மீண்டெழும் கிராமங்கள்
சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளைக் கிராமப்புறங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தில் கிராமப்புறத் தெரு விளக்குகளைத் தேர்ந்


சூரிய ஒளி மின் சக்தியில் இயங்கும் தெரு விளக்குகளைக் கிராமப்புறங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தில் கிராமப்புறத் தெரு விளக்குகளைத் தேர்ந்தெடுத்ததற்கு பல காரணங்கள் உண்டு.
பொதுவாக, ஊராட்சியின் இரு முக்கியப் பணிகள் தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம். இவற்றுக்கான மின் கட்டணத்தைச் செலுத்துவதில் ஊராட்சிகள் கடந்த காலத்தில் நிறைய பிரச்னைகளைச் சந்தித்தன.
குறிப்பாக, மாநிலத்தில் உள்ள 12,620 ஊராட்சிகளுக்காக மாதம் ஒன்றுக்குச் சராசரியாக 8.17 கோடி ரூபாய் தெரு விளக்குக்கான மின் கட்டணமாகச் செலுத்தப்படுகிறது. இது ஓர் ஆண்டுக்கு தோராயமாக 99 கோடி ரூபாயாகும்.
மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டாருக்கான மின் கட்டணம் ஓர் ஊராட்சிக்கு மாதம் சுமார் ரூ. 12 ஆயிரம் என்ற வீதத்தில், ஆண்டுக்கு ரூ. 180 கோடி செலுத்தப்படுகிறது. மொத்தத்தில் தெரு விளக்கு, குடிநீர் விநியோகம் இரண்டுக்கும் ஆண்டுக்கு 279 கோடி ரூபாய் மின் கட்டணமாகச் செலுத்தப்படுகிறது.
ஓர் ஊராட்சியின் ஆண்டு வரி வருவாய் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய்தான். இதில் சுமார் 70 சதம் அந்த ஊராட்சியின் மின் கட்டணத்துக்குச் செலவாகிவிடுகிறது. இந்த வரி வருவாயும் உரிய காலங்களில் கிடைப்பது இல்லை. எனவே, கிராமப்புற முன்னேற்றம் என்பது முழுக்க முழுக்க மத்திய, மாநில அரசுகளின் நிதியை நம்பியே இருக்க வேண்டிய சூழல்.
நிதிப் பற்றாக்குறை காரணமாக, ஊராட்சிகளைக் கடந்த காலங்களில் அரசுகள் புறக்கணித்ததும் உண்டு. இதுபோன்ற சமயங்களில் ஊராட்சிகள் மின் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாமல் மின் வாரியத்துக்கு லட்சக்கணக்கில் நிலுவை வைத்திருந்தன. இந்த நிலுவைக்கு 12 சதம் வட்டி செலுத்த வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், ஊராட்சிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நிதியில் மின் வாரிய நிலுவைத் தொகையில் கணிசமாகப் பிடித்துக்கொள்ளப்பட்டு மீதத் தொகையே வழங்கப்பட்டது. இதனால், ஊராட்சியை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், ஊராட்சிகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி தெரு விளக்குகளால் அவை செலுத்தும் மின் கட்டணம் மூன்றில் ஒரு பங்காகக் குறையும் வாய்ப்புள்ளது. இந்த நிதியை ஊராட்சிகளின் மேம்பாட்டுக்குச் செலவு செய்வதன் மூலம் கிராமங்கள் மேம்பட வழி ஏற்படும். மேலும், இதனால் மிச்சமாகும் மின்சாரத்தை மற்ற பயன்பாட்டுக்குத் திருப்பிவிடுவதன் மூலம் மாநிலத்தில் மின் பற்றாக்குறை தவிர்க்கப்படுவதோடு, தொழில் துறை தங்குதடையின்றி முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
சூரிய சக்தி தெரு விளக்குகள் 12 மணி நேரம் தொடர்ந்து எரிவதற்கு குறைந்தது 10 மணி நேரம் இதிலுள்ள பேட்டரி சார்ஜ் ஆக வேண்டும். கிராமப்புறத் தெருக்களில் இந்த விளக்குகள் அமைக்கப்படும் இடங்களில் நிழல் ஏற்பட்டால், இதிலுள்ள மின் கலன் சார்ஜ் ஆகாது என்பதுடன், தானியங்கி பொத்தான் மூலம் இந்த விளக்குகள் பகலிலேய எரியத் தொடங்கிவிடும். இதனால், நாம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.
எனவே, சூரிய ஒளி மின் விளக்குகளை கிராமங்களில் அமைக்கும் முன்பு இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதுவே, இந்தத் திட்டம் நீடித்துச் செயல்பட வழிவகுக்கும்.
இதேபோல, நகரங்கள், பெரு நகரங்களில் முக்கிய சாலைகளில் உள்ள தெரு விளக்குகளை சூரிய சக்தி விளக்குகளாக மாற்றலாம். இவற்றைப் பராமரிப்பதும் எளிது. இந்தச் சாலைகள் பெரும்பாலும் நாள் முழுவதும் சூரிய ஒளியைப் பெறும்படி அமைந்திருக்கும்.
மேலும், நகரங்களில் மூன்று அல்லது நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் அதிக அளவில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சாலையின் மையத்திலும், மிக உயரமான கம்பத்தின் உச்சியிலும் அமைக்கப்பட்டிருப்பதால், இந்த விளக்குகள் அமைந்துள்ள இடங்களும் நாள் முழுவதும் சூரிய ஒளியைப் பெறும்விதத்தில் உள்ளன. எனவே, இந்த விளக்குகளையும் சூரிய சக்தி விளக்குகளாக மாற்றுவதன் மூலம் பெருமளவில் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.
கிராமப்புறங்களைப் பொருத்தவரை, ஸ்பெயின் நாட்டில் உள்ள அன்டலூசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து, அதிலிருந்து தெரு விளக்குகளை இயங்கச் செய்வதுதான் சரியானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அன்டலூசியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் உலகிலேயே முதலாவது நிலையம் எனக் கூறப்படுகிறது.
இப்போது முதல்வர் அறிவித்துள்ள 10 சூரிய மின் சக்தி பூங்காக்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், இதுவும் மரபுசாரா மின் சக்தி உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் பேசச் செய்வதாக அமையும். எனவே, இந்தத் திட்டத்துக்காக தமிழக முதல்வர் கோரியுள்ள ரூ. 45 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அன்டலூசியில் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் நிலையத்தை அமைக்கவே ரூ. 1,800 கோடி செலவாகியுள்ள நிலையில், தேசிய சூரிய ஆற்றல் திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தியைப் பெறத் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, அதற்காக இப்போது நிதிநிலை அறிக்கையில் ரூ. 486 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், 3,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையில், சூரிய மின் சக்தி பூங்கா, தெரு விளக்கு அமைக்க ரூ. 45 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கோரிக்கை எந்த அளவில் நிறைவேறும் எனத் தெரியவில்லை.
இருந்தபோதும், கிராமப்புறங்களில் சூரிய சக்தி தெரு விளக்குகளைப் பயன்படுத்தும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் வெற்றியடைந்தால், கிராமங்கள் மீண்டெழுந்து அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும், இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்போது, மரபுசார்ந்த நமது மின் தேவை பெருமளவில் குறையவும் செய்யும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...