நீதிதேவன் மயக்கமா? தயக்கமா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே இந்தத் தீர்ப்பும் வெளிவந்துவிட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிரிப்பதா? அழுவதா? என்றுகூடத் தெரியவில்லை. நமது தேசத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் ந
Updated on
3 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போதே இந்தத் தீர்ப்பும் வெளிவந்துவிட்டது. இந்தத் தீர்ப்பைக் கேட்டுச் சிரிப்பதா? அழுவதா? என்றுகூடத் தெரியவில்லை. நமது தேசத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் நான்கு தூண்களில் ஒன்றாகிய நீதித்துறையின் தூக்கம் கலைந்த நாள் அது.

 காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்துரை 2006 தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்குள் அவரது பதவிக் காலமும் முடிந்துவிட்டது; ஏப்ரல் 13 அன்று நடந்த இந்தத் தேர்தலில் மறுபடியும் காங்கிரஸ் வேட்பாளராக ராதாபுரத்தில் போட்டியிடுகிறார்.

 சேரன்மாதேவி தொகுதியில் 2006-ம் ஆண்டு போட்டியிட்டு வென்ற வேல்துரையின் வெற்றியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேல்துரை அரசுக்குச் சொந்தமான நபார்டு வங்கியின் ஒப்பந்தப் பணிகளை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார்.

 விதிகளின்படி இது தவறு என்பதால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

 இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்தின் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்ய விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.

 இந்தத் தீர்ப்பால் தவறு செய்தவருக்குக் கிடைத்த தண்டனை என்ன? வழக்கில் வெற்றி பெற்றவருக்கு ஏதும் பயன் உண்டா? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் தன் பதவிக்காலம் முழுவதையும் அனுபவித்த பிறகு அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு ஓய்வூதியப் பயன் மட்டுமே கிடைக்காது. மற்றபடி அவர் ஏற்கெனவே பெற்ற ஊதியம், படிகள் ஏதும் திருப்பி அளிக்க வேண்டிய தேவையில்லை. அதேசமயம் அவர் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை.

 "தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்' என்பது நீதி மற்றும் சட்டத்துறைக்குத் தெரியாதா? இவ்வளவு தெரிந்தும் வழக்குகள் தாமதம் செய்யப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மக்களுக்கு நீதிமன்றங்கள் மேல் எப்படி நம்பிக்கை ஏற்படும்?

 இந்தியக் குடியரசுத் தலைவர் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கவலைப்படுகிறார்; கவலைப்பட்டால் போதுமா? உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் இதுபற்றி செய்யாத எச்சரிக்கையா?

 ""நாடு முழுவதும் நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க மாநில உயர் நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றங்கள் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள். தங்கள் வழக்குகளில் இன்று தீர்வு ஏற்படும், நாளை தீர்வு ஏற்படும் அல்லது நாளை மறுநாள் தீர்க்கப்படும் என்ற அபார நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

 அந்த நம்பிக்கையை இழக்கும் முன் தீர்ப்பளித்துவிட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு விடுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்...'' என்று முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை செய்தது யார் காதிலும் விழவில்லையே!

 சிற்றூர் மற்றும் நகர்ப்புறங்களில் "கட்டப் பஞ்சாயத்து' செல்வாக்குப் பெறுவதற்குக் காரணம் நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதங்களே! பல ஆண்டுகள் காத்திருந்து ஒரு தீர்ப்பைப் பெறுவதைவிட உடனடியாகக் கிடைக்கும் முடிவையே மக்கள் விரும்புகின்றனர். காத்திருப்பதால் காலம் வீணாவதுடன் வழக்கின் தன்மையும் மாறிப் போக வழி ஏற்படலாம்; அதுவரை வழக்கைத் தொடுத்தவரும் உயிரோடு இருக்க வேண்டுமே!

 கட்டப் பஞ்சாயத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தபோது, நீதிமன்றம் அதை ஒழிக்க அரசாங்கம் அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று யோசனை கூறியது.

 கட்டப்பஞ்சாயத்தில் நடக்கும் தவறுகள் பற்றி உரிய அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், பஞ்சாயத்து விவகாரங்களை விசாரிக்கத் தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தகுந்த உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

 காவல்துறையின் செயலற்ற தன்மை, வழக்கை முடிப்பதில் தாமதம் ஆகியவற்றால் நீதித்துறையின் மீது நம்பிக்கையை இழக்கச் செய்கிறது; இதனால் பெரும்பான்மையான மக்கள் நீதித்துறையை நாடுவதில்லை.

 தலித்துகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கான சட்ட உதவி அளிப்பது தொடர்பாக நடந்த கருத்தரங்கில் இதுபற்றிப் பேசப்பட்டுள்ளது. நீதித்துறையை நாடும் உரிமை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடிப்படை உரிமை பெரும்பாலான மக்களுக்கு மறுக்கப்படுகிறது.

 தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்காக 9 விழுக்காடு பேர் மட்டுமே நீதிமன்றத்தை நாடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

 52 விழுக்காடு பேர் பிரச்னைகளை மறந்துவிடுவோம் என்றும், 30 விழுக்காடு பேர் காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளிடம் செல்வோம் என்றும், 9 விழுக்காடு பேர் ரௌடிகளிடம் செல்வோம் என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே, 91 விழுக்காடு மக்கள் நீதித்துறையை விட்டு விலகி நிற்கின்றனர்.

 "சட்டத்துறை, அரசு, தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றின் தோல்வியை இது காட்டுகிறதா?' என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அவர்களை அப்படியே விட்டுவிட்டால் வேறு வழிகளில் அவர்கள் நிவாரணம் தேட ஊக்குவிப்பதாக அமையும்; இது சட்டத்தின் ஆட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. எனவே, அரசும், தொண்டு நிறுவனங்களும் சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.பி. சின்ஹா கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளார்.

 நீதித்துறையும் சமூகப் பொறுப்புடன் நீதி வழங்கக் கடமைப்பட்டுள்ளது. 2001 மற்றும் 2010 ஆண்டுகளில் உணவு தானியக் கிடங்குகளில் முக்கியமாக இந்திய உணவுக் கழகச் சேமிப்புக் கிடங்குகளில் தானியங்கள் கெட்டுப்போனது பற்றிய வழக்கில் நீதிமன்றம் மத்திய அரசைக் கண்டித்தது. "உணவு தானியத்தைச் சேமிப்பதே, பசித்தவர்களுக்கு அவை சென்று சேர வேண்டும் என்பதுதான். அதைச் செய்யாமல் திட்டங்கள் தீட்டி என்ன பயன்? சேமிப்புக் கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களை ஏழை மக்களுக்குக் கொடுங்கள்; வீணாக எலிகளுக்குக் கொடுக்காதீர்கள்' என்று உச்ச நீதிமன்ரம் உத்தரவிட்டதை நாடே வரவேற்றது.

 1984 டிசம்பர் 2 அன்று நடந்த போபால் நச்சுவாயு 25 ஆயிரம் மக்களைக் காவு கொண்டது. செத்த பிராணிகளுக்குக் கணக்கே இல்லை. இந்தப் படுகொலை வழக்கை விசாரித்துத் தீர்ப்பு கூற 26 ஆண்டுகளை எடுத்துக்கொண்டது நீதிமன்றம்.

 யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் 8 இந்திய அதிகாரிகளுக்கு வெறும் 2 ஆண்டுகள் சிறையும், குறைந்த அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறியபோது நாடே அதிர்ச்சியடைந்தது.

 1992-ம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு 18 ஆண்டுகள் ஆயின. சர்ச்சைக்குரிய இடத்தை மூன்று சமபங்குகளாகப் பிரித்தளிக்கும் தீர்ப்பு யாரையும் திருப்தி செய்யவில்லை. மாறாக, அதுவும் ஒரு "கட்டப் பஞ்சாயத்து' என்றே விமர்சனம் செய்யப்பட்டது.

 பொதுவாக நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டிய கட்டாயமும் இல்லை. நடுநிலை தவறாமல் இருக்க வேண்டும். மக்களுடைய நம்பகத்தன்மையைத் தொடர்ந்து காப்பாற்றி வரவேண்டும். நீதித்துறை சிறப்பாகச் செயல்பட அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

 லஞ்ச ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தொடர்புடைய உயர் அதிகாரிகள் அனுமதியளிக்காததால் சிபிஐ பதிவு செய்த 127 வழக்குகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் சட்டமும், நீதியும் எவ்வாறு அதிகார வர்க்கத்தால் அலைக்ககழிக்கப்படுகின்றன என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

 அத்துடன் இந்நாட்டின் நடைமுறையாகிவிட்ட லஞ்சம், ஊழல் முதலிய முறைகேடுகளுக்கு நீதித்துறையும் பலியாகிவிட்ட செய்திகள் கவலைக்குரியன. இதனால்தான் தேவையற்ற தாமதமும், வழக்குகளின் தேக்கமும், எதிர்பாராத தீர்ப்பும் வெளியாகி நீதித்துறையைக் களங்கப்படுத்துகின்றன. இது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்; இதில் சமரசம் கூடாது.

 ""சட்டம் தீண்டத்தகாததாகவும், நீதி அடைய முடியாததாகவும் பெரும்பான்மையான மக்களுக்கு விளங்குமானால் நீதிமன்றங்களல்ல, தெருமுனைகளே சட்டத்தையும், நீதியையும் நடைமுறைப்படுத்தும்...'' என்றார் நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர். இது ஏழை எளிய மக்களின் சார்பாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

 எனவே, நீதிதேவனின் மயக்கமும், தயக்கமும் தெளிய வேண்டும்; தேசத்தைத் தாங்கும் தூண்களே தடம் மாறி, தடுமாறினால் தேசம் என்னாகும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com