கல்வி சிறந்த தமிழ்நாடு

உலக வரலாற்றிலேயே கல்வியால் ஏற்பட்ட புரட்சியே மனித சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது; அதுதான் அறியாமை இருளை ஓட்டி அறிவு வெளிச்சத்தை ஆண்டான், அடிமையென்ற பேதமின்றி அனைவருக்கும் அளித்தது; விழிகளுக்குப் பார்வ
Updated on
3 min read

உலக வரலாற்றிலேயே கல்வியால் ஏற்பட்ட புரட்சியே மனித சமுதாயத்தைப் புரட்டிப் போட்டது; அதுதான் அறியாமை இருளை ஓட்டி அறிவு வெளிச்சத்தை ஆண்டான், அடிமையென்ற பேதமின்றி அனைவருக்கும் அளித்தது; விழிகளுக்குப் பார்வையையும், செவிகளுக்கு ஓசையையும், மனதுக்குக் கருத்தையும் வாரி வழங்கியது.

இந்தக் கல்வி நடந்துவந்த பாதை கரடு முரடானது. காலத்துக்கு ஏற்ப மாறியது; இடத்துக்கு ஏற்ப முரண்பட்டது; ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகவும், செல்வர்களின் செல்லப் பிள்ளையாகவும் சீராட்டி வளர்க்கப்பட்டது.

குருகுலங்களில் பிறந்து, திண்ணைப் பள்ளிகளிலே தவழ்ந்து வந்த கல்வி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புதியதோர் வடிவம் பெற்றது. ஞானிகளாலும், புலவர்களாலும் காவியமாகவும், ஓவியமாகவும் வளர்த்தெடுக்கப்பட்ட கல்வி, "மெக்காலே' பார்வைபட்டு அலுவலகக் கல்வியாக ஆக்கப்பட்டது. இப்போது கல்வி வணிகர்களிடம் சந்தைப் பொருளாகச் சரணடைந்து கிடக்கிறது.

ஒருவழியாக சமச்சீர் கல்விக்கான சண்டை ஓய்ந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுகிறது; சமச்சீர் கல்வி தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

""முனைவர் முத்துக்குமரன் குழு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டவாறு, சமச்சீர் கல்விக்கு மிகவும் இன்றியமையாதது அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளாகும். பொதுப்பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி ஆகாது.

இதை நன்கு உணர்ந்த இந்த அரசு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும். இந்தக் கல்வியாண்டில் ரூ. 1082.71 கோடியில் இவை ஏற்படுத்தப்படும்...'' என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் பள்ளிக்கூடங்களில் மாணவ மாணவியருக்குத் தகுந்த சூழலை ஏற்படுத்தும் நோக்கத்தில் முழு நேர, பகுதி நேர ஆசிரியர்கள் 34,036 பேர் நியமனம், பாடப் புத்தகச்சுமை குறைப்பு, மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் சட்டப்பேரவையில் முதல்வர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்கின்றனர். ஆசிரியர்களும், ஆசிரியர் இயக்கங்களும் இந்தத் திட்டங்கள் வெற்றிபெற கடமைப்பட்டுள்ளனர்.

""நீ ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா? பயிர் செய்; பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மரங்களைப் பயிராக்கு; நூறாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மனிதனை உருவாக்கு'' என்பது ஒரு சீனப் பழமொழி.

மனிதனை உருவாக்குவது எப்படி? மனிதனை உருவாக்கும் கல்வியை ஊட்டுவதுதான். இதற்குத் திட்டமிட்டால் மட்டும் போதுமா? செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்படுகிறதா என கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். எரியும் விளக்காயினும் தூண்டுகோல் அவசியம்தானே?

2011-12-ம் கல்வியாண்டுக்கான தமிழக வரவு செலவு அறிக்கையில் கல்வியின் நிலை பற்றி விரித்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 54,957 பள்ளிகளில், அரசு மற்றும் நகராட்சிகள் நடத்தும் பள்ளிகள் 35,795 என்றும், தனியார் பள்ளிகள் 10,896 என்றும், அரசின் நிதி உதவிபெறும் பள்ளிகள் 8,266 என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் தொடக்கப் பள்ளிகளில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3 லட்சத்து 39 ஆயிரம் ஆசிரியர்களும் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில்தான் பயிற்சிபெற்ற அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், அந்தப் பள்ளிகள் தரம் குறைந்து காணப்படுவதற்குக் காரணம் என்ன?

அரசுப் பள்ளி ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளைத் தேடுவதற்குக் காரணம் என்ன? அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதுதான் முழுமுதற் காரணம்.

அரசுப் பள்ளிகளில் 31,816 பள்ளிகளுக்கு மட்டுமே போதுமான வகுப்பறைகள் இருக்கின்றன. 3,979 பள்ளிகளுக்கு 16,075 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. வகுப்பறைக்கு 40 மாணவர்கள் எனக் கணக்கிட்டால் 6 லட்சத்து 43 ஆயிரம் மாணவர்கள் மரத்தடியில் படிக்கின்றனர்.

இந்த ஆண்டில் 4,444 வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,77,760 மாணவர்கள் மரத்தடியிலிருந்து வகுப்பறைக்குள் நுழைவார்கள். மீதமுள்ள 4 லட்சத்து 65 ஆயிரத்து 240 மாணவர்களின் நிலை என்ன?

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்த பிறகும் அரசுப் பள்ளிகளின் நிலை இதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசுகள் கல்வியைப் பற்றிக் கவலைப்படாதது ஏன்? குடிமக்களுக்குக் கல்வியைத் தரவேண்டியது ஓர் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்பதை மறந்துவிட்டனரா? அரசுப் பள்ளிகளை இந்த நிலையில் வைத்துவிட்டு கல்வித் தரம் பற்றிக் கேள்வி கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

நமது அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அரசியல் விற்பன்னர்கள் பத்து ஆண்டுகளுக்குள் 14 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி வழங்கப்படும் என 1950-ல் உறுதியளித்தனர். ஆனால், அதற்கான ஒரு சட்டம் இயற்ற மேலும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.

2010 ஏப்ரல் முதல் குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. அனைத்துப் பள்ளிகளிலும் 25 விழுக்காடு இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்; பள்ளிகளில் சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது; பெற்றோரையோ, குழந்தைகளையோ நுழைவுத் தேர்வுக்கோ, நேர்காணலுக்கோ உள்படுத்தக் கூடாது; எந்தக் குழந்தையையும் தண்டனைக்கோ, மன உளைச்சலுக்கோ ஆளாக்கக் கூடாது.

அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை ஏற்படுத்தி அதில் நான்கில் மூன்று பங்கு இடங்களில் பெற்றோர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். ஆனால், இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை.

சுதந்திர இந்தியாவின் கல்விக் கொள்கையை வரையறுக்கும் நோக்கத்தில் டாக்டர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் 16 உறுப்பினர்களைக் கொண்ட குழு மத்திய அரசால் 1964-ல் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை 1966-ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

""ஏழை, செல்வர் என்ற அடிப்படையில் பள்ளிகள் அமைந்துள்ளதை மாற்றி பள்ளிக் கல்வி என்பது ஜாதி, சமய, சமுதாய, பொருளாதார அடிப்படையில் குழந்தைகளுக்கான கல்வியில் வேறுபாடு காட்டாமல் பொதுப் பள்ளிகளை ஏற்படுத்த வேண்டும்...'' என்று அக்குழு பரிந்துரை செய்தது.

கோத்தாரி குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு, அதை ஆய்வு செய்து நாட்டுக்கான கல்வியை உருவாக்க கல்விக்கான நாடாளுமன்றக் குழு 1967-ல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தேசியக் கல்விக் கொள்கைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், கல்வித்தேர் நின்ற இடத்திலேயே நிற்கிறது.

காமராஜ் பிறந்த நாள், "கல்வி வளர்ச்சி நாள்' எனவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் "ஆசிரியர் தின'மாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கொண்டாட்டங்கள் அதன் உண்மையான உள்பொருளை உணர்ந்து கடைப்பிடிக்கப்படுமானால், கல்வியில் பல மாற்றங்கள் வரும்; சமுதாயத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

இப்போது எங்கும் கல்வியின் தரம் தாழ்ந்துவிட்டதாகக் கூக்குரல் எழுந்துள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்வதும் அவற்றை நிவர்த்தி செய்வதும் மிகவும் அவசியம்; இதற்குக் காலத்தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது.

இதற்கு குறிப்பாக, ஆசிரியர்களையே குறை கூறுகின்றனர். முன் ஏர் ஒழுங்காகச் சென்றால்தான் பின் ஏர் நன்றாகச் செல்லும். ஆசிரியர்கள் எப்போதும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கே இடமில்லை.

ஆசிரியர்களுக்குச் சமூகம் மரியாதைக்குரிய இடத்தை அளித்துள்ளது. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்பதும் அதனால்தான். ஆசிரியப் பெருமக்கள் அந்த உயர்ந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

"ஆசிரியப் பணியே அறப்பணி' என்பதும், "அதற்கே உன்னை அர்ப்பணி' என்பதும் அலங்காரத்துக்காகக் கூறப்பட்டதல்ல, ஆழ்ந்து சிந்திப்பதற்காகவே கூறப்பட்டது.

ஒருசிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தையே களங்கப்படுத்திவிடும் என்பதை உணர்ந்து நடந்துகொள்வது நல்லது.

""கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்று பாரதி பாடியுள்ளார். அது அவரது கனவாகவும் இருக்கலாம். ஆனால், அதை நனவாக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. மனிதனை மனிதனாக வாழச் செய்யும் கல்வியை எல்லோரும் பெற வேண்டும்; அதற்கு நாம் ஒன்றுகூடி கல்வித்தேரை இழுப்போம், வாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com