ஏன் இந்தப் பாகுபாடு
சைவத்தையும், வைணவத்தையும் ஓங்கி வளர்த்த தமிழகம் ஆத்திகம், நாத்திகம் என்ற வாதத்தையும் தன்னகத்துள் ஏற்றுக்கொண்டது. ஆத்திக - நாத்திக விவாதம் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. விஞ்ஞானத்துடன் யோச


சைவத்தையும், வைணவத்தையும் ஓங்கி வளர்த்த தமிழகம் ஆத்திகம், நாத்திகம் என்ற வாதத்தையும் தன்னகத்துள் ஏற்றுக்கொண்டது. ஆத்திக - நாத்திக விவாதம் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
விஞ்ஞானத்துடன் யோசிக்க எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும், மனிதன் தன்னையும் மீறிய ஒரு சக்தி உள்ளது என்பதை நம்பியே கோயிலுக்குச் செல்கிறான். தனது பிரச்னைகளை மனமுருகி வேண்டும்போது, அங்கு மூலவராக வீற்றிருக்கும் கடவுள் கண்டிப்பாக, செவி கொடுத்துக் கேட்பார், அதைத் தீர்த்தும் வைப்பார் என்ற நம்பிக்கையும் இப்போது அதிகமாகவே வளர்ந்து வருகிறது. இந்த நம்பிக்கை இப்போது ஏராளமானவர்களை கோயில்களின்பக்கம் இழுத்து வருகிறது.
கடந்தாண்டு தமிழகத்துக்குச் சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை 11.16 கோடியாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் கோயில்களுக்குச் சென்று சாமிதரிசனம் செய்தவர்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில்களில் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
இன்றைய சூழலில் கோயிலின் முதல் படியில் காலடி எடுத்து வைக்கும்போதே சிறப்புத் தரிசனமா, பொது தரிசனமா என்ற கேள்விதான் முதலில் நம்மை வரவேற்கும்.
கோயிலில் பொது தரிசனத்தில் செல்லும்போது, கையில் அர்ச்சனை சீட்டு வைத்திருப்பவர்கள் ஒரு மாதிரியாகவும், எதுவும் இல்லாமல் கடவுளை மட்டுமே காண வேண்டும் எனச் செல்பவர்கள் வேறு மாதிரியாகவும் நடத்தப்படுகிறார்கள். தேங்காய் உடைப்பதற்கு ரூ. 1-க்கு சீட்டு வாங்கும் பக்தர் அங்கே தேங்காயை உடைத்துக் கொடுப்பவருக்கு குறைந்தபட்சம் ரூ. 11 கொடுக்க வேண்டியுள்ளது.
எறும்புபோல் ஊர்ந்து செல்லும் வரிசையில் சென்று மூலவரைக் கண்குளிரத் தரிசிக்கலாம் என்ற நிலை வரும்போதுதான் சிறப்புத் தரிசனத்துக்கும், பொது தரிசனத்துக்கும் உள்ள வித்தியாசம் அங்கே தெரிகிறது.
தாங்கள் பணம் கொடுத்துக் கடவுளை வாங்கிவிட்டோம். இனிமேல் யாரும் கடவுளைக் காண முடியாது என்பதுபோல கடவுளின் முன்னால் நின்றுகொண்டு மனமுருகி வேண்டுவார்கள் சிறப்புத் தரிசனக்காரர்கள். சிறப்புத் தரிசனத்தாரின் முகத்தையும், அங்கே காவலுக்கு நிற்கும் காவலாளியின் பேச்சுகளையும் கேட்டுக்கொண்டே மூலவரைக் காணமுடியாமல் திரும்ப வேண்டியதுதான்.
மூலவருக்குக் காண்பிக்கப்படும் தீபாராதனையை அதன் வெளிச்சத்தைக் கொண்டு கண்டுபிடிக்கும் பொது தரிசன பக்தர் முன்னால் நீட்டப்படும் தட்டில் காணிக்கையாகச் செலுத்தப்படும் பணத்தை வைத்துத்தான் அவருக்கு மரியாதை கொடுக்கலாமா, வேண்டாமா எனத் தீர்மானிக்கப்படுகிறது. கொடுக்கப்படும் காணிக்கைக்கு ஏற்ப பிரசாதமும், காணிக்கை கொடுக்காதவருக்கு வேண்டா வெறுப்பாக பிரசாதமும் வழங்கப்படுகிறது.
கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், தினசரி பூஜைகள், வளர்ச்சிப் பணிகள், ஆன்மிகப் பணிகள், பொதுச் சேவைப் பணிகள், கோயிலில் வேலை பார்த்துவரும் ஊழியர்களுக்கு ஊதியம், கோயில் உண்டியல் வருமானத்திலிருந்து வழங்கப்படுகிறது. அவ்வாறான உண்டியலுக்குப் பணத்தைச் செலுத்தும் பக்தருக்கு அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்குவதற்கு அதிகத் தயக்கம் காட்டும் நிலையையும் காணலாம்.
அதிலும் குறிப்பாக, வெளி மாநிலத்தவர்கள், வெளி நாட்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களைப் பின்தொடரும் நம்மவர்களின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது. அவர்களுக்குக் கிடைக்கும் மரியாதையில் கால் பங்கைக்கூட நம்மவர்களால் பெற முடியாது.
சில கோயில்களில் அர்ச்சகர்களின் தட்டுகளில் சில்லறைகளை வைத்துவிட்டால் அவர்கள் வாங்க மறுப்பதோடு, வைத்தவர்களுக்கு உரிய பிரசாதம் வழங்குவதும் மறுக்கப்படுகிறது. சில்லறைகளால் ஒன்றும் பயனில்லை என்கிறார்கள். இந்தச் சில்லறையைக் கொண்டு வருவதற்கு அவன் பட்டபாடு யாருக்குத்தான் தெரியும். பணம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதற்கு கோயில்கள் ஒன்றும் வியாபாரச் சத்திரமல்ல.
தனது மனதிலுள்ள குறைகளை கடவுளிடம் மனமுருகி வேண்டலாம் என்று நினைத்து பல்வேறு கஷ்டங்களுக்கு இடையில் கோயில்களுக்கு வரும் சாமானியர்களால் ஒவ்வொரு மூலவரின் முன் நீட்டப்படும் தீபாராதனைத் தட்டுகளில் பணம் செலுத்த முடிவதில்லை. ஆனால், இவ்வாறு வீற்றிருக்கும் பல மூலவர்களில் ஒருவராவது தனது குறையைத் தீர்த்து வைக்க மாட்டாரா என்ற ஏக்கம் மட்டுமே பக்தனிடம் இருக்கும். அவ்வாறான பக்தனுக்கு ஆறுதலையும், அமைதியையும், அரவணைப்பையும், தேற்றுதலையும் வழங்கும் இடமாக கோயில்கள் இருக்கும்பட்சத்தில் பக்தரின் மனதில் உண்மையான பக்தியும், கோயில் மீது உண்மையான மரியாதையும் எழும்.
அதைவிடுத்து, கோயில்களைப் பணம் காய்க்கும் மரமாகவும், வரும் பக்தர்கள் மரத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி உரம் போட்டு மராமத்து செய்து வளர்க்கும் தோட்டக்காரர்களாகவும் பாவிக்கப்படும்போது, அங்கே கோயிலுக்கான புனிதம் கெட்டுவிடுகிறது.
பக்தரின் காலணிகளை இலவசமாகக் காக்கும் அரசு, கோயில்களில் விடப்படும் கால்நடைகளைக் காப்பாற்றுவதற்குத் தனி கோசாலைகளையும், காப்பகங்களையும் நடத்தி வருகிறது. ஆனால், மனதில் வேதனையுடன் வந்து செல்லும் பக்தரின் மனதைத் தேற்றுவதற்குப் பதிலாக, மேலும் ரணத்தை மட்டுமே வழங்கும்வகையில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு கோயிலிலும் அங்கு நடைபெறும் செயல்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் இதைத் தெரிந்து கொள்வதில்லையா அல்லது தெரிந்தும் தெரியாததுபோல நடந்து கொள்கிறார்களா?
இவ்வாறு கோயில்களில் நடைபெறும் தடாலடிகளைக் காப்பாற்றும் பொறுப்பு முழுக்க, முழுக்க அந்தந்த மூலவர்களுக்கே உண்டு. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...