இருளில் உறையும் கலைச் சின்னங்கள்
தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைக் காத்திடுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த திங்கள்கிழமை பேசியிருக்கிறார். பிரதமரின் இந்த வேண்டுகோளில் சில விஷயங்களை நாம் கூர்ந்து நோக்குவது அவசியம். தில்ல


தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைக் காத்திடுங்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த திங்கள்கிழமை பேசியிருக்கிறார்.
பிரதமரின் இந்த வேண்டுகோளில் சில விஷயங்களை நாம் கூர்ந்து நோக்குவது அவசியம். தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைக் காத்திடுங்கள், அது வாழும் அருங்காட்சியகம் என்று வர்ணித்திருக்கிறார் அவர். அதில் நமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், நாட்டில் உள்ள அனைத்து கலைச் சின்னங்களுமே வாழும் அருங்காட்சியகம் என்பதைப் பிரதமர் ஏனோ மறந்தார். இன்றைய நிலையில் கலைச் சின்னங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை அந்தப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் நன்றாக அறிவர்.
கலைச் சின்னங்கள் ஒரு சிறிய பரப்புக்குள் அமைந்திருந்தால் அதைச் சுற்றி ஒரு கம்பி வேலி. அதன் அருகில் புறாக் கூண்டு போல கம்பிவலைப் பலகைக்குள் ஒரு எச்சரிக்கை வாசகம். அங்கிருக்கும் கலைச் சின்னத்தை தேடிக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் இருப்பவர்கள், அது குறித்து கூறும் கதைகளைக் கேட்டு வியந்து வரவேண்டியதுதான். அந்த அளவுக்குத்தான் உள்ளன இந்தியாவில் உள்ள பல வரலாற்று கலைச் சின்னங்கள்.
நிறப் பாகுபாடு, வருமான, பொருளாதாரப் பாகுபாடு என்பவை நம் சமுதாயத்தில் மனிதர்களோடு நின்றுவிடவில்லை. அவை நம் பாரம்பரியமிக்க கலைச் சின்னங்களையும் பீடித்திருக்கின்றன. தொல்லியல் துறையானாலும் சரி, சுற்றுலா துறையானாலும் சரி இது போன்ற கலைச் சின்னங்களைப் பாரபட்சப்படுத்தியிருக்கின்றன.
கலைச் சின்னத்தின் பிரம்மாண்டத்தின் வாயிலாக சுற்றுலா துறைக்குக் கிடைக்கும் வருமானத்தையொட்டியும், வழிபாட்டுத் தலமாக இருந்தால் இந்து அறநிலையத் துறைக்குக் கிடைக்கும் வருவாயையொட்டியும், எந்த வருவாயும் இல்லாதவையாக இருந்தால் அவை ஒரு மாதிரியாகவும் பாகுபடுத்தப்பட்டிருக்கின்றன.
பிரதமர் பேசும்போது, தில்லியில் மொத்தம் 174 வரலாற்றுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், இந்த விழாவில் வெளியிடப்பட்ட புத்தகத்தில் 46 சின்னங்கள் குறித்த விவரம்தான் இடம் பெற்றுள்ளது எனக் கூறியிருக்கிறார்.
காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள இத்தருணத்தில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கில் தில்லியில் கூட உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் தில்லியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைக்கூட முழுமையாகத் தொகுத்து புத்தகமாக வெளியிட தொல்லியல் துறையால் இயலவில்லை.
குறிப்பாக இந்தியாவில் ஒன்று அல்லது ஓரிரு மாநிலங்களை உள்ளடக்கி பிரிக்கப்பட்ட 24 வட்டங்களில் சுமார் 3600 கலைச் சின்னங்கள் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், கலைச் சின்னங்கள் குறித்த விவரங்கள் வட்ட அளவிலோ, உள்வட்ட அளவிலோ பிரிக்கப்பட்டு, அந்தந்த வட்டார மொழிகளில் தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வருவாய் இல்லாத, சுற்றுலா பயணிகளுக்கு எட்டாத, நகரங்களிலிருந்து கடைக்கோடியில் உள்ள புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதோ, பராமரிக்கப்படுவதோ இல்லை.
குறிப்பாக, இருண்ட காலத்தில் இருந்த சோழர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டதன் அடையாளமாக 8-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியின் இரு கரைகளிலும் சிவாலயங்களைக் கட்டினர்.
சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இவை கட்டட, சிற்பக் கலைக்குப் பெயர்போனவை என்பதைவிட, பெண்களின் பேறுகால சிற்பங்கள், தாய்ப்பாலின் அவசியம், இசைக் கருவிகளை வாசிக்கும் பெண்கள் என சிற்பங்கள் வாயிலாக அறிவியல், உளவியல், சமத்துவம் போன்ற பல செய்திகளையும், வாரியம், கோயில் நிர்வாகம் குறித்த தகவல் களஞ்சியமான கல்வெட்டுகளையும் தாங்கி நிற்கின்றன.
ஆனால், இதுகுறித்த செய்திகள் அந்தக் கோயில் வளாகத்திலோ, அல்லது கோயில் அமைந்துள்ள பகுதியின் அருகேயுள்ள பிரதான சாலையிலோ வைக்கப்படவில்லை. இதன்மூலம், இந்தக் கோயில்களின் அமைவிடம், அவற்றின் சிறப்புகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.
உதாரணமாக, திருச்சி மலைக்கோட்டை சிறப்புமிக்க கலைச் சின்னமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. அதைவிடச் சிறப்பு கோட்டை அமைந்துள்ள மலைதான். இந்தப் பாறை சுமார் 3.8 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பாறையும், அதன்மேல் இருக்கும் கோட்டையும் தொல்லியல் துறையால் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை இன்றளவும் நாம் கண்கூடாகக் காணலாம். இந்தப் பாறையிலும், கோட்டைச் சுவர்களின் சில இடங்களிலும் மரக் கன்றுகள் முளைத்து, தலவிருட்சமாக வளர்ந்திருக்கின்றன.
இன்றைய நவீன உலகில், அந்த மரங்களின் வேர் வரை ஊடுருவிச் சென்று அழிக்கவல்ல தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையில் அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை.
உலக சுற்றுலா தினம், கலை, கலாசார தினங்களில் மட்டும் அரிதாரம் பூசப்படும் இந்தக் கலைச் சின்னங்கள் அதன்பிறகு மறக்கப்படுகின்றன. இந்தியாவில் அண்மைக்காலத்தில் நடந்த ஊழலின் மதிப்பு மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் எனப் பேசப்படுகிறது.
இவ்வளவு வளம்மிக்க இந்த நாட்டில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் கீழ் உள்ள பாரம்பரியச் சின்னங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கினால்கூட, இவற்றின் தொன்மையை அனைவருக்கும் சிறப்பாகப் பறைசாற்ற முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...