ஏற்றுமதிக்குப் புதிய சவால்
ஏற்றுமதியாளர்களுக்குத் தற்சமயம் கிடைக்கும் வரிச்சலுகை குறைக்கப்பட்டுள்ளது. பதினான்கு ஆண்டுகளாக, பெரிய வரவேற்பைப் பெற்றுவந்த, "டியூட்டி என்டைட்டில்மென்ட் பாஸ்புக்' திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அ


ஏற்றுமதியாளர்களுக்குத் தற்சமயம் கிடைக்கும் வரிச்சலுகை குறைக்கப்பட்டுள்ளது. பதினான்கு ஆண்டுகளாக, பெரிய வரவேற்பைப் பெற்றுவந்த, "டியூட்டி என்டைட்டில்மென்ட் பாஸ்புக்' திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு செப்டம்பர் 16-ம் தேதி அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின்படி, சுமார் 1,100 பொருள்களை ஏற்றுமதி செய்பவர்கள், அக்டோபர் முதல் தேதியிலிருந்து குறைந்த வரிச்சலுகைகளை மட்டுமே பெறுவார்கள். இதுவரை கிடைத்துவந்த வரிச்சலுகையைவிட, ஒரு சதவீதம் முதல் 3 சதவீதம்வரை குறைவான சலுகைகளே அவர்களுக்குக் கிடைக்கும்.
மத்திய அரசின் புதிய அறிவிப்பின்சாரம், "டியூட்டி என்டைட்டில்மென்ட் பாஸ்புக்' திட்டத்துக்குப் பதிலாக புதிய "டியூட்டி டிராபேக்' திட்டம் செயல்படுத்தப்படும்.
"டிராபேக்' விகிதம் பெரும்பாலான ஏற்றுமதிப் பொருள்களுக்கு 5.5 சதவீதமாக இருக்கும். இது இப்போது கிடைத்துவந்த வரிச்சலுகையைவிட 1 முதல் 3 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இந்த விதிமுறை, நடப்பு நிதி ஆண்டு கடைசி வரை அமலில் இருக்கும்.
அடுத்த நிதி ஆண்டிலிருந்து, சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய வரிச்சலுகை நடைமுறைப்படுத்தப்படும். மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகளின் அறிவிப்பு இது.
சர்வதேச நிதி நெருக்கடியைத் தொடர்ந்து 2008 - 2009-ம் ஆண்டு, ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வரிச்சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதுசமயம் வரிச்சலுகைகள் கூடுதலாக வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், அந்தத் திட்டத்தில் கூடுதலாக 1,100 பொருள்கள் சேர்க்கப்பட்டன.
புதிய அறிவிப்பின்படி, 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊக்குவிப்புத்திட்டம் இப்போது ரத்து செய்யப்படுகிறது. இதனால் மேற்கூறிய 1,100 பொருள்களுக்கு "டியூட்டி டிராபேக்' திட்டத்தின்படி, குறைக்கப்பட்ட வரிச்சலுகையே இனி கிடைக்கும்.
இந்த அறிவிப்பால், ஏற்றுமதியாளர்கள் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். அடுத்த நிதி ஆண்டிலிருந்து புதிய சீர்திருத்தப்பட்ட வரிச்சலுகைகளை அறிவிக்கும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இடையில் இருக்கும் 6 மாதங்களுக்குப் புதிய விதிமுறைகளை, அதிலும் குறிப்பாக, குறைந்த வரிச்சலுகைகளை அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஏற்றுமதியாளர்களின் சம்மேளனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
பொறியியல் துறை, மோட்டார் தொழில் மற்றும் அதற்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் துறை, ஆயத்த ஆடைகள், பெட்ரோலியப் பொருள்கள், மருந்து தயாரிப்புத் துறை மற்றும் கடல்சார் பொருள்கள் ஆகியவை புதிய அறிவிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு இதுவரை கிடைத்துவந்த சலுகைகளைவிட 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை குறைவாகவே இனி சலுகைகள் கிடைக்கும்.
ஆக, 2008-09-ல் சர்வதேச நிதி நெருக்கடியைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட வரிச்சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் இப்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்பதைத்தான், புதிய மாற்றங்கள் காட்டுகின்றன.
அதேநேரத்தில், சர்வதேச நிதி நெருக்கடி இன்னும் சீரடையவில்லை. இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவில் மட்டுமல்லாமல், கிரீஸ் போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் கடன் சிக்கல் ஏற்பட்டு, பொருளாதார மந்தநிலை அதிகரித்து வருகிறது என்பதே உண்மை.
ஏற்றுமதி ஊக்குவிப்புக்காக, அறிமுகம் செய்யப்பட்ட பலவிதத் திட்டங்களில் "டியூட்டி என்டைட்டில்மென்ட் பாஸ்புக்' திட்டமே மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தது. காரணம், இதன் செயல்பாடு வங்கிகள் தொடர்புடையதாகவும், மிகவும் எளிய நடைமுறைகளைக் கொண்டதாகவும் இருந்தன. அத்துடன் இத்திட்டத்தின் மூலம் 8 சதவீத அளவுக்கு வரிச்சலுகைகள் கிடைத்துவந்தன.
கடந்த ஓராண்டில் மட்டும், 8,700 கோடி ரூபாய் அளவுக்கு பொறியியல், ரசாயனம், மருந்து உற்பத்தி, ஆபரணம், ஆபரணக் கற்கள், ஜவுளி மற்றும் கடல்சார் பொருள்களின் ஏற்றுமதியாளர்கள் வரிச் சலுகைகள் மூலம் பயனடைந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஏற்றுமதியாளர்களுக்கு இது ஒரு முக்கியமான காலகட்டம். நீண்டகாலமாகத் தேக்கநிலையில் இருந்து வந்த ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. இந்த 5 மாதங்களில் ஏற்றுமதி 54.2 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது பெருமிதம் கொள்ளத்தக்க செய்தி. இதன் மதிப்பு 134.5 பில்லியன் டாலர் ஆகும். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி).
ஆனால், புகையிலை சார்ந்த பொருள்கள், இரும்புத் தாது, பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி சரிந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலை குறிப்பிடத்தக்க அளவில் மீட்சி அடையவில்லை. இது இந்திய ஏற்றுமதிக்கு ஒரு பின்னடைவு என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், 35 சதவீதம் - அதாவது மூன்றில் ஒரு பங்கு பொருள்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் இறக்குமதி செய்கின்றன. அந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை மேலும் நீடித்தால், அவர்களது வாங்கும் சக்தி பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை.
இப்போதுள்ள நிலையில், ஏற்றுமதிக்குச் சாதகமாக உள்ள ஒரே அம்சம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிந்து இருப்பதுதான். பொருளாதார ரீதியில் இது கவலை தருகிறது என்றாலும், ஏற்றுமதியாளர்களுக்கு இதனால் கூடுதல் லாபம் கிடைக்கிறது.
இது ஒருபக்கம் இருக்க, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்துகொண்டே போகிறது. கடந்த 18 மாதங்களில், பாரத ரிசர்வ் வங்கி 12 முறை தனது "ரெப்போ' ரேட்டை (ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குத் தரும் குறுகியகாலக் கடனுக்கான வட்டி விகிதம்) உயர்த்தியுள்ளது. அண்மையில், செப்டம்பர் 16-ம் தேதி, மேலும் 1/4 சதவீதம் ரெப்போ ரேட் உயர்ந்துள்ளது.
இதனால், தற்சமயம் ரெப்போ ரேட் எட்டேகால் சதவீதமாக அதிகரித்துள்ளது. வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு எட்டேகால் சதவீதம் வட்டி செலுத்தி நிதி திரட்டுகிறது என்றால், வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் கடனுக்கான வட்டியையும் உயர்த்தத்தானே செய்வார்கள்?
அதிலும் குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களே இந்த வட்டி விகித உயர்வால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எனவே, வட்டி விகிதத்தை உயர்த்தி, பணப்புழக்கத்தையும், அதன் மூலம் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முனைந்து செயல்படுகிறது. வட்டி உயர்வால் ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டு நிதி திரட்டுவதற்குச் சிரமப்படுகின்றன.
ஆக, ஒருபக்கம் வரிச்சலுகைகள் ஒரு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதம் வரை குறைகிறது. இன்னொருபக்கம், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயருகிறது.
இதை எப்படிச் சமாளிப்பது என்பது தெரியாமல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் திண்டாடுகின்றன. இந்தப் பின்னணியில், கடந்த 5 மாதங்களில் 54 சதவீதமாக உயர்ந்த ஏற்றுமதி வளர்ச்சியை, எதிர்காலத்தில் தக்கவைத்துக் கொள்வது, ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையிலேயே ஒரு சவால்தான்.
இந்த அழகில், 2014-ம் ஆண்டுக்குள், ஏற்றுமதியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் (500 பில்லியன் டாலர் மதிப்புக்கு) என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஏற்றுமதியாளர்களின் அனைத்திந்திய சம்மேளனம் பணவீக்க விகிதம் மற்றும் வட்டிவிகிதம் உயர்வால் நடப்பு நிதியாண்டில் மூன்றாவது மற்றும் நான்காவது கால் ஆண்டுகளில் இப்போதுள்ள அபரிமிதமான ஏற்றுமதி வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வது இயலாத காரியம் என வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் 20 சதவீதம் ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு ஏற்றுமதியைப் பேணிக் காக்க உரிய நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.
எடுத்துக்காட்டாக, மொத்த ஏற்றுமதியின் மதிப்பில், பரிவர்த்தனை செலவு மட்டும் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஆகிறது. இதைக் கணிசமாகக் குறைக்க, தொழில்துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் ஓர் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஏற்கெனவே ஒரு 21 அம்சத் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 8 பெரிய துறைமுகங்களில் 24 மணி நேரமும் சுங்க இலாகா சரக்குகளைக் கையாளும்விதமாக, வாரத்தில் அனைத்து நாள்களிலும் இயங்க வேண்டும் என்பது அதன் பரிந்துரைகளில் ஒன்று.
இதுதவிர பல்வேறு சேவைக் கட்டணங்கள் குறைக்கப்படுதல், வங்கிகளின் அந்நியச் செலாவணி தொடர்பான கட்டணங்களைக் குறைத்தல்; ஏற்றுமதிக்குத் தீராத தலைவலியாக இருக்கும் சிக்கலான நடைமுறைகளையும், முடிவில்லாத காகிதப் பணிகளையும் எளிமைப்படுத்துதல்; பல்வேறு ஆவணங்களையும், சான்றிதழ்களையும் தயாரிப்பதில் ஆகும் காலவிரயம், பணவிரயம் ஆகியவற்றைத் தவிர்க்கும்வகையில், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை, மத்திய அரசு விரைந்து பரிசீலித்து, தக்க பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள், ஒட்டுமொத்தமாக, ஆண்டுக்கு ரூ. 2,100 கோடி அளவுக்கு நிதியைச் சேமிக்க முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு ஏற்றுமதிப் பொருள்களின் விலையையும் குறைக்க முடியும். சர்வதேச அளவில் நிலவும் கடும் வணிகப் போட்டியை எதிர்கொள்வதற்கு இது உதவும். ஏற்றுமதியாளர்களின் லாபமும் சற்று உயரும். எனவே, மேற்கூறிய வல்லுநர் குழு பரிந்துரைகளை மேலும் காலதாமதம் இன்றிச் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...