கைகொட்டிச் சிரிப்பார்கள்!
நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க எந்த மகான் தோன்றுவாரோ என்று விவசாயிகள் ஏங்கியிருக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பட்ஜெட், தேர்தல் என்றால் விவசாயிகள் எதிர


நம் நாட்டு அரசியல்வாதிகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க எந்த மகான் தோன்றுவாரோ என்று விவசாயிகள் ஏங்கியிருக்கும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட், தேர்தல் என்றால் விவசாயிகள் எதிர்பார்க்கும் சலுகை என்ன தெரியுமா? விவசாயக் கடன் தள்ளுபடி. இந்த விவசாயக் கடன் தள்ளுபடி அவசியம்தானா என்றால், இல்லையென்றே சொல்லலாம். எப்போது விவசாயிகளுக்கான தேவைகள் முழுமையாக நிறைவு செய்யப்படுகின்றனவோ, அப்போது இந்தக் கடன் தள்ளுபடியும் தேவையில்லை.
தொழிலதிபர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளும், அதனால் அவர்கள் அடையும் லாபமும் ஒரு குறுகிய வட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயனை ஏற்படுத்தும்.
ஆனால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளால் பலனடைபவர்கள் இந்திய நாட்டின் 100 சத குடிமகன்களாக இருப்பார்கள்.
2011-12-ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் பயிர்க் கடன் ரூ. 4.75 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாதபோது, இந்தக் கடன்களால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், அரசு கடன் கொடுக்கிறதே என்ற நப்பாசையில், கடன் பெற்று, அதில் ரசாயன உரங்களை வாங்கி நிலத்தில் கொட்டி, விளைச்சலும், விலையும் கிடைக்காத நிலையில் சிறிய கடன்காரர்கள், பெரிய கடன்காரர்களாக மாறவே இது வழிவகுக்கும்.
சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு கிராமங்களில் மானாவாரியாக உற்பத்தி செய்யப்பட்ட நரிப்பயறு, தட்டைப்பயறு, பாசிப்பயறு, மொச்சை, துவரம்பருப்பு போன்றவை இன்று காணாமல் போய்விட்டன. ஆளையும், அறிவையும் வளர்க்க வேகவைத்து தாளித்துக் கொடுக்கப்பட்ட பயறு வகைகள், முளைகட்டிய கம்பு போன்றவை மறைந்து, என்ன வகையான நோயை ஏற்படுத்தும் எனத் தெரியாத "ஸ்நாக்ஸ்' பொட்டலங்கள் கிராமங்களைக்கூட ஆக்கிரமித்துவிட்டன.
பருப்பு வகைகள் உற்பத்தியைப் பெருக்க, விளைச்சலை அதிகரிக்க, வேளாண் துறையில் 4 சத வளர்ச்சியை எட்ட, எண்ணெய்வித்துப் பயிர்களைக் கூடுதலாகப் பயிரிட, காய்கறி பயிரிடுவதை ஊக்கப்படுத்த என மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முக்கியத் தேவையான விவசாய நிலங்கள் நகர்ப்புற விரிவாக்கம், சாலை, விமான நிலைய விரிவாக்கம், தொழில் பூங்காக்கள், தொழிற்சாலைகள், வீட்டுமனைகள், ஆக்கிரமிப்பு என பல வகைகளில் கொள்ளை போய்விட்டன. எஞ்சிய நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள முடியாத நிலையை நாள்தோறும் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் விவசாயிகளின் நிலை நமக்குக் கூறும்.
இந்த நிலையில், கடந்த நிதி ஆண்டு முடிவு வரை இந்தியாவுக்காக வெளிநாடுகள் வழங்கிய ரூ. ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 339 கோடியை இந்தியா பயன்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த நிதியைப் பயன்படுத்தாமல் இருந்ததற்காக, இந்திய மக்களின் உழைப்பில் வரியாகச் செலுத்தப்பட்ட ரூ. 86 கோடி அபராதமாகச் செலுத்தப்பட்டுள்ளதாம். இந்த நிதியில் விவசாயம் மற்றும் கிராம வளர்ச்சிக்கு ரூ. 9,557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர்கள் விவசாயிகளுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும். ஏழை விவசாயிகளை பெருமளவுகொண்ட இந்தியாவில், அதிக முதலீடாக உருவெடுத்துள்ள ரசாயன உரம் சார்ந்த உற்பத்திப் பெருக்கம் தொடர்வது சரிதானா என்பதை யோசிக்க வேண்டும்.
மேலும், மானாவாரி நிலங்களையே அதிகமாகக் கொண்ட விவசாயிகளுக்கு உர மானியத்தால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர வேண்டும்.
உரங்களால் நிலம் வீணாவது தெரிந்திருந்தும், அரசின் ஆதரவு இல்லாததால் என்ன செய்வதென்று புரியாத நிலையிலேயே விவசாயிகள் உள்ளனர். நாட்டின் வேளாண்மை சார்ந்த ஆராய்ச்சிகள் எப்போதும் சுற்றுச்சூழல், மண்வள மேம்பாட்டைப் புறக்கணிப்பதாகவே இருந்து வருகிறது. அறிவியல் ஆராய்ச்சிகள் விவசாயிகளுக்கு வழிகாட்டுவதாக இருந்தால் பிரச்னை தீர வழி ஏற்படும்.
தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் காக்கும் சில திட்டங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்துள்ளன. இதில், தி.மு.க.வின் இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு, இயற்கை விவசாயிகளுக்கு உரிய மானியம், மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை எதிர்ப்பது, தென்னை, தோட்டக்கலைப் பயிர்களுக்கு இலவச மின்சாரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
அதேபோல, விவசாயிகளின் தனி நபர் வருமானத்தை உயர்த்த சிறப்புத் திட்டம். 3,000 ஹெக்டேரில் சிறப்பு சிறுபாசனத் திட்டம், இலவச விவசாயக் கருவிகள். விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனங்கள் உருவாக்கம், இலவச சொட்டுநீர்ப் பாசன வசதி ஆகியன அ.தி.மு.க.வின் அறிவிப்பில் குறிப்பிடத்தக்கவை.
பொதுவாக, மத்திய அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம் என்று தெரிவித்துள்ளனவே தவிர, அதைத் தீவிரமாகச் செயல்படுத்துவோம் எனக் கூறவில்லை.
இவையெல்லாம், உறுதி செய்யப்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூற்றுப்படி, விவசாய ஆணையம், விலை நிர்ணய ஆணையம் அமைப்பது, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மத்திய, மாநில அரசுகளில் விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கை, அவற்றைச் செயல்படுத்த திறமையான, தீவிரமான, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகளை இந்தத் துறைக்குத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...