ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சாய்ந்துவிட்ட கோபுரங்கள்

ஜவாஹர்லால் நேரு நாத்திகரா, ஆத்திகரா என்று புரியாதபோதும்

News image
Updated On :10 டிசம்பர் 2012, 11:20 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

ஜவாஹர்லால் நேரு நாத்திகரா, ஆத்திகரா என்று புரியாதபோதும் மத விஷயங்களில் ஒதுங்கி வாழ்ந்தார். மதவேஷம் போடாதவர். மதச்சார்பின்மைக்கு இலக்கணமாயிருந்தார்.  அவர் கோவில்களாகக் கருதியவை, பொதுத்துறைக் கட்டமைப்புகளைத்தான். அரசுக்குச் சொந்தமான அரசுத்துறை நிறுவனங்களே பொதுத்துறை கட்டமைப்புகளாகும்.

 1947-க்கு முன் அரசுத்துறையில் ரயில்வே, தபால்-தந்தி, துறைமுகம், ராணுவத் தளவாடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் நேரு, 1947-க்குப் பின் உருவாக்கப்பட்ட பொதுத்துறை உருக்காலைகளையும், குறிப்பாக "ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்' (எச்.எம்.டி.) போன்ற பொதுத்துறை நிறுவனங்களையும் ""இந்தியாவின் கோயில்கள்'' என்று பாராட்டினார்.

   நல்லவேளையாக நேரு இன்று உயிருடன் இல்லை; இன்று அக்கோயில்களின் கோபுரங்கள் சாய்ந்துவிட்டன. சிலைகள் களவாடப்பட்டுவிட்டன. நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பாழடைந்த இந்தக் கோவில்களில் உள்ள பூசாரிகளும், சிப்பந்திகளும் விரக்தியுடன் வறுமையில் வாழப் பழகிவிட்டனர்.

 இந்தியாவில் ஏறத்தாழ 130 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அவற்றில் சுமார் 75 நிறுவனங்கள் நோயுற்று இறக்கும் தறுவாயில் உள்ளதாகவும் செய்தி. இவற்றில் ஒன்றுதான் ""ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்''. நேருவால் வாழ்த்தப்பட்ட இந்த நிறுவனம் ஒருகாலத்தில் இந்தியத் தொழில் வளர்ச்சியின் சிகரமாயிருந்தது.

 அதிக லாபம் வழங்கிய நிறுவனமாகவும் திகழ்ந்தது. கடிகாரம், விளக்குகள், டிராக்டர்கள், அச்சு இயந்திரங்கள், சாயக்கருவிகள், பால்பதன இயந்திரங்கள், பிரேக்குகள், பிளாஸ்டிக் மோல்டிங் இயந்திரங்கள், உணவு பதனிடும் இயந்திரங்கள், கைக்கடிகார செல்... போல் ஏராளமான உதிரி பாகங்களின் உற்பத்திப் பட்டியல் ஒருவரை மலைக்க வைக்கும்.

 இவ்வாறு கொடிகட்டிப் பறந்த இந்த நிறுவனத்திற்கு பெங்களூர், ஹைதராபாத், பிஞ்சோர் என்று இந்தியாவில் பல இடங்களில் தொழிற்சாலைகள் உண்டு. இந்த ஊர்களில் எங்கேயாவது எச்.எம்.டி. நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று பொறியாளர்கள் ஏங்கியது உண்டு. அவ்வாறு முயன்று பணியில் சேர்ந்தவர்கள் இன்று, ""மாபெரும் தவறு செய்து இங்கு மாட்டினோமே'' என்று நொந்து நூலாகும் சோகக் கதை மனமுருகச் செய்கிறது.

 சாய்ந்துவிட்ட கோபுரமாகிய எச்.எம்.டி. லிமிடெட்டில் 1992-க்குப்பின் உயர் நிர்வாகப் பணியில் உள்ள மேல்நிலை அலுவலர்களுக்குச் சம்பள உயர்வு இல்லாமல் வாழ்வை நடத்துகின்றனராம். அன்று அரிசி 1 கிலோ ரூ.5-க்குக் கிடைத்தது. பெட்ரோல் லிட்டர் 14 ரூபாய்க்குக் கிடைத்தது.

 கடந்த 20 ஆண்டுகாலமாக ஏறும் விலைவாசிகளில் மாறாத சம்பளம் பெற்று இன்னலுற்று வருவோர் பல்லாயிரத்துக்கும் மேலானவர்கள். கீழ்நிலைத் தொழிலாளர்களின் நிலைகூடப் பரவாயில்லை. ஏனெனில் மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையில் சம்பள உயர்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

 எச்.எம்.டி. பொறியாளர்கள் - மேலாளர்கள்  உண்ணாவிரதம் இருந்தனர். வீதிக்கு வந்து போராடினர். ""உங்களை ஒரு வழியா வீட்டுக்கு அனுப்பிக் கஷ்டப்படுத்தாமல் இந்த மட்டும் சம்பளம் தொடர்ந்து தருவதை எண்ணி சந்தோஷப்படுங்கள்'' என்று பதில் வந்தது. ஒருபக்கம் இந்த ஊழியர்களின் துயரம்; ஒருபக்கம் இவ்வளவு புகழுடன் செயல்பட்ட இந்த நிறுவனம் சரிந்தது ஏன்?

 1991-இல் இந்தியப் பொருளாதாரம் சீர்கேடுற்றது. வர்த்தகப் பற்றாக்குறை - சமனற்ற போக்கு - பல காரணங்களினால் சோஷலிசம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தனியார்மயம், உலகமயமாதல் உதயமானது. தனியார் நலனுக்காகப் பொதுத்துறை சுரண்டப்பட்டது. 1991-க்கு முன் பொதுத்துறையை விரிவாக்கிய அமைச்சர்கள் 1992-லிருந்து பொதுத்துறையை வேண்டுமென்றே புறக்கணித்தனர்.

 தாராள இறக்குமதி காரணமாக உள்ளே நுழைந்த புதிய தொழில்நுட்பங்கள் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், அப்படிப்பட்ட புதிய நுட்பங்களை எச்.எம்.டி.யில் அறிமுகப்படுத்தி தேவையான சந்தையைப் பெற்று நஷ்டத்தைத் தவிர்த்திருக்க முடியாதா? டைட்டன் கடிகாரம் வருமுன் எச்.எம்.டி. கடிகாரம் அங்காடியில் விற்கப்பட்டனவே! புதிய பொலிவில் கைக்கடிகாரங்களைச் செய்வதில் என்ன சிக்கல்? இப்படி ஒவ்வொரு எச்.எம்.டி. தயாரிப்புகளையும் காலத்திற்கு ஏற்ப புதுமையைப் புகுத்தி சந்தைத் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து லாபத்தில் இயங்க வைப்பதில் என்ன சிரமம் இருந்தது? ஒரு முக்கிய இடர். மலிவான இறக்குமதிப் பொருள் குவிப்பால் இந்தியத் தொழில்கள் நசிந்தன.

  முதல் ஐந்தாண்டுத் திட்ட சமயத்தில் பொதுத்துறையில் 5 நிறுவனங்களாயிருந்த நிலை 1980-இல் சுமார் 180 நிறுவனங்களாக உயர்ந்தன. 1973-74 முதல் சுமார் 20 சதவீத வளர்ச்சி. 1980-90 காலகட்டத்திலும் பொதுத்துறை வளர்ச்சி தொடர்ந்தது. பொதுத்துறையில் அடங்கும் எல்லா நிறுவனங்களையும் லாபத்தில் இயக்க முடியாது.

 உதாரணமாகப் பொதுசேவையைக் கருதி ரயில்வே, தபால்-தந்தி, உணவுக் கார்ப்பரேஷன், குடிநீர் விநியோகம், மின்சாரம் போன்றவை. அதே சமயம், எச்.எம்.டி. போன்ற நுகர்வோர் இயந்திரப் பொருள் உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்ப இறக்குமதிகளில் கட்டுப்பாடு இருந்திருக்க வேண்டும்.

 உலகமயமாதல் - தாராள இறக்குமதிக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டபோது மெல்ல மெல்ல பொதுத்துறை நிறுவனங்கள் காணாமல் போயின.

 உதாரணமாக இந்தியாவில் டி.வி. அறிமுகமான காலகட்டத்தில் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் உருவாக்கிய ஈ.சி., டி.வி. சக்கைபோடு போட்டது. என்ன பயன்? ஒனிடா, சோனி என்று ஜப்பானிய டி.வி.க்கள் 1990-க்குப் பின் குவிந்தன. ஈ.சி. இருந்த இடமே தெரியவில்லை.

 உலக வர்த்தகம், இறக்குமதிக் குவிப்பு, தாராளமயமாதல், உலகமயமாதல் என்று பலதரப்பட்ட தாக்குதல்களால், நல்ல லாபத்தில் இயங்கிய பொது நிறுவனங்கள், குறிப்பாக எச்.எம்.டி., ஈ.சி. போன்றவை காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. ""இன்டியா ஸ்பெண்ட்'' வழங்கும் தகவல்களின்படி 2011 மார்ச் நிலவரப்படி இந்தியாவில் உள்ள மொத்த பொதுத்துறை நிறுவனங்கள் 406. இவற்றில் 378 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 251 நிறுவனங்கள் மூலம் ஈக்விட்டி முதலீடு 1,88,661 கோடி ரூபாய் பெறப்பட்டு, 1,27,141 கோடி ரூபாய் லாபம் கிட்டியுள்ளது.

 ""ஈக்விட்டி முதலீடு'', ""டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்'' என்று ஆங்கிலத்தில் நாகரிகமாகப் பேசப்படுவது எல்லாம் ""பொதுத்துறையை லாபகரமாக இயங்கவைக்க - பொதுத்துறையின்  சொத்தை விற்று ஈடுகட்டுதல் ஆகும்''!

 உதாரணமாக, பொதுத்துறை வங்கிகள் ஆயுள் காப்பீடு, ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை அவ்வப்போது பங்குகளை விற்றுப் பற்றாக்குறையை ஈடுசெய்கின்றன. நாளாவட்டத்தில் லாபகரமாக இயங்கும் பொதுத்துறையைத் தனியார் ஆதிக்கம் செய்வார்கள். இதுதான் லாபத்தில் இயக்கப்படுவதாகச் சொல்லப்படும் 251 நிறுவனங்களின் கதை. மீதமுள்ள 127 நிறுவனங்களின் ஒட்டுமொத்த நஷ்டம் 1.80 லட்சம் கோடி ரூபாய்.

 நஷ்டத்தில் இயக்கப்படும் எச்.எம்.டி. போன்ற நிறுவனங்களின் பங்குகள்  தொடக்கவிலையைக் காட்டிலும் அடிமட்டத்தில் இருக்கும். வாங்கக்கூட வசதி இருக்காது. ஏன் இந்த நிலை? இவை என்ன பாவம் செய்தன? பாவம் செய்தவர்கள் இப்படிப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள்.

  ஒரு சிறிய பிரச்னை பூதாகரமாகக் கிளம்பி அதைச் சமாளிக்க முடியாத அளவில் மிகவும் மோசமான நிர்வாகச் சீர்கேடு நஷ்டத்தை உருவாக்கிவிட்டது. பணிகள் முடங்கிவிட்டன. உற்பத்தி செய்தவற்றை வாங்க ஆள் இல்லை. மலிவான டூப்ளிகேட் எந்திரங்கள் தில்லி - பஞ்சாப் - ஹரியாணாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் சந்தையைப் பிடித்துவிட்டன.

 ஊழல் என்பது இந்திய ஏகபோகம் இல்லை; வளரும் நாடுகளில் உலகம் முழுவதும்  தொற்றுநோயாகப் பரவியுள்ளது. உலகில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவர் லண்டன்வாழ் இந்தியர் மித்தல். வளரும் நாடுகளில் செயலிழந்த பொதுத்துறை நிறுவனங்களை மலிவாக வாங்கிச் செயல்பட வைத்து சந்தையைப் பிடிக்கும் நிர்வாகத் தந்திரம்  நிரம்பியவராக மித்தல் பேசப்படுகிறார்.

  கொல்லாமல் கொல்லும் பலிபீடங்களாகத் திகழும் செயலிழந்த 127 பொது நிறுவனங்களையும் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு இழுத்து மூடுவது எவ்வளவோ மேல். அப்படி முடியாவிட்டால் மித்தல் போன்றவர்களிடம் "கட்சி நிதிக்கு' என்று வாங்குவதை வாங்கிக்கொண்டு, இரும்புச் சாமான் எடை விலைக்கு விற்று விடலாமே!

 லாபத்தில் நடப்பதாகச் சொல்லப்படும் 251 பொது நிறுவனங்கள் - குறிப்பாக ஆயுள் காப்பீடு, வங்கிகள், இரும்பு எஃகு, எண்ணெய் போன்ற துறைசார்ந்த நிறுவனங்களின் கதை ""வரவு எட்டணா செலவு பத்தணா'' என்ற நிலையைவிடக் கேவலம்.

 பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள ஊழல், மெத்தனம் காரணமாக நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது. நிதிப்பற்றாக்குறையைச் சமன் செய்யப் பங்குகள் விற்கப்படுகின்றன. அப்படி விற்றும்கூட எதிர்பார்த்த தொகை கிட்டாமல் போன கதை தனிப்பாதை. இப்படி ஏமாந்ததுபோக, வந்த வரவுதான் 1,88,661 கோடி. லாபம் என்று பேசப்படும் தொகை 1,27,141 கோடி. தன்னைத்தானே விற்றுக்கொண்டு பெற்றதை லாபம் என்று கூற முடியுமா? ரத்த தானம் செய்து பெற்ற காசில் கூழ் குடித்த கதைபோல் உள்ளது.

 ஜவாஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்ட பொதுத்துறைகள் உருவாக்கிய சோஷலிச சமுதாய அமைப்பு முற்றிலுமாக உடைந்து ஏற்றத்தாழ்வு மலிந்த தனிஉடமை சமுதாயம் இந்தியாவில் உருப்பெற்றுள்ளது. நேரு போற்றிய இந்தியக் கோவில்களின் கோபுரங்கள் சாய்ந்துவிட்டன. 1992-இல் சொன்னார்கள். அன்னிய வர்த்தகத்தில் நாணயச் செலாவணி சமன்பாடு பூஜ்ஜியமானதால் உலகமயமாதல் தாராளமயம் இறக்குமதிகொண்டு ஏற்றுமதியை உயர்த்துதல் என்றெல்லாம் பேசினார்கள். இன்று என்னவாயிற்று?

 ஏற்றுமதி குறைந்தும் இறக்குமதி எகிறியும் போனதே! 2004-இல் வர்த்தகப் பற்றாக்குறை 14,307 மில்லியன் டாலர். 2012-இல் வர்த்தகப் பற்றாக்குறை. 1,84,794 மில்லியன் டாலர்.

 உள்ளூர் நிதி நிர்வாகத்தை எடுத்துக்கொண்டால் நமது பற்றாக்குறை மொத்த வருமானத்தில் - ஜி.டி.பியில் 5.3 சதவீதம். இவற்றை ஈடுசெய்ய சில்லறைத்தனமான அன்னிய நேரடி முதலீடு வருகிறதாம்! எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

 இந்தியப் பிரதமர், கவிஞர் பாட்டை மாற்றி, ""வல்லான் பொருள் குவிக்கும் தனிஉடமை வளர்ந்து விழ வேண்டும் திருநாட்டில் பொது உடமை...'' என்றல்லவா பாடுகிறார். விழுந்துவிட்ட கோபுரங்களுக்கு மலரஞ்சலி செலுத்துவோம். வாழ்க பாரதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.