வாழ்க வளமுடன்' என்று வாழ்த்துவது வழக்கமாகிவிட்டது. வளமுடன் வாழும் பலர் நலம் இல்லாமல் வாடுவதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது.
பணம் படைத்தவருக்கு எல்லா வாய்ப்புகளும் இருந்தாலும் நோயுற்றவர்களால் எதையும் அனுபவிக்க முடியாது அல்லவா? வாழ்வில் நிம்மதியிழந்து போனவர்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும் சுமையாகவே கருதப்படுவர்.
இதனால்தான், "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று பழமொழி பேசுகிறது. தனிமனித நலவாழ்வே சமுதாய நலவாழ்வாகி, தேசத்தின் நல்வாழ்வாக மாறும். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, ஐ.நா. அமைப்பு ஏப்ரல் 7-ஆம் நாளே "உலக சுகாதார தின'மாக அறிவித்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் இடையே ஒற்றுமையை நிலைநாட்டவும், வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் ஐ.நா. அமைப்பும், உலக வங்கி அமைப்பும் உருவாக்கப்பட்டன. அதேபோன்று உலகச் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் 1948-இல் இடம்பெற்ற சுகாதார அமைப்பு கூட்டத்தில் 1950 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ஆம் நாள் உலக சுகாதார தினம் கொண்டாடவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்று முதல் ஒவ்வோராண்டும் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் கருப்பொருளை மையமாகக் கொண்டு உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 64-ஆம் உலக சுகாதார தினம். இந்த ஆண்டின் கருப்பொருள் "முதுமை மற்றும் சுகாதாரம்' என்பதாகும்.
"ஆரோக்கியமான உடல்நிலை வாழ்நாளை நீட்டிக்கும்' என்பது இதற்கான அதிகாரப்பூர்வ வாசகமாகும். நலவாழ்வு பற்றிய விழிப்புணர்வு இளைய சமுதாயத்தினரிடம் மிகுதியாகக் காணப்படுகிறது. எனினும் நகர்ப்புற இளைய தலைமுறையினர் நவீன வாழ்க்கை முறைகளால் புதிய புதிய நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
"மனித வாழ்வில் ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்' எனப் புத்தர் பெருமான் கூறிச் சென்றார். இதனை மனித இனம் அலட்சியம் செய்ததன் காரணமாகவே மனநோய்க்கு ஆளாகித் தவிக்கிறது; மனிதன் மனம்போன போக்கில் போய்க்கொண்டு இருக்கிறான்.
இன்றைய நவீன காலத்தில் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கும் மக்களில் பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் சார்பில் 18 நாடுகளைச் சேர்ந்த 89 ஆயிரம் பேரிடம் 20 ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
மக்கள் மன அழுத்தத்தால் 12.1 கோடி பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் அதிகப்படியாக இந்தியர்கள் 36 விழுக்காடு பேர் மன அழுத்தத்தால் தவிப்பது தெரியவந்துள்ளது. ஆனால், உலக அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் 12 விழுக்காட்டினரே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன அழுத்தத்தால் பாதிப்பு அடைவோரின் சராசரி வயது இந்தியர்களுக்கு 31.9 ஆகவும், அமெரிக்கர்களுக்கு 22.7 ஆகவும், சீனர்களுக்கு 18.8 ஆகவும் உள்ளது.
இத்தகைய அதிக மன அழுத்தத்துக்குக் காரணம் சோகம், குற்ற உணர்ச்சி, தூக்கம், பாதிப்பு, குறைந்த சுயமதிப்பீடு, அலைபாயும் மனம் போன்றவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. இருப்பினும் இந்திய மக்களில் பலருக்கு நேரும் சமுதாய ஏற்றத்தாழ்வே பெரும் பிரச்னையாகியுள்ளது. விலைவாசி உயர்வு, நிரந்தர வேலையின்மை, குறைந்த வருமானம் இவை எதிர்காலம் பற்றிய கவலையாகி மன அழுத்தத்தில் சிக்கித் தூக்கமில்லாமல் தவிக்கின்றனர்.
பெரும்பணம் படைத்தவர்களுக்கும் இதே நிலைதான். சேர்த்த பணத்தைப் பாதுகாப்பது, வணிக வரித்துறையினரிடமிருந்து மீள்வது, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ விசாரணையிலிருந்து தப்பிப்பது பற்றிய கவலைகளால் தூக்கமின்றி மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். சமுதாய ஏற்றத்தாழ்வு மிகுந்த நாட்டில் இது தவிர்க்க முடியாதது.
மருத்துவத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய புதிய நோய்களும் அதைவிட வேகமாக வளர்ந்து போட்டி போடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சுகாதாரக் கேடுதான். இதற்கு நாட்டிலுள்ள ஏழ்மையும், மக்கள்தொகையும் காரணங்களாகக் கூறப்படுகின்றன. காரணங்கள் தெரிந்துவிட்டால் நிவர்த்தி செய்ய இயலாதா?
சுகாதாரம் இல்லாமையால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தாம். எனவே, அவர்களுக்கு நலவாழ்வு பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் சிறுவயதிலேயே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் அல்லவா!
நம் நாட்டில் குழந்தைகள் கைகளைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவதால் ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதே காரணத்துக்காக உலக அளவில் 29 லட்சம் குழந்தைகள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
குறிப்பாக பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில்தான் இத்தகைய பாதிப்புகள் மிகுதி என்றும் தெரிய வருகிறது.
சுகாதாரம் தெரியாமல் பாதிக்கப்படுபவர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் என்றால் சுகாதாரம் பற்றித் தெரிந்தும் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள். முதுமை என்பது நோய்களின் பிறப்பிடம் ஆகிறது.
உடல் வலிமை குறையக் குறைய - ரத்தம் சுண்டச்சுண்ட எல்லா நோய்களும் வந்து தொற்றிக் கொள்ளுகின்றன. பெற்று வளர்த்த குழந்தைகளே ஒதுங்கும் நிலை ஏற்படுவது மிகப்பெரிய சோகமாகும்.
வேலைக்குப் போகும்போது ஏற்படும் மரியாதை, "ஓய்வு' பெற்றதும் இல்லாமல் போகிறது. வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் இதுதான் நிலை. இந்த மனநோயால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு உடல் நோயும் வந்து போட்டி போடுகிறது; என்ன செய்ய முடியும்?
முதியவர்கள் எப்போதும் வீடும், படுக்கையுமாக இருக்கக் கூடாது. ஏதேனும் ஒரு சமூகப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவது உடல் நலத்துக்கு உதவும். அடுத்தவர்களுக்கு உதவும்போதுதான் நமது கவலைகள் மறந்துபோகும். "நடந்தால் நாடே உறவாகும்; படுத்தால் பாயும் பகையாகும்' என்பது இதனால்தான்.
சீன நாட்டில் முதியோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
2001 கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9.1 விழுக்காட்டினர். அதாவது 12.30 கோடி பேர். இது இப்போது மேலும் அதிகரித்திருக்கும். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை 16.7 விழுக்காடாக இருக்கும். இது 2050-ல் 30 விழுக்காட்டை எட்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமது நாட்டைப் பொருத்தவரை வாழும் காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2001 கணக்கெடுப்பில் 60 வயது தாண்டியவர்கள் 7.4 விழுக்காட்டினர் என்ற நிலை இருந்தது.
இது 2050-இல் 17 விழுக்காடாக உயரும். அப்போது முதியோர் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவார்கள்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சரியான விலையில் தரமான மருத்துவ வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும், கிராமப்புறத்தின் மூலைமுடுக்குகளிலும் மருத்துவ வசதி சென்றடைய வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் "தேசிய ஊரக சுகாதாரத் திட்டம்' பற்றிப் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
ஆனால், நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆகியும் நலவாழ்வுத் துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் சுகாதாரம் இல்லை; தேவையான மருந்துகள் இல்லை; போதுமான மருத்துவர்கள் இல்லை; செவிலியர்கள் இல்லை; மக்கள்தொகைப் பெருக்கத்துக்கேற்ப மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படவில்லை. இதுகுறித்து எந்த அரசாங்கமும் கவலைப்படவில்லை.
""அரசாங்க மருத்துவமனைகளில் எல்லா வசதிகளும் இருக்கின்றன'' என்று கூறும் மத்திய- மாநில அமைச்சர்கள் தங்களுக்கு நோய் வந்துவிட்டால் வெளிநாட்டுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் போவது ஏன்?
"நமது நாட்டில் சுகாதாரத்துறை அல்லது நலவாழ்வுத்துறை என்று ஒன்று இருக்கிறதா?' என்று பொதுமக்கள் கேட்கின்றனர். கிராமம், நகரம் என்று வேறுபாடு இல்லாமல் கொசுக்களை உற்பத்தி செய்து அதன் மூலம் புதிய புதிய நோய்களை வளர்த்து மக்களுக்குச் சேவை செய்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் பல தடவை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவுகளை மத்திய - மாநில அரசுகள் சரிவரச் செயல்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் 2009-இல் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவுக்கும்கூட அரசுகள் முறையாகப் பதிலளிக்கவில்லை என்று துப்புரவுத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
"சுத்தம் சோறு போடும்' என்பது சுகாதார நன்மொழி. ஆனால், இதை யாரும் கண்டுகொள்வதும் இல்லை; கடைப்பிடிப்பதும் இல்லை; பொது இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது பிற நாட்டினர்; தங்கள் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பொதுஇடத்தை அசுத்தமாக்குவது இந்திய மக்கள்.
""உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே''
என்றார் திருமூலர். இந்தத் திருமந்திரத்தைக் கடைப்பிடித்து நீண்டகாலம் உயிர் வாழ்வதற்கு உடல் நலம் பேணுவது மிகவும் அவசியமாகிறது.
ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, "நலந்தானா?' என்று விசாரிக்கிறோம்; கடிதம் எழுதும்போதும், "நலம்; நலமறிய ஆவல்' என்றே தொடங்குகிறோம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நலவாழ்வு இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் வலிமையே நலவாழ்வு என்பதை எப்போது அறிந்து கொள்ளப் போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.