குறு நிதியாளர்களின் பேராசை!
கிராமப்புற எளிய மக்களது கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சி இன்று, நேற்றல்ல; கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாகத் தொடர்கிறது. முயற்சி வெற்றி அடையவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் 1860-களில் "தக்காவி'க் கடன் வழ


கிராமப்புற எளிய மக்களது கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சி இன்று, நேற்றல்ல; கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாகத் தொடர்கிறது. முயற்சி வெற்றி அடையவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் 1860-களில் "தக்காவி'க் கடன் வழங்கப்பட்டது முதல், சுதந்திர இந்தியாவில், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர்களில் மட்டும் செயல்பட்ட ஜனோபகார சாஸ்வத நிதிகள் மற்றும் பரஸ்பர நிதிகள், ரிசர்வ் வங்கியின் ஓர் அங்கமாகத் திகழ்ந்த "நபார்டு', வட்டார கிராமப்புற வங்கிகள் (ஆர்.ஆர்.பி.) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிராமக் கிளைகள் என பல்வேறு அமைப்புகள் தோன்றிவிட்டன. ஆனால், இவை பிரச்னையின் விளிம்பைக்கூடத் தொடவில்லை. கிராமவாசிகளை வட்டிக்கடைகளின் கோரப்பிடியிலிருந்து மீட்க முடியவில்லை.
1980-களில் வங்கதேசத்தில் குறு கடன்கள் வழங்கும் "கிராமிய வங்கிக் கோட்பாடு' ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உருவானது. இதன் மறுபதிப்பாக, இந்தியாவின் பல பகுதிகளிலும் குறுநிதி நிறுவனங்களும் கிராமிய வங்கிகளும் அமைக்கப்பட்டன. அரசுசார்ந்த பல்வேறு நிதி அமைப்புகள் கிராமப்புற எளிய மக்களின் கடன் தேவைகளை நிறைவு செய்யமுடியாமல் போன நிலையில், புதிய குறுநிதி நிறுவனங்களை அரசு ஊக்குவித்ததில் வியப்பில்லை.
அப்போது தொண்டுள்ளம் கொண்டவர்களால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்கள் (எம்.எஃப்.ஐ.) (மைக்ரோ பைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்) செவ்வனே செயல்பட்டு, எளிய மக்களின் கடன் தேவைகளை நிறைவு செய்வதில் கணிசமான அளவு வெற்றிபெற்றது.
ஆனால், கடந்த பத்தாண்டுகளில், லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட வணிகர்கள் இத்துறையில் நுழைந்தனர் என்பது மட்டுமல்ல; ஆக்கிரமிக்கவும் செய்தனர். விளைவு? இதுபோன்ற நிறுவனங்கள் புற்றீசல்போல் பல்கிப் பெருகின.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தையும்விட, ஆந்திரத்தில் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட குறுநிதி நிறுவனங்கள் (எம்.எஃப்.ஐ.) அதிக அளவில் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் ஏழைபங்காளர்களாகத் தோற்றம் அளித்த இவர்களது உண்மை முகம், வெகுவிரைவில் வெட்ட வெளிச்சமானது. அதீத வட்டி வசூலிக்கும் "ஈட்டிக்'காரர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று மக்களுக்குப் புரிந்தது.
வட்டி விகிதமோ 30 சதவீதத்துக்கும் அதிகம். திரும்பச் செலுத்தப்படாத கடன்களை வசூலிப்பதில் மனிதாபிமானமற்ற, கொடிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்னும் குற்றச்சாட்டுகள் அதிகரித்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாத பலர் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் செய்திகள் வந்தன.
ஆந்திரத்தில் செயல்பட்டுவரும் சில நிறுவனங்களின் மிகையான செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் அண்மையில் வெளியானபோது நாடே துணுக்குற்றது. அதைத் தொடர்ந்து, ஆந்திர மாநில அரசு 15-10-2010 அன்று ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.
புதிய சட்ட விதிகளின்படி, எம்.எஃப்.ஐ.கள் மாநில அரசு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்துகொண்ட பிறகே, தங்கள் நிதிச் செயல்பாடுகளைத் தொடர முடியும்.
இரண்டாவதாக, வாராக் கடன்களை வசூல் செய்வதில், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகளைத் தாண்டினால், தண்டிக்கப்படுவார்கள்.
மூன்றாவதாக, ஒரு எம்.எஃப்.ஐ. தன் வாடிக்கையாளர்கள் தவிர, பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு வலிய கடன் வழங்கும் பன்முகக் கடன்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
மொத்தத்தில் புதிய அவசரச் சட்டத்தின் பயனாக ஆந்திர மாநிலத்தில் உள்ள குறுநிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
அண்மையில், பாரத ரிசர்வ் வங்கியும் ஒய்.எச். மலேகம் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு மைக்ரோ பைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன்களின் செயல்பாடுகள், கடனை வசூலிப்பதில் அத்துமீறல்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வுசெய்து, மூன்று மாதங்களுக்குள், தனது பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக ஓர் அனுபவம் மிக்க மூத்த ரிசர்வ் வங்கியின் இயக்குநர் நியமிக்கப்பட்டதிலிருந்தே, ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையை முனைப்புடன், முழுமையாக அணுகும் என்பது வெளிப்படை.
இப்போது ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொண்டுள்ள எம்.எஃப்.ஐ.களை மட்டுமே ஆர்.பி.ஐ. கண்காணித்து வருகிறது. அவற்றுக்குக்கூட வட்டி விகிதங்களை ஆர்.பி.ஐ. நிர்ணயிப்பதில்லை.
ரிசர்வ் வங்கியிடம், வங்கிசாராத நிதி நிறுவனமாக (என்.பி.எஃப்.சி.) பதிவு செய்துகொண்டுள்ள எம்.எஃப்.ஐ.கள் மொத்தக் கடன் தொகையில் 80 சதவிகிதத் தொகையைக் கையாள்கின்றன. ஆனால், எண்ணிக்கையில் அவை குறைவே. ரிசர்வ் வங்கிகளிடம் பதிவு செய்து கொள்ளாமல் செயல்படும் எம்.எஃப்.ஐ.களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இன்னொரு வேடிக்கை என்னவெனில், ஆந்திரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்கூட தாங்கள் விதிகளின்படி வழங்க வேண்டிய முன்னுரிமை கிராமக் கடன்கள், நேரடியாகக் கிராமங்களைச் சென்றடைய இயலாததால், அந்தக் கடன் தொகையை எம்.எஃப்.ஐ.கள் மூலம் வழங்குகிறார்கள். இது முறையல்ல. இந்த முறையற்ற நடவடிக்கையும் இப்போது ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு ஒரு காரணம் ஆகும்.
புதிய குழு மேற்கூறிய நடைமுறையையும் பரிசீலிக்கும் என்று நம்பலாம். அதேசமயம், 2007-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் தயாரிக்கப்பட்ட சிறு கடன் வழங்குபவர்கள் பற்றிய விரிவான ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சகம் மற்றும் மலேகம் குழு கருத்தில் கொள்வது நல்ல பலனை அளிக்கும். காரணம், அந்த அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகளில் ஒருசில மட்டுமே இதுவரை அமல்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பரிந்துரைகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எம்.எஃப்.ஐ.களின் அதீத வட்டிவிகிதத்துக்குக் காரணம் என்னவெனில், 10 சதவீதம் மாற்றமில்லாத ஒரே அளவிலான வட்டிவிகிதம் என்று அவர்கள் சொன்னாலும், உண்மைநிலை அதுவல்ல. பல தவணைகள் திரும்பச் செலுத்தப்பட்ட பின்னரும், நிலுவைத் தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்காமல், முழுக் கடன் தொகைக்கும், கடைசி தவணை வரை வட்டி கணக்கிடுகிறார்கள். இதனால் வட்டிவிகிதம் 30 சதவீதத்தையும் தாண்டுகிறது.
இதை நியாயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் கூறுவது இதுதான்.
கடன் கொடுப்பதற்கு, தொலைதூரத்தில் உள்ள விவசாயிகளையும், நகர்ப்புறங்களில் குடிசைப்பகுதியில் வசிக்கும் நபர்களையும் தேடிச் சென்று, அவர்களுக்குக் கடன் தேவை உள்ளதா, வருமானம் என்ன, கடனைத் திரும்பச் செலுத்தும் சக்தி உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் கடன் வழங்கிய பிறகு அடுத்த 50 வாரங்கள் அல்லது அதற்கும் அதிக கால அளவில், தவணைகளை நேரில் சென்று வசூல் செய்தல் ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட நிர்வாகச் செலவையும், கடன் கொடுப்பதற்குத் தேவையான பணம் திரட்டும்போது அதற்கு நிர்வாகம் வழங்க வேண்டிய வட்டி ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், வசூலிக்கப்படும் வட்டி விகிதம் அப்படியொன்றும் அதிகமில்லை என்பது அவர்களது வாதம்.
இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படைத்தன்மை இந்த நிறுவனங்களிடம் இல்லாததே இவர்களது இப்போதைய அவலநிலைக்குக் காரணம்.
கடன் வழங்குவதற்கு ஒவ்வோர் ஊழியருக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. சிலநேரங்களில் கடன் வாங்குபவர்களைக் குக்கிராமங்களுக்குச் சென்று தேடிப்பிடித்து, அந்த அப்பாவிகளின் தலையில் கட்டுகிறார்கள்.
இந்தத் தகவலை அளிப்பவர், வங்கதேச கிராமின் வங்கியின் தந்தை எனப் போற்றப்படும் மொகமத் யூனுஸிடம் பயிற்சி பெற்ற சமூக சேவகரான சுப்பராவ் என்பவர் ஆவார். இவ்வித நடைமுறை அனைத்தும் ரிசர்வ் வங்கிக் குழுவின் பரிசீலனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இதற்கிடையே, எம்.எஃப்.ஐ.களை "நபார்டு' அமைப்பின் கண்காணிப்புக்கு உள்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பாரத ரிசர்வ் வங்கி ஆய்வு செய்வதாகவும் செய்திகள் வருகின்றன.
எது, எப்படி இருந்தாலும், ரிசர்வ் வங்கி முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. எனவே, குறு நிதியாளர்களிடம் காணப்படும் தவறுகள் மற்றும் குறைபாடுகள் களையப்பட்டு முறையான வகையில் கிராமப்புற மக்களுக்குக் கடன் வழங்கும் திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும்.
அதேசமயம், 2,000 பேர் மக்கள்தொகை கொண்ட கிராமங்களில் 2012 மார்ச் மாதத்துக்குள் வங்கிச் சேவை வழங்கப்பட வேண்டும் என்ற இலக்கு எட்டப்பட வேண்டும். அப்போதுதான் கிராமப்புற எளிய மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட முடியும்.
ஆந்திரத்தில் நிகழ்ந்துள்ள இந்த மோசமான சீர்கேடு, அண்டை மாநிலங்களுக்கு, தொற்றுநோய்போல் பரவி விடாமல் தடுக்க வேண்டும். "குறுநிதி' என்னும் நல்லதொரு கோட்பாட்டை சுயநலவாதிகள் கொன்றுவிட அனுமதிக்கக் கூடாது.
இதுவே மத்திய நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன் உள்ள சவால் ஆகும். எம்.எஃப்.ஐ.களில் புரளும் பணம் ஏதோ சிறியதொகை அல்ல; | 22,500 கோடி ஆகும். கடன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 67 லட்சம். அவர்கள் வாழ்வும், சாவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின், நேர்மையையும், மனித முகத்துடன்கூடிய வணிக நடைமுறைகளையும் பொறுத்தே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...