மக்களாட்சி முறையில் தேர்தல் என்பது மக்களுக்கான அதிகாரத்தை வென்றெடுக்கும் போர்க்களமாகக் கருதப்படுகிறது. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்பது அன்று ஒருநாள் மட்டுமே!
புதிய ஆளுவோரைத் தேர்ந்தெடுத்து முடித்ததும் அவர்கள் பணி முடிந்துவிடுகிறது. மறுபடியும் அவர்கள் அதிகாரம் இழந்த வெறும் குடிமக்கள் ஆகிவிடுகின்றனர். அடுத்த தேர்தல் வரை இந்த நிலை தொடர்கிறது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி வந்த பிறகு, இப்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய இரு நாள்கள் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்புநாள் அக்டோபர் 25 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான ஆட்சிமுறை என்பது ஊராட்சியிலிருந்து தொடங்க வேண்டும். கீழேயிருந்து மேல்நோக்கிச் செல்லும் ஆட்சிமுறையே இயற்கையானது. மத்திய, மாநில ஆட்சியிலிருந்து அதாவது மேலிருந்து கீழாக இயங்கும் முறை தன்னாட்சித் தத்துவத்துக்கு எதிர்மாறானது என்பதில் ஐயமில்லை.
இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாதவகையில் எல்லா அரசியல் கட்சிகளும் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அதனால்தான் அரசியல் கட்சிகளும் கூட்டணிகளைத் தவிர்த்துத் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நல்லவர்கள் மிகுதியாக நிறுத்தும் கட்சியே வெற்றிவாய்ப்பைப் பெறும். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களை எளிதாக விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதால் நல்லவர்களையே வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும்.
ஆளும் கட்சியின் திட்டங்கள் விரைந்து செயல்பட வேண்டுமானால் அக்கட்சியினரே வெற்றிபெற வேண்டும் எனக் கூறப்படுகிறது. ஊராட்சி என்பது ஒவ்வொருவருக்கும் உரிமையுடையதாக இருப்பதால், அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் யாருக்கும் தயக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை.
உள்ளாட்சியில் வரும் ஊராட்சி என்பது ஊர் மக்களின் உண்மையான ஆட்சியாக இருக்க வேண்டும். இதில் ஜாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு இடம்தரக் கூடாது.
ஊர்ப்புறங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட்டுவரும் நல்லவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இனி எதிர்காலத்திலாவது கட்சிகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை மாற்றியமைக்க வேண்டும்.
ஊராட்சித் தத்துவம் என்பது இன்று, நேற்று தோன்றியதல்ல. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்தொட்டு இருந்து வருகிறது. ஊர் தோன்றியபோதே, ஊராட்சியும் தோன்றிவிட்டது.
ஊர்த்தலைவர் தமக்கு உறுதுணையாகச் சிலரைச் சேர்த்துக்கொண்டு, ஊர்த்தேவைகளைச் செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. எனவே, ஊராட்சி என்பது ஊர் மக்களின் தவிர்க்க முடியாத தேவையாகிவிட்டது.
தமிழகத்தில் சோழர் காலத்திலேயே மிகச்சிறந்த ஊராட்சி முறை செயல்பட்டு வந்ததை வரலாற்று ஆசிரியர்கள் கல்வெட்டு ஆதாரத்தோடு நிறுவியுள்ளனர்.
முதல் பராந்தக சோழனின் ஆட்சியில் செங்கல்பட்டுக்கு அருகே உத்தரமேரூரில் வரையப்பட்டுள்ள இரு கல்வெட்டுகள் ஊராட்சி உறுப்பினர்களின் தகுதி, தேர்வுமுறை, மன்றங்களின் அமைப்பு முதலானவற்றை விளக்குகின்றன.
"குடவோலை' முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பல்வேறு வாரியங்களாகச் செயல்பட்டனர். தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், கழனி வாரியம், கணக்கு வாரியம், கலிங்கு வாரியம் என இவை வழங்கப்பட்டன. தேவைக்கேற்ப இந்த வாரியங்கள் அமைக்கப்பட்டுச் செயல்பட்டன.
இவ்வாரிய உறுப்பினர்கள் ஓராண்டு காலம் எவ்வகை ஊதியமும் பெறாமல் செயல்படுவர். இவர்களுள் எக்காரணம் பற்றியேனும் அபராதம் கொடுக்க நேர்ந்தால் அவர்கள் வாரியத்திலிருந்து விலக்கப்படுவர்; உடனே குடவோலை மூலம் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஓராண்டுக்கு மேல் உறுப்பினராய் இருக்க முயல்வோர் கிராமத் துரோகிகளாகி அக்குற்றத்துக்குரிய தண்டனை பெற வேண்டும். இவ்வாறு அன்று சோழப் பேரரசில் உண்மையான மக்களாட்சி நிலவியது என வரலாறு கூறுகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு ஊராட்சி அமைப்புகளைப் புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. அவை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஊராட்சியமைப்புகளில் உயர் ஜாதியினரின் அதிகாரமே கொடிகட்டிப் பறந்தது. சாதாரண மக்களின் பங்கேற்பு அறவே இல்லாததாகவே இருந்தது. இந்த நிலையில் மாற்றம் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
1993-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 73 மற்றும் 74-வது சட்டத்திருத்தங்களுக்குப் பிறகு ஊராட்சியமைப்பு புத்துயிர் பெற்றது.
இதனால் தமிழக ஊராட்சிகள் சட்டம் 1994-ல் இயற்றப்பட்டது. இதன் பிறகு முதல் உள்ளாட்சித் தேர்தல் 1996-ம் ஆண்டில் நடைபெற்றது.
இப்போதும் உள்ளாட்சியமைப்புகள் மாநில அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் ஒரு நிறுவனமாகவே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையை மாற்றி சுயேச்சையான உள்ளாட்சியாகச் செயல்பட மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும். இதனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்பட வழிபிறக்கும்.
1996-ல் அறிமுகப்படுத்தப்பட்ட "நமக்கு நாமே' மற்றும் "அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்' 2001-ல் நிறுத்தப்பட்டு, "நமது கிராமம்' என்னும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இவ்வாறு ஏற்படும் ஆட்சிமாற்றம் காரணமாக தமிழ்நாட்டிலுள்ள 12,620 ஊராட்சிகளும் அதைச் சார்ந்த குடிமக்களும் திட்டங்களின் பலனைத் தொடர்ந்து பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டாமா?
உள்ளாட்சியமைப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் இடஒதுக்கீட்டு முறை சேர்க்கப்பட்டிருப்பது நியாயமானதுதான். ஆனால், இதைச் செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல் கொஞ்சநஞ்சமல்ல.
கடந்த காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்கள் போட்டியிடவே முடியவில்லை. உயர் ஜாதியினரின் ஆதிக்கமே அதற்கு காரணம். அப்படியே போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அவர்களைச் செயல்படவிடாமல் தடுப்பது, உயிருக்கே உலைவைப்பது என்பதெல்லாம் கற்பனையல்ல. கடந்த காலங்களில் நடந்த வரலாறு.
பெண்களின் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் உள்ளாட்சிகளில் வெற்றிபெற்றாலும் கணவன்மார்களின் ஆட்சியே நடைபெறுகிறது.
போதிய கல்வியும், விழிப்புணர்வும் பெறாதநிலையில் ஆணாதிக்கத்தைச் சமாளித்துச் செயல்படுவது பெரும் போராட்டம்தான். காலப்போக்கில்தான் இதில் மாற்றம் காண முடியும். அதற்கான பயிற்சிக் களமாகவே இதைப் பயன்படுத்த வேண்டும்.
சில கிராமங்களில் ஊராட்சிப் பதவிகளை ஏலம் விடும் போக்கு மக்களாட்சித் தத்துவத்துக்கே எதிரானது. ஊரிலுள்ள கோயில்களைப் புதுப்பிக்கவும், குளம் குட்டைகளைத் தூர்வாரவும் இந்தத் தொகை பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனினும், இந்த ஏல நடவடிக்கைச் செயல்கள் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்படவும் வேண்டியதாகும். மேலும், இது கிரிமினல் குற்றமாகவும் கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கவும் வழிவகுக்கும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தென்னிந்திய வரலாற்று நூல்களில் "கிராம சமூகம்' என்ற சொற்றொடர் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. "கிராம சமூகங்கள் குட்டி குடியரசுகள்' என்று இந்தியாவின் ஆளுநர் சர். சார்லஸ் டி. மெக்கால்ப் குறிப்பிடுவது பண்டைய ஊராட்சியமைப்புகளுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
""இங்கு அயலார் தலையீடு பெரும்பாலும் இல்லை. இவை மற்ற நிறுவனங்கள் வீழ்ச்சியுற்றபோதும் நிலைபெற்று நின்றுள்ளன. அரசகுல மரபுகள் பல வீழ்ச்சியுறுகின்றன. புரட்சிக்குப் பின் புரட்சி தோன்றுகிறது.
ஆயினும், கிராம சமூகம் மட்டும் அதுவாகவே நிலைபெற்றுள்ளது'' என்று இவர் குறிப்பிடும் இந்திய கிராம சமூகம் குறித்த விளக்கம்தான் மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
"இந்தியா கிராமங்களில்தான் வாழ்கிறது' என்பது சரிதான். கிராமங்கள் வாழ்கின்றனவா? நகரங்கள் வாழ்கின்றனவா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை உள்ளாட்சி உருவாக்கும் நல்லாட்சிகளே அளிக்கக் கடமைப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.