உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்குதலுக்குள்ளான செப்டம்பர் 11-ஐ யாராலும் மறக்க முடியாது. உலகத்தையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்க வல்லரசுக்கு நேரடியான அறைகூவல் இது.
இந்தச் சவாலைச் சமாளிக்கச் சர்வதேச நாடுகளும் ஒரே குரலில் கண்டனம் தெரிவித்தன; அமைதியை விரும்பும் அத்தனை நாடுகளும் கைகொடுத்தன.
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த உலக வணிக மையத்தின் மீது அல் - காய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தி வந்து மோதி அதைத் தகர்த்தனர். இந்தத் தாக்குதலில் 110 மாடிக் கட்டடம் தரைமட்டமானது. அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகனில் ஒரு விமானத்தை மோதி வெடிக்கச் செய்தனர். மற்றொரு விமானம் சாங்ஸ் வில்லேவில் விழுந்து நொறுங்கியது.
இதில் விமானங்களைக் கடத்திய 19 பயங்கரவாதிகள், விமானப் பயணிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் பலியாயினர்; 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்கா எதிர்கொண்ட மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும் இது.
இந்தத் தாக்குதலுக்குக் காரணமான அல் - காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் கடந்த மே மாதம் கொல்லப்பட்டார். எனவே, இதற்குப் பழி வாங்கும் வகையில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக் கூறப்பட்டது.
""வரும் தலைமுறையினருக்குப் பயங்கரவாதம் இல்லாத அமைதியான சமுதாயத்தை அளிக்க வேண்டும். இதற்கான பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழிக்க அமெரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது'' என்று அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா அந்த நினைவு நாளில் அறிவித்தார்.
இதே நிலை இப்போது இந்தியாவுக்கும் ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வு பற்றி தேசியப் புலனாய்வு அமைப்பினர், தில்லி காவல்துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜூலை 13-ம் நாள் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பும், மே மாதம் தில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் காரில் வெடித்த குண்டுவெடிப்பும் என இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
நமது பிரதமரும், உள்துறை அமைச்சரும் இதுபற்றி வீராவேசமாகப் பேசுகின்றனர். தங்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும் வருந்துகின்றனர். ஆனால், தேசத்தின் நற்பெயரைப் பற்றியும், இந்நாட்டுக் குடிமக்களைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
அமெரிக்காவிடமும், அண்டைநாடான இலங்கையிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயங்காதவர்கள் நமது ஆட்சியாளர்கள்.
அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இடதுசாரிகளின் ஆதரவையும் இழந்தனர். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது.
இவர்கள்தாம் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம். அதற்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறார்களாம்.
ஒவ்வொரு பயங்கரவாத வன்முறையின்போதும் தங்கள் இன்னுயிரை இழந்து கொண்டிருப்பவர்கள் இந்நாட்டின் அப்பாவிக் குடிமக்கள். இந்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறதே தவிர, பொதுமக்கள் உயிர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
"மனித உயிர் விலை மதிப்பில்லாதது' என்று கருதிய காலம் போய்விட்டது. இப்போது உயிர்களுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. விலையையும், அனுதாபத்தையும் தெரிவித்துவிட்டால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடுகிறது.
தில்லியில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற்ற 15-வது தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் "பயங்கரவாதமும் நக்சலிசமும் நாட்டுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.
""நமது நாடு மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதுபோன்ற தாக்குதலால் அப்பாவி மக்கள் பலியாவதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது. இதுபோன்ற சம்பவங்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
வேறுபட்ட கருத்துடையவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க நமது நாட்டில் ஜனநாயகக் கொள்கைகளின்படி அனுமதிக்கப்படுகிறது. ஆனால், எக்காரணம் கொண்டும் அவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது...'' இவ்வாறு பிரதமர் தேசிய ஒருமைப்பாடு பற்றிய கூட்டத்தில் கண்டித்துள்ளார்.
உலகில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என்று விரும்பாதவர் யார்? எவருமே வன்முறையை விரும்புவதில்லை. ஆனால், வன்முறைகள் வளர்வதற்குக் காரணங்கள் இல்லையா? இருக்கின்றன.
மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஜனநாயக முறைப்படி போராடுகிறபோது, ஆட்சியாளர்கள் தங்கள் சுயநலனுக்காக அவர்களை அடக்க முனைகின்றனர். அப்போதுதான் வன்முறை வெடிக்கிறது. இந்த வன்முறையே திட்டமிட்டு நடத்தப்படுகிறபோது பயங்கரவாதமாக மாறுகிறது.
நமது நாட்டில் ஏழை எளிய மக்களின் விளைநிலங்களையும், பழங்குடி மக்களின் வாழ்விடங்களையும் பறித்துக்கொண்டு அவர்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், அநாதைகளாகவும் திரிய விடலாமா? இதை எதிர்த்துப் போராடுவது மாவோயிச வன்முறையாகவும், பயங்கரவாதமாகவும் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஆபத்தை விளைவிக்கும் அணு உலைகளையும், ரசாயனத் தொழிற்சாலைகளையும் நிறுவி, அந்நிய நாடுகளின் வணிகத்துக்காக அரசு எந்திரங்களைப் பயன்படுத்தி, சொந்த மக்களையே சுட்டுக் கொல்வதும் அரசின் பயங்கரவாதம் இல்லையா?
இங்கே தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. தீவிரவாதம் வேறு; பயங்கரவாதம் வேறு; தீவிரவாதங்களுக்கு ஒரு கொள்கையுண்டு; பயங்கரவாதங்களுக்கு எவ்விதக் கொள்கையும் கிடையாது. இந்தியாவின் விடுதலைக்குப் போராடிய காந்தியாரும், திலகரும் மிதவாதியாகவும், தீவிரவாதியாகவும் வரலாற்றில் வர்ணிக்கப்படுகின்றனர்.
திலகர் வழியில் வ.உ.சி.யும், பாரதியாரும், சுப்பிரமணிய சிவா போன்றோர் தீவிரமாகப் போராடினர். இவர்களை ஆங்கில அரசு பயங்கரவாதிகளாகச் சித்திரித்து அடக்குமுறைகளை ஏவியது.
1857-ல் நடந்த முதல் சுதந்திரப் போரை ஆங்கில ஆட்சி "சிப்பாய்க் கலகம்' எனக் கொச்சைப்படுத்தவில்லையா? அதுபோலவே தீவிரமாகப் போராடியவர்களைப் பயங்கரவாதிகள் என்று கூறினர். அவர்கள் ஆங்கில ஆட்சியை எதிர்த்தனரே தவிர, மக்களின் உயிர்களோடு விளையாடியதில்லை.
1929 ஏப்ரல் 8 அன்று தில்லி சட்டசபையில் பகத்சிங் குண்டு வீசி வெடிக்கச் செய்ததும் அப்படித்தான். யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படாத குண்டையே வீசுவது என்றும், வீசிய பின் தப்பி ஓடாமல் கைதாவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 1930 அக்டோபர் 7-ல் லாகூர் உயர் நீதிமன்றம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியது.
வாஞ்சிநாதனால் ஆங்கில அதிகாரி ஆஷ்துரை சுட்டுக் கொல்லப்பட்டதும், லாலா லஜபதிராய் சாவுக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டதும், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரை 21 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கே சென்று உத்தம்சிங் பழிவாங்கிய செயலும் தீவிரவாதம்தான். ஆனால், பயங்கரவாதம் அல்ல. நேதாஜியின் ஆயுதம் தாங்கிய போரை பயங்கரவாதமாகக் கூற முடியுமா? அடக்கியாண்ட ஆங்கில ஆட்சியாயினும் சரி, விடுதலைபெற்ற ஆட்சியாயினும் சரி, அதிகாரத்துக்கு வந்துவிட்டால் அவர்களது செயல்பாடுகள் ஒரேமாதிரியாகவே இருக்கின்றன.
ஆங்கில முரசு கொண்டுவந்த பல அடக்குமுறைச் சட்டங்களையே சுதந்திர நாட்டின் அரசும் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றன. இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் இந்திய அரசு, லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று, இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை ஆதரித்து நிற்கிறது.
"அடுத்த தலைமுறைக்கு அமைதியான சமுதாயத்தை அளிக்க வேண்டும்' என்று கூறும் அமெரிக்கா, வியத்நாம் முதல் இராக் வரை போரை உருவாக்கி, முடிவில்லாத பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஊருக்கு உபதேசம் செய்வது எல்லோருக்கும் எளிதுதான்.
"உண்மையான போர் எதுவெனில் தீயவற்றை வேரோடு பிடுங்கி எறிவதுதான்' என்றார் காந்தியார். பயங்கரவாதம் என்பது வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட வேண்டியதுதான்; ஆனால், பயங்கரவாதிகளே பயங்கரவாதத்தை வென்றெடுக்க முடியுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.