லட்சியத்தில் உறுதி வேண்டும்!
மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், ஐஏஎஸ் படித்து சாமானியர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும், பொறியாளராக வேண்டும் என்பதெல்லாம் அண்மையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வில் சிறப


மருத்துவராகி ஏழை மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும், ஐஏஎஸ் படித்து சாமானியர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும், பொறியாளராக வேண்டும் என்பதெல்லாம் அண்மையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் தெரிவித்தவை. இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவராக வேண்டும் என்றே தெரிவித்தனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் அதற்காகப் பாடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும், பெற்றோருக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். ஆனால், முகமற்ற, அடையாளம் கூறமுடியாத, நன்றியை எதிர்பாராத நம்முடைய அரசு அமைப்புக்கும் அவர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து மாற்றத்துக்கு வழிவகுத்த அரசுக்கும், இந்த வாய்ப்புகளைப் பெற்றோருக்குச் சுட்டிக்காட்டியதில் பெரும் பங்கு வகித்த ஊடகங்களுக்கும் மாணவர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்.
மேலும், பட்டிதொட்டி எங்கும் பள்ளிகளைத் தொடங்கியும், அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்க கல்வி நிலையங்களையும் ஏற்படுத்தியுள்ள அரசு, எண்ணற்ற தனியார் கல்வி நிலையங்களுக்கும் அனுமதி அளித்து அனைத்து நிலையிலும் கல்விக்கு ஊக்கமளித்து வருகிறது.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு, உதவித்தொகை, கல்விக்கடன், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என அனைத்துத் தரப்பினரும் முன்னேற அரசு அமைப்பு ஏணிப்படியாக இருந்து வருகிறது.
அரசு அமைப்பு மாணவர்களுக்காக இவற்றையெல்லாம் செய்து கொடுக்கக் காரணம், அவர்கள் உயர்ந்தால் இந்தச் சமுதாயம் உயரும்.
அதன்மூலம் இங்கிருக்கும் அடித்தட்டு மக்கள் முன்னேறி சமதர்ம சமுதாயம் உருவாகும் என்ற நல்ல நோக்கம்தான்.
அந்த நோக்கம் நிறைவேறி வந்தாலும்கூட, இன்றைய நிலையில் சில நிகழ்வுகள் அரசின் நோக்கத்தை கேள்விக்குறியாக்கி உள்ளன.
உதாரணமாக, கடந்த ஓராண்டுக்கு முன்பு மருத்துவத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த கருத்துகளை இந்த நேரத்தில் கூறுவது சரியானதாக இருக்கும்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிறைய காலிப் பணியிடங்கள் இருந்தும் அவற்றை நிரப்ப அரசு ஏன் முனையவில்லை என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அரசு அந்தப் பணியிடங்களை நிரப்ப முனையவில்லை என்பது தவறு. அந்த மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்ற எந்த மருத்துவரும் விரும்பவில்லை.
அவர்களின் விருப்பத்துக்கு மாறாக, அந்த மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்தால், ஓரிரு தினங்களிலேயே எப்படியாவது வேறு இடத்துக்கு மாற்றல் வாங்கிச் சென்றுவிடுகின்றனர் அல்லது வேலையை ராஜிநாமா செய்து விடுகிறார்கள்.
புதிய மருத்துவர்களைப் பணிக்கு எடுத்தாலும் அந்தக் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல மறுத்து விடுகின்றனர் என்றார்.
இந்தப் பிரச்னை மருத்துவத் துறையில் மட்டுமல்ல, பொறியியல் துறையிலும் உள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றச் சிறந்த ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்ற பிரச்னை நீண்டகாலமாக உள்ளது.
காரணம், நல்ல நிலையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் அதிக ஊதியத்துக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவது அல்லது தனியார் பொறியியல் கல்வி நிலையங்களுக்குப் பணிக்குச் சென்றுவிடுவது என்ற நிலை உள்ளது.
தொடக்கப் பள்ளியிலிருந்து உயர் கல்வி வரை அரசு சலுகைகளையும், இந்தச் சமுதாயத்தில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு முன்னேறியவர்கள், சம்பாத்தியம் என்று வந்தவுடன் அனைத்தையும் மறந்துவிட்டு மனம்போன போக்கில் செல்வது எந்த விதத்தில் நியாயம்?
தங்களை முன்னேற்றிய இந்தச் சமுதாயத்துக்கும், சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபடும் அரசுக்கும் இப்போது தேர்வில் வெற்றி பெற்று உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்கள் எதிர்காலத்தில் உறுதுணையாக இருப்போம் என உறுதியேற்க வேண்டும். அந்த உறுதியில் வழுவாது கடமையாற்றுவதே அவர்கள் கற்ற கல்விக்கு அழகு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...