வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாயும் ரூபாய்; தேயும் வருவாய்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக எட்டுக்கால் பாய்ச்சலில் உள்ளது. சென்ற 18 மாதங்களில், ஏப்ரல் 16 வரை, இதுவே அதிகபட்ச உயர்வு. டாலருக்கு ரூ. 44.32 என்ற நிலை உள்ளது. இன்னும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:51 am

எஸ். கோபாலகிருஷ்ணன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைக்காலமாக எட்டுக்கால் பாய்ச்சலில் உள்ளது. சென்ற 18 மாதங்களில், ஏப்ரல் 16 வரை, இதுவே அதிகபட்ச உயர்வு. டாலருக்கு ரூ. 44.32 என்ற நிலை உள்ளது. இன்னும் சொல்வதென்றால், கடந்த 13 மாதங்களில், ரூபாய் மதிப்பு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்த அளவு டாலரின் மதிப்பு சரிந்துள்ளது.

இது ஏற்றுமதியாளர்களை நேரடியாகப் பாதிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் லாபம் குறைகிறது. எப்படி? நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு விலை நமக்கு டாலரில் வருகிறது. டாலர் மதிப்பு சரிந்தால், நமக்குக் குறைந்த அளவில்தானே ரூபாய் கிடைக்கும்?

இரண்டு ஆண்டுகளாக சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது. அதனால் ஏற்றுமதி குறைந்தது. இப்போது பொருளாதாரம் மீட்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர்கள் வருகின்றன. ஆனால், டாலர் மதிப்பு சரிவால் ஏற்றுமதி செய்பவர்களுக்கு லாபம் குறைந்துவிட்டது.

இதில் வேடிக்கை என்னவெனில், இப்போதுகூட, இந்தியாவின் ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம். காரணம், நமது இறக்குமதியில் பெரும் பகுதி பெட்ரோலியப் பொருள்கள்தான். அப்படியானால், ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது எப்படி?

இந்தியப் பங்குச் சந்தையில் அன்னிய முதலீடுகள் பெரிய அளவில் குவிகின்றன. இதுதான் டாலர் மதிப்பு குறைவதற்கும், ரூபாய் மதிப்பு உயர்வதற்கும் காரணம். 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர்வரை 23.6 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் நூறு கோடி) இந்திய பங்குச் சந்தையில் வந்து குவிந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கடந்த ஓராண்டில் வெளியேறிய தொகை 11.3 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

பொதுவாக, இதுபோன்ற தருணங்களில் பாரத ரிசர்வ் வங்கி தலையிட்டு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஓர் அளவுக்குமேல் உயராமல் பார்த்துக் கொள்வது வழக்கம். அதாவது, பணச்சந்தையிலிருந்து ரிசர்வ் வங்கி கணிசமான அளவு டாலரை கொள்முதல் செய்து, வீழ்ச்சி அடைந்த டாலரின் மதிப்பைத் தாங்கிப்பிடிப்பது ஒரு வழக்கமான செயல்பாடு. ஆனால், இந்த முறை ரிசர்வ் வங்கி அவ்வித செயல்பாட்டில் இதுவரை ஈடுபடவில்லை.

பணவீக்கம், விலைவாசி அதிகரிப்பதால் மக்கள் அவதிப்படும் இந்த வேளையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ரிசர்வ் வங்கி முழுமையாக ஈடுபட்டுள்ளது.

2010-ம் ஆண்டு தொடக்கம் முதல் பாரத ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கவனித்தால் இது தெரியும். ஜனவரி மாத கடைசியில், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்புத் தொகை 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது சி.ஆர்.ஆர். (அதாவது கேஷ் ரிசர்வ் ரேஷியோ) எனப்படுகிறது. இதன்மூலம் ரூ. 36,000 கோடி ரூபாய் வங்கிகளிடமிருந்து பாரத ரிசர்வ் வங்கிக்குக் கைமாறியது. வங்கிகளிடம் உள்ள உபரிப் பணத்தை உறிஞ்சும் நடவடிக்கை இது.

மார்ச் மாதம், ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்குகின்ற குறுகிய கால கடனுக்கானவட்டி விகிதம் (இதனை "ரெப்போ ரேட்' என்கிறார்கள்) 4.75 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

அதேபோல், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்கும் குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் (இது "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' என அழைக்கப்படுகிறது) 3.25 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் ஏப்ரல் 20-ல் பாரத ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர நிதிக் கொள்கையை அறிவித்துள்ளது.

இதில் மேலே குறிப்பிட்ட சி.ஆர்.ஆர்., "ரெப்போ ரேட்' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ ரேட்' ஆகிய மூன்று விகிதங்களும் மேலும் கால் சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, பணவீக்க விகிதம் மற்றும் விலைவாசியைக் குறைக்க வழிவகுக்கும். ஆகவே இவை வரவேற்கப்பட வேண்டிய செயல்பாடுகள்.

ஆனால், ரூபாய் நாணய மதிப்பு உயர்வதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அல்லது ஏற்றுமதியாளர்கள் துயர்துடைப்பதற்கான நடவடிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இது ஏற்றுமதியாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள், டாலர் சரிவு மற்றும் ரூபாய் மதிப்பு உயர்வால், இரண்டு வகைகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

ஒன்று, சீனாவில் நாணய மதிப்பு உயராமல், ஒரே நிலையில் பல்லாண்டுகளாக வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டில் இதை ஒரு வியாபார உத்தியாகக் கடைப்பிடிக்கிறார்கள். இந்தியாவைவிட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்வதாகக் கூறி இந்தியாவுக்குக் கிடைக்கக்கூடிய ஆர்டர்களைத் தட்டிச் செல்கிறார்கள்.

இரண்டாவதாக, ஏற்றுமதி செய்த பொருள்களின் விலை டாலர்களாக வரும்போது, குறைந்த அளவிலான ரூபாய்தான் ஏற்றுமதியாளர்கள் கைக்குக் கிடைக்கிறது.

 சீனாவைப் பொறுத்தவரை, கடந்த 25 ஆண்டுகளுக்கும் அதிகமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான "யுயான்' மதிப்பு ஒரே நிலையில் ஸ்திரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1990-களின் தொடக்கம் வரை சீனாவின் இந்தச் செயலை எந்த நாடும் ஆட்சேபிக்கவில்லை. காரணம், அந்த காலகட்டத்தில், ஓராண்டில் சீனாவின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால், அடுத்த ஆண்டில் சீனாவின் இறக்குமதி அதிகமாக இருக்கும். சீனாவின் ஏற்றுமதி இவ்வாறு மாறி, மாறி அதிகமாகவும், குறைவாகவும் இருந்து வந்ததால், இதனால் பிற நாடுகள் பாதிப்படையவில்லை. ஆனால், 1994-ம் ஆண்டுக்குப் பிறகு, சீனாவின் ஏற்றுமதி கிடு, கிடுவென உயர்ந்துவிட்டது.

இந்நிலையில், நாணய மதிப்பீடு விஷயத்தில் சீனா மேற்கொண்டுள்ள உத்தியை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்த்து வருகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்:

சீனா தனது நாணயத்தை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் சீனாவிடம் ரகசியமாகவும், சற்று நீக்குப்போக்குடனும் வேண்டுகோள் விடுக்கின்றன. ஆனால், இந்தியாவோ, சீனாவிடம் இதுதொடர்பாக இன்னும் தனது எதிர்ப்பைப் பதிவு கூட செய்யவில்லை. இந்தியாவும் இதர நாடுகளைப்போல் இவ்விஷயத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நாடு என்பது என்னவோ உண்மை.

இது ஒருபுறம் இருக்க, இந்தியாவிலிருந்து ஜவுளி, தோல் பொருள்கள், ஆபரணக் கற்கள், தங்க ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், கலைப் பொருள்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களையும் மற்றும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி செய்பவர்களையும் இழப்பிலிருந்து காப்பது அவசியம் மட்டுமல்ல; அவசரமும் கூட.

எனவே, பாரத ரிசர்வ் வங்கி பணவீக்க கட்டுப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் அதேநேரம், ரூபாய் மதிப்பு தொடர்பாகவும் உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ள வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.

ரூபாயின் மதிப்பு ஏற்றம், டாலரின் மதிப்பு சரிவு, இந்தியாவில் ஏற்றுமதியை மட்டும் அல்லாமல், தொழில் வளர்ச்சியையும், முக்கியமாக வேலைவாய்ப்புகளையும் மோசமாகப் பாதிக்கும் என்பதை மனத்தில் கொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.