நாட்டில் செல்போன் சேவை அதிகரிக்க, அதிகரிக்க அதனால் ஏற்படும் இன்னல்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. செல்போன் உபயோகிப்பாளரின் அனுமதியின்றி அவரது தகவல்கள் அனைத்தையும் பிறர் படிக்கும் வகையிலான மென்பொருள் வசதிகளே இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
இப்போதைய உதாரணம், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் செல்போனில் இருந்து, ஐபிஎல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்களுக்குச் சென்ற எஸ்எம்எஸ் (குறுந்தகவல்).
"ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் தொடர்பு வைத்திருந்தால் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற எச்சரிக்கை தகவல் அதில் இருக்க, சீனிவாசனிடமே இதுபற்றி ஐபிஎல் உரிமையாளர்கள் விவரம் கேட்ட பிறகுதான், அவ்வாறான குறுந்தகவல் எதையும் தான் அனுப்பவில்லை என்ற விவரத்தையும் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.
இதுபற்றி, சைபர் கிரைம் போலீஸôருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் செல்போன் நிறுவனத்திடம் விசாரித்து வருகிறார்கள். அடுத்த உதாரணம், தமிழக சட்டப்பேரவை வளாகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என வந்த மிரட்டல் எஸ்எம்எஸ்.
இதுபோன்ற செல்போன் குறுந்தகவல்கள் மக்களை மட்டுமன்றி, அரசுகளையும் ஆட்டிப் படைப்பவையாகவே இருக்கின்றன. இதுவே, காஷ்மீர் பிரச்னையில், அங்கிருக்கும் பிரீபெய்ட் செல் இணைப்புகளைத் தடை செய்யவும் காரணமாக இருந்தது. தீவிரவாதிகள் கையில் எளிதாகக் கிடைக்கும் இந்த பிரீபெய்ட் இணைப்புகளால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பல காரணங்கள் உண்டு. பிரீபெய்ட் செல்போன் சேவையைப் பெற, ஏதேனும் ஒரு புகைப்படச் சான்று தேவை. ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் விண்ணப்பம், போஸ்ட் பெய்ட் செல்போன் இணைப்பு என எதற்கெடுத்தாலும், புகைப்படச் சான்று இணைத்து வழங்குகிறோம். இவ்வாறு வேறு பணிகளுக்குப் பெறப்படும் புகைப்படம், புகைப்படச் சான்று ஏதேனும் ஒன்று கிடைத்தாலும், அதைக் கொடுத்து, கடைகளில் இருந்து பிரீபெய்ட் இணைப்பை எளிதாகப் பெற்றுவிட முடியும்.
அடுத்தது, திருடுபோகும் செல்போன்களில் இருப்பது போஸ்ட் பெய்ட் இணைப்பா, அல்லது பிரீபெய்ட் இணைப்பா என்பதை எளிதில் கண்டறிந்துவிட முடிகிறது. போஸ்ட் பெய்ட் இணைப்பு இருக்கும் செல்போன் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட நபர், வேறு புதிய சிம்கார்டு பெறும்போது, பழையது தானாக காலாவதியாகிறது. ஆனால், பிரீ பெய்ட் இணைப்பு காணாமல் போகும்போது, அதுபற்றிய அக்கறை மக்களிடம் கிடையாது. அதே எண்ணை மீண்டும் கேட்டுப் பெறுபவர்கள் மிகக் குறைந்தவர்களே.
இதுதவிர, உண்மையிலேயே ஒருவர் பயன்படுத்தி வரும் செல்போன் எண்ணை, ஹேக் செய்து, கணினி மூலம் அவரது செல்போன் எண்ணை தீவிரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துவது. இது சாத்தியம்தானா? எனக் கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.
இப்போது அனைத்து செல்போன்களும் இணையதள வசதிகளுடன் கூடியதாகவே வெளி வருகின்றன. இணையதள வசதி என்றாலே, அதில் ஹேக்கர்கள் (தாக்குநர்கள்) உள்ளே புகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே அர்த்தம்.
உதாரணமாக, செல்போன்களுக்கு வரும் எஸ்எம்எஸ்-ஸில், குறிப்பிட்ட இணையதள முகவரியைக் கொடுத்திருப்பார்கள். அதில் சென்று, கிளிக் செய்தால், தேவைப்படும் புதிய படப் பாடல்களை அல்லது புதிய மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனும் தகவல் இருக்கும். அதை அணுகும்போது, செல்போன் அந்தக் குறிப்பிட்ட முகவரியோடு இணையும். அப்போது, அதைக் கையாளும் ஹேக்கர்கள், முதல்கட்டமாக அந்த செல்போன் எண், உரிமையாளர் பெயர், முகவரி ஆகியவற்றை அறிந்துகொள்வார்கள்.
அந்த முகவரிக்கு மீண்டும் குறுந்தகவல் அனுப்பி, அதோடு தானாக, ஹேக்கர்களின் கணினியோடு செல்போனை இணைக்கும் மென்பொருள்களை வைரஸ் பைலாக மாற்றி அனுப்புகிறார்கள். அதை செல்போன் வாடிக்கையாளர் கிளிக் செய்துவிட்டால், மற்ற அனைத்துப் பணிகளுமே தானாக நடந்தேறும்.
அண்மையில், பிளாக்பெரி செல்போன்களில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் வழிமறித்து படிக்க முடியாத வகையில் இருப்பதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற அரசின் வாதத்துக்கு, அடிபணிந்த அந்நிறுவனம், தனது மென்பொருளை இந்திய அரசுக்கு அளிக்க முன்வந்துள்ளது.
இதன் மூலம், அனைத்து செல்போன் குறுந்தகவல்களையும் வழிமறித்துப் படிக்கும் வசதிகள் அரசிடம் உண்டு என்பது தெளிவாகிறது.
இதே வசதிகளை சர்வசாதாரணமாகக் கையாளும் ஹேக்கர்களிடம், தேவைப்படும் செல்போன் எண்ணை, இணையதளம் மூலம் அணுகி, அதை வயர்லெஸ் முறையில் கையாளும் மென்பொருளும் உண்டு என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.
குறைந்த விலைக்குத் தயாரித்து, அடித்தட்டு ஏழை மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரது கையிலும் செல்போன்கள் கொடுத்தாகிவிட்டது. ஆனால், அதைப் பாதுகாப்பாகக் கையாள்வது பற்றிய விவரத்தை இதுவரை எவரும் தெரிவிக்கவில்லை.
இதனால், அடுத்தவர்களது செல்போன் எண்ணைத் தீய செயல்களுக்குப் பயன்படுத்தும் ஹேக்கர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். அந்த எண்ணை வைத்திருக்கும் பாமரர், போலீஸ் விசாரணையில் சிக்கிக் கொண்டு அவதிப்படுகிறார்.
நாட்டின் மற்றும் தனிநபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி, செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களும், மத்திய அரசும் இணைந்து புதிய திட்டங்களை அமல்படுத்தாமல், இப் பிரச்னைக்கு முடிவு ஏற்பட வாய்ப்பில்லை.
செல்போன் இணைப்பு வழங்குவதிலும், இணைப்புதாரரின் முகவரியைச் சரிபார்ப்பதிலும் தீவிர கட்டுப்பாடுகள் தேவை. ஒவ்வொரு செல்போன் வாடிக்கையாளரையும், அவரது முகவரிக்குச் சென்று, தள தணிக்கை செய்த பிறகே-அது பிரீபெய்ட் ஆக இருந்தாலும் சரி, போஸ்ட் பெய்ட் ஆக இருந்தாலும் சரி செல்போன் இணைப்புகளை வழங்க வேண்டும். செல்போன்களை ஹேக்கர்கள் தொடர்புகொள்ளச் செய்யாமல் தடுப்பதற்கான மென்பொருள், ஒரு செல்போனை ஹேக்கர்கள் அணுகியதும், காட்டிக் கொடுக்கும் மென்பொருள் வசதிகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்.
செல்போன் உருவாக்கத்திலும், பயன்பாட்டிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தாமல், இந்தச் சிக்கல் தீராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

