும் இடம் நோக்கி மன்னர் விரைந்து சென்றார்.

  சிறிய குடிசைக்கு அருகில் தியானம் செய்தவாறு பூசலார் அமர்ந்திருந்தார். காடவர் கோனும் பூசலாரை அடிதொழுது, ""பெரியவரே! தாங்கள் கட்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? நான் அக்கோயிலைக் காண வேண்டும்!'' என்றார். பூசலாருக்குப் புரியவில்லை. பிறகு அவரிடம் தாம் கண்ட கனவு பற்றி மன்னர் கூறினார்.

  அதைக்கேட்டு பூசலார் பரவசத்துடன், ""மன்னா! சிவபெருமானுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஒரு காலத்தில் எனக்கு இருந்தது. ஆனால், கோயிலை எழுப்புவதற்கான வாய்ப்பும், வசதியும் என்னிடம் இல்லை. ஆக, ஒவ்வொரு நாளும் தியானத்தில் அமர்ந்து என் மனத்தில் நினைத்தபடி அகிலாண்டேஸ்வரனுக்கு ஓர் ஆலயம் கட்டத் தொடங்கினேன்.

  ஒவ்வொரு கல்லாக அடுக்கி, கற்சிலைகளையும், தூண்களையும், மணிமண்டபங்களையும் நுணுக்கமாக அமைத்து, கடைசியாக நேற்றுதான் திருக்கோயிலின் கருவறைக் கோபுரம் முடிக்கப்பட்டதால், இன்று என் மனக்கோயிலுக்கு மானசீகமாகக் குடமுழுக்கு நடத்தி இறைவனைத் துதித்துக் கொண்டிருக்கிறேன்!'' என்று கூறினார்.

  கருங்கற்களை வைத்து, பெரியதொரு கோயிலை மன்னர் கட்டியதற்கு மேலாக, மனத்திலேயே கற்பனைக் கற்களைக் கொண்டு சிவனடியார் கட்டிய கோயிலுக்குத்தான் இறைவன் முதலிடம் தந்திருக்கிறார் என்பது மன்னருக்குப் புரிந்தது!

  1958-ல் பெரியாரை,  பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு அலட்சியப்படுத்திப் பேசியதைக் கண்டித்து, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்த அண்ணாவும், திமுகழக முன்னணி வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

  அப்பொழுது, காங்கிரஸ் தலைவர்கள் சிலர், ""இந்தியாவின் முடிசூடா மன்னர் நேருவை எதிர்க்க இந்த அண்ணாதுரைக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்று எள்ளி நகையாடினார்கள். அதற்கு அண்ணா மிகவும் அமைதியாகப் பதிலளித்தார்: ""நேரு ஒரு கட்டி முடிக்கப்பட்ட கோபுரம். நான் கொட்டிக்கிடக்கும் செங்கல்!''

  கோயில், கோபுரம், மத வழிபாடு ஆகியவற்றில் ஜவாஹர்லால் நேரு நம்பிக்கையற்றவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆக, அண்ணா குறிப்பிட்டது, இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை மாபெரும் கோட்டையாக நேரு கட்டி வைத்தார் என்பதுதான்.

  சுதந்திரம் பெற்ற இந்தியாவில், மத்தியிலும், மாநிலங்கள் அனைத்திலும் எவராலும் அசைக்க முடியாதபடி மாபெரும் அமைப்பாக காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால், நேருவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1967 தேர்தலில் பல மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதற்குப் பின் பத்து ஆண்டுகளில் மத்திய அரசியலிலும் காங்கிரஸ் வலுவிழந்தது.

  ஆனால், கொட்டிக்கிடந்த செங்கல்லாக இருந்த அண்ணா, பதினெட்டு ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் ஆட்சியை அமைத்தார். அந்த அரசியல் திருப்பத்தை இதுவரை யாராலும் மாற்ற முடியவில்லை!

  அண்ணாவின் நூற்றாண்டு விழா சிறப்புற நிறைவு பெற்றுள்ளது. மேலும், பல நூற்றாண்டுகள் பல்வேறு துறைகளில் அறிஞர் அண்ணா தொடங்கி வைத்த அரும்பெரும் சாதனைகளின் தாக்கம் நீடித்திருக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.